புலனெலாம் நன்னெறி புகுந்திடும் நன்னாள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 



 தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன் 
தாயின்றி உருவான ஞான குருநாதன்
 வந்திக்கும் அடியார்க்கும் வரமருளும் நாதன்
 வள்ளிதெய்வ யானையுடன் காட்சிதரும் நாதன் 

ஆறுபடை வீடமர்ந்த ஆறுமுக நாதன் 
அருணகிரி தமிழ்பாட அருள்புரிந்த நாதன் 
 வீறுடைய அசுரர்தமை வெற்றி கொண்டநாதன் 
 வியந்துமே போற்றுகின்ற வெற்றிவேல் நாதன் 

  தந்தைக்கு குருவான தயையுடைய நாதன்
  தைப்பூசத் திருநாளில் அவதாரம் செய்தார்
  சிந்தைக்குள் புகுந்திருக்கும் அகந்தையினை அகற்ற
  கந்தனாய் தைப்பூசம் வந்துதித்தார் காக்க 

 சிதறிய பொறிகள் மலர்களில் வீழ்ந்தன
 அழகுடை குழந்தைகள் அறுவர் தோன்றினர்
  கார்த்திகைப் பெண்கள் கைகளில் எடுத்தனர்
  கனலது கந்தனாய் உருவினைப் பெற்றது 

 ஆணவ அரக்கரை அழித்திட வேலினை
 அன்னை உமையவள் கொடுத்தனள் கையினில்
 வேலவன் வாகையைச்  சூடிய நாளதாய் 
 பூசத் திருநாள் பொலிந்தது புவியினில் 


கந்தன் கோவில்கள் ஒளியினில்  மிதந்திடும்
 காவடி பலபல சன்னதி நிறைந்திடும் 
 கற்பூர சட்டிகள் தலைகளில் அமர்ந்திடும்
 தைப்பூசத் திருநாள் சந்தோஷம் தந்திடும் 

ஒளியினில் இறைவனைக் கண்டிடும் திருநாள்
உணர்வுகள் இறையுடன் கலந்திடும் திருநாள்
பலபல இடங்களில் மிளிர்ந்திடும் திருநாள்
பாங்குடை தைப்பூச திருநாள் ஆகும் 

மங்கல நிகழ்வுகள் தொடங்கிடும் திருநாள்
மனைகளில் மகிழ்வுகள் நிறைந்திடும் திருநாள்
பொங்கலைத் தொடர்ந்து அமைந்திடும் திருநாள் 
எங்களின் வாழ்வினில் தைப்பூசத் திருநாள் 

உழவர்கள் புதிரை எடுத்திடும் திருநாள்
உணர்வுடன் அதனைப் பகிர்ந்துண்ணும் திருநாள் 
கற்றிட ஏட்டினைத் தொடங்கிடும் திருநாள் 
காதுகள் குத்தியே மகிழ்ந்திடும் நன்னாள் 

புதியன பலபல தொடங்கிடும் பொன்னாள்
புலனெலாம் நன்னெறி புகுந்திடும் நன்னாள்
இறையது ஒளியாய் எழுந்திடும் திருநாள்
இகமதில் தைப்பூச திருநாள் ஆகும் 






No comments: