எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 51 மாரடைப்பு மகாத்மியம் சொல்லும் கதைகள் ! மாறியது வாழ்க்கை ! மாற்றியது யாரோ ? முருகபூபதி


இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில், என்றைக்குமே மருத்துவ மனைகளில்  சிகிச்சைக்காக நான் அனுமதிக்கப்படவில்லை.

அதனால்,  மருந்து, மாத்திரைகளும் என்னை அண்டவில்லை. எனது உடலை  மருத்துவமனை சத்திர சிகிச்சை கருவிகளும்


தீண்டவில்லை.  காய்ச்சல், தலையிடி, தடிமன், இருமல் வந்தால், பாட்டியும் அம்மாவும்  கொத்தமல்லி குடிநீர் தந்து குணப்படுத்திவிடுவார்கள்.

கண்பார்வையும் தெளிவாகவும் கூர்மையாகவும் இருந்தமையால் கண்ணாடியும் அணியவில்லை.

அவ்வாறு 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அங்கே நல்ல சுகதேகியாக வாழ்ந்திருக்கும்  நான், பின்னாளில்  இந்த புகலிட தேசத்தில்  மருந்து , மாத்திரைகளுடன்  பொழுதுகளை


கடக்கின்றேன்.  அவை நெருங்கிய உறவாக மாறியது.   வயது செல்லச்செல்ல,  தொடர்ந்தும் அருகிலிருப்பவை மருந்தும் மாத்திரைகளும்தான்.  இது அனைவருக்கும் பொதுவான விதி. கடந்த பல வருடங்களாக இன்சுலினும் நெருங்கிவிட்டது.  வீட்டில் குளிர்சாதனப்பெட்டிக்குள்   அவையும் பெட்டி பெட்டியாக வாசம் செய்கின்றன.

தூரப்பயணங்கள் செல்லும்போது அவற்றையும் மறக்காமல் காவிச்செல்லவேண்டும். அதற்கென பிரத்தியேகமான குளிரூட்டப்பட்ட  பையும்  இருக்கிறது. விமானப்பயணங்களின்போது முதலில் தோன்றும் கண்காணிப்பாளர்களிடம் இன்சுலின் ஊசிகளையும் காண்பிக்கவேண்டும். நான் நீரிழிவு உபாதையுள்ளவன் என்பதை அங்கே பிரகடனப்படுத்தவேண்டும். என்னை பரிசோதிப்பவருக்கும் அது இருக்கலாம்.  சக பயணிகளுக்கும் விமான ஓட்டிகளுக்கும் விமான பணிப்பெண்களுக்கும் கூட இருக்கலாம்! யார் கண்டது! ?

தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.  எடுத்துச்செல்லும் இன்சுலின் பேனைகளை பேணிப்பாதுகாக்கவேண்டும். 

மாறியது வாழ்க்கை !   மாற்றியது யாரோ ?  என பாடவும் தோன்றும்.

எனது வாழ்வின்  தரிசனங்களே நான் எழுதும் கதைகள் என தொடர்ந்து கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து சொல்லி வருகின்றேன்.  புகலிடம் பெற்றபின்னர், எனது எழுத்துக்களில் இந்த மருந்து மாத்திரைகளும் பாத்திரங்களாகிவிடும். அல்லது மருத்துவ சிகிச்சைகளும் பதிவாகிவிடும்.

மெல்பனில் நான் முதல் முதலில் வேலைக்குச்சேர்ந்த Australia Textiles Printing Company இல், என்னுடன் பணியாற்றிய கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் தோற்றத்தில் கொலிவூட் நடிகர் ரிச்சர்ட் பேர்டனைப் போன்றிருப்பார்.  என்னைவிட வயதில் மூத்தவர். எப்பொழுதும் ஏதாவது ஜோக் சொல்லி அங்கிருப்பவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பார்.

எமக்கு இரவு நேர வேலை. மாலை 5-15 மணிக்குத் தொடங்கினால், மறுநாள் அதிகாலை 3-45 மணிக்குத்தான் முடிவடையும். தினமும் எமக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஓவர்டைம் வேலையும் இருக்கும்.  அதனால் மேலதிகமாக Night Allowance உம் பெற்றோம்.

இரவு நேர வேலையிலிருந்த சிலர், உணவு இடைவேளையில்  “தண்ணீ    பாவிப்பார்கள்.  பெரும்பாலும் பியர்தான்.  அத்துடன் வெளியே இருந்து Fast Food தருவித்து உண்பார்கள். நான் வீட்டிலிருந்துதான் உணவு எடுத்துச்செல்வேன்.

அவர்கள் பீட்சா – சலாமி முதலான கொழுப்பு உணவுகளை விரும்பி


உண்பார்கள். நான் குறிப்பிடும்  அந்த கிரேக்க ஊழியரான பாஸ்கோவ்,  விரும்பிச்சாப்பிடும் உணவு பீட்சா.

அந்த  இரவு உணவுவேளையின்போது சிலர் கார்ட்ஸ் விளையாடுவார்கள்.  நானோ எடுத்துச்செல்லும் புத்தகங்களை வாசிப்பேன். அல்லது ஏதும் எழுதுவேன். அவை கடிதங்களாக அல்லது கதைகளாக இருக்கும்.  எனது இரண்டாவது கதைத் தொகுப்பான சமாந்தரங்கள் நூலில் இடம்பெற்ற சில  ஆரம்பகாலச் சிறுகதைகள் அவை.


அந்த நண்பர் பாஸ்கோவ், அவ்வப்போது என்னருகில் வந்து நான் வாசிக்கும் புத்தகங்களையும் எழுதும் எழுத்தையும் பார்ப்பார். ஆனால்,  அவருக்குப் புரியாது.  மல்லிகை இதழில் வந்த ஒரு சிறுகதையை அவருக்கு காண்பித்தேன்.

அவர் அதனை விநோதமாக பார்த்தார்.                                                             “ எழுதுவதையெல்லாம் மொழிபெயர்த்துச்சொல்.  “ என்பார். சில கதைகளை சொல்லியிருக்கின்றேன்.

 “ ஒருநாளைக்கு என்னைப்பற்றியும் எழுது    என்றார்.

 “ உங்களைப்பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது..?  “ என்றேன்.


அவர் ஒரு சில உண்மைக் கதைகளையும்  திகிலூட்டும் கதைகளையும்  சொன்னார்.  அதில் ஒன்றுதான் திருப்பம். இச்சிறுகதை  எனது கற்பனையும் கலந்து வீரகேசரியில் வெளியானது.  அறை நண்பர்களுடன் ஒருநாள் வெளியூருக்குச்சென்று அங்கே நடைப்பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தை பின்னணியாக வைத்து  புதர்க்காடுகளில்  என்ற சிறுகதையை எழுதினேன்.

இச்சிறுகதை இலங்கையில் வீரகேசரியிலும் சிங்கப்பூர் தமிழ் முரசுவிலும் வெளியானது அத்துடன், பிறிஸ்பேர்ன் தமிழ் ஒலி, மெல்பன்  3 E A  வானொலியிலும் ஒலிபரப்பானது. இதனை இலக்கிய சகோதரி ரேணுகா தனஸ்கந்தா


ஆங்கிலத்தில் Bush work என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு கொழும்பு The Island  இல் வெளியானது. வெளியிட்டவர் இலக்கிய நண்பர் கே. எஸ். சிவகுமாரன். குறிப்பிட்ட  புதர்க்காடுகளில்,   அந்த மாதம் வெளியான சிறந்த சிறுகதை என்ற சான்றிதழை தமிழ்க் கதைஞர் வட்டத்திடமிருந்து (தகவம் )  பெற்றது.

மல்லிகையில் வெளியான தவிப்பு என்ற சிறுகதையிலும் நான் மேலே குறிப்பிட்ட சக ஊழியர் பாஸ்கோவ் வருகிறார்.

ஒருநாள் ( அன்று வெள்ளிக்கிழமை )  வேலை முடிந்தபின்னர்  கையசைத்து விடைபெற்றவர், திரும்பி வரவேயில்லை.  திங்கட்கிழமை சந்திப்போம் என்றார்.

திங்கட்கிழமை காலை  அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்  என்ற செய்திதான் வந்தது.  தொழிற்சாலை சோகத்தில் மூழ்கியது.  நான் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தேன்.

இரண்டு நாட்களில் அவரது இறுதி நிகழ்வு நடந்தது. அனைவரும்


சென்றிருந்தோம்.  அதன்பிறகு அன்றைய தினம் இரவு வேலை. எனக்கு வேலையில் கவனத்தை செலுத்த முடியவில்லை. மனம் சுற்றிச்  சுற்றி அந்த நண்பர் பாஸ்கோவ் பற்றிய சிந்தனையிலேயே ஓடியது. எனக்கு நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு.  இரவு ஏழுமணியிருக்கும்.  எனது மேற்பார்வையாளரிடம் சென்று , எனக்கு ஏதோ செய்கிறது.  என்று நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சொன்னேன்.  அவர் என்னை வீட்டுக்கு அனுப்பினார். அப்போது எனது குடும்பம் இங்கே வந்திருக்கவில்லை. எனது அந்தத்  தொடர்மாடிக் குடியிருப்பிலிருந்த ஏனைய நண்பர்களும் வேறு வேறு இடங்களுக்குச்சென்றுவிட்டனர்.

தொழிற்சாலைக்கு அருகிலேயே எனது குடியிருப்பும் இருந்தது.

இங்கே வந்தபின்னர் எனக்கு அறிமுகமான வயலின் கலைஞர் பாலகுமார் எனது வீட்டுக்கு அருகாமையில் குடும்பத்துடன் வசித்தார்.  இவரது மனைவி கௌரி, எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் பெறாமகள்.

பாலகுமாருக்கு தொலைபேசியில் எனக்கிருக்கும் நெஞ்சு நோ பற்றிச்சொன்னதும்,  அவர் பதறிக்கொண்டு தமது காரில் விரைந்துவந்து, என்னை அழைத்துக்கொண்டு றோயல் மெல்பன் மருத்துவமனைக்குச் சென்றார்.

 நான் அம்பூலன்ஸை அழைத்திருக்கலாம். ஆனால், அப்போது அகதியாக இருந்த எனக்கு தயக்கமாக இருந்தது. அன்று இரவு நீண்ட நேரம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலிருந்தேன். நண்பர் பாலகுமார் நடு இரவு வரையும் எனக்கருகிலேயே இருந்தார். பயப்படும் வகையில் ஏதும் இல்லை. சாதாரண ஸ்ரெஸ் பெயின்தான் எனச்சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள்.

மறுநாள் நான் எழுதிய சிறுகதைதான் முதல் சோதனை. இச்சிறுகதை குகநாதனின் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானது.

இதிலும் அந்த பாஸ்கோவ் வருகிறார்.  தன்னைப்பற்றியும் எழுது எனச்சொன்ன அவர் அக்கதையை கேளாமல் - பார்க்காமல் விடைபெற்றார். அவரது திடீர் மரணம் ஏற்படுத்திய தாக்கம் எனது உள்ளுணர்வுகளை பெரிதும் பாதித்திருந்தமையினால் அச்சிறுகதை பிறந்தது. அதன் பிறகு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தது.

காரணம் புரியவில்லை. இதுபற்றி சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணரிடம் ஒருநாள் சொல்லிக்கொண்டிருந்தபோது,  அவரது மனைவி ஜெஸி அண்ணி,  நீரிழிவுக்கான அறிகுறியாக இருக்கலாம். ஒரு தடவை சோதித்துப்பார்க்கச்சொன்னார்.

நான் அலட்சியமாக இருந்தேன்.  

அதன்பிறகு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்தபோது மருத்துவ பரிசோதனை நடந்தது.  அந்த மருத்துவர்தான் எனக்கு நீரிழிவு உபாதை வந்துவிட்டது என்று உறுதியாகச்சொன்னார். அன்று முதல் கடந்த 32 வருடகாலமாக நானும் இனிமையான மனிதனாகிவிட்டேன். நீரிழிவை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை எனது மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மருத்துவர்கள்  மாறும்போது அந்த மருந்துகளும் மாறிவிடும்.

அடிக்கடி குருதிச்சோதனை – மருந்துகளில் மாற்றங்கள். காலத்துக்கு ஒரு கோலம்போன்று மருந்துகளின் பெயர்களிலும் மாற்றங்கள்.

நீரிழிவு உபாதையுள்ள எனது நட்பு வட்டத்தை சேர்ந்தவர்களும் மருத்துவர்களாக மாறி,  புதுப்புது யோசனைகளை சொல்லத் தொடங்கினார்கள். சொல்லி வருகிறார்கள்.

வீட்டுக்கு வீடு யாராவது  நீரிழிவு உபாதையுள்ள குடும்ப உறுப்பினர்  ஒருவர் அல்லது இருவர், அல்லது அதற்கு மேலும் இருக்கிறார்கள்.

எனது அப்பாவுக்கும் இருந்தது. அவர் 1983 ஆம் ஆண்டு சடுதியாக மாரடைப்பு வந்து இறந்தார்.   சக ஊழியரான நண்பர் பாஸ்கோவ் சடுதியாக மாரடைப்பு வந்து இறந்தபோது அப்பாதான் நினைவுகளில் சஞ்சரித்தார்.

அத்தகைய மரணங்களை சிறந்த மரணம் என்கின்றார்கள். எவருக்கும் சிரமம் தராமல் விடைபெறுவது பெரும் கொடுப்பினை என்கிறார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தான் நடிக்கும்போதே இறந்துவிட வேண்டும் என விரும்பியவர்.

சிறந்த பேச்சாளரான இடதுசாரி தோழர் வி. பொன்னம்பலம் கனடாவில் ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவரங்கில் பேசிக்கொண்டிருந்தபோதுதான்  மாரடைப்பு வந்து இறந்துபோனார்.

இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமும் ஒரு நிகழ்ச்சியின்போது பேசிக்கொண்டிருக்கையில் திடீரென மாரடைப்பு வந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கர்மவீரர் காமராஜர்,  மருத்துவமனையிலிருந்த போது,  தனது உதவியாளரிடம்  அன்று இரவு இறுதியாக சொன்ன வசனம்,                விளக்கை அணைத்துவிட்டுப்போ  “ அந்த தியாகச்செம்மலின் மரணம் நீண்ட காலம் பேசப்பட்டது.

அந்த அகல்விளக்கின் வெளிச்சத்தில் இன்றும் அரசியல் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இல்லை.

காமராஜரைப்போன்று இரவில் உறக்கத்தில் சிலருக்கு உயிர்போய்விடுகிறது. இதனை Silent attack என்கிறார்கள். 

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்த பிரபல பாடகி வாணி ஜெயராம் இறந்த செய்தி வருகிறது. அவரும் வீட்டில் தனிமையில் இருந்திருக்கிறார்.  வீட்டுப்பணிப்பெண் மறுநாள் வந்து பார்த்தபோதுதான் அவர் இறந்திருந்த காட்சி தெரியவருகிறது.

அவரது திடீர் மரணம் இன்னும் சிறிது காலத்திற்கு பேசுபொருளாகவிருக்கும்.

கணினியில் எழுதத்தொடங்குவதற்கு முன்னர், கையால் பேனை பிடித்து எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது கையால் எழுதுவதே  சிரமமாக இருக்கிறது.   வாழ்க்கை எப்படியெல்லாம் எம்மை  மாற்றிவிடுகிறது பாருங்கள்.

எனது பாட்டி சொன்ன கதைகள் நூல் 1997 ஆம் ஆண்டு சென்னையில் வெளியானபோது,  அதனை பதிப்பித்த நண்பர் செ. கணேசலிங்கன், சில பிரதிகளை சென்னை நூலக அபிவிருத்தி அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அவர்கள் அதில் மேலும் 700 பிரதிகளை கேட்டுள்ளனர். பின்னர் தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிகளுக்காக மேலும் 1500 பிரதிகளை கேட்டுள்ளனர்.  கணேசலிங்கன் அச்சிட்டுக்கொடுத்துவிட்டு, எனக்கும் கடிதம் மூலம் அறிவித்தார்.  தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனவும் எனக்கு எழுதிய கடிதத்தில் விதந்து குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் எழுதிவந்த என்னை,  நாவல் எழுதுமாறு தூண்டியதும் அவரே. அவர் நிறைய நாவல்கள் எழுதியிருப்பவர். 

அவர் தந்த ஊக்கத்தினால் நான் எழுதிய நாவல்தான் பறவைகள்.   பாட்டி சொன்ன கதைகள் விற்பனையினால் கிடைத்த பணம் அவரிடமிருந்தது. அதனால் அவரே பறவைகள் நாவலை அச்சிட்டும் தந்தார்.   அதில் வரும் சிற்றம்பலம் என்ற வாத்தியார் பாத்திரமும் மருந்து மாத்திரைகளுடன், அல்லாடியவர். அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு சென்றவர். மனைவி இறந்துவிடுகிறார்.

இரண்டு மகன்மாரும், ஒரே ஒரு மகளும் வெளிநாடுகளில்.  தனித்துவிடப்படுகிறார்.

 சாதி அகம்பாவத்தினால், அவரால் புறக்கணிக்கப்பட்ட உடன் பிறந்த தங்கையின் மகளான தேவகியின் பராமரிப்பில் அவரது அந்திமகாலம் கழிகிறது.  வடக்கில் போர்மேகங்கள் சூழ்ந்தமையால் நீர்கொழும்பூருக்கு இடம்பெயர்கிறார்.  உடன் வந்த மருமகள் தேவகியின் தீவிர அக்கறையில் எஞ்சியிருக்கும் காலத்தை கழிக்கிறார்.  வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் குடும்பம் ஒன்றைச்சேர்ந்த முஸம்மில் என்ற இளைஞன் இந்த ஊரில் தனது தாயாருடன் வாடகை வாகனம் வைத்து சீவிக்கிறான். அவனது வாகனத்தில் சிற்றம்பலத்தாரை கொழும்புக்கு  மருத்துவ பரிசோதனைக்காக மருமகள் தேவகி அடிக்கடி அழைத்துச்செல்கிறாள்.  இவர்களின் செலவுக்கு வெளிநாடுகளிலிருக்கும் பிள்ளைகள் பணம் அனுப்புகிறார்கள்.  சிற்றம்பலத்தார் வெளிநாடுகளில் பிறந்திருக்கும் தனது பேரப்பிள்ளைகளை பார்க்க ஆசைப்படுகிறார்.    அவரைப்பார்க்க அவர்களும் வருகிறார்கள். தமிழ், தமிழ்த்தேசியம், சிங்கள ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த சிற்றம்பலத்தாரின் பேரப்பிள்ளைகள் தமிழே பேச முடியாமல் வந்து சேருகிறார்கள். 

இந்தக்கவலையுடன் தனது தங்கையை  முன்னர் புறக்கணித்த குற்றவுணர்வு  அவரை ஆட்டிப்படைக்கிறது.   தங்கையின் மகள் தேவகியோ, அவர்  செய்த வஞ்சனையையும்  பொருட்படுத்தாமல், தாயுமானவளாக இருந்து அவரைப்  பராமரிக்கிறாள். 

இறுதியில் அவருக்கும் திடீரென  மாரடைப்பு வந்து இறந்துவிடுகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இறுதிநிகழ்வுக்குப்பின்னர் புறப்படுகிறார்கள்.

தேவகி தனித்துவிடப்படுகிறாள்.

இதுதான் பறவைகள் நாவலின் சுருக்கம்.  அதனை நான் எழுதிமுடித்தபோது 2001 ஆம் ஆண்டு இறுதிப்பகுதி.  

இந்நாவல் எங்கள் ஊரை பின்னணியாக வைத்து எழுதப்பட்டது. இதில் எனது அம்மா, அக்கா, மருமக்கள், மற்றும் எங்கள் ஊர்  மக்கள் பலரும் வருகிறார்கள்.  என்னை நாவல் எழுததத் தூண்டிக்கொண்டிருந்த செ. கணேசலிங்கனுக்கே அதனை சமர்ப்பணம் செய்து எழுத்துப்பிரதியை  அவருக்கு தபாலில் அனுப்பினேன்.  அந்த ஆண்டு டிசம்பர் மாதம் எமது அப்பா வழி நெருங்கிய உறவினரான தாத்தா தமிழகத்தின் மூத்த படைப்பாளி, பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதன் அந்த ஆண்டு ( 2001 ) டிசம்பர் 31 ஆம் திகதி திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். இது எனக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி. அவர் கணேசலிங்கனுக்கும் நல்ல நண்பர். 

கணேசலிங்கன், Front line இதழில் தொ.மு. சி. பற்றி ஒரு கட்டுரை எழுதினார். எனது பறவைகள் நாவலை தாத்தா தொ.மு. சி. ரகுநாதனுக்கே  சமர்ப்பணம் செய்து நூலை அச்சிட்டு அனுப்பினார்.

2003 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் பறவைகள் நாவல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை எழுத்தாளர் ஆவூரான் சந்திரன் சமர்பித்தார். சிட்னியிலிருந்து யசோதா பத்மநாதன், இலங்கையில் புலோலியூர் சதாசிவம், சூரியகுமாரி பஞ்சநாதன் ஆகியோர் ஊடகங்களில் விமர்சனம் எழுதினர்.

2002 காலப்பகுதியில் இலங்கையில் நின்ற எனது மனைவி மாலதி,  இலங்கை கலாசார அமைச்சின் பத்திரிகை விளம்பரத்தை பார்த்துவிட்டு, பறவைகள் நாவலில்  நான்கு பிரதிகளை தபாலில் அனுப்பிவிட்டு, மெல்பன் வந்துவிட்டார்.

இந்த வருடம் ( 2023 )  தை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழ், முருகபூபதி சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.

இதில் பாட்டி சொன்ன கதைகள் நூல் பற்றி கனடா எழுத்தாளர் கிரிதரனும்,  பறவைகள் நாவல் பற்றி இலங்கை எழுத்தாளர்                       ( அமரர் ) சிதம்பரப்பிள்ளை சிவக்குமாரும் எழுதியிருக்கின்றனர்.   இவர்களுக்கும் ஜீவநதியில் எனது இதர நூல்கள் பற்றி எழுதியிருப்பவர்களுக்கும், அதன் ஆசிரியர் கலாமணி பரணீதரனுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இரண்டு நூல்களும் தற்பொழுது சிங்கள மொழியில் பெயர்க்கப்படுகிறது.

இத்தோடு இந்த அங்கத்தில் நிற்கின்றேன்.

மாரடைப்பு கதை இன்னமும் முடியவில்லை. 

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

  

 

 

 

 

No comments: