மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 6 : புங் ஒரு புதிர்

 தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல்


சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.

 ’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.

 குலம் சமீபத்தில் அவர்கள் வேலை செய்யும் பகுதிக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவன் வேலை செய்யும் இடங்களில் யாராவது சிங்களவரைக் கண்டுவிட்டால் – அவர் யாரென்றும் பாராமல் அடித்துவிடுவான். பிறகு வீட்டிற்கு வந்துவிடுவான். இத்தனைக்கும் அவன் மனநிலை பாதிப்படைந்தவன் அல்ல. மனநிலை பாதிப்படைந்த சிங்களவர்களால் அவன் குடும்பத்திற்கு நேர்ந்த அவலம். அவனது இந்த அடிக்கும் செயலால் பல இடங்களில் வேலையை இழந்திருக்கின்றான். இதனால் அவன் ஒருபோதும் வேலையில் நிரந்தரமாக இருந்தது கிடையாது.. குலத்திற்கு என்ன நடக்கும் என்பது அங்குள்ளவர்களின் கவலையாக இருந்தது.

 குலத்தைப் பற்றி சிந்தித்தபடி வீடு போய்ச் சேர்ந்தான் நந்தன்.

குலத்துடன் புங்கும் சேர்ந்து அவன் மனதைக் கும்மியடித்தார்கள்.

 புங்கின் அழகு, துடுக்குத்தனம், பேச்சு வன்மை, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வசீகரத்தன்மை, அவளை ஒரு ஹீரோயின் ஸ்தானத்தில் அங்கு வைத்திருக்கின்றது. அத்துடன் வேலையைத் துரிதமாகச் செய்யும் வேடிக்கையான பெண் அவள்.

 புங்கிற்கு உயர் பதவி வகிப்பவர்களைத் தனது கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பம் முதல் இருக்கின்றது. அதனால் அவள் மனம், போகிற போக்கில் குதியாட்டம் போடுகின்றது.

 “இஞ்சை வந்த நாளிலை இருந்து நான் ஒருபோதும் என்னைவிட வயது குறைந்தவர்களுடன் வேலை செய்யவில்லை. எப்ப பார்த்தாலும் கிழட்டுக் கூட்டம்தான். இப்பகூட ஒரு கிழவன் தான் எனக்கு நண்பனாக வந்துள்ளான்” தனது கவலையை இப்படி வெளியிடுவாள். தனது கணவனுக்கும் அதே வயதுதான் என்பதை ஏனோ மறந்துவிடுவாள் அவள்.

 “நான் எனது குடும்பத்தவர்களுடன் இருக்கும் நேரத்தைக் காட்டிலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுடன் தான் கூட நேரத்தைச் செலவு செய்கின்றேன்” என்று புங் சொல்ல,

 “ஜோசுவாவுடன்” என நந்தன் திருத்தி மனதிற்குள் சொன்னான்.

 ஜோசுவா - வீட்டிலே மனைவி மீதும், வேலை இடத்திலே அடுத்தவரின் மனைவியுடனும் அன்பைப் பொழிகின்றான்.

 ஜோசுவாவிடையே நெருக்கம் அதிகரிக்க, நந்தனிடம் விலகல் ஆரம்பித்தது. குறூப் லீடரான ஜோசுவா அவளுக்கு இப்போது நண்பன் ஆகிவிட்டதால் மற்றவர்களைப் பெரிதும் மதிக்காது நடக்கத் தொடங்கினாள். ஸ்ரேற்றஸ் மெயின்ரெயின் பண்ணுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு தாமே வாழ்க்கையை வேறு விதமாக அமைத்துக் கொள்பவர்களை என்னவென்று சொல்வது? நந்தனும் அவளும் ஒன்றாக வேலை செய்தும்கூட, பல வேளைகளில் மெளனம் இடைவெளியை நிரப்பியது.

 தவாரம் ‘பெயின்ற் ஷொப்பிற்கு’ குலம் மாற்றம் செய்யப்பட்டிருந்தான். நந்தனுடன் குலமும் இன்னொரு இலங்கைத் தமிழனாக அங்கு சேர்ந்து கொண்டான். சிங்களவரை துளிகூடப் பிடிக்காத குலம், ஆராவது பெம்பிளப் பிள்ளையளுக்கு காய்ச்சல் தடிமன் எண்டால் ’பேயா வா சரக்கு’ கொண்டுவந்து குடுத்துவிடுவான்.

 நோமா ஒரு ஓரத்தில் நின்று புங்கை வினோதமாகப் பார்ப்பார். பின் தனக்குள் சிரித்துக் கொள்வார்.

 நட்டஷாவின் உருவம் பார்க்க வேடிக்கையாக இருக்கும். குரல் வேறு கீச்சிட்டபடி. அவளை முன்பு பலதடவைகள் பார்த்து நந்தன் சிரித்திருக்கின்றான். மற்றவர்களுக்கு அவளைச் சுட்டிக்காட்டி கேலி செய்திருக்கின்றான். அதனால் அவளுக்கு நந்தன்மீது ஒரு கறள் இருந்துகொண்டு வந்தது. அவள் ஒரு கூத்தாடிப் பேர்வழி. மனேஜர்களின் எடுபிடி. எங்காவது மனேஜர்களைத் தூரத்தில் கண்டுவிட்டால் போதும். காரின் மீது பாய்ந்து ஏறி ஒரு குரங்குக்குட்டிபோல தொங்கிக் கொண்டே போவாள். காரின் பெயின்ரின் தரத்தைப் பார்ப்பது போல பாவனை செய்வாள். காரில் இருந்தபடியே யாரையாவது பார்த்துக் கத்துவாள். விசிலும் அடிப்பாள்.

 உண்மையில் நட்டஷா படு மொக்கு. ஆங்கிலம் நன்றாகக் கதைப்பாள். அதை வைத்தே எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு செல்கின்றாள். அவளைப் பற்றி நந்தன் ஒருமுறை குறூப்லீடர் ஹெவினிடம் முறையிட்டபோது,

 ”செய்யக்கூடியவர்கள், ஆற்றல் படைத்தவர்கள் செயலற்று இருந்தால், முட்டாள்கள் அதைப் பொறுப்பேற்று அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வார்கள்” என்றார் அவர். ‘செய்யக்கூடியவர்கள்’ என்று ஹெவின் நந்தனையே சுட்டிக் காண்பித்தார்.

 நட்டஷாவைப் பற்றியும் ஒரு கதை தொழிற்சாலையில் உலாவியது. சக தொழிலாளி `போலை’க் காதல் செய்தாள். போல் பயங்கரக் கெட்டிக்காரன். நன்கு படித்தவன். குவாலிற்றி சேர்க்கிள்களில் அவனது குறூப் தான் எப்பொழுதும் வெற்றி பெறும். நட்டஷாவின் முன்னேற்றமே தன்னுடையது என்று எந்நேரமும் நட்டஷாவிற்கு உதவி செய்து கொண்டே இருப்பான். நட்டஷா எப்போதும் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னுடைய முகத்தை எப்பவும் அவனுடன் உரச வைத்திருப்பாள்.

 அவளை உயர்த்தி, ஒரு ரீம் லீடராக அவள் பதவி உயர்வு பெற்றபோது போல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன்பின்னர் நட்டஷாவிற்கு மேலதிகாரிகளின் தொடர்பு கிடைத்ததும் அவனை உதறித் தள்ளிவிட்டாள். தினம் தினம் மேலதிகாரிகளுடன் கிளப்பிற்குச் செல்வதும், நடனமாடுவதும் குடித்துக் கூத்தாடுவதுமாக இருந்தாள்.

 “நட்டஷா … நீ என்னைத்தானே காதலித்தாய். இப்போது ஏன் இப்படிச் செய்கின்றாய்?” என போல் கேட்டபோது,

 “நீ என்னை ஒருபோதும் காதலிக்கச் சொல்லிக் கேட்கவில்லையே!” என்றாள் நட்டஷா. மனேஜர் எட்றியானுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டபோது, போல் தற்கொலை செய்து கொண்டான்.

இது பழைய கதை. அப்போது நந்தனோ புங்கோ அங்கு வேலை செய்யவில்லை.

 ஒவ்வொருநாளும் புங்குடன் நந்தன் தொடர்ந்து வேலை செய்து வருவதால், தனது அந்தரங்க லீலைகள் தெரிந்துவிடும் என நினைத்தான் ஜோசுவா. நந்தனை புங்குடன் வேலை செய்வதிலிருந்து தடுத்து மற்றவர்களுடன் போடும்படி நட்டஷாவுடன் கதைத்தான். நோமாவுடன் அவனது சேஷ்டைகள் சரிவராது என்பது அவனுக்குத் தெரியும். நட்டஷாவிற்கும் இதுவே பழிவாங்க வாய்ப்பாகியது. நந்தன் பிரிக்கப்பட்டான். ஜோசுவாவின் வேட்கை அடங்கும் மட்டும்---ஆறுமாதங்கள் நந்தன் புங்குடன் வேலை செய்யாதவாறு தடுக்கப்பட்டான்.

 “ஏன் என்னுடன் வேலை செய்யவில்லை?” காணும் போதெல்லாம் நந்தனிடம் புங் கேட்பாள்.

 தெரிந்த பதிலுக்கு ஒரு விளக்கம் கொடுக்க வேண்டுமா என நந்தன் சிரித்துக் கொள்வான்.

 

தொடரும்….

No comments: