பணத்தோட்டம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர் ஜி என் வேலுமணி. இவர் சிவாஜியின் நடிப்பில் தயாரித்த பதிபக்தி, பாகப்பிரிவினை, பாலும் பழமும் ஆகிய படங்கள் பெரும் வெற்றியைக் கண்டு வெற்றிகரமான தயாரிப்பாளராக இவரை உயர்த்தி இருந்தது. சிவாஜியின் படத் தயாரிப்பாளர் என்று அடையாளம் காணப்பட்ட இவர் திடீர் என்று எம் ஜி ஆரின் தயாரிப்பாளராக மாறினார். அப்படி மாறி தனது சரவணா பிலிம்ஸ் பட நிறுவனம் மூலம் அவர் தயாரித்தப் படம்தான் பணத்தோட்டம்.



எம் ஜி ஆர் நடிப்பில் உருவான இப் படத்தின் கதையை எழுதியவர் மணிக்கொடி புகழ் பி எஸ் ராமையா ஆவார்.ஆனால் அவர் எழுதிய கதையா இது என்ற சந்தேகம் படம் முழுதும் தொடரும் வண்ணம் படத்தின் கதை மிக சாதாரணமாக அமைத்திருந்தது.கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் கோஷ்டியின் சாதித் திட்டத்துக்கு பலியாகும் செல்வம் என்ற அப்பாவி இளைஞன் சிறையில் அடைப் படுகிறான்.தான்

நிரபராதி என்று நிரூபிக்க சிறையில் இருந்து தப்பும் அவனை சீமான் பொன்னம்பலத்தின் மகள் கலா அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுகிறாள்.அதன் தொடர்ச்சியாக இருவரிடையே காதல் மலர்கிறது.மறுபக்கம் போலீஸ் துரத்துகிறது.செல்வத்தின் தாயே மகன் மீது சந்தேகப்படுகிறாள்.ஆனாலும் குற்றவாளியை பிடிக்க செல்வம் முயற்சி செய்கிறான்.

இப்படி எழுதப் பட்ட கதையில் செல்வமாக எம் ஜி ஆர் நடித்தார். இந்தப் படத்தில் அவர் ஆறு விதமான மறுவேடங்களில் வருகிறார்.தபால்காரராக,மேல் நாட்டு நடனக்காரராக,வண்டி இழுப்பவராக, தெருவில் சப்பாத்துக்கு பாலிஷ் போடுபவராக வயதான வழிப்போக்கனாக,குடிகாரனாக, பல வேடங்களில் அவர் வருகிறார்.அவரின் காதலி கலாவாக சரோஜாதேவி நடித்தார்.இவர்களுடன் எஸ் வி சுப்பையா,நம்பியார், எம் வி ராஜம்மா,ஷீலா,அசோகன்,கரிக்கோல் ராஜு,ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்திலேயே சரோஜாதேவியின் நடிப்புதான் நிறைவாக இருந்தது.எம் ஜி ஆரிடம் அவர் நெளிவதும்,குழைவதும் இனிமை.சுப்பையா அவ்வப்ப்போது வெள்ளந்தியாக சிரிக்கிறார்.ராஜம்மா கலங்குகிறார். வில்லன் நம்பியார் அடக்கி வாசிக்கிறார்,ஆனால் எம் ஜி ஆருடன் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்.அசோகனுக்கு போலீஸ் இன்ஸ்பக்டர் வேடம். இவர்களுடன் நாகேசும்,ஏ வீரப்பனுக்கு செய்யும் கூத்துகளை நகைச்சுவை என்பதா,அபத்தம் என்பதா! நாகேஷ் நடித்த முதல் எம் ஜி ஆர் படம் இதுதான்.ஆனால் எம் ஜி ஆருடன் ஒரு காட்சியில் கூட அவர் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்தில் நடிக்க வேலுமணியிடம் பெற்றுக் கொண்ட மூவாயிரம் ரூபாயை கொண்டே நாகேஷ் முதன் முதலாக ஒரு செகண்ட் ஹாண்ட் காரை வாங்கினார்.


படத்திற்கு இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள்.பாடல்களை கண்ணதாசன் புனைந்தார்.அத்தனை பாடல்களும் சூப்பர்.பேசுவது கிளியா,என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ,ஜவ்வாது மேடையிட்டு,மனத்தோட்டம் போடவென்று மாயவனால் கொடுத்த உடல் ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. சுசிலாவின் மிருதுவான குரலில் ஒலித்த ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை பாடலை பிடிக்கவில்லை என்று யார் தான் சொல்வார்கள்!

இந்தப் படத்தில் தான் எம் ஜி ஆர் முதன் முதலாக நைட் கிளப்பில்

மேல்நாட்டு நடனம் ஆடியிருந்தார்.ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம் பாடலுக்கு அவரும் லக்ஷ்மிராஜ்யமும் ஆடும் டான்ஸ் ஜோர்.

படத்தின் திரைக் கதை வசனத்தை பாசுமணி எழுதியிருந்தார்.படத்தொகுப்பை கே நாராயணன் கையாண்டார்.ஒளிப்பதிவை தம்பு மேற் கொண்டார்.படத்தை இயக்கியவர் கே சங்கர்.


பணத்தோட்டம் படத்தில் நடிக்க எம் ஜி ஆர் ஒப்புக் கொண்டவுடன் வேலுமணியிடம் படத்தை சங்கர்தான் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .முதலில் தயங்கிய சங்கர் பின்னர் உடன் பட்டார்.சிவாஜியின் ஆலயமணி படத்தின் படப்பிடிப்பும் ,பணத்தோட்டமும் ஒரே சமயத்தில் சங்கர் இயக்கத்தில் உருவாகின. சில தினங்களில் காலையில் ஆலயமணி படத்தையும், பிற்பகலில் பணத்தோட்டம் படத்தையும் இயக்கினார் சங்கர். ஆலயமணி முதலில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது.அதனைத் தொடர்ந்து 1963 ம் ஆண்டு பொங்கலுக்கு பணத்தோட்டம் வெளிவந்து வெற்றி கண்டது.அதன் பின்னர் சங்கர் எம் ஜி ஆரின் நிரந்தர பட டைரக்டராகி பல படங்களை இயக்கினார்.அதே போல் வேலுமணியும் எம் ஜி ஆரின் நிரந்தர படத் தயாரிப்பாளராகி பல படங்களைத் தயாரித்தார்.இவற்றுக்கெ
ல்லாம் பிள்ளையார் சுழி போட்டது பணத்தோட்டம் தான்!

1 comment:

Anonymous said...

அருமையான தகவல், பாடல்கள் அத்தனையும் இன்றுவரை நிலைத்துள்ளன.