அமெரிக்க வானில் சீனாவின் உளவு ‘பலூன்’ கண்டுபிடிப்பு
இந்திய கொவிட் மருந்துகளை தேடி வாங்கும் சீனர்கள் நல்ல பலன் தருவதாக பாராட்டு
உக்ரைன் மீது விரைவில் பாரிய தாக்குதலுக்கு ரஷ்யா நடவடிக்கை
காசா பகுதியில் இஸ்ரேல் சரிமாரி வான் தாக்குதல்
உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது சர்வதேச நாணய நிதியம்
இந்தியா, பனாமா இடையே ஒப்பந்தம்
அமெரிக்க வானில் சீனாவின் உளவு ‘பலூன்’ கண்டுபிடிப்பு
நாட்களில் அமெரிக்காவின் முக்கிய தளங்களுக்கு மேலால் பறந்த சீனாவினது என்று சந்தேகிக்கப்படும் உளவு பார்க்கும் பலூன் அவதானிக்கப்பட்டுள்ளது.
இது சீனாவுக்குச் சொந்தமான “வானின் அதிக உயரத்தில் பறக்கும் கண்காணிப்பு பலூன் ” என்பது உறுதியானது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பலூன் மிக அண்மையில் மேற்கு மாநிலமான மொன்டானாவில் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பலூன் பாகங்கள் தரையில் விழுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துப் பற்றிய அச்சம் காரணமாக அதனை சுட்டு வீழ்த்தாமல் இருக்க இராணுவ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் சீனா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. நிலைமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தப் பொருள் அலஸ்காவின் அலூடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக பறந்திருப்பதோடு பின்னர் கடந்த புதனன்று (01) மொன்டானாவின் பிலிங்ஸ் நகருக்கு மேலால் தெரிந்துள்ளது.
இந்தப் பொருளை சுட்டு வீழ்த்த வெள்ளை மாளிகை உத்தரவிடும் பட்சத்தில் எப்–22 உட்பட போர் விமானங்களை அரசு அதற்காக தயார் நிலையில் வைத்திருப்பதாக பெயர் குறிப்பிடாத மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படை தளபதி ஜெனரல் மார்க் மில்லி உட்பட முன்னணி இராணுவ தலைவர்கள் கடந்த புதனன்று சந்தித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனியோ பிளிங்கன் அடுத்த வாரம் சீனாவுக்கு பயணிக்கவுள்ள நிலையிலேயே இது நிகழ்ந்துள்ளது. பைடன் நிர்வாகத்தின் அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவர் சீனா பயணிப்பது இது முதல் முறையாக அமையும். நன்றி தினகரன்
இந்திய கொவிட் மருந்துகளை தேடி வாங்கும் சீனர்கள் நல்ல பலன் தருவதாக பாராட்டு
சீன அரசாங்கம் தன் கடுமையான கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டதையடுத்து அந்நாட்டில் மீண்டும் கொவிட் வேகமாக பரவ ஆரம்பித்திருப்பதால் பல சீனர்கள் இந்திய தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதாகவும் இந்திய மருந்துகளுக்கான கேள்வி வெகுவாக அதிகரித்து காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வர்த்தக நாமம் அற்ற பொதுவான கொவிட் மருந்துகள் சட்ட விரோதமாக சீனாவுக்கு கடத்தப்பட்டு சீன வர்த்தகர்கள் களஞ்சியப்படுத்தி அவற்றை விற்பனை செய்வதாகவும் சந்தை விலையை விட எட்டு மடங்கு அதிக விலையில் விற்பனையானதாகவும் சி.என்.என். ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
சீனாவில் இக் குளிர்காலப் பகுதியில் கொவிட் வேகமாக பரவி வருவதால் சீன மருந்து கடைகளில் கொவிட் எதிர்ப்பு மருந்துகள் தீர்ந்து போய்விட்ட நிலையிலேயே நாட்டுக்குள் கடத்தப்பட்ட இந்திய மருந்துகளுக்கு சீனர்கள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக செய்திகள் மூலம் அறிய வருகிறது.
சில மருந்துகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்துவதற்கு இந்தியா அனுமதித்திருந்தது. இம் மருந்துகளை சீனாவில் பயன்படுத்துவது சட்டபூர்வமானது அல்ல என சீன அரசு சார்பு இணைய சஞ்சிகையான 'ஸிக்ஸ்த்டோன்' சுட்டிக்காட்டியிருந்த போதிலும் சீனர்கள் தொடர்ந்தும் இந்திய கொவிட் மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதே சமயம் சீன நெட்டிசன்கள் இந்திய மருந்துகள் நல்ல பலன் தருவதாக பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். நன்றி தினகரன்
உக்ரைன் மீது விரைவில் பாரிய தாக்குதலுக்கு ரஷ்யா நடவடிக்கை
ரஷ்யா மற்றொரு பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் அது பெப்ரவரி 24 அளவில் விரைவாக இடம்பெறக் கூடும் என்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ எச்சரித்துள்ளார்.
ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புகளை குவித்து வருவதோடு கடந்த ஆண்டு படையெடுப்பை ஆரம்பித்த ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி ஏதோ செய்ய முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் ஒன்றுக்காக ரஷ்யா சுமார் 500,000 துருப்புகளை திரட்டி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு சுமார் 300,000 துருப்புகளை குவிக்கும் அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த செப்டெம்பரில் வெளியிட்டிருந்தார். எனினும் இதன் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் மிக அதிகம் என்று ரெஸ்னிகோ குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் உத்தியோகபூர்வமாக 300,000 என அறிவித்தபோதும் எமது மதிப்பீட்டின்படி எல்லைகளில் நாம் பார்க்கும் துருப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது” என்று பிரெஞ்ச் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.கிழக்கு டொன்பஸ் பிராந்தியத்தை கைப்பற்றியதாக அண்மையில் குறிப்பிட்ட ரஷ்யா, பக்முத் நகரை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இணங்கிய நிலையில் போர் விமானங்களை தரும்படி அந்த நாடு உதவி கோரியுள்ளது.
“ரஷ்ய பயங்கரவாதிகளை நிறுத்துவதற்கான ஒரே வழி அவர்களை தோற்கடிப்பது மாத்திரம் தான்” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார். நன்றி தினகரன்
காசா பகுதியில் இஸ்ரேல் சரிமாரி வான் தாக்குதல்
முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்களை நடத்திய நிலையில் பிராந்தியத்தில் மற்றொரு பாரிய அளவிலான மோதல் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த வாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சம்பவத்தை தொடர்ந்தே நேற்று (02) அதிகாலை இந்த வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜெனின் சுற்றிவளைப்பில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த வார இறுதியில் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய மத வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு இஸ்ரேலியர் கொல்லப்பட்டது உட்பட பலஸ்தீனர்களின் தாக்குதல்கள் இடம்பெற்றன.இந்த பதற்ற சூழலில் இஸ்ரேலிய படைகள் மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டையும் வெடித்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதோடு அந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு பலஸ்தீன தரப்பும் உரிமை கோரவில்லை.
இதனைத் தொடர்ந்து காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ரொக்கெட் மற்றும் ஆயுத உற்பத்தித் தளங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது சர்வதேச நாணய நிதியம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மீட்சி மற்றும் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சீன பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை சர்வதேச நாணய நிதியம் சற்று அதிகரித்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி 2022இல் 3.4 வீதத்தில் இருந்து 2023இல் தொடர்ந்தும் 2.9 வீதமாக வீழ்ச்சி கண்டபோதும் அது ஒக்டோபரில் எதிர்வுகூறப்பட்ட 2.7 வீதத்தை விடவும் முன்னேற்றம் கண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியது. உலகப் பொருளாதார மந்தநிலை குறித்தும் அது முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
2024 ஆம் ஆண்டுக்காக உலக பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக சற்று அதிகரித்தபோதும், உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி வீதம் உயர்த்தப்படுவது கேள்வியை மெதுவடையச் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மந்தநிலை அச்சுறுத்தல் குறைந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கிகள் முன்னேற்றம் கண்டபோதும், உக்ரைனியப் போர் மேலும் தீவிரம் அடைந்து, கொவிட் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டம் தொடரும் நிலையில் விலைவாசி மற்றும் புதிய இடையூறுகளை கட்டுப்படுத்துவதில் மேலும் நடவடிக்கை தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பீர் ஒலிவியர் சுட்டிக்காட்டினார். நன்றி தினகரன்
இந்தியா, பனாமா இடையே ஒப்பந்தம்
இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் ஒத்துழைப்பதற்கான உடன்படிக்கையொன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும் பனாமா வெளிவிவகார அமைச்சர் ஜனைனா டெவானே மென்கொமோவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவின் 17 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் விழா இந்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்குபற்றிய பனாமா வெளிவிவகார அமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இவ் உடன்படிக்கையில் சைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்துள்ள ட்வீட்டில், “எங்களது இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் இச்சந்திப்பின் போது பாரிய பொருளாதார வாய்ப்புகள், சுகாதாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. ஜனநாயக நாடுகள் என்ற வகையில் உலகளாவிய நிலவரங்கள் தொடர்பிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்” என்றுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment