இரத்தத் திலகம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 இந்தியா,சீனா இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே அரை


நூற்றாண்டுகளுக்கும் மேலாக முறுகல் நிலை இருந்து வருவது தெரிந்ததே.இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே 1962ம் ஆண்டு யுத்தம் ஒன்றும் நடந்தது.இந்த யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் கண்ணதாசன் திரைப் படம் ஒன்றை தயாரிக்க ஆர்வம் காட்டினார்.தேசபக்தியை விளக்கும் படம் என்பதாலோ என்னவோ நேஷனல் மூவிஸ் என்ற ஒரு பட நிறுவனம் தொடங்கப்பட்டது.கவிஞரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பஞ்சு அருணாசலம் திடீர் என்று படத் தயாரிப்பாளராக்கப்பட்டு நேஷனல் மூவிஸ் சார்பில் படம் தயாரானது.அந்தப் படம்தான் இரத்தத் திலகம்.


கல்லூரியில் பயிலும் குமார்,கமலா இருவரும் கீரியும் பாம்பும்

போன்றவர்கள்.கல்வி, கலை,விளையாட்டு, எல்லாவற்றிலும் நேருக்கு நேர் மோதி ஒருவரை ஒருவர் வெல்லத் துடிப்பவவர்கள்.அவர்கள் நடிக்கும் ஒத்தல்லோ நாடகத்தின் போது எதிர்பாரா விதமாக இருவரிடையே காதல் மலருகிறது.ஆனால் அதை தொடர முடியா விதத்தில் கமலா தன் பெற்றோரை சந்திக்க சீனா திரும்புகிறாள்.அதே காலகட்டத்தில் இந்தோ-சீனா யுத்தம் வெடிக்கிறது.தாய் நாடு மீது பக்தி கொண்ட குமார் இராணுவத்தில் சேர்ந்து மேஜர் ஆகி நாட்டின் எல்லைக்கு சென்று போர் புரிகிறான்.அதே சமயம் தான் வளர்ந்து,வாழ்ந்த சீனாவில் இருக்கும் கமாலா ஓரு சீன டாக்டரை மணந்து சீனாவில் வாழத் தீர்மானிக்கிறாள் .யுத்தம் காதலர்களை பிரிக்கிறது. கமலா தனக்கும்,பாரதத்துக்கும் துரோகம் செய்து விட்டதாக குமார் ஆத்திரப்படுகிறான் .ஆனால் கமலாவின் தியாகம் காலம் கடந்தே அவனுக்கு தெரிய வருகிறது.

இவ்வாறு கண்ணதாசனால் எழுதப்பட்ட கதைக்கு அவரே இன்னும் இருவரோடு சேர்ந்து வசனம் எழுதினார்.படத்தின் பாடல்கள் அனைத்தும் கவிஞரால் எழுதப்பட்டது.திரை இசை திலகம் கே வி மகாதேவன் இசையமைத்தார்.அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்றும் கல்லூரி இறுதி நாளில் பாடப்படும் பிரியாவிடை பாடலான பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் இந்தப் படத்தில் தான் இடம் பெற்றது.

இது தவிர புத்தன் வந்த திசையிலே போர்,பனி படர்ந்த மலையின் மேலே ,வாடை காற்றம்மா வாடைக்காற்றம்மா ஆகிய பாடல்களும் இடம் பெற்றன.சிவாஜி,சாவித்ரி நடிக்கும்தாழம் தங்க நிலவே தலை ஏன் குனிகிறது பாடல் படத்தில் இடம் பெற்றும் இன்றைய யூ டியூபில் தலையை குனிந்து கொண்டது!

கண்ணதாசனுக்கு ஒரு படத்தில் தோன்றி பாடல் காட்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.அந்த ஆசையை இப் படத்தில் நிறைவேற்றிக் கொண்டார்.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு பாடலுக்கு திரையில் தோன்றி நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார்.

படத்தில் நடிகர் திலகமும்,நடிகையர் திலகமும் இணைந்து

நடித்தார்கள்.இருவர் நடிப்பிலும் மோதல்,காதல்,நெகிழ்ச்சி,பாசம் என்று பலவித உணர்ச்சிகள் வெளிப்பட்டன.படத்தில் இரண்டு திலகங்களும் நடிக்கும் ஒத்தல்லோ நாடக காட்சி அருமை.ஆங்கில வசனங்களையே பயன்படுத்தி இருப்பது சிறப்பு.நாகேஷ் மனோரமா காட்சிகள் சிரிப்பு . தான் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் மனோரமாவை திரையுலகுக்கு அறிமுகம் செய்த கண்ணதாசன் இந்த படத்தில் அவருக்கு முதன் முதலாக சொந்தக் குரலில் பாடும் வாய்ப்பை வழங்கினார். மற்றும்படி பெரிய நட்சத்திர நடிகர்கள் இன்றி தயாரான படத்தில் கண்ணப்பா,சீதாலட்சுமி,புஷ்பலதா,ஷண்முகசுந்தரம்,வீராசாமி,குண்டு கருப்பையா ஆகியோரும் நடித்திருந்தனர்.சீன டாக்டராகவும் கமலாவின் கணவனாகவும் நடித்த கண்ணப்பா இயல்பாக நடித்திருந்தார்.புஷ்பலதா திடீர் என்று தோன்றி ஆடிப் பாடி காணாமல் போய் விடுகிறார்!

படம் இந்திய சீன யுத்தத்தை அடிப்படையாக கொண்டு

உருவாக்கப்பட்ட போதும் படப்பிடிப்பின் போது கண்ணதாசனுக்கும் சாவித்திரிக்கு இடையே கால்ஷீட் இழுபறி காரணமாக யுத்தம் வெடித்து அதனால் படப்பிடிப்பு தடைப் பட்டது.அதன் பின் படத் தயாரிப்பு நிவாகியான வீரய்யாவின் கடும் முயற்ச்சிக்கு பின் சமாதானம் ஏற்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்தது. இந்த சிக்கல் காரணமாக 63ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சுதந்திரத் தினத்தன்று வெளிவர வேண்டிய படம் ஒரு மாதம் கழித்தே வெளிவந்தது.


படத்தை இயக்கியவர் மராட்டியரும் வக்கீலுமான தாதா மிராசி ஆவார்.படத்தை நல்ல முறையில் இயக்கி இருந்தார்.சிவாஜியும்,சாவித்திரியும் சந்திக்கும் இறுதி காட்சியை விறுவிறுப்பாகவும்,உணர்ச்சிகரமாகவும் இயக்கியிருந்தார்.

இரத்தத் திலகம் வெற்றித் திலகத்தை கவிஞருக்கு இடா விட்டலும் கூட நடிப்பு பாடல்கள் என்பவற்றில் திலகமாக திகழ்ந்தது!

1 comment:

Paul Jeyaseelan said...

Thanks Suntherathas,
I am reading your Film reviews in this blog regularly. I know your interest in films and film-songs from early 1980s. You were a regular listener of 'Oru pada paatu'(2 p.m) those days. We used to meet often in the meetings for 'reporting'. Once I came to your place in Maradana Road. Hope you can remember me.
P. N. Jeyaseelan.