இலங்கைச் செய்திகள்

 கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்

நல்லிணக்கம் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது; யாழில் ஜனாதிபதி

 பிரபலம் அல்லாத கடினமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கட்டியெழுப்புவோம்

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு முழு ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்கும்

திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை தொடர தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி (UPDATE)

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வே சிறந்த தீர்வு


கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்

- 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' திறப்பு விழாவில் ஜனாதிபதி

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய அரசின், 1,350 கோடி ரூபாய் நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ இன்று (11) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

வணக்கத்திற்குரிய பௌத்த, இந்து, முஸ்லிம் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு வணக்கம். இந்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் முருகன் அவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகருக்கும் எமது அமைச்சர்களுக்கும் வட மாகாண ஆளுநருக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் சபையில் கூடியிருப்போருக்கும் பெரியோருக்கும் வணக்கம்.

எமது 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட நாம் தீர்மானித்தோம். அந்த வேலைதிட்டத்தை நாம் இந்த கலாசார மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றோம். இது எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொடுத்த பரிசு ஆகும். அதனால் அவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம்.

இந்தியாவும் இலங்கையும் முன்னெடுத்து வரும் வேலைதிட்டங்களில் பிரதானமானதொரு அம்சம் இதுவாகும். ஒரு புறத்தில் இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் மறுபுறத்தில் விசேடமாக திருகோணமாலை துறைமுகத்தின் பாரிய அபிவிருத்தி வேலைதிட்டம் தொடர்பிலும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

வலு சக்தி தொடர்பிலும் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அதுபோலவே எமது பொருளாதார நெருக்கடியின்போது இந்த கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்.

இக்கலாசார மையம் ஒரு பொதுவான மையமாகும். நான் எப்போதும் கூறுவேன் எம்மிடையேயுள்ள கலாசாரத்தை வேறு பிரிக்க முடியாது என்று. ஒரு நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியாவாகும்.

எம்மிடமுள்ளது ஒரு கலாசாரம். அதனை நாம் பாதுகாத்து மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனால் இந்த மையத்தை பொதுமக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு உங்கள் அனைவர் சார்பிலும் இந்தியாவுக்கும் இந்தியாவின் பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அதுபோலவே இன்று இந்த நடன நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கும் அதன் பின்னர் பங்கெடுப்பவர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களிடமிருந்து எமது சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைத்த ஒத்துழைப்புக்காகவே 75ஆவது சுதந்திர தினத்தை நாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானித்தோம்.

யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்.

1915 ஆம் ஆண்டு குழப்பங்கள் நிலவிய காலத்தில் எமது சிங்கள பௌத்த தலைவர்களை பாதுகாத்துக் கொடுத்தவர் பொன்னம்பலம் இராமநாதன் என நான் இவ்விடத்தில் கூற விரும்புகிறேன்.

ஹென்றி பேதிரிஸ் அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்குமாறு அவர் அப்போதைய ஆளுநருக்கு அறிவித்தார். அதற்கு பதிலாக ஹென்றி பேதிரிஸின் நிறைக்குச் சமனான தங்கத்தை தருவதாக க் கூறினார். எனினும் அது வெற்றியடையவில்லை.

பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய சபையை உருவாக்கினார். தொழிற்சங்கங்களுக்கு தலைமைத்துவம் தாங்கினார். சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்த போதும் துரதிஷ்டவசமாக அவர் 1924ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிலிருந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் எப்.ஆர் சேனாநாயக்க காலமானார்.

அவர் வாழ்ந்திருந்தால் இதை விடவும் வித்தியாசமானதொரு வரலாற்றை நாம் கண்டிருந்திருப்போம். சிங்கள கலையை எமக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசுவாமி . அவரின் காலத்திலேயே இது மேம்படுத்தப்பட்டது.

அருணாச்சலம் மஹாதேவா அவர்களும் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அது போலவே இந்து தர்மத்தை முன்னேற்றுவதற்கும் கொழும்பு சிவன் கோவிலை கட்டுவதற்கும் இங்கு கோவில்களை உருவாக்கவும் இந்த குடும்பம் உதவி செய்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் சிங்களம், தமிழ், பௌத்தம், இந்து ஆகிய பிரிவுகள் முன்னேற உதவி செய்தனர்.

இலங்கையர் சார்பாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்கள் சார்பாகவும் அக்குடும்பத்துக்கு நன்றி கூற நாம் கடமைபட்டுள்ளோம்.

அவர்களைப் போலவே வைத்தியலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்தைப் பெறுவதற்காக டி.எஸ் சேனாநாயக்க அவர்களுக்கு உதவிய அமைச்சர் சி.சுந்தரலிங்கம் , அமைச்சர் சி.சிற்றம்பலம், அமைச்சர் நல்லைய்யாஆகியோரையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

நாம் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களையும் இங்கே நினைவு கூற வேண்டும். நாம் செல்வநாயகம் அவர்களையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். அதுபோலவே அமைச்சர் எம்.திருச்செல்வம் அவர்களையும் நினைவுபடுத்துகின்றோம்.

இந்த தலைவர்களே ஏனைய தலைவர்களுடன் இணைந்து இலங்கையை உருவாக்குவதற்காக பணியாற்றினர். அதன் காரணமாகவே இப்பிரதேசத்தில், இந்த யாழ்ப்பாணத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்த அரசாங்கம் தீர்மானித்தது.

நாம் தற்போது புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இலங்கையர்களாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நல்லிணக்கம் தொடர்பில் நான் கடந்த 08 ஆம் திகதி அன்று பேசினேன். எனவே அது பற்றி நான் இங்கே மீண்டும் பேசப் போவதில்லை. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் நான் நேற்று பேசினேன். அதனால் அது குறித்தும் நான் இங்கே பேசப்போவதில்லை. ஆனால் கலாசாரம் தொடர்பில் நான் இங்கு பேசப்போகிறேன்.

இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நல்லிணக்கம், அபிவிருத்தி, கலாசாரம் இவையே எமது கொள்கையாகும். யாழ்ப்பாணக் கலாசாரத்தில், தமிழ் கலாசாரத்தில் இலங்கையின் கலாசாரம் போஷணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் கலாசாரம் இலங்கையிலிருந்து உருவான கலாசாரம் என்பதுடன் இது தமிழ் நாடு மற்றும் கேரளாவுடனும் தொடர்புபட்டதொரு கலாசாரம் ஆகும். இது விசேடமாக தஞ்சாவூரிலிருந்து வந்த பாணடியன், விஜய நகர் இராச்சியங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

சந்திரபாகு ஆட்சியாளர் முதல் ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களின் காலம் வரை, சப்புமல் புவனேகபாகு அரசரின் காலம் , சங்கிலி மன்னனின் காலம் ஆகியவற்றின்போது விசேட கலாசார பிணைப்புகள் இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன.

நல்லூரில் பாரிய கோயிலைக் கட்டுவித்தனர். அதுபோலவே சங்கிலிய மன்னரின் பாரிய மாளிகை இருந்தது. அன்று நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைப் பார்த்தால் அந்த மாளிகைகள் எவ்வளவு விசாலமானது என்பதை புரிந்து கொள்ளலாம். கோட்டை அரசருக்கு இதைவிட பெரிய மாளிகையொன்று அவசியம் என்றால் அவரது மாளிகை இதைவிட மிக பிரமாண்டமாக இருந்திருக்குமென எம்மால் இதைப் பார்த்து ஊகித்துக் கொள்ள முடியும்.

‘சிராவஸ்தி மஹால்’ எனும் விசாலமான கலாசார மத்திய நிலையம் ஒன்று இருந்தது. தஞ்சாவூர் சிராவஸ்தி மஹால் அதற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பழைய புத்தகங்கள் இருந்தன. வரலாறு குறித்தும் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பிலும் பயன்படுத்தப்பட்டு வந்த செக்கராச சேகரம் என்ற நூலையும் திருக்கேதீஸ்வரத்தையும் போர்த்துக்கீசிலிருந்து வந்தவர்கள் அழித்ததுடன் அவற்றை தீயிட்டும் கொளுத்தினர்.

அதனால் தான் மீகபுள்ளே ஆரச்சி போர்த்துக்கேயருக்கு எதிராக இரண்டு கலகங்களை முன்னெடுத்தார். அவரை மறந்துவிட வேண்டாம். மீண்டும் இக்கலாசாரம் ஒல்லாந்து காலத்தில் இழக்கப்பட்டது. தேசவழமை சட்டமாக்கப்பட்டது. மீண்டும் வரலாறு புதுபிக்கப்பட்டது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இது மீண்டும் மேம்படுத்தப்பட்டது. 1840இல் முதலாவது பத்திரிகை வெளியிடப்பட்டது. புத்தகங்கள் வெளிவந்தன. அதனுடாக மீண்டும் இலக்கியம் வளர்ந்தது. எனினும் யுத்தத்துடன் இவையனைத்தும் மீண்டும் அழிக்கப்பட்டன. நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. யாழ்.கோட்டை சிதைக்கப்பட்டது. யுத்தம் நடந்தாலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அதுபோலவே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும் இந்த தமிழ் கலையையும் கலாசாரத்தையும் பாதுகாத்தனர். இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியிலும் தற்போது அதற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

திரைப்படம் உள்ளது. யுத்தம் பற்றிய புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே கலையும் உள்ளது. புதிய கலை உருவாகியுள்ளது. புதிய கலாசாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே அனைத்து இடங்களில் இருந்தும் கருத்துகள் உள்வாங்கப்படுகின்றன. நாம் இங்கே சம்பிரதாய தமிழ் இசையைக் கேட்கிறோம். திரைப்படங்கள் ஊடாக நாம் தமிழ் பாடல்களை செவிமடுக்கின்றோம். அதுபோலவே ஏ.ஆர் ரஹ்மானின், ‘சின்னச் சின்ன ஆசை’யின் இசைக்கும் நாம் பாடல் பாடுகின்றோம். யொஹானியின், ‘மெனிக்கே மகே ஹித்தே’ என்ற பாடல் இசைக்கும் நாம் பாட்டு பாடுகின்றோம். இவ்வாறு கலாசாரம் புதிய கலை வடிவம் பெற்றுள்ளது. அதனை நாம் முன்னேற்ற வேண்டும்.

காலி இலக்கிய விழாவைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் நாம் ஓர் இலக்கிய விழாவை நடத்துவோம் என நான் கலாசார அமைச்சரிடம் கூறினேன்.

அதுபோலவே இங்கு நாம் புதிய கலையொன்றை முன்னேற்றுவோம். இலங்கைக் கலையின் ஒரு பகுதியாக இதனையும் உள்ளடக்குவோம். முக்கிய பகுதியாக அடையாளப் படுத்துவோம். இந்தப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூக்கி நிறுத்த வேண்டும். அப்போது இது எமது எல்லோரதும் நாடு ஆகும். இந்த இடம் தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் கலாசாரத்தின் மத்திய நிலையமாக இருக்க வேண்டும். அதனால் அமைச்சரே, நாம் இந்த இடத்திற்கு ‘சரஸ்வதி மஹால்’ என பெயரிடவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுங்கள். நாம் புதிய எதிர்பார்ப்புடன் முன்னேறிச் செல்வோம். அனைவருக்கும் நன்றி.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி. எல் முருகன் தெரிவிக்கையில்,

இன்றைய நாள் எமது இரு நாடுகளுக்கும் மிகச் சிறப்பானதாகும். ஏனெனில் யாழ். கலாசார மையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக எனக்கும் இதில் கலந்து கொள்ள கிடைத்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இது எங்கள் உறவில் முக்கிய மைல் கல்லாக நினைவில் கொள்ளப்படும்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த அற்புதமான வசதிகள் நிறைந்த கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டினார் என்பதை நான் இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுகூறுகின்றேன். இத்திட்டத்தை நிறைவு செய்து பொது மக்களிடம் கையளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிலையம் மக்களின் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த உதவும்.

திரையரங்கு பாணியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கம் , மிதக்கும் மேடை, பதினொறு மாடிகள் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்ட இம்மையம் இலங்கை மக்கள் மீது இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் நீடித்த அடையாளமாக இருக்கும்.

நான் இங்கே தங்கியிருந்த காலப்பகுதியில் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், விவசாயம் அதற்கும் அப்பாலென இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பை அனைத்து மாகாணங்களிலும் தெட்டத் தெளிவாகக் கண்டேன்.

துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மற்றும் புனிதமான திருக்கேதிஸ்வர ஆலயத்தின் மறுசீரமைப்பு ஆகிய இரண்டும் நான் நேரில் கண்ட உதாரணங்கள் ஆகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கமையவே இந்த அர்ப்பணிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. இக்கொள்கையின் கீழ் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பெறுவது இயற்கையானது.

2022ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி மற்றும் பொருளாதார உதவிகளை விட பெரிய விடயம் எதுவும் இல்லை.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு எழுத்து மூலமான நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதில் பெருமை கொள்கிறோம். இதுபோன்றே, இலங்கையிலுள்ள எமது நண்பர்களுக்கு இந்தியா பல தடவைகள் துணை நின்றுள்ளது. இது மக்களுக்கிடையிலான உறவுகளையும் கலாசார உறவுகளையும் மென்மேலும் வலுவூட்டுவதாக அமையும்.

இரு நாடுகளும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டாலும் இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கையின் வடக்கிற்கு பயணிப்பதில் சிரமம் இருந்தது. இரு நாடுகளதும் முயற்சியால் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவையை நாம் மீண்டும் தொடங்கினோம். இது இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாசார நிகழ்வுகளை மேம்படுத்துவதற்கான உந்து சக்தியாக அமையும்.

உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது போன்றே படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் பேரில் வட மாகாணத்திலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு இந்திய அரசின் சார்பில் புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்படும்.

2047ஆம் ஆண்டில் இந்தியா தனது 100ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. அதனை நோக்கிய பயணத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது. இலங்கையும் அதே குறிக்கோளுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. எனவே இந்த அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் இலங்கை இந்தியாவை அரவணைத்துச் செல்லும் என நான் நம்புகிறேன்.

 நன்றி தினகரன் 

நல்லிணக்கம் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது; யாழில் ஜனாதிபதி

  • மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது
  • நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பரந்த பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும்

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ், அதிகூடிய அதிகாரத்தை பகிர்வது குறித்தும் வடக்கு பிரதேசத்தின் அரசியல் விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையிலும் உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளேன். இன்று நான் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

பொருளாதார அபிவிருத்தியுடன் வட மாகாணத்திலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என நான் நம்புகிறேன். யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் முற்றாக அழிந்தது. எதிர்பார்க்கப்பட்ட நிலை இன்னமும் எட்டப்படவில்லை. எனவே, நாட்டை அந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக 10 வருடத் திட்டத்தின் கீழ் செயல்பட எதிர்பார்க்கிறோம்.

இதற்கு வெளிநாட்டு உதவிகள் மட்டுமன்றி புலம்பெயர் அமைப்புகளின் உதவிகளையும் பெற வேண்டும்.

எனவே, இது குறித்த உங்கள் கருத்துகளை அறியவும், அபிவிருத்திப் பணிகளுக்கு உங்கள் கருத்துகளைப் பெறவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். இந்த மாகாணத்தில் புதிய பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குவதற்கான உங்கள் யோசனைகளை எமக்கு வழங்குங்கள்.

பயிற்செய்கையை ஆரம்பிப்பதற்காகவே உரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தோம். எதிர்காலத்தில் ஏனைய பயிர்களுக்கும் உரங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இங்கு கருத்து தெரிவித்த பெரும்பாலானோர் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியே பேசினர். குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பல பிரச்சினைகள் உள்ளன. எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையில் இந்த வருடம் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது கடினமாக இருந்தாலும் எதிர்காலத்தில் அது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்.

இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதாயின் ஒரு திட்டத்திற்கு அமைய செயற்படவேண்டும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டும். மேலும், எதிர்காலத்திற்காக இந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட வேண்டும். அவற்றையும் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பு மேலதிகமாக இருக்க வேண்டும்.

எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மற்றும் போட்டித்தன்மையுள்ள பொருளாதாரம் என்பவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக சில முக்கிய மாகாணங்கள் சிலவற்றை தெரிவு செய்துள்ளோம். அதில் ஒன்று வட மாகாணம். அந்த வேலைத்திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த வடமாகாணத்தின் பொருளாதாரம் பாரியளவில் முன்னேறி பாரிய பொருளாதாரமாக மாறும்.

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதே எமது முதல் முயற்சியாகும். கிளிநொச்சியிலிருந்து குமண மற்றும் அங்கிருந்து உடவலவை வரை மேற்கொள்ளப்படும் நெற்பயிற்செய்கை மூலம் ஒரு ஏக்கருக்கு 06, 07 மெற்றிக் தொன் அறுவடையைப் பெறுவது எமது எதிர்பார்ப்பாகும். இதன் காரணமாக அப்பகுதிகளில் நெல் உற்பத்தி அதிகரிக்கும் போது ஏனைய பகுதிகளில் உள்ள காணிகள் வேறு முதலீடுகளுக்காக பயன்படுத்தப்பட முடியும்.

மேலும், மீன்பிடித் தொழிலை வணிக ரீதியாக இலாபகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். பாரம்பரிய மீன்பிடி தொழில் மட்டுமல்ல, இறால் வளர்ப்புக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்படலாம்.

இழுவை மடிவலை பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்துவோம். அதே போன்று வடக்கு நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

மல்வத்து ஓயா மற்றும் யோத எல ஆகியவற்றை இணைத்து, நீர்ப்பாசன திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் ஏனைய ஆறுகளை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஆணையிறவு கடல்நீரேரிக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கும், பூனரீன் ஏரியை அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்த மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குளங்களில் சூரியக் கலங்களைப் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் குறித்தும் ஆராயப்படுகிறது .

புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு கடற்கரை வரையான பிரதேசத்திலிருந்தும் அம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்தும் 30-40 மெகாவோர்ட் மேலதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எதிர்காலம் பசுமை அமோனியா மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தான் உள்ளது. இதில் பெரும்பாலானவை வடக்கு மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. வடக்கின் பொருளாதாரத்தை முற்றாக மாற்றி பலமான பொருளாதாரமாக உருவாக்க முடியும்.

மேலும், மன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். சிறிய கப்பல் இந்த தீவுகளுக்குச் செல்கின்றன. சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய இந்துக் கோயில்களுக்குச் செல்கின்றனர்.

மாங்குளம் பரந்தனில் கைத்தொழில் வலயங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. மேலும், இந்தப் பகுதிக்கு மற்றொரு அரசு சாரா பல்கலைக்கழகத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இப்பகுதிக்கு தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதன் மூலம், அறிவு சார் தொழில்நுட்ப பகுதியாக இதை மாற்ற முடியும். மேலும் பூனரினை புதிய நகரமாக மாற்றுவதே எங்கள் திட்டம். இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் வடக்கின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகளை இந்தியாவின் உதவியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். அது வடமாகாணத்தின் அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் விடயமாகும். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கியது. அரசாங்கம் என்ற வகையில், அந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி துரிதமாக அதனை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.

நல்லிணக்கத்தினால் மட்டும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டு இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

மேலும், இந்த மாகாணத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும். கீழ் மட்டத்தில் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து அனைவரும் இணைந்து ஆராய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இதை அரசாங்கத்தினால் மட்டும் செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம், அதன்படி மக்கள் தமது பகுதிக்கான அபிவிருத்தியை பொறுப்பேற்று அரச ஆதரவுடன் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாகாணமும் தத்தமது மாகாணத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பேற்க வேண்டும். 09 மாகாணங்களுக்கு இடையில் போட்டி நடத்துவோம். அந்த போட்டியின் மூலம் நாடு அபிவிருத்தி அடையும்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

வடமாகாண மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை வடமாகாண மக்கள் சார்பாக மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறேன். நாடு கடந்த காலங்களில் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற ஜனாதிபதி முன்வந்தார். எனவே வடமாகாண மக்கள் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது எமது பொறுப்பாகும்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடமாகாணத்திற்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம். இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 நன்றி தினகரன் 
பிரபலம் அல்லாத கடினமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கட்டியெழுப்புவோம்

- இலங்கையில் பொருத்தப்பட்ட Hyundai Grand i10 கார் அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி கோரிக்கை
- இத்தகைய முதலீடுகளால் நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீளும் என நம்பிக்கை

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வரி விதிப்பு செய்யப்பட்டது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறியாமல் அல்ல என்றும் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு நடத்தும் நோக்கிலேயே அத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதேபோல வெகு விரைவில் நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai Grand i10 மோட்டார் வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (10) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டு விடும் என்ற நம்பிக்கை இத்தகைய முதலீடுகளால் உறுதி செய்யப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் Hyundai Grand i10  வாகனத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகள் எமது நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் உறுதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள அபான்ஸ் ஒட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மோட்டார் வாகனம் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலையொன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்தல் ஆகிய துறையில் இந்நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

Hyundai Grand i10 ஐ இலங்கையில் பொருத்துவதென்பது பெஸ்டென்ஜி அம்மையார் எடுத்த தீர்மானத்துக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.1977இல் திறந்த பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்டபோது அவர் இந்தப் பயணத்தை ஆரம்பித்த விதம் எனக்குத் தெரியும். அன்று நான் 5ஆவது ஒழுங்கையூடாக காலி வீதிக்கு வரும் வழியில் அபான்ஸ் காட்சியறையொன்று இருந்தமை எனக்கு ஞாபகம் வருகிறது. இன்று நீங்கள் அந்த இடத்திலிருந்து இந்நிலைக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் செய்தவற்றுக்கு மிக்க நன்றி.

தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் ஒத்தழைப்பு போலவே கொரியாவிலிருந்து பெரும் அளவிலான முதலீடுகள் எமது நாட்டுக்கு கிடைப்பதனால் இது ஏனைய முதலீட்டாளர்களின் வருகைக்கும் சிறந்த ஆரம்பமாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

விசேடமாக Hyundai Grand i10 வாகனத்தை சந்தைப்படுத்துவதென்பது எமது நாட்டின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக அமையும்.

எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இது போன்றதொரு வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்த அபான்ஸ், ஹூன்டாய் ஆகிய நிறுவனங்களுக்கும் பெஸ்டென்ஜி அம்மையாருக்கும் எனது நன்றிகள்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலேயே இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படுகிறது. எனினும் இந்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற நம்பிக்கையுடனேயே அவர்கள் இதனை முன்னெடுத்துள்ளார்கள். இந்த நம்பிக்கைக்காக நான் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த வருடம் எமது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்திருந்த பின்னணியில் மிகவும் கடினமான கால கட்டத்திலேயே நாம் 2023ஆம் ஆண்டை ஆரம்பித்தோம்.

எனினும் நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுப்பெற்று வருகிறது. அதற்கமைய எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. இதேபோல் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.

இம்முறை பெரும்போகத்தின்போது நாம் மிகச் சிறந்த அறுவடையை எதிர்பார்கின்றோம். அது மட்டுமன்றி 20 மில்லியன் ரூபாவுக்கு நெல்லை விலைக்கு வாங்கி, அதனை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் இதுபோன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது போலவே ஐ.எம்.எப் நிறுவனத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் எம்மால் முடிந்துள்ளது. பெரிஸ் சமூகம், இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் அவர்களுக்கிடையே காணப்படும் வித்தியாசமான முறைமைகளை தீர்ப்பது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதற்கமைய, அடுத்த சில மாதங்களில் தற்போது இருப்பதிலும் பார்க்க பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, எதிர்வரும் ஆண்டாகும் போது மீண்டும் கார்களை கொள்வனவு செய்யக்கூடிய நுகர்வோர் குழுவொன்று நாட்டில் உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சந்தைப்படுத்தல் இல்லை என்றால் வர்த்தகர்கள் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள்.  பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக நீங்கள் நினைத்தால், சந்தைப்படுத்தல் இருப்பதாக நீங்கள் நினைக்க மாட்டீர்கள். அப்படியானால், எமது பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதன் காரணமாகவே இதுபோன்ற முதலீடுகள் வருகின்றன.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் செல்லும் இந்த ஒழுங்கு முறையின் கீழ் பல்வேறு தீர்மானங்களை எமக்கு எடுக்க நேரிடும். அதில் சில கடினமான தீர்மானங்களையும் எடுக்க நேரிடும். அவை பிரபலமற்ற தீர்மானங்களாக இருக்க முடியும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்கள் முகம் கொடுத்துள்ள சிரமங்கள் குறித்து நான் அறிவேன். அதுபோலவே வரி அதிகரிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமம் குறித்தும் நான் அறிவேன். சிலரது சம்பளத்தில் வரி மற்றும் கடனைச் செலுத்திய பின்னர் மிகச் சிறிய தொகையே எஞ்சுகின்றது. இந்த கஷ்ட்டத்தை இன்னம் சில காலத்துக்கே நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனினும் அதுபோன்ற சில தீர்மானங்களை எடுக்காவிட்டால் நாடு இந்நிலையில் இருக்க முடியாது.

அதுபோலவே எதிர்காலத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் இதுபோன்ற தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புகின்றேன். எம்மால் பிரபலமான தீர்மானங்களை எடுக்க முடியும். எனினும் அவற்றால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

சிங்கப்பூர் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும். அதன் பிரதமர் லீ குவான் யூ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபலமான தீர்மானங்களை எடுக்கவில்லை. அவர் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அத்தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட மக்கள் அவருடன் இணைந்து பணியாற்றினர். அதுபோலவே தென் கொரியாவிலும் ஆட்சியாளர்கள் நாட்டுக்காக கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தனர். ஐரோப்பாவிலும் அதே நிலைமையே காணப்பட்டது.

எமது நாட்டின் எதிர்காலத்துக்காக இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த நாட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக எமக்கு இத்தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது. வெகு காலம் செல்வதற்கு முன்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியுமென நான் எதிர்பார்கின்றேன்.

இந்நிகழ்வில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கைக்கான  கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியொங் (Santhush Woonjin JEONG), முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, ரெசி பெஸ்டொன்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி தினகரன் 


இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு முழு ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்கும்

- இராணுவ கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா

பாகிஸ்தான், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார்.

இராணுவ இராஜதந்திரத்தின் மூலம் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஜெனரல் மிர்ஸா இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி (OCDS) அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜெனரலுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் அலுவலகத்தில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ விமானங்களின் சேவை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், விமான வசதியை மேம்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த இரு உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த சந்திப்பின் போது பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.

பாகிஸ்தானில் உள்ள இலங்கை இராணுவ வீரர்களுக்கு விரிவான பயிற்சி வாய்ப்புகள் மற்றும் வசதிகளை வழங்கியதற்காக பாகிஸ்தான் ஜெனரலுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவப் பயிற்சிகள் மூலம் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இந்த பயனுள்ள இருதரப்பு கலந்துரையாடலின் போது கப்பல் கட்டுதல் மற்றும் மற்ற வசதிகள் குறித்து இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் மறைவுக்கு இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​இரு அதிகாரிகளுக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

ஸாதிக் ஷிஹான் - நன்றி தினகரன் 

திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை தொடர தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி (UPDATE)

- தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய மனு பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தற்போது திட்டமிட்டதற்கு இணங்க 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த, தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்கி, அதனை ஒத்திவைக்குமாறு கோரி இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.


ஓய்வுபெற்ற கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர

உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் ஆணைக்குழுவிற்கு குறித்த விடயத்தை தெரிவித்திருந்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை சட்டப்படி நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதால், இவ்விவகாரத்தில் உத்தரவுகள் தேவையில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து குறித்த மனு எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

குறித்த மனுவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், நிதியமைச்சின் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர், சட்ட மாஅதிபர் ஆகியோர் இம்மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரி ஐ.ம.ச. பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்சன யாப்பா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினாலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர, வி.சந்திரசேகரன் ஆகியோரால் இடை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் உத்தரவிடுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சத்தியக் கடதாசி மூலம் அண்மையில் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     நன்றி தினகரன் 


நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வே சிறந்த தீர்வு

பாராளுமன்ற 04ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

 அதிகாரத்துக்காக பொய் கூறுபவன் நானல்ல
 ஆறு மாதங்கள் கஷ்டத்தை தாங்கினால் சிறந்த தீர்வு
 நான்காவது காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
 நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புவது சிறுவர்களும் இளைஞர்களுமே
 செய்யமுடியாதவற்றை ஒருபோதும் கூறமாட்டேன்
 நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளையும் எடுக்கத் தயார்
 ஒற்றையாட்சியில் அதிகார பகிர்வு
 சம்பந்தனுக்கும் எனக்கும் பொதுவான கனவு உண்டு
 திருகோணமலை நகரம் நவீன அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும்
 கிழக்குக்கு தனியான அபிவிருத்தி வேலைத்திட்டம்
 எமது பயணம் சரியானது என்பதை சர்வதேசம் உறுதிப்படுத்தியுள்ளது
 பூச்சியமான வெளிநாட்டு கையிருப்பை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க முடிந்துள்ளது.


"நீண்ட காலமாக தீர்வு காண முடியாதுள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் உச்சளவு அதிகாரப்பகிர்வை வழங்கி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, திருகோணமலை சர்வதேச நவீன நகரமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் காங்கேசன்துறை துறைமுகம் விரிவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன மத பேதமின்றி அனைத்து மக்களும் முகம் கொடுக்கும் பொது பிரச்சினைகளுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதிகாரப் பகிர்வினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கான திருத்த வரைபுகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து அக்கிராசன உரை நிகழ்த்திய ஜனாதிபதி, தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

நாட்டைப் பிளவு படுத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அதேவேளை, ஒற்றையாட்சியின் கீழ் உச்சளவு அதிகார பகிர்வு வழங்குவதே எமது எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டைப் பிரிப்பதோ அல்லது பிரிப்பதற்கு துணை போகும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி, இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இம்முறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றியளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்கும் முயற்சிகள் முன்னைய அனைத்து  சந்தர்ப்பங்களிலும் வெற்றியளிக்கவில்லை. எனினும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடரை நேற்ற ஆரம்பித்து வைத்து நாட்டின் அடுத்த 25 வருடங்களுக்கான அரசின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி:

சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு, கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தன. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் 3300 ஏக்கர் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள்.1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். தேசிய காணி சபை ஒன்றை தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படும். தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.சுகாதார துறை தொடர்பாகவும் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். 1992 ஆம்ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டம்

மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.இவ் அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ எச் எம் டீ நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன் பரிந்துரைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம்.

யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். மல்வத்துஓயா அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண நதிகள் மற்றும் நீரை முகாமை செய்தல், வடமாரச்சி குளம் மற்றும் களப்பு புனரமைப்பு, குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக அதன் மூலம் நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காங்கேசன்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம். இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய செளமியமூர்த்தி தொண்டமானும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஏ சீ எஸ் ஹமீட் தெரிவு செயற்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விசேடமான நிலைமை பற்றி அவர் எனக்கு விளக்கம் அளித்துள்ளார். அடிக்கடி முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதனை நாம் அறிவோம். அது தொடர்பாகவும் நாம் முழு அவதானம் செலுத்துகின்றோம்.

சிங்கள சமூகமும் அவர்களுக்கென மட்டுப்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அது பற்றியும் நாம் கவனம் செலுத்துகின்றோம். அப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஒரு கலந்துரையாடல் தேவைப்படுகிறது. விசேடமாக சாதி வேறுபாடுகள் காரணமாக சமூகத்தில் ஓரம் காட்டப்பட்டள்ள சமூகங்கள் தொடர்பில் முழு அவதானம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 


No comments: