உயிரிழப்பு 17,000 ஐ தாண்டியது; உயிருடன் இருப்போரை மீட்பதற்கான கால அவகாசம் குறைவு
துருக்கி பூகம்பத்தை சரியாகக் கணித்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் டச்சு ஆராய்ச்சியாளர் !
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்
சீன பலூனில் வேவு பார்க்கும் கருவிகள்
10 மீற்றர் நகர்ந்தது துருக்கி
உயிரிழப்பு 17,000 ஐ தாண்டியது; உயிருடன் இருப்போரை மீட்பதற்கான கால அவகாசம் குறைவு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் கட்டட இடிபாடுகளில் இருந்து நேற்றும் (09) சிலர் உயிருடன் மீட்கப்பட்டபோதும் பூகம்பம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்திருக்கும் நிலையில் மக்கள் உயிருடன் காப்பாற்றப்படுவதற்கான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.
உதவி விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை மக்களிடையை கோபத்தை அதிகரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மக்கள் உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை நேரத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000ஐ தாண்டி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. மீட்பாளர்கள் இரவு முழுவதும் கடுமையாகப் போராடி உயிர் தப்பியோரை தேடிவரும் நிலையில் அக்டக்யான நகரில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் இருந்து 72 மணி நேரத்தின் பின்னர் ஹசல் குலர் என்ற இளம் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். இரு மணி நேரம் கழித்து அந்த சிறுமியின் தந்தையும் மீட்கப்பட்டுள்ளார்.
பூகம்பத்தினால் துருக்கியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 14,000 ஆக உயர்ந்திருந்ததோடு மேலும் 62,900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சிரியாவில் 3,550 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதோடு 5,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டின் இடிபாடுகளுக்கு அருகில் கூடாரங்களை அமைந்து வசித்து வருகின்றனர்.
மீட்புப் பணிகள் மந்தமாக இடம்பெற்று வருவது குறித்து அரசு மீது கடும் விமர்சனம் எழுந்து வரும் நிலையில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி தொடர்ந்து உயிர் தப்பியிருக்கும் நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கான எதிர்பார்ப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“முதல் 72 மணி நேரம் தீர்க்கமானது” என்று குறிப்பிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த தேசிய அனர்த்த நிபுணர் ஸ்டீவன் கொட்பி, “24 மணி நேரத்திற்குள் உயிர் வாழும் வீதம் 74 ஆக இருக்கும் நிலையில் அது 72 மணி நேரத்தின் பின் 22 வீதமாகவும் ஐந்து நாட்களில் 6 வீதமாகவும் குறைவடைகிறது” என்கிறார்.
மீட்புப் பணிகளில் தற்போது 110,000 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு இதற்காக ட்ரக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உட்பட 5,500 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக துருக்கி அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
எனினும் பூகம்பத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சரிந்திருக்கும் நிலையில் அதனை கையாள்வது கடினமாக உள்ளது. நன்றி தினகரன்
துருக்கி பூகம்பத்தை சரியாகக் கணித்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் டச்சு ஆராய்ச்சியாளர் !
துருக்கியில் 7.5 ரிச்டருக்கும் அதிகமான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று டச்சு ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ்கணித்து கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அவரது கணிப்பை அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு, திங்களன்று (05) அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம் துருக்கியிலும் சிரியாவிலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது.
பிராங்க் ஹூகர்பீட்ஸ் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயில் (SSGEOS) பணிபுரிகிறார். SSGEOS என்பது நில அதிர்வு செயல்பாடு தொடர்பாக வடிவவியலைக் கண்காணிக்க உதவும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும்.
துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் 7.5ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று ஹூகர்பீட்ஸின் கணிப்பு உண்மையாகியதில் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி தினகரன்
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரப், காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு 79 வயதாகும்.
நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் வைத்து இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் Amyloidosis (அமிலொய்டோசிஸ்) எனும் உடல் அங்கங்களுக்கு சேதம் விளைவிக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் Amyloid (அமிலொய்ட்) எனப்படும் வழக்கத்திற்கு மாறான புரதத்தின் உருவாக்கத்தால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும்.
பர்வேஸ் முஷாரப் 1943 ஓகஸ்ட் 11 இல் டெல்லியில் பிறந்தார்.
1947 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் பிரிவைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பாகிஸ்தானுக்குச் சென்றனர்.
அவர் 1964 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்த பர்வேஸ் முஷாரப் குவெட்டாவில் உள்ள இராணுவப் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
குறிப்பிட்ட இராணுவ தொழில்வாழ்க்கைக்குப் பின்னர், அவர் 1998 இல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபால் இராணுவ பணிக்குழாம் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வருடத்தில் அவர், நவாஸ் ஷெரீபின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சியை அறிவித்தார்.
அவர் 1999 இல் பாகிஸ்தானின் இராணுவச் சட்டத்தை அறிவித்து தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதன் பின் 2001 இல் பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவர் 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார்.
2008 இல் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த அவர், தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல சட்ட சவால்களை எதிர்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2016 இல் துபாயில் தஞ்சமடைந்த அவர், மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வந்தார்.
அந்த வகையில் மிக நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இது செய்தி நிறுவனமான PTI இன் படி. நன்றி தினகரன்
சீன பலூனில் வேவு பார்க்கும் கருவிகள்
அமெரிக்காவால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் கண்காணிப்பு பலூன் என சந்தேகிக்கப்படும் பலூனில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பலூனில் உளவு செயற்பாட்டு கருவிகளின் பல் அன்டெனா திறனுடனான உபகரணங்கள் இருந்தது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பலூன் தொடர்பில் சீனாவை கண்டிக்கும் கடப்பாடற்ற தீர்மானம் ஒன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. உளவு பார்க்கும் நோக்கத்துக்காக இந்த பலூன் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. அந்த பலூனில் காலநிலை கண்காணிப்பு கருவிகளே இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய கண்காணிப்பு பலூன்களில் ஒன்று என்று அமெரிக்கா நம்புகிறது. நன்றி தினகரன்
10 மீற்றர் நகர்ந்தது துருக்கி
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை 7.8 ரிக்டர் அளவில் நிகழ்ந்த பூகம்பத்தால் அந்த நாடு 10 மீற்றர் அளவு நகர்ந்திருப்பதாக இத்தாலி நிலநடுக்க ஆராய்ச்சியாளர் கார்லோ டொக்லியோனி தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளான துருக்கி மற்றும் சிரியா இரு வேறு நில அடுக்குகளில் அமைந்துள்ளன. இரு நில அடுக்குகளும் ஒன்றின் மீது ஒன்று மோதும்போதே பூகம்பம் ஏற்படுகிறது.“இந்த பூகம்பம் மிக சக்தி வாய்ந்தது என்பதால் இந்த நில அடுக்குகள் மாறுபட்டுள்ளன. சிரியாவை விட அதிக தாக்கம் துருக்கிக்கு ஏற்பட்டுள்ளது. துருக்கி தற்போது மேற்குப் பக்கமாக தள்ளப்பட்டுள்ளது” என்று இத்தாலி பத்திரிகை ஒன்றுக்கு டொக்லியோனி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் துருக்கி தற்போது இருக்கும் இடத்தில் இருந்து லேசாக தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment