சில வருடங்களுக்கு முன்னர் நல்லிணக்க ஆட்சி என்ற பெயரில் மைத்திரிபால சேனநாயக்கா ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும், இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது காலி முகத்திடலில் நடந்த சுதந்திர தின விழாவை, அண்மையில் கடந்த 04 ஆம் திகதி அதே திடலில் நடந்த 75 ஆவது சுதந்திர தின விழாவுடன் ஒப்பு நோக்கியபோது, பல வேடிக்கைகளை அவதானிக்க முடிந்தது.
அன்று அந்த நல்லிணக்க அரசுடன் தேன்நிலவு கொண்டாடிய எமது
தமிழ்த் தலைவர்களையும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவையும், ராஜபக்ஷ குடும்பத்தினரையும் இம்முறை அங்கே காணமுடியவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு அதே காலிமுகத்திடல், கோத்த கோ கமவாகியிருந்தது. ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்
அறுபது நாட்களையும் கடந்து இரவு பகலாக பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதன் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களினால், கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை விட்டே ஓடினார்.
பிரதமர் பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பதவியிலிருந்த பஸில் ராஜபக்ஷ,
அமைச்சர் பதவியிலிருந்த புத்திரன் நாமல் ராஜபக்க்ஷ ஆகியோரும் பதவி விலக நேர்ந்தது.
பல வாரங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின்
கூடாரமாக விளங்கிய அதே காலிமுகத்திடலை, அவர்களினாலே நேர்ந்த அரசியல் மாற்றங்களினால், பின்கதவால்
வந்து முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் உயர்ந்த ரணில் விக்கிரமசிங்கா
எவ்வாறு மாற்றியமைத்துவிட்டார் என்பதற்கு அண்மையில்
அங்கே நடந்த 75 ஆவது சுதந்திர தின விழா வரலாற்றில் இடம்பிடிக்கிறது.
சுமார் பதினெட்டு வெளிநாட்டு
அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் தனது அதிகாரத்தின் கீழ், எப்படி இருந்த காலிமுகத்திடலை
எவ்வாறு மாற்றியிருக்கின்றேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
தனது தற்போதைய அரசின் படைபலம்
எத்தகையது என்பதை காண்பிக்க பல தசாப்த காலத்தின் படையணிகளின் ஊர்வலத்தையும் காண்பித்துவிட்டார்.
மும்மொழிகளிலும் அறிவித்தலை
வழங்கச்செய்து, தொடக்கத்தில் சிங்களத்தில் தேசிய கீதத்தையும் இறுதியில் தமிழில் தேசிய
கீதத்தையும் பாட வைத்து, தான் எத்தகைய நிலைப்பாட்டுடன்
இருக்கின்றேன் என்பதையும் முழு உலகிற்கு காண்பித்துவிட்டார் ரணில் விக்கிரமசிங்கா.
அவருக்கு மரியாதை செலுத்துமுகமாக கரையிலிருந்து கடல் நோக்கி 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. பாவம் கடல் வாழ் உயிரினங்கள்!
அதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் அரசுக்கு எதிராகவும், கிடைத்த சுதந்திரம் தமிழ் மக்களுக்கு இல்லை. அதனை கரிநாளாகவே அனுட்டிக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் கறுப்புக்கொடிகளுடன் பேரணியில் சென்றனர்.
நாட்டில் ஓரிடத்தில் சிங்கம்
பொறிக்கப்பட்ட கொடிகளும், மற்றும் ஓரிடத்தில் கறுப்புக்கொடிகளும் பறந்தன. ஓரிடத்தில் இராணுவ கவச வாகனங்களுடன் ஆயுதம் ஏந்திய
படையினரின் ஊர்வலமும், மற்றும் ஓரிடத்தில் எமக்குரிய உரிமையை கொடு என்ற கோஷத்துடன் ஊர்வலமும் நடந்தது.
இலங்கை சுதந்திரம் பெற்று, 75 வருடகாலத்திற்குப் பின்னரும் இதுதான் இங்கே நிரந்தர காட்சியாகியிருக்கிறது. ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக
இருக்கவேண்டும்.
அவ்வாறு இல்லாதமையினால் வந்த வினைதான் இங்கே நீடித்த
உள்நாட்டுப்போர். 2009 இல் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், பத்து ஆண்டுகளுக்குள் 2019 இலும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என்பதற்கு சான்றாகிய சம்பவம்தான் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடந்த மனித குண்டு தாக்குதல்.
அந்தத் தாக்குதல் நடப்பதற்கு
முன்னர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு
தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்ற உத்தரவு வெளியாகி, அவரும் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்த காலப்பகுதியில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வந்தது.
இந்த நாட்டில் மூவினத்தையும்
நான்கு மதத்தினரையும் சமமாக நடத்துகின்றேன் என்பதை வெளியுலகிற்கு – குறிப்பாக சுதந்திர தின விழாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு
அமைச்சர்களுக்கு காண்பிக்க முயன்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா.
ஆனால், அவர் காண்பித்த
அக்காட்சியின் ஒரு பக்கத்தை இந்தப்பதிவில்
இடம்பெறும் படம் காண்பிக்கின்றது.
இந்து சமய, கத்தோலிக்க
சமய, இஸ்லாம் சமய குருமார்கள் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கிறார்கள்.
ஆனால், ஒரு பௌத்த மதகுரு மாத்திரம் அமர்ந்திருக்கிறார்.
இலங்கை அரசியலை தீர்மானிக்கும்
பெரிய சக்திகளாகத் திகழ்பவர்களும் இந்த பௌத்த பிக்குமார்தான் என்பதை இலங்கை விவாகாரங்களுக்குள்
மூக்கை நுழைக்கும் வெளிநாடுகள் தெரிந்துகொள்ளவேண்டும்.
இற்றைக்கு அறுபத்தியாறு
வருடங்களுக்கு முன்னர் 1957 ஆம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக
அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவும், தந்தை செல்வநாயகமும் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது
அதனை எதிர்த்தவர்களும் கடும்போக்குவாதிகளான பௌத்த பிக்குகளே.
ஜே. ஆர். ஜெயவர்தனா, அத்தகைய கடும்போக்காளர்களையும்
தம்முடன் இணைத்துக்கொண்டு, களனியிலிருந்து கண்டி தலதா மாளிகைக்கு பாத யாத்திரை புறப்பட்டார். இந்த பின்விளைவுகளினால், பண்டாரநாயக்கா அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார்.
இறுதியில் அவரும் ஒரு பௌத்த
பிக்குவால்தான் சுடப்பட்டு மடிந்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு
தீர்வாகவும் அதிகாரப் பரவலாக்கத்திற்கு பொருத்தமாகவும் இலங்கை -இந்திய ஒப்பந்தத்திற்கு
ஏதுவாகவும் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என குரல் எழுப்பி வருபவர்களும்
உயர் பெளத்தபீடங்களைச் சேர்ந்தவர்களே !
நாட்டின் தேசிய கீதத்திற்கே
எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறும் இந்த பெளத்த பிக்குகள்தான் நாட்டின் தலைவிதியை
தீர்மானிக்கிறார்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்று
75 வருடங்களாகியிருக்கலாம். ஆனால், பேரினவாதம்
தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளாத வரையில்,
இலங்கையில் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதையே காலம் உணர்த்திவருகிறது.
சிங்கக்கொடிகளும் கறுப்புக்கொடிகளும்
சமாதானக்கொடிகளாகும் வரையில் எத்தனை சுதந்திர தினம் வந்தாலும், தேசிய கீதத்திற்குரிய
மரியாதை இந்த பௌத்த பிக்குகளின் தரப்பில் இவ்வாறுதான் இருக்கும்.
--0--
No comments:
Post a Comment