இன்ப அதிர்ச்சியும் துன்ப அதிர்ச்சியும் எனக்கு பெரும்பாலும் நடு இரவில், அல்லது அதிகாலையில்தான் நேர்ந்திருக்கிறது. பகல்பொழுது ஏதாவது வேலைகளில் கழிந்துவிடும்.
பெரும்பாலானவர்கள், மறுநாள் பொழுது நல்லவிதமாக விடியவேண்டும் என மனதிற்குள்
பிரார்த்திக்கொண்டு இரவில் உறங்கச்சென்றாலும்,
துர்க்கனவுகள் வந்து அவர்களை தொல்லைப்படுத்திவிடும்.
கனவுகள் ஆயிரம் என்ற தலைப்பில் என்றைக்கு நான் எனது
முதலாவது சிறுகதையை எழுதினேனோ, அன்றிலிருந்து உறக்கத்தில் வரும் கனவுகளுக்கும் குறைவில்லை.
பகல் உறக்கத்திலும் கனவுகள்
வருகின்றன. கனவுகள் வந்தால், உறக்கம் கலைந்துவிடும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் கனவுகள்
வரும் எனச்சொல்பவர்களும் கூட கனவுகள் பற்றிய நிபுணத்துவ அறிவுள்ளவர்கள் அல்ல.
2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் நடுஇரவு தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில்
அம்மா.
அம்மாவுக்கு அப்போது அவுஸ்திரேலியா
நேரம் என்னவென்று தெரியாது.
“ என்னம்மா… இந்த நேரத்தில்…? “
“ தம்பி தூக்கமா…? இப்போதுதானே ஒன்பது மணியாகிறது…!?
“
“ அது உங்களுக்கு அம்மா. எமக்கு இப்போது நடுச்சாமம். என்ன விசயம். யாருக்கும் ஏதும் சுகமில்லையா…? ஏன்…
இந்த நேரத்தில் எடுக்கிறீர்கள்..? “ எனக்கேட்டேன்.
“ தம்பி… உனக்கு சாகித்திய விருது கிடைத்திருக்கிறது.
இப்போதுதான் தொலைக்காட்சி செய்தியில் சொன்னார்கள். “
“ அப்படியா…?
! நீங்கள் சரியாகப் பார்த்திருக்கமாட்டீர்கள். எனக்கு கிடைத்திருக்காது, வேறு யாராவதாகவும்
இருக்கலாம் அம்மா. “ என்றேன்.
“ இல்லைத் தம்பி, உனது பெயரும் சரியாக உச்சரித்து,
நீ எழுதிய புத்தகம் பறவைகள் பற்றியும் சொன்னார்கள். அதற்குத்தான் இந்த ஆண்டு
விருது கிடைத்துள்ளது. நீ வருவாய்தானே…? வரவேண்டும். உன்னை எதிர்பார்க்கின்றேன். “ அம்மா நீண்ட நேரம் பேசவில்லை. அங்கே தொலைபேசி
கட்டணம் எகிறிவிடும் என்று அம்மாவுக்குத் தெரியும்.
நான் மீண்டும் உறங்கிவிட்டேன்.
கனவு வந்தது. பறவைகள் நாவலில் நான் நடமாடவிட்டிருந்த பாத்திரங்கள் கனவில் வந்தார்கள்.
மறுநாள் வேலைக்குச்சென்று
வீடு திரும்பியபின்னர், மல்லிகை ஜீவாவுக்கும்
ராஜஶ்ரீகாந்தனுக்கும் கோல் எடுத்து அம்மா சொன்ன செய்தி பற்றிக்கேட்டேன்.
“ அம்மா சொன்னால் சரியாகத்தானே இருக்கும். அவசியம் வாரும். நாம் அந்த முடிவுகள் பற்றி உமக்குச்
சொல்லமுடியாது. “ என்று இரத்தினச் சுருக்கமாக
கூறிவிட்டு இணைப்பிலிருந்து அகன்றார்கள்.
மறுநாள் தம்பி ஶ்ரீதரன் கோல் எடுத்தார்.
“ அண்ணா… உங்களுக்குரிய விருது வழங்கும் விழா பற்றிய
அழைப்பு தபாலில் வந்திருக்கிறது. இம்மாதம் 30 ஆம் திகதி. வாருங்கள். உங்களை எதிர்பார்க்கின்றோம். நிகழ்ச்சிக்கு நீங்கள் ஐந்துபேரை அழைத்துச்செல்லலாம். அவர்கள் யார் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் “ என்றார் தம்பி.
“ தம்பி… நான் சொல்வதை முதலில் கேளுங்கள். அவர்கள் தரப்போவது 35 ஆயிரம் ரூபா. அதனை வாங்குவதற்கு வருவதாயின் நான் இலட்சத்திற்கும் மேல் செலவிட்டு விமான டிக்கட் பெறவேண்டும். நீங்களே சென்று அதனை வாங்கினால் என்ன…? “ என்றேன்.
“ என்னவாம், உங்க அண்ணன் என்ன சொல்றான்… இங்கே தா… நான்
பேசுறேன் “ எனச்சொன்ன அம்மாவின் குரல் எனக்கு கேட்டது.
அம்மா , பிரித்தானிய ஆளுகையின்
கீழ் இலங்கை இருந்தபோது பணியாற்றிய ஒரு பொலிஸ்
அதிகாரியின் மகள். அதனால், அம்மாவை நாம் பொலிஸ்காரன் மகள் என்றுதான் அழைப்போம்.
இந்தப் பெயரில் இயக்குநர் ஶ்ரீதர் ஒரு திரைப்படமும்
எடுத்துள்ளார்.
அம்மா மிகவும் கண்டிப்பானவர்.
அப்பா அவ்வாறில்லை. எமக்கு அதிகம் செல்லம் தந்தவர்.
“ தம்பி… நீ… வரவேண்டும். உன்னை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். சொல்லிட்டன். ஶ்ரீ..….நீ போனை வை. அவன் வருவான். “ அம்மாவே ஒரு தீர்க்கமான முடிவுடன் இணைப்பினை துண்டித்தார்.
தாய் சொல்லைத் தட்டாதே
என்று மனம் கூவிக்கொண்டிருந்தது.
பணியிடத்தில் பத்து நாட்கள்
லீவு எடுத்துக்கொண்டு தாயகம் புறப்பட்டேன்.
ஐந்துபேரை விருது விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்லலாம். நிகழ்ச்சி கொழும்பு -07 இல் அமைந்த பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்தது.
அப்போது சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க
ஜனாதிபதி. ரணில்விக்கிரமசிங்கா பிரதமர். நிகழ்ச்சிக்கு இந்திய இலக்கிய பேராசிரியர்
யூ. ஆர். அனந்த மூர்த்தி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
எங்கள் குடும்பத்திலிருந்து,
அம்மாவும் , தம்பிமாரினதும் மற்றும் தங்கையினதும் மகள்மார்
மூவரும் உடன் வந்தார்கள். ஒரு வாகனத்தில்
சென்றோம்.
மண்டப வாயிலில் அன்றைய
தினம் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்த தமிழ் – சிங்கள நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர்
அந்த பிரம்மாண்டமான மண்டபத்தின் படிக்கட்டுகளில்
கால் பதித்தேன். 1974 ஆம் ஆண்டு எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அங்கே அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டை நடத்தியபோது அதன் அமைப்புக்குழுவில்
இணைந்து இயங்கினேன்.
அப்போது ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமராகவிருந்தார்.
அவர்தான் முதல் நாள் மாநாட்டில் பிரதம விருந்தினர். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக சங்கம் 12 ஆம்சத் திட்டத்தை முன்மொழிந்து பிரதமரிடம் கையளித்தது.
அந்தத் திட்டத்தை, தான்
ஏற்றுக்கொண்டாலும், இதர அரசியல் கட்சிகள் ஏற்குமோ தெரியாது. அதனால், அக்கட்சித்தலைவர்களிடத்திலும்
இதுபற்றி பேசிவிட்டு வாருங்கள் என்றார் பிரதமர்.
சமகாலத்தில் – அதாவது சுமார்
49 ஆண்டுகளுக்குப் பின்னரும் ரணில் விக்கிரமசிங்காவின் பதவிக்காலத்தில் நாம் இன்னமும்
அதே இடத்தில்தான் நிற்கின்றோம்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்
பிரகாரம் சட்டத்தில் இடம்பெற்ற 13 ஆவது திருத்தத்தையும் ஏற்கமுடியாது என்று சிங்கள
கடும்போக்காளர்கள் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து கூக்குரல் எழுப்புகிறார்கள்.
அன்று 1974 ஆம் ஆண்டு நாம் முன்வைத்த 12 அம்சத்திட்டத்தை, எம்மிடம் தமிழ் கற்ற பௌத்த பிக்குவான வண. பண்டிதர்
ரத்னவன்ஸ தேரோ ஆதரித்து முதல் நாள் நிகழ்ச்சியின்
தொடக்கத்தில் உரையாற்றினார். அத்துடன் கம்பகா
மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தில் தமிழ் வகுப்புகளையும் நடத்தினார். தேசிய ஒருமைப்பாடு கருத்தரங்கை அங்கே நடத்தி எம்மையெல்லாம் வரவழைத்து உபசரித்தார்.
அவர் பற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் காவியுடைக்குள் ஒரு காவியம் என்ற
தலைப்பில் விரிவான பதிவொன்று எழுதியிருக்கின்றேன்.
இக்கட்டுரை ஆங்கில – சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி
, மற்றும் எழுத்தாளர்கள் மல்லிகை ஜீவா, சோமகாந்தன், மு. கனகராஜன், தம்பையா, செல்வம்,
ஆகியோருடன் மருத்துவர் வாமதேவனும் அன்று மினுவாங்கொடைக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியையடுத்து வீரகேசரி அதுபற்றி தலைப்புச்செய்தி
வெளியிட்டதுடன், மறுநாள் ஆசிரிய தலையங்கமும் எழுதியது.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின்
தேர்தல் தொகுதியான அத்தனகல்ல பிரதேசத்தில் இருந்த பத்தலகெதர ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில்
1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நடந்த தேசிய சாகித்திய விழாவில் எனக்கும்
எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், ஐ. சாந்தன், த. சண்முகசுந்தரம், ஆத்மஜோதி முத்தையா ஆகியோருக்கும்
சாகித்திய விருது வழங்கப்பட்டது.
செங்கை ஆழியானைத்தவிர ஏனைய
நால்வரும் சென்றிருந்தோம். இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ அன்று
எமக்குரிய பரிசுக்கான காசோலையை தந்தார். தரப்பட்ட சான்றிதழ் தனிச்சிங்களத்தில் இருந்தமையால், கலாசார திணைக்களத்தின் செயலாளர் கே. ஜி. அமரதாச
, அதனை மீளப்பெற்றுக்கொண்டு மன்னிப்பும் கோரினார். அவர் சிறந்த தமிழ் அபிமானி. அவருக்கிருந்த குற்றவுணர்வு புரிந்துகொள்ளத்தக்கது. அவர் பற்றியும் எழுதியிருக்கின்றேன். இக்கட்டுரையும்
மும்மொழியிலும் வெளியானது.
அக்காலப்பகுதியில் தற்போது வழங்கப்படும் சாகித்திய இரத்தினா
என்ற மேலதிக விருது எவருக்கும் தரப்படவில்லை. காலப்போக்கில் இந்தப்பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டன.
அன்று 1976 இல் விருது வாங்குவதற்கு
நான் சென்றிருந்தபோது எனது அக்காவின் கணவர் சண்முகமும் வண. ரத்னவன்ஸ தேரோவும் உடன்
வந்தனர்.
மீண்டும் அத்தகையதோர் விருதுக்காக
நான் தெரிவுசெய்யப்பட்டபோது அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டிருந்தேன்.
2002 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில்
– இருபத்தியெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் படிக்கட்டுகளில் ஏறியபோது, கடந்து சென்ற காலங்கள் நினைவுக்கு வந்தன.
மண்டப வாயிலில் விருதுக்காக
தெரிவுசெய்யப்பட்டிருந்த தமிழ் – சிங்கள நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
எனது பறவைகள் நாவலும் இடம்பெற்றிருந்தது.
அன்று மழைநாள். மண்டபம் தமிழ் – சிங்கள – முஸ்லிம் கலை இலக்கியவாதிகளாலும், ஊடகவியலாளர்களாலும் பௌத்த பிக்குகளாலும் நிறைந்திருந்தது.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதருக்கு சாகித்திய இரத்தினா விருது வழங்கினார்கள். அந்த
விருது தொடர்பான உரையை சாகித்திய மண்டலத்தின் தமிழ்ப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் க. அருணாசலம் நிகழ்த்தினார்.
தமிழ்ப்பிரிவில் கலை, இலக்கியவாதிகள் கந்தையா ஶ்ரீகணேசன், அல் – அசூமத், ரி. எல். ஜபர்கான்,
எஸ். அருளானந்தன், பேராசிரியர் எஸ். பத்மநாதன், கவிஞர் எஸ். பத்மநாதன் ஆகியோருக்கு அன்று தேசிய சாகித்திய விருது தரப்பட்டது.
எனது பெயர் சொல்லப்பட்டபோது மேடைக்குச்சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் வெண்கலச்சிலையையும் சான்றிதழையும், காசோலையையும் வாங்கிக்கொண்டு இறங்கிவந்து சபையிலிருந்த அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவுக்கு பூரிப்பு. சபையென்றும் பார்க்காமல் என்னை அணைத்து முத்தம் தந்தார்.
நான் எழுத ஆரம்பித்த 1970 காலகட்டத்தில், “ எழுத்து உனக்கு சோறு
போடுமா..? “ எனக்கேட்ட அம்மாதான், அன்று அவ்வாறு
நடந்துகொண்டார்.
நான் 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா
புறப்பட்டபோது அம்மாதான் அழுதுகொண்டேயிருந்தவர்.
காகிதத்தையும் பேனையையும் மாத்திரம் நம்பி வாழும் இவன் அந்தக் கண்டம் சென்று
எவ்வாறு பிழைத்துக்கொள்வான் என்ற கவலைதான் அம்மாவின் அந்தக்கண்ணீருக்கு காரணம்.
அன்று அம்மா என்னை வழியனுப்புவதற்கு
விமான நிலையம் வரவில்லை. நான் புறப்பட்ட பின்னர்
எமது உறவினர்கள் சிலர் அம்மாவிடம் என்னைப்பற்றி இப்படிச் சொன்னார்களாம்:
“ முதலில் இந்தியாவுக்குப் ( 1984 ) போனார்…. புத்தகங்களுடன் வந்தார். பிறகு ரஷ்யாவுக்குப் ( 1985 ) போனார்… புத்தகங்களுடன்தான் வந்தார்.
இப்போது அவுஸ்திரேலியாவுக்குப் ( 1987 ) போகிறார். என்ன கொண்டுவருகிறார் பார்ப்போம். “
நான் மெல்பன் வந்து சேர்ந்த
பின்னர் அம்மா எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்தத் தகவலை மிகுந்த கவலையுடன்தான் எழுதியிருந்தார்.
அதற்கு நான், அம்மாவுக்கு
எழுதிய பதிலில், “ உங்கள் மகன் மீண்டும் இலங்கை வரும்போதும் புத்தகங்களுடன்தான் வருவான் . “ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என எழுதியிருந்தேன்.
அவ்வாறே 1997 ஆம் ஆண்டு சென்றபோது அம்மாவின் அம்மா
தையலம்மா பாட்டி எனக்குச் சிறுவயதில் சொல்லித்தந்த கதைகளையே எனது பாணியில்
எழுதி பாட்டி சொன்ன கதைகள் புத்தகத்தின் பிரதிகளை ஏந்தியவாறு வந்தேன்.
மல்லிகை ஜீவாவின் கரங்களினால்,
அதன் முதல் பிரதியை அம்மாவிடமே கொடுத்தேன்.
அன்று 2002 ஆம் ஆண்டு விருது விழாவில் இந்தச் சம்பவங்கள் அம்மாவின் மனதில் வந்து சென்றதோ
எனக்குத் தெரியாது. ஆனால், எனது மனதில் நிழலாடியது.
பாரதியாரும், வெளியூர்
பயணம் சென்று திரும்பியபோது, புத்தகங்களைத்தான்
மூட்டையாகக் கட்டி எடுத்து வந்தார். பாரதி
திரைப்படத்தில் இக்காட்சியை காண்பீர்கள்.
ஆனால், நான் அம்மாவுக்குப்
பரிசுப்பொருட்களோடு புத்தகத்துடனும்தான் வந்தேன்.
1985, 1987, 1997, 1999, 2002 ( தொடக்கத்தில் ) கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக தாயகத்தை விட்டு,
நான் வெளியேறியபோதெல்லாம் என்னை வழியனுப்ப அம்மா வரவில்லை.
அந்த 2002 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய விருது பெற்று, சில நாட்களின் பின்னர் ஒரு நாள்
இரவு மெல்பன் வருவதற்காக விமான நிலையம் புறப்பட்டேன். வழக்கம்போல் அம்மாவிடம் ஆசிபெறுவதற்காக அவரது காலில்
விழுந்து வணங்கினேன். அம்மா, தானும் விமானநிலையம் வருவதாகச்சொன்னதும் வியப்புற்றேன்.
அக்கா, தங்கையிடம் இந்த
வியப்பினை பகிர்ந்தபோது, “ எமக்கும் ஆச்சரியம்தான்
. சரி வரட்டும். கூட்டிப்போவோம் “ என்றார்கள்.
அந்த ஆண்டு ( 2002 ) ஒக்டோபர்
மாதம் முதல்வாரம் மெல்பனுக்கு புறப்பட்டேன். அம்மா என்னை அணைத்து முத்தமிட்டு வழியனுப்பிவைத்தார்.
அதன்பிறகு அம்மாவை நான்
பார்க்கவில்லை.
மெல்பன் வந்து சில மாதங்களில்
ஒருநாள் நள்ளிரவு எனக்கு நெஞ்சு நோ வந்தது.
வியர்த்தது. இடது தோள்பட்டை வலித்தது. மனைவியிடம் சொன்னேன். “ அன்று இரவு உணவுடன் கீரைக்கறி சாப்பிட்டதனால்
செமியாக்குணம் “ என்றார்.
மூத்த மகள் பாரதியின் அறையைத்
தட்டி அவளை எழுப்பினேன். எனக்கு வந்துள்ள நெஞ்சுவலி
பற்றிச்சொன்னதும், மகள் பதறிக்கொண்டு எழுந்து,
என்னை மருத்துவமனைக்கு தனது காரில் அழைத்து வந்தாள். இரண்டாவது மகள் பிரியாவும், மனைவி
மாலதியும் உடன் வந்தனர்.
மகன் முகுந்தன் அப்போது
ஆழ்ந்த உறக்கம். அதனால், அவனை வீட்டில் விட்டுச்சென்றோம்.
மகள் பாரதி, என்னை மெல்பனில்
Epping Northern Hospital இற்கு அழைத்துச்சென்றாள். அப்போது அதிகாலை மூன்று
மணியிருக்கும். என்னை அவசர சிகிச்சைப்பிரிவில்
சோதித்தார்கள்.
எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்
தகவலை காலை ஏழுமணியளவில்தான் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்று முழுவதும் அந்த மருத்துவமனையில்
தீவிர கண்காணிப்பிலிருந்தேன். அன்று அந்த மருத்துவமனையிலும் நடு இரவு, முதல் நாள் நடு இரவு வந்ததுபோன்று மீண்டும் மாரடைப்பு வந்தது. மருத்துவர்களும் தாதியரும் கடும்பிரயத்தனம் எடுத்து என்னை காப்பாற்றினார்கள்.
ஒரு தாதி கண்விழித்து
என்னருகிலேயே இருந்தார். இதயத்தில் எத்தனை அடைப்புகள் இருக்கின்றன என்பதை சோதிக்கும்
வசதி ( Angiogram procedure ) அந்த மருத்துவமனையில் இல்லை எனவும், அன்றைய தினமே
என்னை மெல்பன் ஒஸ்டின் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்போவதாகவும் சொன்னார்கள்.
முதல் நாளிலிருந்து மனைவியும்
மகள்மாரும் உறக்கக் கலக்கத்திலிருந்தனர். அவர்களை வீடு சென்று மாலையில் வருமாறு சொன்னேன்.
அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன்
விடைபெற்றனர்.
எனக்கு Angiogram சோதனை இருந்தமையால், உண்பதற்கோ அருந்துவதற்கோ எதுவும் தராமல் பட்டினி போட்டனர். அன்று மாலையாகிவிட்டது. தாதியிடம் கெஞ்சிக்கேட்டு, ஒரு மிடறு தண்ணீர் மாத்திரம் அருந்தினேன்.
ஒரு அம்பூலன்ஸில் என்னை
ஏற்றி அழைத்துச்செல்லும் காட்சியை மீண்டும்
திரும்பி வந்த மகள்மாரும், மனைவியும் பார்த்துவிட்டு, அதனைப் பின்தொடர்ந்தனர்.
ஒஸ்டின் மருத்துவமனையில்
மனைவியும் மக்களும் அழுதுகொண்டு நின்றனர்.
எனது கதை முடியும் நேரம் வந்துவிட்டதோ என அவர்கள் நினைத்திருக்கலாம்.
சோதனை அறையில் என்னை மீண்டும்
பரிசோதித்த மருத்துவர்களும், தாதியரும் சொன்ன விடயங்கள் எனக்கு மேலும் அதிர்ச்சி தந்தது.
குறிப்பிட்ட Angiogram procedure நடக்கும்போது மரணங்களும் சம்பவித்திருக்கின்றன. அவ்வாறு ஆயிரத்தில் ஒரு கேஸ்
நடக்கும் என்றார்கள்.
“ இனி என்ன செய்யப்போகிறார்கள்…? “ எனத் தாதியை கேட்டேன். “ அடைப்பு இருப்பது தெரிந்தால், பிறகு மார்பை திறந்து
பைபாஸ் சத்திர சிகிச்சைதான். “ என்றார்.
எனக்கு பேச்சு வரவில்லை. “ மார்பை
வெட்டியா திறப்பார்கள்..? “ என்று சைகையால் காண்பித்துக் கேட்டேன்.
“ ஆம் “
என்றார் அந்தத் தாதி.
படைப்பாளியான எனது மனம்
அந்த நேரத்திலும் எவ்வாறு சிந்தித்தது என்பதை பாருங்கள்.
எமது கவிஞர்கள், காதலியை
வர்ணிக்கும்போது இதயக்கனி, உள்ளக்கோயில், நெஞ்சில் நீயே, நெஞ்சம் எல்லாம் நீயே… எனவும், ஆங்கிலேயர்கள், Sweet heart எனவும் வர்ணிப்பார்கள். அவ்வாறாயின் அந்தக்காதலிகள் அனைவரும்
ஆண்களின் நெஞ்சங்களில் – இதயங்களில்தானே குடியிருக்கவேண்டும்.
இப்போது எனது மார்பையும்
வெட்டிப்பிளந்து திறந்து இதயத்தை எடுத்து சிகிச்சை செய்யும்போது, அங்கே இருக்கும் காதலிகளின்
முகம் தெரிந்துவிடப்போகிறதே…! என்ற கற்பனை மனதில் சிறகடித்தது. அந்த சுகத்துடன் உறங்கிப்போனேன்.
மனைவி அருகில் வந்தபோது,
எனது கற்பனையை சொன்னேன். அவ்வாறு மருத்துவர்கள்
கண்டுபிடித்தாலும் கோபிக்கவேண்டாம் என்றேன்.
“ இந்த லொள்ளுப் பேச்சுக்களுக்கு மாத்திரம் குறைவில்லை. “ என்றாள் மனைவி.
“ எனக்கு மாரடைப்பு வந்தவிடயத்தை ஊரில் அம்மாவுக்கு
மாத்திரம் சொல்லிவிடவேண்டாம் “ என்று மனைவிக்கும்
பிள்ளைகளும் சொன்னேன்.
அம்மா எனக்கு மாரடைப்பு
வந்த செய்தியே தெரியாமல், 2003 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி இறந்தார். அப்போது நான் சத்திர
சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்தேன்.
அந்த சூழ்நிலையில் என்னை
அம்மாவின் இறுதி நிகழ்வுக்குச்செல்ல எனது மருத்துவர் அனுமதிக்கவில்லை.
தனது ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்தார்.
அன்று விமான நிலையத்தில்
அம்மா எனக்கு பிரியாவிடை தந்த காட்சிதான் மனதை அலைக்கழித்தது.
அம்மாவின் விருப்பத்தை
நிறைவேற்றாமல், அன்று அந்த சாகித்திய விருது விழாவுக்கு நான் செல்லாமல் விட்டிருந்தால்,
அம்மாவின் ஆத்மா என்னை மன்னித்திருக்காது என கருதுகின்றேன்.
எச்சந்தர்ப்பத்திலும் எவரும்
தாய் சொல்லைத் தட்டிவிடாதீர்கள்.
( தொடரும்
)
No comments:
Post a Comment