தர்மம் தலைகாக்கும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 நள்ளிரவு நேரம்,ஒரே கும்மிருட்டு,முகம் உடல் எல்லாவற்றையும்


மூடிக் கொண்டு ஓர் உருவம் வருகிறது,அதன் இரு சப்பாத்து முனையிலும் இரண்டு சிறு விளக்குகள் எரிகின்றன, இப்படித் தொடங்குகிறது தர்மம் தலைகாக்கும் படம்.ஆங்கிலப் பட பாணியில் தொடங்கும் படத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள், அதனைத் தொடர்ந்து டாக்டர் சந்திரன் தனது மருத்துவ வேலையை விட்டு விட்டு கொலைகாரனை

வேட்டையாட புறப்படுகிறார்.அதே சமயம் சிவகாமி என்ற பெண்ணின் காதலும் , அவள் தந்தை சதானந்தத்தின் தொடர்பும் ஏற்படுகிறது.சதானந்தம் மூலம் மணி,அவன் தங்கை இருவரும் அறிமுகமாகிறார்கள்.இவர்கள் எவருக்கும் சந்திரன் கொலைகாரனை தேடி அலைவது பிடிக்கவில்லை. ஏன்,என்ன காரணம்!


தொடர்ந்து எம் ஜி ஆரின் நடிப்பில் மளமளவென்று படங்களை தயாரித்து வெளியிட்டுக்கு கொண்டிருந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் 1963ம் வருட ஆரம்பத்தில் உருவாக்கிய படம் தான் தர்மம் தலைகாக்கும்.படத்தில் டாக்டர் சந்திரனாக ராமச்சந்திரன் நடித்தார்.
பணக்கார நோயாளியிடம் மருத்துவக் கட்டணம் வாங்கி அதை ஏழை தொழிலாளிக்கு கொடுத்து உதவுவது,பெண் கேட்டு வந்த இடத்தில் நாணி கோணுவது,தேவர்,அசோகன் இருவருடனும் ஆக்ரோஷமாக மோதுவது,தர்மம் தலைகாக்கும் என்று நிரூபிப்பது, என்று பலவிதத்தில் ரசிகர்களை கவர்கிறார் அவர்.அவருக்கு ஜோடி சரோஜாதேவி,ஆடிப்பாடி ,காதலித்து ,இடையே கண்ணீர் சிந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர்களுக்கு ஈடு கொடுப்பவர் எம் ஆர் ராதா.படம் முவதும் வந்து நிறைகிறார் .வயதானவருக்கு ஏற்படும் பெண் சபலத்தை அருமையாக வெளிப்படுத்துகிறார்.அசோகன் இருக்கிறார் ஆனால் களையிழந்து காணப்படுகிறார்.இவர்களுடன் எம் வி ராஜம்மா,வி கே ராமசாமி,ஜெமினி சந்திரா,ஜெமினி பாலு,தேவர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடித்த படங்களுக்கு வழமையாக வசனம் எழுதும் ஆரூர்தாஸ் இந்த படத்துக்கு எழுதவில்லை.இதற்கு முன் தேவர் எடுத்த குடும்பத் தலைவன் படத்தின் போது ஆரூர்தாசுக்கும்,தேவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்தப் படத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.


படத்துக்கு கதை வசனம் எழுதியவர் ச அய்யாபிள்ளை.வசனங்கள் கச்சிதமாக அமைந்தன.இளம் பெண் காதலிப்பது பற்றி சரோஜாதேவி கேட்கும் கேள்விகளும் அதற்கு தாயார் ராஜம்மா சொல்லும் பதில்களும் அருமை.அதே போல் ஊசி போடுற வேலைய விட்டுட்டு உங்களுக்கு ஏன் துப்பறியிற வேலை என்று எம் ஜி ஆரிடம் ராதா கேட்கும் இடம் சூப்பர்.

கண்ணதாசனின் பாடல்களுக்கு கே வி மகாதேவன்

இசையமைத்திருந்தார்.ஹல்லோ ஹல்லோ சுகமா என்ற டெலிபோன் பாடலும் காட்சியும் அன்றைக்கு புதுமை.இது தவிர மூடுபனி குளிரெடுத்து,தொட்டுவிட தொட்டுவிட தொடரும்,ஒருவன் மனது ஒன்பதடா பாடல்கள் பிரபலமாகின.தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் பாடல் காலம் கடந்து நிற்கிறது.

படத்தை என் எஸ் வர்மா ஒளிப்பதிவு செய்தார்.எம் ஏ திருமுகம் படத்தை விறுவிறுப்பாக டைரக்ட் செய்தார்.படம் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்றது.

No comments: