உலகச் செய்திகள்

கொவிட் தகவலை தரும்படி சீனாவிடம் சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்து 

சர்ச்சைக்குரிய கருதினால் ஜோர்ஜ் பெல் காலமானார்

ஹரியின் சுயசரிதையினால் அரச குடும்பத்தில் சிக்கல்

பைடன் அலுவலகத்தில் இரகசிய ஆவணம் மீட்பு

ரொக் அன்ட் ரோல் பாடகரான எல்விஸ் பிரெஸ்லிறின் ஒரே மகள் மரணம்


கொவிட் தகவலை தரும்படி சீனாவிடம் சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்து 

கொவிட் தொற்று பரவல் பற்றிய தகவல்களை தரும்படி உலக சுகாதார அமைப்பு சீனாவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருப்பதோடு கொரோனா தொற்றின் புதிய திரிபுக்கு எதிராக போராடி வரும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை பாராட்டியுள்ளது.

தற்போதைய கொவிட் சம்பவங்களது அதிகரிப்பின் உண்மையான அளவை சீனாவின் உத்தியோகபூர் தரவுகள் காண்பிப்பதில்லை என்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகிறது.

“சீனாவில் உயிரிழப்புகள் இன்னும் குறைவாகவே பதிவு செய்யப்படுவதாக உலக சுகாதார அமைப்பு நம்புகிறது” என்று அந்த அமைப்பின் அவசரநிலைகளுக்கான பணிப்பாளர் மைக்கல் ரியான் கடந்த புதனன்று (11) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறுபுறம் அமெரிக்காவில்் ஒமிக்ரோன் உப திரிபான எக்ஸ்.பி.பி. 1.5 வேகமாகப் பரவிவரும் நிலையில் அந்நாட்டு நிர்வாகம் ஒத்துழைப்புடன் செயற்படுவது பற்றி பாராட்டியுள்ளார்.

“தரவுகள் மற்றும் அந்த தரவுகளின் தாக்கங்கள் தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருகிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எக்ஸ்.பி.பி. 1.5 தற்போது 38 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு வேகமாக பரவுவது உறுதியாகியுள்ளது. அது முந்தைய நோய்த் தொற்றுக்கான எதிர்ப்புச் சக்தி அல்லது தடுப்பூசியின் திறனை பலவீனப்படுத்தி செயற்படுவதாக நம்பப்படுகிறது.

சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்படுத்தி வந்த கண்டிப்பான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையிலேயே அங்கு நோய்த் தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வருவதோடு தகன கூடங்களும் நிரம்பி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் உத்தியோகபூர்வ தரவுகளின்படி சீனாவில் கடந்த மாதம் தொடக்கம் 37 பேரே நோய்த் தொற்றினால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.   நன்றி தினகரன் 




சர்ச்சைக்குரிய கருதினால் ஜோர்ஜ் பெல் காலமானார்

பாலியல் குற்றச்சாட்டில் குற்றங்காணப்பட்டு பின்னர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கருதினால் ஜோர்ஜ் பெல் தனது 81ஆவது வயதில் காலமானார்.

வத்திக்கானின் முன்னாள் பொருளாளரும் அவுஸ்திரேலியாவின் உயர்மட்ட கத்தோலிக்க பாதிரியாருமான ஜோர்ஜ் பெல், இவ்வாறான குற்றச்சாட்டில் சிறை சென்ற திருச்சபையின் மிக மூத்த பிரமுகராக பதிவானார்.

இடுப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்ததாக திருச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நிதி நடவடிக்கைக்காக வத்திக்கானுக்கு அழைக்கப்பட்ட அவர் திருச்சபையின் முன்றாம் வரிசை அதிகாரியாக கருதப்பட்டார். எனினும் 2017 ஆம் ஆண்டு தனது பதவிலிருந்து வெளியேறிய அவர் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க அவுஸ்திரேலியா திரும்பினார்.

தான் நிரபராதி என தொடர்ந்து கூறிவந்த அவர் 13 மாதங்கள் சிறை அனுபவித்த நிலையில் அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தது.   நன்றி தினகரன் 





ஹரியின் சுயசரிதையினால் அரச குடும்பத்தில் சிக்கல்


பிரிட்டன் இளவரசர் ஹரி அரச குடும்பத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமது சுயசரிதையை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புத்தகம் வெளியிடப்பட்டதையடுத்து அரச குடும்பத்துக்கும் இளவரசர் ஹரிக்கும் இடையிலான உறவைச் சீர்செய்யும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையிலும் இளவரசர் ஹரி தமது குடும்பத்துடன் மீண்டும் இணைய நம்பிக்கை கொண்டுள்ளார். எனினும் அவரது சுயசரிதை தொடர்பான சர்ச்சையில் இளவரசர் ஹரி உட்பட, அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

புத்தகத்தில் தம் வாழ்க்கையைப் பற்றியும் அரச குடும்பத்தைப் பற்றியும் பல எதிர்மறையான தகவல்களை இளவரசர் ஹரி வெளியிட்டார்.

இதற்கிடையே, தமது அண்ணனிடமும் தந்தையிடமும் பேசிப் பல நாள் ஆகி விட்டதாக அவர் கூறியுள்ளார். தமது தந்தையின் முடிசூட்டு விழாவுக்குச் செல்வாரா இல்லையா என்பது குறித்து அவர் தகவல் வழங்கவில்லை.   நன்றி தினகரன் 





பைடன் அலுவலகத்தில் இரகசிய ஆவணம் மீட்பு


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தனிப்பட்ட அலுவலகத்தில் மிக இரகசியமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதித் திணைக்களம் அது பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது வொசிங்டன் டி.சியில் இருக்கும் அவரது முன்னாள் அலுவலகத்திலேயே இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மூடப்பட்ட அலுமாரி ஒன்றில் இருந்து சுமார் 10 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதி தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பைடனின் முன்னவராக இருந்த ஜனாதிபதி டொல்ட் டிரம்பும் தனது பதவிக் காலத்தில் இரகசிய ஆவணங்களை புளோரிடாவுக்கு எடுத்துச் சென்றது பற்றி குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு சுமத்துவது தொடர்பில் விசாரிக்க சுதந்திர சட்டத்தரணி ஒருவரை நீதித் திணைக்களம் நியமித்த விரைவிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.   நன்றி தினகரன் 






ரொக் அன்ட் ரோல் பாடகரான எல்விஸ் பிரெஸ்லிறின் ஒரே மகள் மரணம்


ரொக் அன்ட் ரோல் பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி தனது 54 ஆவது வயதில் காலமானார்.

“எனது அழகான மகள் லீசா மேரி எம்மை விட்டு விடைபெற்றுச் சென்றார் என்ற பெரும் கவலைக்குரிய செய்தியை கடுமையான மனதுடன் கூறிகொள்றேன்” என்று அவரது தாயாரான பிரிசிலா பிரெஸ்லி குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை போல் பாடகியான லீசா மேரி, கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மரணம் அடைந்துள்ளார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலிபோர்னியாவின் கலபாசசில் இருக்கும் தனது வீட்டில் அவர் நினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அது தொடர்பில் தெரிந்த தரப்புகளை மேற்கோள் காட்டி டீ.எம்.சீ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

இவ்வார ஆரம்பத்தில் பெவர்லி ஹில்ஸில் நடைபெற்ற கோல்டன் கிளோப் விருது விழாவில் லிசா கலந்துகொண்டார். விழாவில் எல்விஸை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆஸ்ட்டின் பட்லர் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

1977ஆம் ஆண்டு எல்விஸ் பிரெஸ்லி திடீர் நெஞ்சுவலியால் தனது 42ஆவது வயதில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு பிறந்த லிசா மேரி தனது தந்தை போன்று இசைத் துறையில் பிரவேசித்து 2003 ஆம் ஆண்டு இசைத் தட்டு ஒன்றை வெளியிட்டு பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அவர் புகழ்பெற்ற நட்சத்திரங்களான பொப் ஜாம்பவான் மைக்கல் ஜாக்சன், நடிகர் நிகலஸ் கேஜ் மற்றும் இசைக் கலைஞர்களான டானி கியோப் மற்றும் மைக்கல் லொக்வுட் ஆகியோரை திருமணம் செய்ததிலும் பெரிதும் பிரபலமடைந்தவராவார்.

அவர் நடிகை ரிலி கியோப் உட்பட நான்கு பிள்ளைகளின் தயாவார். அவரது ஒரே மகன் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 



No comments: