பொய்மான் - என் பார்வையில் - ச சுந்தரதாஸ் -

 .

பிறந்த நாடான இலங்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு புது வாழ்வு தேடி அகதியாய் படகு மூலம் ஆஸ்திரேலியா வருகிறான் அன்புச்செல்வன் என்ற இளைஞன்..சகல செல்வங்கள்,வசதிகள் இருந்தும் உண்மை அன்பில்லாமல் ஏங்கி தான் பிறந்த நாட்டிற்கே அனாதையாய் திரும்புகிறார் மணி என்ற முதியவர்.ஒருவருக்கு பொய்மானாகத் தெரியும் பணம் இன்னொருவனுக்கு வாழ்வாதாரமாகத் தேவைப்படுகிறது.இதனை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட படம் தான் பொய்மான்.


ஆஸ்திரேலியாவில் லாபிங்கோ லாபிங் என்ற பெயரில் மேடை நாடகங்களை நடத்திவந்த ஜே ஜெயமோகன் முதல் தடவையாக இப் படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இறங்கியுள்ளார்.தனது சோபனம் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து,கதை ,வசனம் எழுதி இயக்கியத்துடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஜெயமோகன்!

ஏற்கனவே மேடை நாடகங்களை இயக்கிய அனுபவம் படத்தை இயக்குவதற்கு அவருக்கு துணிவை கொடுத்துள்ளது.அந்த வகையில் அவர் ஒரு பொசிட்டிவ் ஆள்தான்.ஆனால் படம் முழுவதும் வசனங்களை கொண்டே காட்சிகளை அமைத்துள்ளார்.அதற்கு பதில் ஆங்காங்கே காட்சிகளை கமரா மூலமும் நகர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனாலும் வசனங்கள்இயல்பாகவும் ,அர்த்தபுஷ்டியுடனும் அமைந்திருந்தன.இடையிடையே வசனங்களில் இழையோடும் நகைச்சுவை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்தன.

அன்புசெல்வனாக நடிக்கும் ஜனார்த்தனன் குமரகுருருபரன் நடிப்பு அமர்க்களம்.கொடுத்த வேடத்தை அருமையாக செய்திருந்தார்.ஜெயமோகனிடம் சவடால் விடுவது,பிறகு பம்முவது,மதுவெறியில் தன் சோகத்தை சொல்லி கலங்குவது,காசை கண்டவுடன் மனம் தடுமாறுவது என்று பல குணாம்சங்களை வெளிப்படுத்தியிருந்தார் .ஜனாவுக்கு ஜே .மணியின் மகனாக வரும் வருணன் சரியான வில்லன்!



ஜெயமோகன் தன்னுடைய நடிப்பில் குறை வைக்கவில்லை.ஆனால் திரைக் கதையில் வைத்துவிட்டார்.தன்னுடைய விலை உயர்ந்த கைக் கடிகாரத்தை சர்வ சாதாரணமாக கழற்றி கொடுக்கும் மணி ,இருபதாயிரம் டொலரை மனப்பூர்வமாக அன்புக்கு கொடுக்காமல் அவனை திருடும்படி தூண்டுவது அபத்தமாகவும் தவறான முன் உதாரணமாகவும் காட்டப்படுகிறது.திரைக் கதையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஷார்மினி சில காட்சியில் வந்து கவனத்தை பெறுகிறார்.இவர்களுடன் கவிஜா,கீர்த்தனானா , மன்டாஸ்,நந்திவர்மன், ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தின் ஒளிப்பதிவை ரூபன் தரமாக அமைந்தது.படத் தொகுப்பை ஹரிஷ்,செந்திகுமார் இருவரும் கையாண்டனர்.பாடல்களுக்கான இசை சாரு ராம். பாடல்களுக்கு சாரு ராம், ஆதி, குரு ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல் வரிகளை குவேந்திரன், ஜெயமோகன், ஆதி ஆகியோர் எழுதியுள்ளனர்..இலங்கைக்காட்சிகளை மிதுஷன் இயக்கியிருந்தார்.

இலங்கை திரைப்படம் என்ற வகையில் நம் மண் வாசனையோடு மணம் வீசுகின்றது. 

ஆஸ்திரேலியத் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயமோகன் இயக்குனர் என்ற வகையில் நம்பிக்கையை தருகிறார் . அடுத்த படங்களில் தனது திறமைகளை மேலும் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்!

Production : Shobhanam Creations
Movie : Poi Maan
Cast : Janarthan, Kavija, Jayamohan and Sharmini
DOP : R Poudel
Editing : Senthilkumar R and Harish
Di Colorist : R Delepan
Art Direction : Shaminine C
BGM : Nishadhan S
Music (Songs) : Charou Ram , Aathi, Guru P
Lyrics: Bharathiyaar, Kuventhiran, Jayamohan, Aathi
Singers : Kalaimamani Bhushany kalyanaraman, Gire , R.P Shravan( Super Singer), Athi
Written & Directed by : J Jayamohan

No comments: