இலங்கைச் செய்திகள்

 ஐந்து தமிழ் கட்சிகளுடன் புதிய கூட்டணி உதயம்

எதிர்வரும் 25 வருடங்களுக்கான புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது சுதந்திரதினம்

வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

கோட்டாபய, மஹிந்த உள்ளிட்டோருக்கு கனடா தடை விதிப்பு

5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அறிவிப்பு; இன்று ஒப்பந்தம் கைச்சாத்து


ஐந்து தமிழ் கட்சிகளுடன் புதிய கூட்டணி உதயம்

யாழ்ப்பாணத்தில் இன்று கைச்சாத்து

பிரதான 05 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வதென முடிவு செய்துள்ளன.

இது தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று (13) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக  ஐந்து தமிழ் கட்சிகளுடன்  அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருடன் 05 கட்சியினரும் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.   நன்றி தினகரன் 




எதிர்வரும் 25 வருடங்களுக்கான புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது சுதந்திரதினம்


- 'நூற்றாண்டிற்கான முதற் படி' எனும் எண்ணக்கருவில் சமய, கலாசார நிகழ்வுகள்
- சுதந்திர தின நிழ்வுகளின் விபரங்கள் வெளியீடு

அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின்  புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

"நமோ நமோ மாதா - நூற்றாண்டிற்கான முதற் படி" எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பெருமை மிகு விழாவில், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமாகவுள்ளது.

75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அதன்படி, பௌத்த சமய நிகழ்வுகள், பெப்ரவரி 02 ஆம் திகதி மாலை ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், அன்றிரவு விக்டோரியா அணைக்கு அருகில் 9.00 மணிக்கு தர்ம பிரசங்கமும் ஆரம்பமாகவுள்ளது. மறுநாள் காலை அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு மருதானை பாத்திமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடுகளும், அதே நேரத்தில் காலி முகத்திடல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ மத வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.

இந்து சமய நிகழ்வுகள், பெப்ரவரி 03 ஆம் திகதி காலை திருகோணமலை கோணேஷ்வரம் ஆலயத்தில், இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமய வழிபாடுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பிலும் பௌத்த மற்றும் இந்து சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி 04 ஆம் திகதி முற்பகல் 6.30 மணிக்கு கொழும்பு 03 பொல்வத்தை தர்மகீர்த்தியாராம விகாரையில் பௌத்த சமய நிகழ்வும் கொழும்பு 04 பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இந்து மத நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் மார்ச் மாதம் ஸ்ரீ தலதா கண்காட்சி, கபில வஸ்து தாது கண்காட்சி,  மே மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சி ஜூன் மாதம் அனுராதபுர நகரில் நடைபெறவுள்ளதுடன், மேலும் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சியொன்றை ஜூலை மாதம் தென் மாகாணத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலாசார கலை விழாவான "லங்காரலங்கா" பெப்ரவரி 03 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 750 கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

யாழ் கலாசார நிலையம், பெப்ரவரி 11ஆம் திகதி காலை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், யாழ் கலாசார நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் கலாசார ஊர்வலம் யாழ்.நகரின் ஊடாக வீதி உலா வந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நிறைவடையும். (பழைய பேருந்து நிலையம்) அங்கு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், அன்று இரவு அதே இடத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நடன மரபுகளையும் ஒன்றிணைத்து, வீதி உலாவரும் ஊர்வலம் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு கண்டி நகரில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் பூரண பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திரம் தொடர்பான 30 நிமிட குறும்படமொன்றை தயாரித்து  அனைத்து திரையரங்குகளிலும் கலையரங்குகளிலும் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இளைஞர் சமுதாயத்தை இலக்கு வைத்து "சுதந்திரம்" என்ற தலைப்பில் குறும்படங்கள், தேசபக்தி பாடல்கள் மற்றும் ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட வடிவமைப்புப் போட்டியொன்றை மே மாதம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி சிரேஷ்ட ஓவியக் கலைஞர் எச்.எஸ். சரத் தலைமையில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய அருங்காட்சியக திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கையின் வரலாற்றை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள் கண்காட்சி பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின விழாவின் போது  பத்திரிகை செய்திகள் மற்றும் பிற கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது . 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட  முத்திரை ,சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க ,சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர பாகிஸ்தானின் முதல் பிரதமர்  முஹம்மது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்களை உள்ளடக்கிய அரிய வகை விசேட  நினைவு முத்திரையையும்  வெளியிடப்பட  உள்ளது. மேலும் ரூ.1000/- மதிப்புள்ள  சிறப்பு நினைவு நாணயமும்  வெளியிடப்படும்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட நகர்ப்புற வன எண்ணக்கரு  நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், ஸ்ரீலங்கா டெலிகொம் அனுசரணையுடன் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரையிலான சுதந்திர தின  சைக்கிள் சவாரி ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது தவிர, மாகாண மற்றும் மாவட்ட  மட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பொது பூங்காக்கள், தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு   வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய தேசிய பூங்காக்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள்  திணைக்களத்திற்குரிய  தேசிய பூங்காக்கள்  என்பன  சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும்.

குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன்   குடும்பங்களுக்கு 02 மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்   குறித்த  வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டு 75 ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தப் பயணத்தை 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரையில் மாற்றமில்லாத அரச கொள்கையாக மாற்றுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்  நோக்கமாகும். எதிர்வரும் 25 வருடங்களுக்கான திட்டமும் இந்த தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

இதன்படி, பல புதிய நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் ஒரு வரலாற்று நிறுவனம், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம் , பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான  நிறுவனம்  என்பன  நிறுவப்படும்.

அரச மற்றும்  அரசாங்கக் கொள்கைப் பல்கலைக்கழகம், விவசாய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான  பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்  என்பனவும் நிறுவவுதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு , பாலின சமத்துவச் சட்டம், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், காலநிலை மாற்றம்  தொடர்பான  சட்டம், சமூக நீதிக்கான ஆணைக்குழுச்  சட்டம், காடுகளை மீள உருவாக்கல்   மற்றும் விருட்சப் பாதுகாப்புச்  சட்டம்  என்பனவும்  அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மகாவலி கங்கை, சிங்கராஜ வனம் , சிவனொலிபாத பிரதேசம், ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ், ஆதாம் பாலம் போன்ற இயற்கை வளங்களின்  பாதுகாப்பிற்காக புதிய சட்டம்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடல் வள ஆய்வு மற்றும் முகாமைத்துவம்  தொடர்பில்  புதிய சட்டங்கள் மற்றும் முதுராஜவெல பாதுகாப்பு சட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதில் 75 நகர்ப்புற காடுகளின் திட்டம் மற்றும் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொழும்பில்  1996 வீடுகள் கட்டும் திட்டம்  என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதோடு  தேசிய இளைஞர் தளம் உட்பட பல  வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.   நன்றி தினகரன் 






வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

- கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மூலம் சலுகை

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை   ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம்  வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் பெண் தொழில் முனைவோரை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) மாலை கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாகாண, தேசிய, சார்க் பிராந்தியம் மற்றும் சிறப்பு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதன்போது தேசிய மட்டத்துக்கான விருதுகளையும் சிறப்பு விருதுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி கௌரவித்தார்.

நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து கடனுதவி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலாப நோக்கற்ற அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடக் கூடியதான அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும்  அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

பெண்களை வியாபாரத்தில் ஈடுபடுத்த நீங்கள் செய்த முன்னோடி பணிக்காக உங்களை  பாராட்ட வேண்டும், ஆனால் கிராம அளவில் சிறிய கடைகளை நடத்தும் ஏராளமான பெண்கள் இருக்கும்  நுண் வர்த்தகக் குழுக்களையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். விசேடமாக  உணவு, காய்கறி கடைகள் போன்ற சிறு வணிகங்களை நடத்துபவர்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

இப்போது நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவ முடியும்? பெரிய நகரங்களில், சிறு தொழில்களில் வேலை செய்யும் பெண்களை அதிகம் பார்க்க முடியாது. ஆனால்  அடையாளம் தெரியாத  பெண்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் கடனுக்கு பணம் கொடுப்பவர்கள். சில பிரதேசங்களில் அவர்கள் தான் வணிகங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். 

எனவே அவர்களுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நுண் தொழில் முனைவோர்களுக்கு உதவுவதில் அரசாங்கமும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டை நிர்வகிக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடிகள்.

உண்மையில் நீங்கள் அனைவரும் பெண் தொழில்முனைவோர் என்ற கருத்தை வணிக உலகிற்கு கொண்டு வந்துள்ளீர்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இது  தொடர்ந்தும்  அவசியம் என்று நான் நினைக்கிறேன்.  பிரதான சபையானது  மகளிர் சபைக்கு உதவ வேண்டும்.  ஏனைய  நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 52% பெண்கள். எனவே, பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்களிப்பை அதிகம் பெற வேண்டும். அப்போதே நமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

குறிப்பாக இந்த ஆண்டு சில புதிய சட்டங்களை  அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றை பாராளுமன்ற மகளிர் மன்றம் உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டங்கள் பெண்கள் அதிகாரம் மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு தொடர்பானவை.

டிசம்பரில் அவர்களுடன் ஒரு சுற்று பேச்சு  நடத்தினேன்.   நாட்டின் முக்கிய நிறுவனங்களின்  பணிப்பாளர் சபையில்   குறைந்தது ஓரிரு  பெண் பிரதிநிதிகளை நியமிக்க  முடியுமா என்று கேட்டனர். இது ஒரு புரட்சிகரமான மாற்றம். இதற்கு வர்த்தக சம்மேளனம்  என்ன சொல்லும் என்று தெரியவில்லை. ஆனால் தனியார் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க  பாராளுமன்ற மகளிர் மன்றம் தயாராகி வருகிறது.

அரச துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திகரமாக இருந்தாலும், தனியார் துறையில்தான் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இங்கு வெற்றி பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். ஏனெனில் அவர்கள் இந்த சாதனைகளை மிகவும் கடினமான ஆண்டில் அடைந்துள்ளனர். பெண்கள், ஆண்கள் மற்றும் குடும்பங்கள் நடத்தும் பல தொழில்கள் வீழ்ச்சியடைந்த ஆண்டு. ஆனால் இத்தனை தடைகள், பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நீங்கள் அனைவரும் உங்கள் தலையை நிமிர்ந்து வைத்திருக்க முடிந்தது. எனவே உங்கள் சாதனைகள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன்.

இந்த காலப்பகுதி  வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமின்றி வேலை செய்பவர்களுக்கும் கடினமான காலம். வீட்டில் உள்ளவர்களும் இந்த சிரமங்களை உணர்கிறார்கள். நாம் அனைவரும் இன்னும் உணர்கிறோம். நாம் கடந்து செல்லும் காலங்கள் பல சவால்கள் நிறைந்த காலமாகும்.

இன்று  அனைவரும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்கிறார்கள். தொழில்களை இழக்கின்றனர். வருமானம் குறைகிறது, எதிர்காலத்தைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிலர் எதிர்காலம் இருண்டுவிட்டது  என்று  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிலையை அனுபவிக்கின்றனர்.

நாடு ஏன் இந்த நிலைக்கு வந்தது? நமது பொருளாதாரம் ஏன் சரிந்தது? அது குறித்து   விவாதிப்பதில் அர்த்தமில்லை. தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. அந்த பொருளாதார வீழ்ச்சியின் விளைவைத் தான்  இன்று அனுபவிக்கிறோம். நமது பணவீக்கம் அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.  நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. நாம் எப்படி வங்குரோத்து  நிலையில் வாழ முடியும்?  வங்குரோத்து நிலையிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? இவற்றை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு தனி நபர் கடனில் இருந்தால், அதை தீர்க்க முடியும். உறவினரிடமிருந்து நண்பரிடம் உதவி  கேட்கலாம். ஆனால் நாடு வங்குரோத்தானால்   அதற்கு உதவ உலகில் ஒரே ஒரு அமைப்புதான் இருக்கிறது. அதுதான் சர்வதேச நாணய நிதியம். நாம் எவ்வளவோ சப்தமிட்டாலும்  பிரார்த்தனை செய்தாலும் வேறு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காது. இறுதியாக, இந்த அமைப்பிலிருந்து மட்டும்தான் எங்களுக்கு உதவியும் நிவாரணமும் கிடைக்கிறது.

நாங்கள் அங்கு சென்று இது குறித்து பேச்சு நடத்தினோம். தாம்  நிதியுதவி வழங்கும் ஒரு நாட்டில் இலாபமீட்டாத எந்த ஒரு  நிறுவனமும் இருக்க முடியாது என்று  சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. திறந்த பொருளாதாரம் இருந்தால், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மற்ற துறைகளுக்கு வழங்க வேண்டும். அரசு நிர்வகிக்கும்  நிறுவனங்கள் இலாபகரமாக இருக்க வேண்டும். அப்படி நடந்தால் அரசின் பணம் மக்களுக்கு பயன்படலாம். இல்லையெனில், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நடத்துவதற்கு அந்த பணத்தை அரசு செலவிடுகிறது.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இல்லாவிட்டால், மக்களுக்கு நிவாரணம் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கப் பணத்தை செலவிட முடியும். இந்த நேரத்தில் நாமும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நான் பதவியை பொறுப்பேற்கும் போது சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன்  அதிகாரிகள் மட்ட  ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத்தான் இப்போது செயல்படுத்தி வருகிறோம்.  கடந்த ஆண்டு அனைத்து கடினமான தீர்மானங்களையும் எடுத்தோம்.

அதற்கான பலன் இந்த ஆண்டு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். நான் இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். மின்சார சபை கட்டணத்தை அதிகரித்ததன் பின்னரும்கூட அங்கே இன்னும் 350 பில்லியன் ரூபா நட்டம் காணப்படுகிறது. நட்டத்தில் மின்சார சபையை கொண்டு நடத்த முடியாது. அது வீழ்ச்சிக் காணும். வங்கிகளும் கடனுக்கு பணத்தை வாங்குவதால் சரிவடையும். அப்படியானால், நாம் வட் வரியை (VAT) அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை நாம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நமக்கு உதவி கிடைக்காது. எனவே, விருப்பம் இல்லாவிட்டாலும்கூட எமக்கு இதைச் செய்ய நேரிடும்.

இந்த வேலையைச் செய்யும்போது யாரும் கைதட்ட மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதையறிந்தே நாம் இந்த வேலையை ஏற்றுக்கொண்டோம். இந்த கடினமான தீர்மானங்களை நாம் எடுத்தேயாக வேண்டும். அந்த முடிவுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். இதனால், பொருட்களின் விலை உயரும். எனினும் கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த உதவிகளால் எரிபொருள் பிரச்சினை, உணவுப் பிரச்சினை, உரப்பிரச்சினை போன்றவற்றை தீர்க்க முடிந்துள்ளது.

எமக்கு உரங்கள் கிடைத்துள்ளதால், இம்முறை பெரும்போகத்தில் எமக்கு மிகச் சிறந்த விளைச்சல் கிடைக்கும். உண்மையில் எமக்கு நெல் மேலதிகமாக கையிருப்பில் உள்ளது.

இது பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். இதன் மூலம் வாழ்க்கைச் செலவும் குறையும். சில உணவுப் பயிர்கள் அதிகமாகவே அறுவடை செய்யப்பட்டுள்ளன.

இங்குள்ள அனைவரும் வரிச் செலுத்த நேரிட்டுள்ளது. சில அரச தொழில்துறைசார்ந்தவர்கள்கூட இதற்கு எதிராகப் பேசுகிறார்கள். சிலர் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் நடத்துவதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் அதற்குரிய தீர்வு என்ன என்று கூற வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதும், கூச்சலிடுவதும் உலகில் எந்த நாட்டிலும் நடப்பதே. அவற்றை நிறுத்த முடியாது.

இந்த முடிவுகளில் இருந்து விலகி நாம் என்ன செய்வது? நாட்டுக்கு என்ன நடக்கும்? சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தில் இருந்து விலகினால், நமக்கு யார் நிதியுதவி செய்வார்கள்? விலை உயர்த்தப்பட்டால் வாழ்க்கைச் செலவுக்கு சிரமம் ஏற்படும். விலையை உயர்த்தவில்லை என்றால் உதவி கிடைக்காது. அதனுடன் பொருளாதாரம் வீழ்ச்சிக் காணும்.

இதுவே எங்களுக்குள்ள மிகவும் கடினமான பணி. எம்மால் இப்படி எந்த நாளும் வாழ முடியாது. கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் நாம் விரைவாக முன்னேற வேண்டும். வர்த்தகச் செயற்பாடுகளுக்கு  தற்போதைய பணவீக்கம் ஒரு பிரச்சனையாக உள்ளது. நாம் இந்த தீர்மானங்களை தொடர்ந்தால், பணவீக்கத்தை குறைக்க முடியும். வங்கியின் வட்டியை குறைக்கலாம். சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் பணவீக்கம் உயர்வடையும்.

கடன் திருப்பிச் செலுத்தப்படுவதை ஒத்திவைப்பது ஒரு பெரிய பிரச்சனை. எனினும் கடன்களை ஒத்தி வைக்க வேண்டிய வர்த்தகங்களுக்கு அதற்கு அவசியமான சலுகைகளை பெற்றுக் கொடுக்குமாறு நான் மத்திய வங்கி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

வங்கிகளிலும் சிக்கல்கள் உள்ளன. வங்கிகளை முதலில் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் வங்கிகள் வங்குரோத்தடையும். வங்கிகளைப் பாதுகாத்த பின்னர், தொழில்களை தொடங்கலாம்.

நாங்கள் இப்போது பணிகளை முன்னெடுத்துச் செல்வதால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவிலேயே பெறக்கூடியதாக இருக்கும். எமக்கு கடன் வழங்கிய நாடுகள் எமக்கு ஆதரவளிக்க தயார் என ஏற்கனவே அறிவித்துள்ளன.

எமது பிரதான மூன்று கடன் வழங்குநர்களுடன் ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் ஆகியனவும் ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியா மற்றும் சீனாவுடனும் நாம் அதுதொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம்.

நான் நேற்று சீனா எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடினேன். எங்கள் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றி இப்போது கலந்துரையாடி வருகின்றோம். விரைவில் அதைச் செய்ய சீனத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டரை பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்பிறகு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்கள் வரை எமக்கு கிடைக்கும். அப்போது எமது கைகளுக்கு ஏழரை பில்லியன் டொலர்கள் கிடைக்கும்.

இலாபமில்லாத அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்காக கிடைக்கும் மூன்று பில்லியன் டொலர்களையும் சேர்த்தால் 10 பில்லியன் டொலர்கள் வரை கிடைக்கும். அப்போது நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கூடியதாக இருக்கும். நாம் அந்த நிலையை அடைய வேண்டும். மக்கள் எல்லா நேரத்திலும் கஷ்டப்பட முடியாது. நாம் இந்த நிலையில் இருந்து மீளவேண்டும்.

இப்போது நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். இங்கிருந்து நாம் முன்னேற வேண்டும். கசப்பான மருந்தை சாப்பிட வேண்டி ஏற்பட்டுள்ளது. பொதுவாக இந்த நோயை பரப்பியவர்களை திட்டாமல், மாறாக கசப்பு மருந்து தரும் வைத்தியரையே திட்டுகின்றார்கள். திட்டினாலும் பரவாயில்லை, இந்த கசப்பு மருந்தை சாப்பிட்டுவிட்டு பொருளாதாரத்தை குணப்படுத்தும் திட்டத்திற்குச் செல்வோம்.

இந்த வருடம் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு எமக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இதையெல்லாம் செய்ய நாம் கஷ்டப்பட வேண்டும். இதையெல்லாம் எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நான் அதை நம்புகின்றேன். பிறகு புதிய தொழில்களைப் பற்றி சிந்தித்து, உலகத்துடன் போட்டியிடக்கூடிய புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை எம்க்கு கிடைக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, நேபாள தூதுவர் பஷு தேவ் மிஸ்ரா, பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் லிசா வென்ஸ்டோல் மற்றும் மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி அனோஜி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 





கோட்டாபய, மஹிந்த உள்ளிட்டோருக்கு கனடா தடை விதிப்பு

- இலங்கை அரசாங்கம் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திடம் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக கனடா அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ பணிக்குழாம் சார்ஜெண்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோரே ஏனைய இருவராவர்.

1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டி, கனேடிய அரசாங்கம் இத்தடைகளை விதித்துள்ளது.

குறித்த தடையுத்தரவுக்கமைய, அவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு கனடாவிலுள்ள சொத்துகள் உள்ளிட்டவையும் முடக்கப்படும். அத்துடன் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

விசேட பொருளாதார நடவடிக்கைகள் (இலங்கை) விதிமுறைகள், பட்டியலிடப்பட்ட நபர்களின் சொத்து தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதையோ அல்லது நிதி அல்லது சேவைகளை வழங்குவதையோ கனடா மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள கனேடியர்களுக்கு தடைசெய்வதன் மூலம் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் (செயல்திறன், சொத்து முடக்கம்) தடை விதிக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்டுள்ள குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவும் கனடா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய பதில் உயர் ஸ்தானிகரை இன்று (11) வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதி எனவும், இரு தரப்பு நியாயங்கள் எதனையும் விசாரணை செய்யாது தன்னிச்சையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி தினகரன் 






5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அறிவிப்பு; இன்று ஒப்பந்தம் கைச்சாத்து


சின்னம் தொடர்பில் இழுபறி விக்கி, மணிவண்ணன் வெளியேற்றம்

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடைநடுவில் நேற்று கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க முடிவு எடுத்தன. தமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து இக் கூட்டணி உருவாக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இக் கூட்டணி போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து இன்று காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அவர் தெரிவித்தார்.

பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள் 

நன்றி தினகரன் 




No comments: