எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 48 “ கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் “ முருகபூபதி


அன்பார்ந்த வாசகர்களுக்கு எமது இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்.  இதேபோன்றதொரு நாளில், அதாவது இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னர்  சிட்னியில் வசித்த   இலக்கியவாதி கலாநிதி  வேந்தனார் இளங்கோ  என்னைத் தொடர்புகொண்டு, அங்கே எமது இரண்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்கான ஏற்பாடுகளை தானும் சில நண்பர்களும் மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார்.

எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் என்ற நீண்ட தொடர் என்னைப்பற்றியது மட்டுமல்ல,  என்னோடு பயணித்தவர்கள் பற்றியதுமாகும்.

அவ்வாறு பயணித்தவர்கள் பலர் இன்று உயிரோடு  இல்லை.  சிலர்


பாதி வழியில் ஒதுங்கிச் சென்றுவிட்டார்கள். பலர், தொடர்ந்தும் கூட வருகிறார்கள். 

வேந்தனார் இளங்கோ,  சிறந்த கல்விப்பின்னணி மிக்க ஒரு கலை,  இலக்கிய குடும்பத்தைச்சேர்ந்தவர்.  இவருடைய தந்தையார் வித்துவான் வேந்தனாரை நான் எனது வாழ்நாளில் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அக்காலம் 1963 ஆம் ஆண்டு.  அப்போது நான் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் ( இன்றைய  கனகரத்தினம் மத்திய கல்லூரி )  ஏழாம் தரம் படிக்கின்றேன். அந்த ஆண்டு கலைமகள் விழா வந்தபோது, வித்துவான் வேந்தனார் எங்கள் கல்லூரிக்கு வந்து சிறப்புரையாற்றினார். அச்சமயம் அவர் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

எனது பாடசாலைப் பருவத்திலேயே  பெரியோர்களின்  மேடைப் பேச்சுக்களை விரும்பிக் கேட்பேன்.  எங்கள் ஊருக்கு தமிழ்நாட்டிலிருந்து  குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் முதலானோர் வந்தபோதும் நான் மாணவன்தான்.  இவர்களின் உரைகளையும் கேட்டு வளர்ந்திருக்கும்  நான், யாழ்ப்பாணத்திற்கு படிக்கச் சென்றபோதுதான்,  வித்துவான் வேந்தனார், டொமினிக் ஜீவா ஆகியோரின் உரைகளையும் அந்த மாணவப் பருவத்தில் கேட்டேன்.

காலப்போக்கில்,  வேந்தனாரின் பிள்ளைகள் எனக்கு அறிமுகமாவார்கள் என்றோ, அவர்களுடன் உறவாடும் சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்றோ நான் அந்தப் பருவத்தில் நினைத்திருக்கமாட்டேன்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வதியும் எனது இலக்கிய நண்பர்களிடம் பேசும்போது,  நான் பெருமையோடு சொல்லும் செய்தி ஒன்றிருக்கிறது. அதனை இந்த தைத்திருநாள் காலத்தில் பதிவுசெய்துகொண்டே நகர விரும்புகின்றேன்.

 “ அவுஸ்திரேலியாவில் பல ஈழத்து மூத்த எழுத்தாளர்கள் – கலைஞர்களின் பிள்ளைகள் , பேரர்கள்  இருக்கிறார். முடிந்த வரையில் அவர்களுடன் தொடர்பிலிருக்கின்றேன்.  அவர்களுடன் உறவைப் பேணுவது, அந்த மூத்தோர்களுடன் இன்னமும் வாழும் உணர்வையே தருகிறது.   என்பேன்.

உங்களுக்கு அவர்களின் பெயர் பட்டியலைத் தருகின்றேன்.

( நவாலியூர் சோமசுந்தரப் புலவர் )  -  சோ. இளமுருகனார் , ஆசுகவி


கல்லடி வேலுப்பிள்ளை, இரசிகமணி கனக செந்திநாதன், வித்துவான் வேந்தனார், காவலூர் இராஜதுரை, கே. டானியல், எஸ்.பொன்னுத்துரை,  ‘சுந்தா ‘ சுந்தரலிங்கம்,               கி. இலக்‌ஷ்மண  ஐயர், மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி,  கே. எஸ். சிவகுமாரன்,  நீர்வை பொன்னையன்,  தினகரன் முன்னாள் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன்,  சண்முகம் சிவலிங்கம், கவிஞர் சுபத்திரன்,  பத்திரிகையாளர் நடனசிகாமணி, கவிஞர் நீலாவணன், மஹாகவி உருத்திரமூர்த்தி, ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், ரத்தினசபாபதி ஐயர்.


மெல்பனில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில், வேந்தனார் இளங்கோவினால் தவிர்க்க முடியாத காரணத்தினால், கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. எனினும்,  அவர் எழுதி அனுப்பியிருந்த கட்டுரையை சிட்னியிலிருந்து வருகை தந்திருந்த  நண்பர் நடராஜா கருணாகரன் வாசித்து சமர்ப்பித்தார்.

இரண்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவை சிட்னியில் நடத்துவோம் என்று 2001 ஆம் ஆண்டு மெல்பனுக்கு வந்திருந்த பலரும் தெரிவித்தனர்.  அப்போது எமது தமிழ்  இலக்கிய கலைச்சங்கம் உருவாகியிருக்கவில்லை.

 “ எழுத்தாளர் ஒன்று கூடலை எவரும் செய்யலாம்.  மெல்பனில் நான்


முன்னின்று, பலரையும் அழைத்து இணைத்து செய்திருக்கின்றேன். அவ்வாறே நீங்களும் சிட்னியில் நடத்தலாம்  “ என்று 2001 ஆம் ஆண்டு இரண்டாவது நாள் விழா பண்டுரா பூங்காவில் நடந்தவேளையில் சிட்னி நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன்.

இச்செய்தியுடன்  சென்ற அந்த நண்பர்கள், வேந்தனார் இளங்கோவுடன் இதுபற்றி கலைந்துரையாடியிருக்கிறார்கள்.  அதன்பின்னர், அவரே ஒரு குழுவை தெரிவுசெய்து இயங்கத் தொடங்கியிருந்தார்.  அதனால், அந்த ஆண்டு மெல்பனில் விழா நடக்கவில்லை.


வேந்தனார் இளங்கோ அமைத்த குழுவில், சிட்னியிலிருந்து அவரும் நண்பர்கள் செ.பாஸ்கரன், அ. சந்திரகாசன் ஆகியோரும் கன்பராவிலிருந்து நித்தி துரை ராஜாவும் மெல்பனிலிருந்து நானும் இணைந்திருந்தோம்.

சிட்னி விழாவை எழுத்தாளர் மாநாடு என்ற பெயரில் நடத்துவோம் என்றார் இளங்கோ.   “ எவ்வாறு…  எந்தப் பெயரில் நடத்தினாலும், எமது கலை, இலக்கிய வாதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு புறம் வைத்துவிட்டு  வருகை தந்து கலந்துகொள்ளவேண்டும். எமது நோக்கமே அறிந்ததை பகிர்தல் – அறியாததை அறிந்துகொள்ள முயற்சித்தல்தானே  “ என்றேன்.

19-01 – 2002 ஆம் திகதி சனிக்கிழமை Homebush West Community Centre  இல் நடத்துவதாகவும், மறுநாள் 20 ஆம் திகதி, Homebush Primary School மண்டபத்தில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நடனம் – நாடகம் என இலக்கிய விழாவே நடத்தவிருப்பதாகவும் இளங்கோ தகவல் அனுப்பியிருந்தார்.

மெல்பனிலிருந்து  நானும்,  எழுத்தாளர்  ‘ நல்லைக்குமரன்  ‘ குமாரசாமியும் மருத்துவர் பொன். சத்தியநாதனும் மற்றும் எனது


நண்பர் சிவானந்தராசாவும் சிட்னிக்கு பயணித்தோம். இளங்கோ செயலூக்கமுடன் இயங்கினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படவிருந்த கட்டுரைகளை தொகுத்து மலர்வடிவில் தயாரித்திருந்தார்.

எஸ்.பொன்னுத்துரையின் கட்டுரை அந்த மலர்க்குழுவினருக்கு சில சிக்கல்களை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்பதை அங்கு சென்றபின்னர்தான் தெரிந்துகொண்டேன்.  எஸ். பொ.வுக்கும் இளங்கோவுக்குமிடையில் இது தொடர்பாக வாதப் பிரதிவாதங்களும் நடந்திருக்கின்றன.

இறுதியில் தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், தணிக்கை செய்யப்படும்  தனது கட்டுரையை  வாசிக்கமாட்டேன் என்றார் எஸ்.பொ.  எனக்கு தர்மசங்கடமாகவிருந்தது.

குறிப்பிட்ட மாநாடு திட்டமிட்டவாறு நடந்தது.  ஆனால், மறுநாள் நடக்கவிருந்த இலக்கிய விழா  நடக்கவில்லை.  அதற்கான பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை எனக் காரணம் கூறினார் இளங்கோ.


எனக்கு இது சற்று ஏமாற்றமாகவிருந்தது. 19 -01 – 2002 சிட்னி எழுத்தாளர் மாநாட்டில், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், நா. மகேசன், கவிஞர் அம்பி, மருத்துவர் பொன். சத்தியநாதன், மருத்துவர் கௌரி காந்தன், கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன், குலசேகரம் சஞ்சயன், மாத்தளை சோமு, சிவா சிவானந்தா, ம. தனபாலசிங்கம், அ. சந்திரகாசன்,  நட்சத்திரன் செவ்விந்தியன்,  மு. கோவிந்தராஜன், ஆழியாள் மதுபாஷினி,  மனோ ஜெகேந்திரன், பாமதி சோமசேகரம், அனுஷா தர்மராஜா, கலையரசி சின்னையா, சௌம்யா ஆகியோர் உரையாற்றினர். 

மருத்துவர் பொன். சத்தியநாதன்  “ தமிழ் மொழி – சீரழிபும்  சீர்திருத்தமும் “  என்ற தலைப்பில்  காணொளிக் காட்சியுடன் உரையாற்றினார். அதிக நேரத்தையும் அவர் எடுத்துக்கொண்டமையால், இளங்கோ குறுக்கிட்டு,  நேரத்தை சுட்டிக்காண்பித்தார். அதனால், அங்கு சிறு சலசலப்பும் தோன்றியது.

அந்த மாநாட்டின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் இளங்கோ மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்டிப்புடனும் நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

கட்டுரைகள் அடங்கிய குறிப்பிட்ட மலரும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் மகாகவி பாரதி ஆவணப்படமும்


காண்பித்தோம்.

நான் மெல்பன் திரும்பியதும் உதயம் பத்திரிகையில் அம்மாநாடு பற்றி  எனது அவதானக் குறிப்புகளை எனது ரஸஞானி புனைபெயரில் எழுதினேன்.

எதிர்காலத்தில் எழுத்தாளர் விழாக்களை நடத்தும்போது சந்திக்கக்கூடிய சவால்கள் – சிக்கல்கள் – எதிர்வினைகள்  என்பன எவ்வாறெல்லாம் உருவாகும் என்பதற்கு அந்த சிட்னி மாநாடு எனக்கு புத்திக்கொள்முதலாகியது.

அத்துடன் சவால்களுக்குள் சுழியோடுவது எங்கனம்?  என்ற வாழ்வியல் தத்துவத்தையும் போதித்தது.

கலாநிதி வேந்தனார் இளங்கோ,  தொகுத்து வெளியிட்ட அந்த மாநாட்டு மலர் பெறுமதியானது.  என்னிடம் ஒரே ஒரு பிரதிதான் இருந்தது.  மெல்பன் பாரதி பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை, இங்கு பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சையில் தமிழ்ப் பாடத்திற்கு தோற்றும் மாணவர்களுக்கு பயிற்சியளித்துக்கொண்டிருந்தார். தனக்கு அந்த மலர் உசாத்துணை தேவைக்காக வேண்டும் என்றார். அவரது வீடு தேடிச்சென்று கொடுத்தேன். அந்தப்பிரதியை மீளப்பெறமுடியாது போய்விட்டது. பல தடவை கேட்டும் கிடைக்கவேயில்லை. இவ்வாறு நான் தொலைத்த இதழ்கள், மலர்கள், புத்தகங்கள் அநேகம்.

அவை :– என்னிடமிருந்து பெறுபவர்களுக்கு தற்காலிக தேவை. எனக்கோ நிரந்தரத்தேவை. 


இது இவ்விதமிருக்க, 2001 ஆம் ஆண்டில் எனது மூன்று புதிய வெளியீடுகள் வரவாகின. அவை: கடிதங்கள் – மல்லிகை ஜீவா நினைவுகள் – முருகபூபதியின் படைப்புகள் ( விமர்சனங்கள் ) முதலிரண்டையும் சென்னையில் குமரன் பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருந்த நண்பர் செ. கணேசலிங்கன் அச்சிட்டுத்தந்தார்.  எனது படைப்புகள் குறித்து வெளியான விமர்சன நூலை, மருத்துவர் பொன். சத்தியநாதன், தமது Limat Digital Media நிறுவனத்தினால் அச்சிட்டுத்தந்தார்.  அவரிடம் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பர் சங்கர், இந்நூலை வடிவமைத்தார்.

கடிதங்கள் நூலில் 80  கடிதங்கள் இடம்பெற்றிருந்தன. கலை, இலக்கிய ஊடகவியலாளர்களும், எனது தாயாரும் எனக்கு அரிவரி வகுப்பில் போதித்த ஆசிரியப் பெருந்தகை பெரியரீச்சர் அம்மாவும் உட்பட பலர் எனக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இந்நூலில் பின் இணைப்பாக டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப், ‘ உயிர் நிழல்  ‘ ஆசிரியர், தேவகௌரி, செங்கை ஆழியான் ஆகியோருக்கு நான் எழுதிய பகிரங்க கடிதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நூலுக்கும் சிட்னி ஓவியர் குணசிங்கம் முகப்போவியம்  வரைந்திருந்தார்.  மல்லிகை ஜீவா நினைவுகள் நூலை, ஜீவாவின் துணைவியார் புஸ்பராணிக்கும் பிள்ளைகள் சுவர்ணலதா, பிரேமலதா, திலீபன் ஆகியோருக்கும் சமர்ப்பணம் செய்திருந்தேன்.  கடிதங்கள் நூலை பெரியரீச்சர் அம்மா திருமதி திருச்செல்வம் அவர்களுக்கு சமர்ப்பித்திருந்தேன். இந்த நூல்களை கண்ணுற்ற ரீச்சரும், மல்லிகை ஜீவாவும் பேராச்சரியத்தில் மூழ்கினர்.

நான் இப்படியெல்லாம் செயற்படுவேன்  என அவர்கள் எதிர்பார்க்காதமையால்தான் அவ்வாறு ஆச்சரியப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு எனது இரண்டாவது புதல்வி பிரியாவின் திருமணம் எங்கள் ஊரில் நடந்தபோது,  பல எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தனர். அப்போது ஜீவா, ஒரு வார்த்தை சொல்லி என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டார்.

தனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.  எனினும் தான், மீண்டும் பிறக்க நேர்ந்தால், முருகபூபதிக்கு பிள்ளையாக பிறக்கவேண்டும் என்று  தனது மகன் திலீபனிடம் சொன்னாராம்.

பெரியரீச்சர் காலப்போக்கில் கனடாவில்  தமது பிள்ளைகளிடம் சென்றார். அவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் அங்கு சென்று பார்த்தேன். அவர் தனது படுக்கையில் தலைமாட்டு விளிம்பில் நான் எழுதிய புத்தகங்ளை வைத்திருந்தார்.  அவர் மறைந்தபோது அவரது படத்திற்கு முன்னால் நின்று மௌன அஞ்சலிதான் செலுத்த முடிந்தது.

ஜீவா கடந்த 2021 ஆம் ஆண்டு இதே ஜனவரி மாதம் கொழும்பில் மறைந்தார். அப்போதும் அவரது படத்திற்கு முன்னால் நின்று மௌன அஞ்சலிதான் செலுத்த முடிந்தது.

இவர்கள் அடிக்கடி எனது கனவில் வந்து போகிறார்கள்.

 “ கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்    என பாடிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த அங்கத்தை, நினைவுகளை தந்துவிட்டு விடைபெற்ற கலாநிதி வேந்தனார் இளங்கோவுக்கே சமர்ப்பிக்கின்றேன்.

( தொடரும் )

 

 

 

 

  

 

 

No comments: