ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா கண்ணே ! அவதானி


பல வருடங்களுக்கு முன்னர்,  ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்தனா ஜனாதிபதியாகவும் பிரேமதாச பிரதமராகவும் பதவி வகித்தனர்.

அப்போது பிரேமதாச,  கொழும்பு கெத்தாரமையில் ஒரு விளையாட்டுத் திடலை திறந்து வைத்துவிட்டு உதைபந்தாட்டம் ஆடினார்.

அவரது மனைவி ஹேமா பிரமேதாச,  ஒரு விளையாட்டுத் திடலில் நெட்போல் விளையாடினார்.

திருமதி அழகுராணி எனப்பெயரெடுத்திருந்த தற்போதைய கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கா  தலையிடி மாத்திரை  பெனடோல்  குறித்த  பத்திரிகை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.

இவற்றை அவதானித்த ஒரு கருத்துப்பட  ஓவியர்,    பிரேமாட்ட


ஃபுட்போல்,   ஹேமாட்ட  நெட்போல்,  ரோஸிட்ட பெனடோல், அபிட்ட பொலிடோல்  என எழுதியிருந்தார்.

அதாவது அவர்கள் மூவருக்கும்  ஃபுட்போல்,  நெட்போல், பெனடோல் இருக்கிறது. மக்களாகிய எமக்கு கிருமிநாசினியான பொலிடோல்தான் இருக்கிறது என்பதே அதன் தமிழ் அர்த்தம்.

தற்போது சமகாலத்தில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பட்டினிச்சாவையும் எதிர்நோக்கியிருக்கும்போது, ( ஒரு சிறுவன் பட்டினியால் இறந்து கிடந்த செய்தியை அறிந்திருப்பீர்கள் .  ஏராளமான மாணவர்கள்  காலை உணவின்றியே பாடசாலைகளுக்கு வருகின்றனர் ) அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் கால கட்டத்தில், பால்மா தட்டுப்பாட்டினாலும் விலையுர்வினாலும் பல ஏழைகளின் வீடுகளில் பால் தேநீரே இல்லை என்ற நிலையில்,  கொழும்பு மாநகர மேயர் திருமதி ரோஸி சேனநாயக்கா தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கிறிஸ்மஸ் – புத்தாண்டு கொண்டாட்டத்தை பல்வேறுவகையான தின் பண்டங்களுடன் ஆடம்பரமாகக் கொண்டாடியிருக்கிறார்.

இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மொட்டுக் கட்சியைச்சேர்ந்த ராஜபக்‌ஷவினர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களில் அரசியல்வாதிகள்  எவருமே பட்டினி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தவர்கள்.  நாட்டில் வறுமையை ஒழிப்போம் எனச்சொல்லிக்கொண்டு மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வந்தவர்கள்.

மீண்டும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலின்போது வாக்குப்பிச்சை கேட்டு வரப்போகிறவர்கள்.

அன்று 1980 களில்  ரோஸி சேனநாயக்கா, தலையிடிக்கு பெனடோல் உகந்தது என போஸ் கொடுத்த விளம்பரத்தை பார்த்தோம். தற்போது மக்கள் தலையிடிக்கும் பெனடோல் வாங்க வழியின்றி தவிக்கும்போது,  அவர் தடல்புடலாக விருந்து நடத்தி,  பணம் படைத்த பிரமுகர்களின்  வயிற்றுக்கு அறுசுவை உணவு விருந்து படைக்கின்றார்.

அதற்கு செலவிட்ட பணம் அவரது தனிப்பட்ட சொந்தப்பணமா, அல்லது மாநகர சபைக்கு மக்கள் செலுத்திய வரிப்பணமா…? என்பதை யார்தான் கேட்டுத் தெரிந்துகொள்வது.


கோத்தபாய ராஜபக்‌ஷவை மக்கள் விரட்டுவதற்கு பிரதான காரணமே நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிதான். 2023 ஆம் ஆண்டிலும் இந்த நெருக்கடி தொடரத்தான் போகிறது என்று கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதிவரையில்  ஆய்வாளர்கள் ஆரூடம் கூறிவந்தனர்.

இந்தப்பின்னணியில் சற்றேனும் மனச்சாட்சியே இல்லாமல், இந்த அரசியல் பிரமுகர்கள்  செயல்படுகின்றனர்.

பசி தீர்ந்த பின்னரும் ஒருவர் சாப்பிடுவாராகில், அது பட்டினி கிடக்கும் ஒருவனின் பங்கு என்றுதான் காந்தியடிகள் கூறியிருக்கிறார். அவரது கூற்றின்படி பார்த்தால், பசி பற்றியே தெரியாத இந்த பிரமுகர்கள் கூட்டம் எத்தகைய சுரண்டலை தொடருகின்றது என்பது புலனாகும்.

இது இவ்விதமிருக்க இலங்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளை கவனிப்பதற்காக கனடா மனிதாபிமான ரீதியில் உதவ முன்வந்து 30 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவிருக்கிறது. இதன் இலங்கை நாணயப்பெறுமதி ஏறத்தாழ 81 கோடியே 70 இலட்சம் ரூபா.

அவசரகால உணவு, ஊட்டச்சத்து சேவைகள், நல்ல குடிநீர் மற்றும்


மருத்துவ சேவைகளுக்காகவே இந்த உதவிகள் கிடைக்கவிருக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்கா 24 கோடி அமெரிக்கன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக கொழும்பிலிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு இலங்கை மக்கள் வெளிநாட்டு உதவிகளுக்காக காத்திருக்கும்போது,  எமது இலங்கை தலைநகரத்தின் மாநகர பிதா நடத்தியிருக்கும் படோடாபமான விருந்துபசாரம் எதனை காண்பிக்கிறது!?

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி  கிடைக்குமா..? கிடைக்காத…?  என்ற சிக்கலை அரசு எதிர்நோக்கியிருக்கும்  நிலையில்,  தொடர்ந்தும் மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் பின்னணியில்தான்  மேயரின் வாசஸ்தலத்தில்  ஏராளமான மின்விளக்குகளின் ஒளியுடன்  இந்த விருந்துபசாரம் நடந்தேறியிருக்கிறது.

மக்கள் வாயையும் வயிற்றையும் கட்டி வாழத்துடிக்கவேண்டும்.  அரசியல் பிரமுகர்கள் வயிறு முட்ட சாப்பிட்டு ஏப்பமிடவேண்டும்.

நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக மக்கள் முன்னால் தோன்றவிருக்கும் மேயர் ரோஸியிடமும்  அரசியல்வாதிகளிடத்திலும்  மக்கள் கேட்கவேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன.

கேட்பார்களா..?

---0---

 

No comments: