இரவினில் ஆட்டம் , பகலினில் தூக்கம் ! அவதானி


ஏறக்குறைய 58 வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் நவராத்திரி திரைப்படம் வெளியானது. நடிகர் திலகம்  சிவாஜி கணேசனின் நூறாவது திரைப்படம்தான் நவராத்திரி.

இதில் ஒரு  இரவு விடுதியில்  அவர் மதுபோதையில் பாடுவதுபோன்று ஒரு காட்சி வரும். அந்தப்பாடல் வரிகளின் தொடக்கத்தையே இந்த பத்தியின் தலைப்பாக்கியிருக்கின்றோம்.

கவியரசு கண்ணதாசனுக்கு நன்றி.

அந்தப்படம் வெளியாகிய வருடத்திற்கு மறு ஆண்டு 1965 ஆம் ஆண்டு


பிறந்திருப்பவர்தான், இன்றைய இலங்கை அரசின் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே.

இவர் இங்கிலாந்து பிரஜை எனவும் செய்திகள் அடிபடுகின்றன.  இவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்தாக்கும் உத்தரவை பிறப்பிக்கக்கோரி மேன்முறையீட்டு நீதி மன்றிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் கசிந்தன.

சரிந்துகொண்டிருக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு டயனா கமகே அரசுக்கு வழங்கியிருக்கும் பெறுமதியான ( ? ) ஆலோசனையை ஊடகங்களில் படித்தபோதுதான், மேற்குறிப்பிட்ட   “ இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ..  “ பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

வெளிநாட்டுப் பிரஜையாக கருதப்படும் அவர் எவ்வாறு தற்போதைய அரசியல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார் என்பது பற்றி ஆராய்வதல்ல இந்த பத்தியின் நோக்கம்.

அதனை மேன்மைதாங்கிய சபாநாயகர் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக பராளுமன்றம் வந்திருக்கும்  அவர் எவ்வாறு ரணில் அரசுக்குள் உள்வாங்கப்பட்டார் என்பது பற்றியும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கட்டும்.  ஜனநாயகத்தின் போர்வையில் எது நடந்தால்தான் என்ன..? இதுவும் நடக்கும். இதற்கு மேலும் நடக்கும்.

இராஜாங்க அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டில் கஞ்சா பயிரிடுவதை சட்டபூர்வமாக்கவேண்டும் என பேசியபோதே, ஓகோ… அவர் எதனை நோக்கி காய் நகர்த்துகிறார் என்பதை அவதானிக்க முடிந்தது.

 “ இரவுநேரப்பொருளாதாரத்தின் மூலம் நாட்டுக்கு அதிக லாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும்  “ என்று அவர் அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கு ஆதாரம் சேர்ப்பதற்காக மேலை நாட்டு நாகரீங்களையும் அங்கு இரவு வேளைகளில் இயங்கும் களியாட்ட விடுதிகள் பற்றியும்  சுட்டிக்காண்பித்துள்ளார்.

அத்துடன் ஒரு நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையிலேயே தங்கியிருக்கிறது என்பதையும் அழுத்திக்கூறி, பின்தங்கியிருந்த  கிறீஸ் நாடு எவ்வாறு முன்னேறியிருக்கிறது என்றும் பாடம் நடத்தியிருக்கிறார்.

இரவுநேரக் களியாட்ட விடுதிகள் 24 மணிநேரமும் திறந்திருக்கவேண்டும் எனவும்  உபதேசம் செய்துள்ளார்.

அதாவது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரிக்கச்செய்வதற்கும்  உகந்த வழி இரவுநேரக் களியாட்ட விடுதிகளை பயன்படுத்தவேண்டும் என்பதே இந்த மேற்குலக சிந்தனைவாதியின் சித்தாந்தமாக இருக்கிறது.

இலங்கையை ஒரு பெளத்த நாடு, பௌத்த தர்மங்களை பின்பற்றும் நாடு என சில பாராளுமன்ற  உறுப்பினர்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் அரங்கத்தில்தான்  டயனா கமகே இரவுநேரக்களியாட்ட விடுதிகளின் பயன்பாடு பற்றி பேசியிருக்கின்றார்.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம்,   நாட்டின் உற்பத்தியிலும், மக்களின் உழைப்பிலும்,  சுரண்டலற்ற சமூக அமைப்பிலும்தான் சாத்தியம் என்பதை  பாடசாலைகளில் சாதாரண தர வகுப்பில் படிக்கும் மாணவர் கூட சொல்லிவிடுவார்.

டயனா கமகேயின் கூற்று கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாகத்தான் முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லையா..?

சமகாலத்தில் பாடசாலைகளில் மாணவர் மத்தியில் போதை வஸ்த்து பாவனை அதிகரித்திருக்கும் அதிர்ச்சியான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் வேளையில்,   இந்த பெண் அமைச்சர், நாட்டை எந்தத் திசையில் அழைத்துச்செல்ல விரும்புகிறார்.

இது இவ்விதமிருக்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அடுத்த 2023 ஆம் ஆண்டு சுமார் 15 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை  இலங்கைக்கு அழைப்பதற்கு அரசிடம் திட்டமிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு அமைச்சர்களின் கருத்துக்களின் பிரகாரம் ஒரு விடயம் மாத்திரம் தெளிவாக புலனாகிறது.

இனிமேல் இலங்கையை கட்டி எழுப்புவதற்கு சுற்றுலாத்துறை மாத்திரம்தான் சிறந்த வழி என்பதையே இவர்கள் வலியுறுத்திவருகின்றர்.

இந்த இரண்டு அமைச்சர்களினதும் வயதைப் பார்த்தால், இவர்களுக்கு இலங்கையின் கடந்த கால வரலாறு தெரியாது என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசின் பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்கா, உள்நாட்டில்  விவசாயத்துறையை அபிவிருத்தி செய்தால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என நம்பிக்கொண்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக விவசாய மன்னர்களை உருவாக்கினார்.

அவருக்குப்பின்னர் 1970 இல் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் உருவான கூட்டரசாங்கத்தில் இடதுசாரிகளும் அங்கம் வகித்தமையால் உள்நாட்டு பொருளாதாரத்தில் கூடுதல் அக்கறை காண்பிக்கப்பட்டது.

அதனால், வடக்கில் வெங்காயம், மிளகாய்  மற்றும்  தானிய வகைகளின் உற்பத்தி பெருகி விவசாயிகள் வாழ்வில் சுபீட்சம் தோன்றியது.

அத்துடன் நீண்ட நெடுங்காலமாக மலையகத்தின் தேயிலை, இறப்பர், கொக்கோ உற்பத்தியும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வளமூட்டின.

ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளின் திறந்த பொருளாதாரக் கொள்கைகளினால், உள்நாட்டு உற்பத்தியில் பெரிய வீழ்ச்சி தொடங்கியது.

எனினும் இந்த வீழ்ச்சியிலிருந்து மீட்சி இல்லாமலே போனது.

பிரச்சினையின் வேர் என்ன என்பதை ஆராயாமல்,  மக்களை களியாட்டங்களை நோக்கி நகரவைத்து,  சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி என்ற போர்வையில்  தேசத்தை அதள பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன.

இனி, எங்கிருந்து எங்கே செல்லப்போகின்றோம்..?

1965 இலும் 1978 இலும் பிறந்து சந்தர்ப்பவசத்தால் பாராளுமன்றம் வந்திருக்கும் இந்த இரண்டு இளம் தலைமுறை அமைச்சர்களை வைத்துக்கொண்டு, 1949 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, தனது நாற்பத்தியைந்து வருட  கால அரசியல் அனுபவத்துடன் எவ்வாறு தேசத்தை கட்டி எழுப்பப் போகிறார்…?

அதனால்தான் கேட்கிறோம் : இனி இரவினில் ஆட்டம். பகலின்  தூக்கமா..?

மக்களே  தீர்க்கதரிசனத்துடன் ஒரு தீர்மானத்திற்கு வரட்டும்.

---- 0-----

 

 

   

 

 

 

 

No comments: