எனது இந்தத் தொடர் எனது வாழ்க்கையையும் நான் உளமாற நேசித்த எழுத்துப் பணியையும் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக எனக்கு நெருக்கமான சில அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதனால்தான் தலைப்பே அவ்வாறிருக்கிறது என்பேன்.
ஒருவர் தான் உட்கொள்ளும் உணவின் தெரிவுகளில் கூடுதல் அக்கறை செலுத்தினால்,
அவருக்கு வயது மூப்பு நெருங்குகிறது என்பது அர்த்தம்.
நீண்ட காலமாக நீரிழிவு உபாதையினால் சிரமப்படும் நான் மாரடைப்பு வந்தமையினால்
இருதய
சத்திர சிகிச்சையை 2003 ஆம் ஆண்டு செய்துகொள்ள நேர்ந்தது. அதன்பிறகு இன்சுலின், மருந்து மாத்திரைகள் என காலம் ஓடுகிறது.
அதன் பக்கவிளைவுகளினால், மேலும் சில உடல் உபாதைகள்
தொற்றிக்கொண்டுவிட்டன.
அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு வந்த பின்னர்தான் கோழி இறைச்சிக்கறியே சாப்பிட்டேன். ஊரில் எங்கள் வீட்டில் மச்சம் என்றால் கடல் உணவு
மாத்திரம்தான் சமைப்பது வழக்கம்.
ஆட்டிறைச்சி சமைப்பது அபூர்வம். அம்மாவும்
நானும் சாப்பிடமாட்டோம்.
1983 ஆம் ஆண்டு அப்பா இறந்தபோது, எட்டுச்செலவுக்காக உறவினர்கள் வெளியூரிலிருந்தும்
வந்திருந்தார்கள். நான் வேலைக்குச்சென்று இரவு
திரும்புகின்றேன். வீட்டு வாசலில் ஒரு ஆடு
கட்டப்பட்டிருந்தது.
அது கத்திக்கொண்டிருந்தது. அதற்கு
முன்னால் பலா மர இலைக்கிளைகள் கட்டப்பட்டிருந்தன. இருந்தும் அது ஏனோ ஈனஸ்வரத்தில் கத்திக்கொண்டிருந்தது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் இந்த ஆடுகள் குறித்து ஒரு உருக்கமான பாடலை
எழுதியிருக்கிறார்.
மகாத்மா காந்தியடிகள் ஒரு
தடவை ஆட்டிறைச்சியை உண்டுவிட்டு பெரிதும் வருந்தினாராம். தனது வயிற்றிலிருந்து ஒரு
ஆடு கத்துவது போன்ற உணர்வால் அவர் துடிதுடித்திருக்கிறார்.
வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த
ஆட்டின் ஓலத்தை கேட்டுவிட்டு, “ யார்.. இந்த ஆட்டை
இங்கே கட்டி வைத்திருப்பது..? “ என்று அம்மாவிடம்
கேட்டேன்.
“ நாளை அப்பாவுக்கு எட்டுச்செலவு. படையல் சமையலுக்காக தம்பி வாங்கி வந்து கட்டியிருக்கிறான் “ என்று அம்மா சொன்னதும், எனக்கு கோபம் பொத்துக்கொண்டு
வந்துவிட்டது.
வேலையால் வந்து, உடையும் மாற்றாமல் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.
நேரே அக்கா வீட்டுக்குச் சென்று முறையிட்டேன்.
“ பாவம் அந்த ஆடு. ஆட்டிறைச்சி இல்லாமல்
எங்கட ஆட்களுக்கு சாப்பிட முடியாதா..? “ என்று
கத்தினேன்.
அக்கா என்னை சமாதானப்படுத்தினார்.
அப்போது அக்காவுக்கு ஒரு கதை சொன்னேன்.
நீங்களும் அதனை இப்போது கேளுங்கள்.
ஒரு ஊரில் ஒருவன் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்யப்போனான். அவனது தெரிவு ரயில் தண்டவாளத்தில் படுத்து, தற்கொலை செய்வதுதான்.
அவ்வாறே ஒரு ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தான். அவனுடன் ஒரு சிறிய பொதி
இருந்தது.
அந்த வழியால் வந்த ஒருவர், “ என்னப்பா… இப்படி தண்டவாளத்தில் படுத்திருக்கிறாயே
….? இப்போது ரயில் வரும் நேரம். எழுந்திரு
“ என்று அதட்டி எழுப்பினார்.
“ தெரிந்துதான் படுத்திருக்கின்றேன். சும்மா போய்யா… நான் தற்கொலை செய்யப்போகிறேன். “ என்றான் அவன்.
“ அது சரி… அது என்ன கையில் ஒரு பொதி
வைத்திருக்கிறாய்…? “ வழிப்போக்கர் கேட்டார்.
“ சிலவேளை ரயில் தாமதமாக வரலாம். எனக்கு
பசியெடுத்தால் என்ன செய்வது..? அதுதான் இடியப்பம் எடுத்து வந்திருக்கின்றேன் “ என்றானாம்.
“ அதுபோலத்தான் நாளை சாகப்போகின்ற அந்த ஆட்டுக்கு இன்று
இலை குலை வெட்டி வைத்திருக்கிறான் எனது தம்பி “ என்றேன்.
எனது இந்தக் கதை வீட்டிலும் உறவினர்கள் மத்தியிலும் அப்போது பேசுபொருளாக இருந்தது.
ஏன் இந்த நனவிடை தோய்தல் என இதனைப் படிக்கும் வாசகர்கள் யோசிக்கலாம்.
அவுஸ்திரேலியாவில் எனது வீட்டில் அசைவ உணவில் குறிப்பாக இறைச்சிவகை மீது எனக்கு பிடித்தமில்லை.
1997 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது, வெள்ளவத்தையில் ஒரு உணவு விடுதியில் எனது
மகனுக்கு மீன் கட்லட் வாங்கிக்கொடுத்தேன். அந்த உணவு
அவனுக்கு ஒவ்வாமையாகிவிட்டது.
புறப்பட்டு விமானத்தில் வரும்போதும் வாந்தி எடுத்துக்கொண்டே வந்தான். சோர்ந்தும் போனான்.
மெல்பன் திரும்பியதும் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சோதனைகள் செய்து சிகிச்சைக்குட்படுத்தியதும் படிப்படியாக தேறி வந்தான். ஆனால், அவனது உணவில் மாற்றங்கள் நேர்ந்துவிட்டது.
சோறு சாப்பிடுவதற்கே வெறுத்தான். கடலுணவுகள் மீதும் அசூசை. எனது மூன்று பிள்ளைகளுக்கும் மூன்று வகையில் சமைக்க
நேர்ந்தது.
பெரும்பாலும் வீடு தாவர பட்சினியாகியது. அவ்வப்போது மகள்மாருக்கு மீன் – முட்டையுடன்
உணவு தயாரித்துக் கொடுத்தேன். நானாகவே சைவ உணவுகள் சமைக்கவும் கற்றுக்கொண்டேன்.
இட்லி, தோசை, மசாலா தோசை, தானியங்கள்
பல சேர்த்த அடை, கரட் தோசை, எலுமிச்சை சாதம், புளிச்சாதம், தயிர் சாதம், மரக்கறி கட்லட்,
கேசரி, லட்டு… இவ்வாறு விதம் விதமாக சுவையோடு
தயாரித்தேன். எனது சட்ணி, சாம்பார் தூக்கலாக இருப்பதாக பிள்ளைகள் நற்சான்றிதழ் தந்தார்கள்.
எனது தயாரிப்புகளை எனது நண்பர்கள் வீடுகளுக்கும் கொடுத்தேன். யார் வீட்டிலாவது
கர்ப்பிணித்தாய்மார் இருந்தால், இட்லி – தோசை – எலுமிச்சை சாதம் செய்து எடுத்துச்சென்றும் கொடுப்பது வழக்கமாகியது.
இதனை அவதானித்த எனது மெல்பன் நண்பர்
கொர்ணேலியஸ் ஒருநாள் என்னிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
அவருடன் விக்ரோரியா தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், இலங்கை மாணவர் கல்வி
நிதியம் முதலானவற்றில் இணைந்து இயங்கியிருக்கின்றேன். அவர் எனது குடும்ப நண்பர்.
“ தங்களது கத்தோலிக்க சங்கம் ஒரு நிதியுதவி
கலை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. அதற்காக
இந்தியாவிலிருந்து திரைப்படப் பாடகர்கள் ஹரிணி, எஸ். பி.பாலசுப்பிரமணியத்தின்
மகன் எஸ். பி. பி. சரண் ஆகியோரும் இலங்கையிலிருந்து நேசம் தியாகராஜன் மற்றும் சில இசைக்கலைஞர்களும்
பிரபல அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீதும் வருகிறார்கள். பாடகி ஹரிணியைத்தவிர ஏனையோருக்கு
தங்குமிட வசதி செய்துவிட்டோம்.
ஹரிணி ஐயங்கார்
பிராமண சமூகத்தை சேர்ந்தவர். அவர் தனது தந்தையார் ஶ்ரீதரனுடன் வருகிறார். இவர்களை உங்கள் வீட்டில் சில நாட்கள் தங்குவதற்கு
ஏற்பாடு செய்து தரமுடியுமா..? அவர்களுக்கு விடுதிகளில் தங்க விருப்பம் இல்லை “ என்றார் நண்பர் கொர்னேலியஸ்.
நான் பிள்ளைகளிடம் சொன்னதும்
வரவேற்றார்கள். அப்போதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடித்த படையப்பா
திரைப்படம் வெளியாகியிருந்தது.
“ ஹரிணியும் அவரது தந்தையாரும் வந்து சில நாட்கள்
எம்மோடு தங்கவிருப்பதனால், அவர்கள் நிற்கும் வரையில் வீட்டில் மீன், முட்டை கூட இருக்காது
என்று பிள்ளைகளிடம் சொன்னேன். தேவைப்பட்டால் மக்டொனால்ட்ஸ் அழைத்துச்செல்கின்றேன் “ என்றேன்.
பிள்ளைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி. குறிப்பிட்ட நாளில் ஹரிணியும் அவரது தந்தையாரும்
வந்தார்கள். வீடு கலகலப்பாகியது.
நான் ஹரிணியை நேர்காணல்
செய்து உதயம் பத்திரிகையிலும் எழுதினேன். மிகவும்
அமைதியான பிள்ளை. இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஃமான்
இசையில் , சுகாசினி இயக்கி வெளியிட்ட இந்திரா திரைப்படத்தில் நிலாக்காய்கிறது
என்ற பாடலுடன் இவர் அறிமுகமாகும்போது 16 வயதுதான். அதனையடுத்து பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு இவருக்கு வந்திருக்கிறது.
இவர்களை கத்தோலிக்க சங்கம்
அழைத்த காலப்பகுதி கடும் குளிர்காலம். எங்கள்
வீட்டில் ஹீட்டர் 24 மணிநேரமும் இயங்கியது.
ஹரிணியை ஒத்திகைகளுக்கு அழைத்துச்சென்றார்கள்.
எனது மூத்த மகள் பாரதியும் உடன் சென்றாள். குளிரில் ஒத்திகை செய்ய முடியாது. தனக்கு
ஒத்திகையே அவசியமில்லை என்று சொல்லிவிட்டு பாதியில் வந்துவிட்டார். வந்தவர் எனது பிள்ளைகளுடன்
தொலைக்காட்சியில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார்.
தான் இன்னமும் படையப்பா திரைப்படத்தை பார்க்கவில்லை என்றும் ஹரிணி சொன்னபோது ஆச்சரியப்பட்டோம்.
பிள்ளைகள், “அப்பா படையப்பா
கஸட் வாங்கி வாருங்கள் “ என்றார்கள். ஒருநாள்
இரவு படையப்பா எங்கள் வீட்டு தொலைக்காட்சியில் ஓடினார்.
ஆனால், அதனைப்பார்ப்பதிலும்
ஆர்வம் அற்று அந்தப்பிள்ளை உறங்கச்சென்றுவிட்டது.
ஒரு நாள், “ மெல்பனில் ஏதோ மெல்லிய மலர் இருக்கிறதாமே. வைரமுத்து
சார் இயற்றி அப்படியும் ஒரு பாடலை இந்தியன் படத்திற்காக பாடினேன் அங்கிள். அந்த மலரை
பார்க்க முடியுமா..? “ எனக்கேட்டார் ஹரிணி.
நானும் பிள்ளைகளும் சிரித்தோம்.
“ எதுகை மோனையுடன் எழுதப்பட்டுள்ள பாடல் அது. இங்கே
வீட்டுக்கு வீடு பூந்தோட்டம்தான். “ என்றேன்.
மொனாஷ் பல்கலைக்கழக Robert Blackwood மண்டபத்தில் அரங்கம் நிறைந்த காட்சியாக
அந்த இசை நிகழ்வு நடந்தது. அப்துல்ஹமீத் வழக்கம்போல்
நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.வந்திருந்த கலைஞர்கள் அனைவரும் எதுவித பந்தாவும்
இன்றி இயல்பாக பழகினார்கள்.
நிகழ்ச்சியின்போது நான் முன்வரிசையில்
அமர்ந்திருந்தேன்.
அப்துல்ஹமீத், “ இந்தியன்
திரைப்படத்தில் இடம்பெற்ற மெல்பன் – சிட்னியில் படமாக்கப்பட்ட டெலிபோன் மணிபோல்
சிரிப்பவள் இவளா பாடலைப்பாடிய ஹரிணியுடன் எஸ்.
பி. பி. சரணும் இணைந்து அந்தப்பாடலைப் பாடப்போகிறார்கள் “ எனச்சொன்னதும் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
முன்வரிசையிலிருந்த என்னைப்பார்த்து
புன்னகைத்தவாறு ஹரிணி
அந்தப்பாடலை பாடினார். அவருக்கு எந்தக்குறிப்பும்
தேவைப்படவில்லை. அவர் பாடிய அனைத்துப்பாடல்களும்
அவருக்கு மனப்பாடம். இசை இணையும் தருணமும் அவருக்கு நினைவிலிருந்திருக்கிறது.
ஒத்திகையில் ஆர்வம் காண்பிக்காமல்
அரங்கில் அசத்திய அந்த இளம் பாடகியையும் அவரது தந்தையாரையும் மறுநாள் சிங்கப்பூருக்கு
வழியனுப்பிவைத்தோம். அன்று காலை அப்துல்ஹமீத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிங்கப்பூர் நிகழ்ச்சியை
நினைவுபடுத்தினார்.
அசாத்திய திறமைகொண்ட பாடகி
ஹரிணி மெல்பன் வந்த காலத்தில் எனது குடும்ப நண்பர் ஶ்ரீதரனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அவர் தமது குழந்தைக்கு ஹரிணி
எனப்பெயர் சூட்டினார். அவரது மூத்த மகனுக்கு பெயர் நரேன். இரண்டு குழந்தைகளையும் சங்கீத
வகுப்புகளுக்கு அனுப்பினார். இருவரும் பின்னர்
அரங்கேற்றமும் செய்தனர்.
அரங்கேற்றத்தின் போது உலகப்புகழ்பெற்ற
பாடகி ஜானகி அகலத்திரையில் ( மெய்நிகரில் ) தோன்றி வாழ்த்தினார்.
செல்வி ஹரிணி ஶ்ரீதரன் சிறந்த
பாடகியாக வளர்ந்துள்ளார். பல நிகழ்ச்சிகளில் பாடிவருகிறார். எனது சொல்லவேண்டிய கதைகள் நூல் வெளியீடு
நடந்தபோது தமிழ் வாழ்த்து பாடியவரும் செல்வி
ஹரிணி ஶ்ரீதரன்தான். இவர்களது வீட்டுக்கு நான்
செல்லும்போதெல்லாம் செல்வி ஹரிணியை பாடச்சொல்வேன்.
குறிப்பாக சைவம் திரைப்படத்தில்
வரும் அழகே அழகு பாடல்.
--------
அதே ஆண்டில் எங்கள் வீட்டில் மீண்டும்
சில நாட்கள் அசைவத்திற்கு குட்பை போட நேர்ந்தது.
” கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி
உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக்
களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய
கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய
காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம்
புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”
இந்த வரிகளை சில வாசகர்கள் முன்பே படித்திருப்பீர்கள். இதனை எழுதியவர்தான்
ஞானம் மாத இதழை வெளியிட்டுவரும் மருத்துவர் தி. ஞானசேகரன்.
அவர், தான் எழுதிய அவுஸ்திரேலிய பயணக்கதை
நூலை அந்த வரிகளில்தான் தொடங்கியிருந்தார்.
கைத்தொலைபேசியோ மின்னஞ்சலோ முகநூலோ இல்லாத அக்காலப்பகுதியில் ஒருநாள் சிட்னியிலிருந்து
வந்த தொலைபேசி அழைப்பில் ஞானசேகரனின் குரலைக்கேட்டேன்.
கொழும்பிலிருந்து புறப்படும் முன்னர் நண்பர் மல்லிகை ஜீவாவிடமிருந்து எனது
தொலைபேசி இலக்கத்தை கேட்டு வாங்கி வந்திருக்கிறார். சிட்னியில் அவரது மூத்த மகன் வீட்டிலிருந்து
தொடர்புகொண்டார்.
மெல்பன் வரவிருக்கும் தகவலைச்சொன்னார்.
அழைத்தேன். அவரும் வந்தார். எம்முடன்
நின்றார். அதனால் எங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டியில்
முட்டை, மீன் ஒதுக்கப்பட்டது. சாம்பிராணி தூபம் காண்பிக்காத குறையாக அது பரிசுத்தம் செய்யப்பட்டது.
ஞானசேகரனின் எழுத்துக்களை இலங்கையிலிருக்கும்போது படித்திருந்தாலும், ஒரு நாளும்
அவருடன் பேசியதும் இல்லை அவரை நேரில் பார்த்ததும்
இல்லை. அவரது குரலை 1999 ஆம் ஆண்டில்தான் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவிலிருந்து கேட்கிறேன்.
அவர் சிட்னியிலிருந்து சொகுசு பஸ்ஸில்
புறப்பட்டு வந்தார். நானும் மகனும் அவரை மெல்பன்
நகரிலிருந்து அழைத்து வந்தோம். வீட்டில் இலக்கிய சந்திப்பு நடந்தது. ( அமரர் ) மருத்துவர் பொன். சத்தியநாதன், சட்டத்தரணி
ரவீந்திரன் அண்ணன், எழுத்தாளர்கள் ( அமரர் ) அருண். விஜயராணி, புவனா இராஜரட்ணம், நடேசன்,
பாடும் மீன் ஶ்ரீகந்தராசா ஆகியோர் வந்தனர்.
மெல்பன் பாரதி பள்ளிக்கும் மற்றும் சில இடங்களுக்கும் ஞானசேகரனை நானும் மகனும் அழைத்துச்சென்றோம். காரில் அருகே அமர்ந்தவாறே நான் சொல்லச்சொல்ல குறிப்புகள்
எடுத்துக்கொண்டார்.
அதே ஆண்டு அவர் எழுதிய அவுஸ்திரேலிய பயணக்கதை நூல் வெளியானது.
இந்நூலுக்கு பேராசிரியர் சி. தில்லைநாதன் அணிந்துரையும் நான் முன்னுரையும்
எழுதியிருந்தோம்.
சூரிய உதயக் காட்சியுடன் தமது பயணக்கதையை ஞானசேகரன் தொடக்கியிருந்தார். அன்று அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை,
இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாகி,
அண்மையில் இலங்கை அரசு வழங்கிய அதியுயர்
சாகித்திய ரத்னா விருதும், தமிழ்நாட்டில்
தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுக் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா
தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை வாயிலாக வழங்கப்படும்
கரிகாற்சோழன் விருதையும் ( தமது எரிமலை நாவலுக்காக ) பெற்றிருக்கும் மூத்த படைப்பாளி, ஞானம் இதழ் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment