உலகச் செய்திகள்

பாலி தாக்குதல்கள் குற்றவாளி விடுதலை

ரஷ்யாவின் தாக்குதல்களால் இருளில் மூழ்கியது உக்ரைன்

ரஷ்யாவின் எண்ணெய் மீதான ஐரோப்பிய விலை வரம்பு அமுல்; எண்ணெய் விலை அதிகரிப்பு

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது சரமாரித் தாக்குதல்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; மக்கள் வெளியேற்றம்


பாலி தாக்குதல்கள் குற்றவாளி விடுதலை

2002ஆம் ஆண்டு 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட பாலி குண்டு தாக்குதல்களின் குற்றவாளி உமர் படெக் தனது தண்டனை காலத்தில் பாதியை அனுபவித்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட ஜெமாஹ் இஸ்லாமியா அமைப்பின் உறுப்பினரான படெக்கிற்கு 2012இல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குண்டை தயாரிக்க உதவியது நிரூபிக்கப்பட்டது. சிறையின் சீர்திருத்தப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் பயங்கரவாதப் போக்கைக் கைவிடும்படி மற்றவர்களைத் தூண்டுவதில் முக்கியப் பங்காற்றினார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தொடர்ந்து சுராபாயா நகர உச்சப் பாதுகாப்புச் சிறைப் பிரிவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்கு அவுஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ரஷ்யாவின் தாக்குதல்களால் இருளில் மூழ்கியது உக்ரைன்

புதிதாக திருத்தப்பட்ட உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை சரமாரி தாக்குதல்களை நடத்திய நிலையில் அங்கு அவசர மின் தடைகள் ஏற்பட்டுள்ளன.

உறையும் குளிருக்கு மத்தியில் உக்ரைனின் சில பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளால் அந்தப் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அந்நாட்டு மின் கட்டமைப்புகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது.

இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, 70 ஏவுகணைகள் விழுந்ததாகவும் தெரிவித்தார். ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல்களால் மின் கட்டமைப்பின் பாதி அளவு சேதமடைந்துள்ளது. நாட்டில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கு கீழ் பதிவாகும் நிலையில் அந்நாட்டு மக்கள் கடும் குளிர் மற்றும் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தாழ் வெப்பநிலையால் உயிரிழக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ரஷ்யாவின் எண்ணெய் மீதான ஐரோப்பிய விலை வரம்பு அமுல்; எண்ணெய் விலை அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா இடையே இணக்கம் எட்டப்பட்ட கடல் வழியாக வரும் ரஷ்ய எண்ணெய் மீதான விலை வரம்பு நேற்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த விலை வரம்பின்படி ரஷ்ய மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 60 டொலருக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விநியோகத்தை உறுதி செய்து உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நிதித் திறனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் உற்பத்தியை குறைக்க வேண்டி ஏற்பட்டாலும் இந்த நடவடிக்கைக்கு கட்டுப்படப்போவதில்லை என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

கடல் வழியாக வரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மற்றும் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பிரிட்டனின் அதனை ஒத்த வாக்குறுதிகளுக்கு மத்தியிலேயே இந்த விலை வரம்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய டாங்கர்கள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் கடன் நிறுவனங்களை பயன்படுத்தி மூன்றாம் தரப்பு நாடு ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்று 60 டொலர் அல்லது அதற்கு குறைவான விலைக்கே விற்க முடியும்.

இந்நிலையில் உலகின் முக்கிய கப்பல் வர்த்தகம் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் ஜி7 நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குவதால், ரஷ்யாவுக்கு அதிக விலைக்கு எண்ணெய் விற்பது கடிமாகக் கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையை செயற்படுத்தாத நாடுகள் இந்த விலைவரம்பை விடவும் அதிக விலைக்கு ரஷ்ய எண்ணெயை வாங்க முடியும் என்றபோதும் அதற்கு மேற்கத்திய நாடுகளின் சேவைகளை பயன்படுத்த முடியாது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ள ரஷ்யா, இந்த விலை வரம்பை ஏற்கப்போவதில்லை என்றும் அந்தக் கட்டுப்பாட்டின் கீழ் எண்ணெய் விற்கப்போவதில்லை என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறி இருந்தது.

மேற்கத்திய உலகின் இந்த நடவடிக்கை சுதந்திர வர்த்தகத்தின் மீது முழுமையாக தலையிடுவதாக இருப்பதோடு அது விநியோகத் தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்தி உலகளாவிய வலுசக்தி சந்தைகளை நிலைகுலையச் செய்யும் என்று ரஷ்ய பிரதி பிரதமர் அலெக்சாண்டர் நொவக் எச்சரித்துள்ளார்.

இந்த விலை வரம்பை அடுத்து எண்ணெய் விலையும் நேற்று அதிகரித்துள்ளது. ப்ரென்ட் க்ரூட் எண்ணெய் விலை 0.6 வீதம் அதிகரித்து பீப்பான் ஒன்று 86 டொலருக்கு மேல் பதிவானது.

எனினும் எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய ரஷ்யாவும் உள்ளடங்கிய எண்ணெய் உற்பத்திய நாடுகளில் ஒபெக் பிளஸ் குழு தீர்மானித்துள்ளது.   நன்றி தினகரன் 






இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது சரமாரித் தாக்குதல்

தெற்கு இஸ்ரேலில் ரொக்கெட் குண்டு விழுந்ததை அடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்குக் கரையில் கடந்த ஒரு வாரத்தில் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட பதற்றமான சூழலிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று (04) அதிகாலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் ஆயுத உற்பத்தித் தளம் மற்றும் ஹமாஸுக்கு சொந்தமான நிலத்தடி சுரங்கம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் முதல் முறையாக இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த ரொக்கெட் குண்டு இஸ்ரேலை பிரிக்கும் வேலிக்கு அருகில் திறந்த வெளிப் பகுதியில் விழுந்துள்ளது.

இஸ்ரேலிய படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் 23 வயது அம்மார் முப்லஹ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டது வீடியோவில் பதிவாகி கோபத்தை தூண்டிய நிலையிலேயே ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான காசா. மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இந்த ஆண்டில் குறைந்தது 207 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் அதிக மக்கள் வசிக்கும் ஜாவா தீவில் உள்ள மிக உயரமான எரிமலை வெடித்து பாரிய அளவில் சாம்பலை வெளியேற்றிவரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.

எரிமலையைச் சூழ வசிக்கும் மக்கள் 8 கி.மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் எந்த செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் என்றும் எரிமலைக் குழும்பு வடியும் அச்சுறுத்தல் இருப்பதால் ஆற்று கரையோரங்களில் இருந்து விலகி இருக்கும்படியும் இந்தோனேசிய அனர்த்த தணிப்பு நிறுவனம் மக்களை எச்சரித்துள்ளது.

அந்த நிறுவனம் உயர் விழிப்பு நிலையை அறிவித்துள்ளது.

‘காலை முதல் பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது எரிமலை சாம்பல் பொழிய ஆரம்பித்திருப்பதோடு அது மலையை முழுமையாக மறைத்துள்ளது’ என்று உள்ளூர் தன்னார்வலரான பயு டனி அல்பியன்யோ ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்கள் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்த எரிமலை திடீரென்று வெடித்ததில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதோடு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் அயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்கள் சோதமடைந்தன.   நன்றி தினகரன் 







No comments: