புகுந்த வீடு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1972ம் வருடம் நட்சத்திர நடிகர்களான எம் ஜி ஆர்,சிவாஜியின் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று கொண்டிருந்த கால கட்டத்தில் சந்தடி சாக்கில் வெளியாகி வெற்றி பெற்ற சின்ன பஜட் படம்தான் புகுந்த வீடு.இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்,மாற்று சம்பந்தம்,அதனால் ஏற்படும் சிக்கல்கள் இவற்றை அடிப்படையாக வைத்து படத்தின் கதையை எழுதி அவற்றுக்கான வசனங்களையும் அமைத்திருந்தார் கல்லூரி பேராசிரியர் ஏ எஸ் பிரகாசம்.



சுப்ரமணிய ரெட்டியார் என்ற புதுத் தயாரிப்பாளர் படத்தை தயாரித்திருந்தார்.படத்தில் கதாநாயகனில் ஒருவராக சிவகுமார் நடிப்பதாக ஆரம்பத்தில் இருந்த போதும் பின்னர் அந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடித்தார்.உண்மையில் அந்த வேடத்துக்கு அவரே பொருத்தமாகவும் திகழ்ந்தார்.அலட்சியம்,தெனாவெட்
டு,காதல் என்று கலந்து தன் நடிப்பை வழங்கினார் அவர்.அவருடன் ஜோடி சேர்ந்தவர் லக்ஷ்மி.72ம் ஆண்டு இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்தன.ஆனால் ஒன்றிலும் குறை வைக்காமல் நடித்திருந்தார்.இந்த படமும் அவர் நடிப்பில் மிளிர்ந்தது.நீண்ட காலத்தின் பின் நடிகையர் திலகம் சாவித்ரி அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.நடிப்பிலும்,உருவத்திலும் முதுமை தெரிந்தது.

பல படங்களில் சகோதரிக்கு அண்ணனாக வந்து உருகும் ஏவி எம்

ராஜன் இதிலும் அதையே செய்கிறார்.அவருக்கு ஜோடி சந்திரகலா.சோ,மனோரமா இருவரும் சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.இவர்களுடன் வி எஸ் ராகவன்,பழம் பெரும் நடிகை அங்கமுத்து ஆகியோரும் நடித்திருந்தனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அண்ணனின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் லலிதா சுத்தம் சுகாதாரம் என்று கூறி நோயாளர்களை வெறுக்கிறாள்.இளம் பாடகனாக சுந்தரத்தின் குரலில் மயங்கி அவனையே அண்ணனின் அனுமதியோடு மணக்கிறாள்.அதே சமயம் சுந்தரத்தின் தங்கையை லலிதாவின் அண்ணனும் மணக்கிறான்.ஆனால் சுந்தரத்தின் தாய் நோயாளி என்று அறிந்ததும் அவளை அவமானப் படுத்துகிறாள் லலிதா.இதனால் சுந்தரம் லலிதா உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள்.லலிதா புகுந்த வீட்டில் இருந்து அண்ணனின் வீட்டுக்கு திரும்புகிறாள்.வந்த கையோடு தனது பிடிவாதத்தால் தன் அண்ணியையும் அண்ணணிடம் இருந்து பிரித்து விடுகிறாள்.பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைந்தனவா என்பதே மீதி கதை.

படத்துக்கு பலமாக அமைந்தது லட்சுமியின் நடிப்பும்,ஏ எஸ் பிரகாசத்தின் வசனமுமாகும். இந்த நெஞ்சு வலி நம் நாட்டு பெண்கள் கருவில் உருவாகி கட்டையில் போகும் வரை இருக்கும் பந்த பாசத்தினால் உண்டான வலி,இது ஒரு உளுத்து போன மூங்கில் பந்தலுக்கு ஆகாது பாடைக்கும் உதவாது,நோயும் நொடியும் மனுசனுக்கு சொல்லிக்கிட்டு வாரதில்லை அழகும் இளமையும் நிலைத்து நிக்கிறதில்லை போன்ற பிரகாசத்தின் வசனங்கள் பிரகாசமாக இருந்தன. அதே போல் நோயாளர் மீதான அலர்ஜியை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கிய கதையின் கருவும் வித்தியாசமானது.


லலிதா பாத்திரத்தை நன்றாக கையாண்டிருந்தார் லட்சுமி.ஏவி எம் ராஜனுடனும்,ரவிச்சந்திரனுடனும் வாதாடும் போதெல்லாம் அவரின் திறமை வெளிப்பட்டது.சுந்தரம் வேடத்தில் ரவிச்சந்திரன் நடித்தார்.கதா பாத்திரத்துக்கு பொருந்தும்படியே அவர் நடிப்பும் அமைத்தது. சந்திரகலா , ராஜன் இருவரும் நிதானமாக நடித்தனர். சோ மனோரமா இருவரும் படம் முழுதும் வருகிறார்கள்.

படத்தில் நடித்தவர்கள் எண்ணிக்கை குறைவு அதனால் ஒரு சிலரையே பார்க்கும் வண்ணம் இருந்தது.

படத்துக்கு மியூசிக் சங்கர் கணேஷ்.நீண்ட காலத்துக்கு பிறகு ஏ எம்

ராஜா,ஜிக்கியின் குரலை கேட்கும் வாய்ப்பை தந்தார்கள்.இருவர் குரலில் ஒலித்த செந்தாமரையே செந்தேன் இதழே பாடல் சூப்பர்.மாடி வீடு பொண்ணு மீனா,நான் உன்னை தேடுகிறேன் பாடல்கள் இனிமை என்றால் கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே பாடல் அர்த்தம் மிகுந்தது.பாடல்கள் வாலி.

படத்தை புது இயக்குனர் பட்டு இயக்கினார்.புது தயாரிப்பாளர் சுப்ரமணிய ரெட்டியார் படத்தை தயாரித்தார்.கதை வசனம் எழுதிய ஏ எஸ் பிரகாசத்துக்கு விலாசம் தேடித் தந்த படமாக புகுந்த வீடு அமைந்தது.

No comments: