இலங்கைச் செய்திகள்

மாகாண, மாவட்டங்களிடையே மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போக்குவரத்து உடன் இடைநிறுத்தம்

சீனாவுக்கு எதிரான சாணக்கியனின் கருத்துக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சியில் 165 மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாகின

புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வர்

பெற்றோர் போதைக்கு அடிமை; 12,000 குழந்தைகள் அநாதை இல்லங்களில் வாழ்க்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்


மாகாண, மாவட்டங்களிடையே மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போக்குவரத்து உடன் இடைநிறுத்தம்


கிளிநொச்சி பிரதேசத்தில் குளிர் காரணமாக உயிருக்கு போராடும் கால்நடைகளை காப்பாற்றுவதற்காக, மக்கள் தீ மூட்டி அவற்றுக்கு அருகில் வைத்துள்ளனர்.

- வடக்கில் 358 மாடுகள்; 191 ஆடுகள் உயிரிழப்பு
- கிழக்கில் 444 மாடுகள்; 34 எருமைகள்; 65 ஆடுகள் பலி
- கால்நடைகளின் மாதிரிகளை பெற்று ஆய்வு

பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு, மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான  மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் நேற்றும், நேற்றுமுன்தினமும் (08, 09) மாடுகள், எருமைகள், ஆடுகள் திடீரென உயிரிழந்ததைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை பொலிஸாரும், தொடர்புடைய அதிகாரிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில், வட மாகாணத்தில் 358 மாடுகளும் 191 ஆடுகளும் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும் 34 எருமைகளும் 65 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வடக்கு, கிழக்கு கால்நடை வைத்தியர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று கால்நடைகளுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்கி வருவதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட கால்நடை புலனாய்வு நிலையங்கள் ஊடாக கால்நடை புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், நாட்டில் தற்போது நிலவுகின்ற கடும் குளிர் காலநிலையினால் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் இந்த விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று அவர்கள் அனுமானித்துள்ளதாகவும்  ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தலையிட்டு ஆய்வுகூட சோதனைகளை இன்று (10) ஆரம்பித்ததுடன், அதன்படி, பேராதனை தலைமையகத்தின் கால்நடை விசாரணை அதிகாரிகள் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து இறந்த விலங்குகளின் மாதிரிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால்நடை மாதிரிகள் இன்றும் நாளையும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வக விசாரணைக்கு உட்படுத்தப்படும் என திருமதி ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

ஆயினும், இந்த ஆய்வு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வரை மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.    நன்றி தினகரன் 

சீனாவுக்கு எதிரான சாணக்கியனின் கருத்துக்கு எதிராக போராட்டம்

'நவ ஜனதா பெரமுன' அமைப்பு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் 'கோ ஹோம் சீனா' என சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததை கண்டித்தும் சீனாவிற்கு ஆதரவு தெரிவித்தும் 'நவ ஜனதா பெரமுன' அமைப்பினர் நேற்று கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நவ ஜனதா பெரமுன அமைப்பினர் தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்தனர்.

சாணக்கியன் எம்பி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்புத் துறைமுக நகரத்தையும் தனதாக்கியுள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது? சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.

சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகின்றார்கள். அவ்வாறாயின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாகச் செயற்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது. இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்குச் சார்பாகச் செயற்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்கள்.

இதனைப் பைத்தியக்காரத்தனமான பேச்சு என்று குறிப்பிட வேண்டும். சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மதச் சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள்? சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்சவினதும், அவரது குடும்பத்தினரதுதும் நண்பராகவே சீனா உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.   நன்றி தினகரன் 


கிளிநொச்சியில் 165 மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாகின

இறப்புகள் மேலும் அதிகரிக்கலாம்

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் கடும் காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் சுமார் 165 க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும்,பூநகரியில் 05 மாடுகளுமாக 165 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்தததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும். நேற்று மதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்த அவர், இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை ஏனைய கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு பண்ணையாளர் தீயிட்டு சூழலை வெப்பமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர் - நன்றி தினகரன் 

புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வர்

தர்மலிங்கம் சித்தார்த்தன் MP தெரிவிப்பு

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமானால் இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு  எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, அரசியல் மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு,முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகள் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளாத குறைபாடு காணப்படுகிறது. தெற்கில் உள்ள அரசியல் கட்சிகளே முன்னணியில் செயற்படுவதுடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 


பெற்றோர் போதைக்கு அடிமை; 12,000 குழந்தைகள் அநாதை இல்லங்களில் வாழ்க்கை

பெற்றோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களென்பதால் இலங்கையில் சுமார் 12,000 குழந்தைகள் தற்போது அனாதை இல்லங்களில் கைவிடப்படுவதாக, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெற்றோர் போதைக்கு அடிமையானவர்களென்பதால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பாட்டி அல்லது தாத்தாவுடன் மருத்துவமனைகளுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை விட பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான அனைத்து பழக்கங்களும் மிகவும் ஆபத்தானது, இந்த சூழ்நிலைக்கு எதிராக மக்கள் அனைத்து பிரசாரங்களையும் தொடங்க வேண்டும்.

ஐஸ் போதைப்பொருள் பாடசாலை மாணவர்களிடையேயும் இளம் பராயத்தினர் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது. மாணவர் சமுதாயத்தினரிடையே போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மாணவர்களை போதைக்கு அடிமையாக்குவது தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு நவீன போக்காக (ட்ரெண்டிங்) மாறியுள்ளது.

“இன்றைய நாட்களில் பாடசாலை மாணவ மாணவிகளை பிக் மேட்ச்கள் மூலம் பீர் குடிக்க வைப்பது அதிகரித்துள்ளது. இறுதியில் அவர்கள் ஏதோ ஒரு வகையில் போதைக்கு அடிமையாகி விட்டனர். அவர்களில் சிலர் ஐஸ் பாவனையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு போதைப்பொருளின் ஒரு முறை உபயோகித்தாலும் சிறுவர்கள் நிரந்தரமாக அடிமையாகி விடுகிறார்கள்.”

“போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கிராமங்களில் இருந்து அனைத்து பிரசாரங்களும் போராட்டங்களும் தொடங்கப்பட வேண்டும். இந்த போதைப்பொருள் அச்சுறுத்தல் மேலும் பரவினால், நாட்டின் பொறுப்புகளை ஏற்க அடுத்த தலைமுறையே இருக்காது.

பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு வெளியே சோதனை தொடங்க வேண்டும். பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளும் தடுக்கப்பட வேண்டு.

மதுபானம் மற்றும் சிகரெட் போன்ற போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் நபர்கள் அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் அவற்றை வாங்குபவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 


முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்

- இவ்வருடத்தில் இதுவரை 500 சம்பவங்கள் பதிவு
- புதுக்குடியிருப்பில் 160 இற்கும் அதிகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு குடும்ப வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். விஜயந்தி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்த பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். விஜயந்தி  இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் சிவில் பெண்கள் அமைப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு 500 இற்கு மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பிரதேச செயலகங்களில் பதிவாகியுள்ளது.

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் கிராம மட்டங்களில் வேலை செய்வதால் அவர்கள் ஊடாக நேரடியாக முறைப்பாடு வந்து கொண்டிருக்கின்றது

பிரதேச செயலகம் ஊடான உளவளத்துணை மூலம் சில பிரச்சினைகளை நேரடியாக தீர்த்துக்கொண்டிருக்கின்றோம் தீர்க்கமுடியாத சில முறைப்பாடுகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கின்றோம்.

இந்த ஆண்டு (2022) 160 இற்கு மேற்பட்ட குடும்ப வன்முறை முறைப்பாடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பதிவாகியுள்ளது. இன்னும் எத்தனையே சம்பவங்கள் வெளியில் வராமல் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்கள் பொலீஸ் நிலையம் செல்வதை விட பிரதேச செயலகங்களுக்கு வருவது அதிகரித்து செல்கின்றது. இது பாரிய சவாலாக இருக்கின்றது.

இதனை விட இளவயது திருமணம் அதிகளவில் பதிவாகிவருகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த ஆண்டு இதுவரை இது தொடர்பில் 20 முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இளவயது கர்ப்பம், இளவயது கருக்கலைப்பு என்பன அதிகமாக பதிவாகிவருகின்றது.

இதனை குறைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் அதனை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கு இருக்கின்ற பாரிய சவாலாகும்.

தற்போது இதற்கான விழிப்புணர்வினையே மேற்கொண்டு வருகின்றோம் தற்போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட எல்லோரும் பாடசாலைகளில் நேரம்ஒதுக்கி விழிப்புணர்வு செய்துகொண்டிருக்கின்றோம். பாடசாலை செல்லாமல் நிறைய பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் பதிவாக வழியமைக்கும்.

இனிவரும் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் சிறுவர்கள், துஷ்பிரயோக வன்முறைகளை குறைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம்.

இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவானால் கிராமங்களின் பெயரினை தெரிவிக்காமல் மாவட்டம் அல்லது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இடத்தில் நடைபெற்றது என்று இதனை ஊடகங்கள் தெரியப்படுத்தலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கும் தொடர் நடவடிக்கைக்கும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)      நன்றி தினகரன் 
No comments: