வாசகர் முற்றம் : தீவிர வாசகனாக வளர்ந்து, வானொலி ஊடகவியலாளனாகியிருக்கும் நியூசிலாந்து சிற்சபேசன் ஈழத்து மு. தளையசிங்கமும் இந்திய ஆர்.கே. நாராயணனும் இவரது ஆதர்சங்கள் ! முருகபூபதி


பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி,  ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும்  தேர்ந்த இலக்கிய வாசகர்  சிற்சபேசன் அவர்களை எமது  வாசகர் முற்றத்திற்கு  அழைத்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்,  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில்  தொடர்ந்தவர்.

யாழ்ப்பாணத்திலும்  தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகக்


கல்விவரையான காலகட்டத்திலே வாழ்ந்தமையைப்  பெரும் பாக்கியமாகவே கருதுகின்றார்.

 “ யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம்  “ என்பார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ் விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல் பலப்படுத்தியதாக நம்புகின்றார்.  அந்தவாய்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோரை நன்றியோடு நினைவுகூர்கின்றார் சிற்சபேசன்.

தற்போது நியூசிலாந்து அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார். 

நாம் தொடர்ந்து பதிவேற்றிவரும் வாசகர் முற்றம் பகுதிக்காக சிற்சபேசனை தொடர்புகொண்டோம்.

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு நாம் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தபோது, இவரும் அதில் இணைந்து கருத்தரங்குகளில் பங்கேற்றார்.

மெல்பனில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த புதுவை ரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் நூல் வெளியீட்டில், இவரும் உரையாற்றினார்.

கொழும்பில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்னர்,  யாழ். நாவலர் மண்டபத்தில் நடத்திய தகவல் அமர்வு சந்திப்பில் இவரும் கலந்துகொண்டார்.  அவுஸ்திரேலியாவில் நாம் மேற்கொள்ளும் தமிழ்  எழுத்தாளர் விழா இயக்கம் பற்றி, தனது கருத்துரையில் சிற்சபேசன் குறிப்பிட்டார்.

இனிய குரல்வளம் மிக்கவர். அதனால் அவுஸ்திரேலியா  தமிழ் வானொலிகளும் இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன.      

     


தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் கற்று  பட்டதாரியான சிற்சபேசன், பின்னர்  பிரித்தானியாவில் ஆள்வினையியலில்                  ( Management ) முதுமானிப் பட்டத்தையும்  (எம்.பி.ஏ) பெற்றவர்.  

தமிழ்நாடு விகடன் குழுமத்தின் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சி, ஹிந்து குழுமத்தில் ஆங்கில ஊடகப் பயிற்சி மற்றும் பிபிசி தமிழோசை சங்கரண்ணாவின் வழிப்படுத்தல் என்பவை தன்னுடைய அத்திவாரங்கள் எனப் பெருமையோடு நினைவு கூர்கின்றார்.

ஊடகப் பணிக்கு வழிகாட்டியாகத் தந்தையாரையும், மொழிவளத்துக்குத்   தாயாரையும் போற்றுகின்றார்.

சென்னை, லண்டன், சீசெல்ஸ், இலங்கை என விரிந்த தன்னுடைய ஊடகப் பயணம், தென்துருவத்தில் நிலைகொண்டதாகச் சொல்கின்றார்.

வானொலி மற்றும் ஊடகக் கதவுகளை உள்ளார்ந்த அன்போடு திறந்து வரவேற்ற மெல்பன் 3ZZZ ன் தமிழ் ஓசை வானொலி திரு. ரமேஷ் பாலகிருஷ்ணன் , நியூசிலாந்து தமிழ் மீடியாவின் திரு. கண்ணன் மற்றும் இலங்கை ஊடகவியலாளர் திரு.  பாரதி இராஜநாயகம் ஆகியோரையும்  மனநிறைவோடு நினைவில் நிறுத்தி தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

சிற்சபேசன்  தான் சந்திக்கும் சவால்களை   வாசிப்பு அனுபவத்தினால்,  சமாளித்து வருபவர்.  

சமூகம்சார்ந்த தகவல்களைப் பக்கச்சார்பின்றி பகிர்ந்துக்கொள்கின்ற


ஒரு வாய்ப்பாகவே, தன்னுடைய ஊடகப் பணியைக் கருதுவதாகச்  சொல்கின்றார்.

 “ஏசுவார்கள். எரிப்பார்கள்” என்பது ஈழத்தில் மட்டுமல்ல, தமிழர் வாழும் பிற நிலங்களுக்கும் பொருந்தும் என்கிறார்.

நாம் யோகர் சுவாமியை நினைத்துக்கொள்கின்றோம்.

தென்துருவத்திலே சமூகப்பணியிலே ஈடுபடுகின்றபோது, எதிர்கொள்கின்ற சவால்களுக்குப் பஞ்சமில்லை என்கின்றார்.

இளையவர்களை முளையிலேயே கருக்கிவிட, சில மூத்தவர்கள் நடத்திய  அட்டகாசங்களை எதிர்கொண்டமையை, வேதனையோடு நினைத்துப் பார்க்கின்றார்.

“பொய் அழியும். உண்மை அழியாது” என்னும் நம்பிக்கையே கலங்கரை விளக்கமாகி, தன்னைப் போன்றவர்களைத் தனித்துவமாக மிளிரச் செய்ததாகவும் நம்புகின்றார்.   

தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைத் தவிர்த்து, உள்ளதை உள்ளபடியே சொல்லுவது மட்டுமே ஆத்மார்த்தமான வழிக்காட்டியாக அமைவதாக சிற்சபேசன்  கருதுகின்றார்.   

சமூகத்தின்பால் கொண்டுள்ள அசைக்கமுடியாத அக்கறையினாலேயே, தன்னுடைய பணிகளைத்  தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிகின்றது என்றார்.

சிற்சபேசனின் வாசிப்பு அனுபவத்தை கேட்டறிந்தோம். 

 “ இலங்கையில் வெளியாகிய செய்தித்தாள்கள், இந்திய சஞ்சிகைகள் ஊடாகவே சிறுபராயத்தில் வாசிப்பு பழக்கம் வந்தது.

தொடக்கத்தில் வீரகேசரி, தினபதி, ஈழநாடு, அம்புலிமாமா, ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி போன்றவைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.   சிறுபராயத்தில் அது ஒரு பொற்காலம் எனலாம்.  

பாடசாலை இடைவேளை நேரங்களில் அங்கிருக்கும்  நூலகத்திற்கு  சென்று  வாசிப்பதும், பாடசாலை முடிந்தபின்னர் மாலை வேளைகளில் நேரம்கிடைக்கும்போதெல்லாம் அந்தரப்பட்டு வாசிப்பதும் அற்புதமான நினைவுகள்.    “ என்றார்.

தொடக்கத்தில்  யாருடைய நூல்களை பெருவிருப்பத்துடன் வாசித்தீர்கள்..?

தமிழில் மு தளையசிங்கம், பாலகுமாரன், தி ஜானகிராமன், மாலன், சுஜாதா, சிவசங்கரி ஆகியோர்.  ஆங்கிலத்தில் ஆர்.கே நாராயணன் போன்றவர்களே என்னுடைய ஆதர்சமான எழுத்தாளர்கள் என குறிப்பிடுகின்றார்.

அவர்களுடைய எழுத்துக்களே தன்னுடைய வாசிப்புத் தேடலுக்கும்  வழிதுணையாகின என்கிறார்.

சென்னையில்  தன்னுடைய வாசிப்புத் தேடலை வளர்த்துக்கொண்ட சிற்சபேசன், அங்கே ஆண்டுதோறும் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாக்கள் தன்போன்ற வாசகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றார்.

அப்படியான சந்தர்ப்பங்களிலே அதிகளவிலான நூல்களைத் தரிசிக்கலாம். சகாய விலையில் நூல்களைக் கொள்வனவு செய்யலாம். போனஸாக, எழுத்தாளர்களையும் சந்திக்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைப்பதாகச் சொல்கின்றார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும்  அதுவே காலவோட்டத்தில், அவர்களுடைய வீடுகளுக்குப் போய்வருகின்ற நட்பாக மலர்ந்ததாகவும் சொல்கின்றார். எழுத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களை அருகிருந்து தரிசிக்க கிடைத்த வாய்ப்பை பெரும் பேறாகவே கருதும் சிற்சபேசன், ஈழத்து எழுத்தாளர்                    ( அமரர் ) மு.  தளையசிங்கத்தின் மண்ணின் வாசனையுடன் கூடிய எழுத்துக்களும், பாலகுமாரன், தி.ஜானகிராமன் போன்றவர்களின் யதார்த்தத்தை சீவிச் சிங்காரிக்காமல் சொல்லுகின்ற எழுத்துக்களுமே தன்னை அதிகம் கவர்ந்ததாகச் சொல்கின்றார்.

ஆர்.  கே.  நாராயணனின் ஆங்கிலப் படைப்புக்கள் தனித்துவமானவை. தமிழ்ச் சூழலை, அதனுடைய இயல்பு குன்றாமல் ஆங்கிலத்தில் சொல்லுவதே ஆர் கே நாராயணனின் சிறப்பு.  சென்னை புரசைவாக்கம் மற்றும் அதனையொட்டிய பிராமணக் குடியானவர்களின் வாழ்க்கைச் சூழலையே  ஆர் கே நாராயணனின் எழுத்துக்கள் எப்போதுமே நினைவுக்கு கொண்டுவருவன தன்னுடைய சைவச் சாப்பாட்டுப் பழக்கமும், சென்னை புரசைவாக்கத்தில் வாழ்ந்த அனுபவமும் ஆர்.கே. நாராயணனின் எழுத்துடன் ஒன்றி வாழ்கின்ற ஒரு அனுபவத்தை தனக்கு ஏற்படுத்தியதாகவும் சிற்சபேசன்  சொல்கின்றார்.   

ஆர்.கே. நாராயணனின் கதைகளில் வரும் மால்குடி ரயில் நிலையத்தையும் அதன் சுற்றுச்சூழலையும்  மறக்காமல் மனதில் நிலைத்துவைத்திருக்கும் வாசகர்களில் ஒருவர்தான் சிற்சபேசன்.

  அன்றைய வாசிப்பு அனுபவமும் இன்றைய வாசிப்பு அனுபவமும்  எவ்வாறிருக்கிறது எனக்கேட்டோம்.

 “ வாசிப்பு அனுபவத்தில் பெரிய வேறுபாடுகளைச் சொல்ல முடியவில்லை. நூல்களைத் தெரிவு செய்வதில் அனுபவம் துணை செய்கின்றது.  அவ்வளவுதான்.

ஆனால், வேறொரு வேறுபாட்டைச் சொல்வதானால் – அன்று நூல்களைத் தேடவேண்டிய சூழல் காணப்பட்டது.

ஒரு நூலைத் தேடிச் சென்னை மவுண்ட் ரோட்டில் ஹக்கின்பதம்ஸ், திருவல்லிக்கேணியில் பழைய புத்தகக் கடைகள், தி.நகர் என்று அலைந்து திரிந்து வாங்க வேண்டியிருந்தது.

இன்று உள்ளங்கைகளிலே உலகம் சுருங்கிவிட்டது. தேடி அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்திலிருந்தே வேண்டியவற்றை கொள்வனவு செய்துவிடலாம்.

தேடியலைந்து – பலநாள் காத்திருந்து வாங்கிய புத்தகத்தை திறக்கும்போது புத்தகப் பக்கங்களிலேயிருந்து கிடைக்கின்ற பேப்பரின் வாசனை அலாதியானது. அஃது, இன்று கிடைப்பதில்லையே என்று சொல்லும்போது சிற்சபேசனிடமிருந்து ஏக்கம் தொனிக்கிறது .

வாசிப்பதற்கான உங்கள் நூல்களின் தெரிவு எவ்வாறு அமைகிறது…? எனக்கேட்டோம்.

மண்ணின் வாசனையுடன் கூடிய எழுத்துக்களையும், யதார்த்தத்தைச் சீவிச் சிங்காரிக்காமல் சொல்லுகின்ற எழுத்துக்களையுமே அதிகமாகத் தேடிப் படிக்கின்றேன்.

அதற்கு இரண்டு காரணங்கள்.  

ஒன்று -  மண்ணுடனான தொடர்பே வாழ்வின் வேராகும் என்னும்  நம்பிக்கை.

வேர்களின் பிடிமானமே, மரத்தை எந்தவொரு சூழலையும் கையாளக்கூடிய பலத்தை வழங்குவன.  

அதுபோன்று  நம்முடைய வாழ்வு யதார்த்தமாக இருப்பதற்கு,  மண்ணின் தொடர்புடைய எழுத்தும், அது வழிப்பட்ட சிந்தனையும்   அவசியமாகின்றது.  

மற்றையது, யதார்த்தமானதும் முன்னோக்கிய பார்வை கொண்டதுமான எழுத்தே வாழ்விற்கு துணையாகின்றது.

அவ்விரண்டு வரைமுறைகளுமே, என்னுடைய வாசிப்பின் தெரிவுகளுக்குத் துணை செய்கின்றன.  

மேலே குறிப்பிட்ட இரண்டு வரைமுறைக்கு உட்படாத நூல்களையும் வாசிப்பதாகச் சொல்கிறார். அதுவே, தன்னுடைய தெரிவுகளை துல்லியமாக அடையாளம் காண உதவுகின்றன.

தீவிர வாசகனாக வளர்ந்து,  வானொலி ஊடகவியலாளனாக தன்னை மேம்படுத்திக்கொண்ட சிற்சபேசன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

---0---

No comments: