உலகச் செய்திகள்

 உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: 25 பேர் பலி

பாகிஸ்தானில் அடைமழை: 937 பேர் பலி; 30 மில்லியன் பேர் பாதிப்பு

இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் குற்றச்சாட்டுப் பதிவு

ஜப்பானிய பிரதிநிதிகள் தாய்வானுக்கு விஜயம்

தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

அவுஸ்திரேலிய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சி



 உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: 25 பேர் பலி

உக்ரைனின் சுதந்திர தினமான கடந்த புதன்கிழமை (24) அந்நாட்டின் கிழக்கில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பயணிகள் ரயில் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டம் ஒன்றின் நடுவில் வைத்து உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி இந்தத் தாக்குதல் பற்றிய தகவலை வெளியிட்டார். இதில் 50 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு நகரான சப்லினில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஐவர் வாகனம் ஒன்றில் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 11 வயது சிறுவன் ஒருவனும் கொல்லப்பட்டுள்ளான்.

இது பற்றி ரஷ்யா உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. பொதுமக்களை இலக்கு வைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அது மறுத்து வருகிறது. அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கெடுக்க ரஷ்யா கொடூரமாக எதையாவது செய்யும் என்று செலென்ஸ்கி முன்கூட்டியே எச்சரித்திருந்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பின் நகரங்களில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுதவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் மற்றொரு ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.   நன்றி தினகரன் 





பாகிஸ்தானில் அடைமழை: 937 பேர் பலி; 30 மில்லியன் பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் தொடரும் அடைமழையாலும் வெள்ளத்தாலும் கடந்த சில வாரங்களாக 30 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் மாதத்திலிருந்து இதுவரை வெள்ளத்திற்கு 937 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1,300 பேர் காயமுற்றனர்.

பாதிக்கப்பட்ட சுமார் 184,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாநிலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு ஒரு மில்லியன் கூடாரங்கள் தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா, பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் நிகழும் பேரிடருக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகப் பாகிஸ்தானியப் பருவநிலைத்துறை அமைச்சர் ஷெரி ரேஹ்மான் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவுவதற்கு நிதியுதவி கேட்டு, அந்நாட்டு அரசாங்கம் உலகளாவிய கோரிக்கையை விடுத்துள்ளது. சேதமடைந்த கட்டமைப்பைச் சீரமைக்கவும் அது நிதியுதவி கேட்டுள்ளது.

கடந்த ஜூன் நடுப்பகுதியில் பருவ மழை ஆரம்பித்தது தொடக்கம் 3000க்கும் அதிகமான கிலோமீற்றர் வீதி, 130 பாலங்கள் மற்றும் 495,000 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தேசிய இடர் முகாமைத்துவ அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

சிந்தில் ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகும் சராசரி மழைவீழ்ச்சியை விடவும் இம்முறை 784 வீத மழைவீழ்ச்சி பதிவாகி இருப்பதோடு பலுகிஸ்தான் மாகாணத்தில் அது 500 வீதமாக உள்ளது. சிந்த் மாகாணத்தில் முப்பத்து மூன்று மாவட்டங்கள் பேரிடர் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 





இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் குற்றச்சாட்டுப் பதிவு

கைதாவதை தடுக்க ஆதரவாளர்கள் திரண்டனர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அந்நாட்டு பொலிஸார் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் நீதித் துறை தனது நெருங்கிய உதவியாளரை தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாக இம்ரான் கான் குற்றம்சாட்டியதை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸ் மற்றும் நீதிபதியை அச்சுறுத்தியதாகவே இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் வீட்டுக்கு வெளியில் கூடியுள்ள ஆதரவாளர்கள், அவர் கைது செய்யப்படுவதற்கு எதிராக கோசங்களை எழுப்பிவரும் நிலையில் நாட்டில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடக்கம், இம்ரான் கான் அரசு மற்றும் இராணுவத்தை விமர்சித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை ஆற்றிய உரை ஒன்றில் இம்ரான் கான் இஸ்லாமாபாத் பொலிஸ் பிரதானி மற்றும் பெண் நீதிபதி ஒருவரை கண்டித்தார். தமது கட்சி சகாவான ஷஹ்பாஸ் கில்லை தடுத்து வைத்து தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கண்டித்தார்.

இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை அடுத்தே இஸ்லாமாபாத்தில் இருக்கும் இம்ரான் கான் வீட்டுக்கு வெளியில் நூற்றுக்கணக்கான அவரது ஆதவாளர்கள் திரண்டனர். இம்ரான் கானை கைது செய்ய முயன்றால் தலைநகரை முடக்குவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். சம்பவ இடத்தில் பொலிஸார் நிறுத்தப்பட்டபோதும் முன்னாள் பிரதமரை கைது செய்ய திட்டமில்லை என்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசு மற்றும் இம்ரான் கானுக்கு இடையிலான முறுகல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே இந்த விசாரணை அரம்பிக்கப்பட்டுள்ளது.

தான் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் புதிய தேர்தலை நடத்துமாறு கோரியும், அரசு மற்றும் இராணுவத்தை விமர்சித்தும் இம்ரான் கான் ஆவேசமான உரைகளை நிகழ்த்தி வருகிறார்.

இம்ரான் கான் அரச நிறுவனங்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி, அவரது நேரடி உரைகளை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி சேவைகளுக்கு பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை அதிகாரசபை தடை விதித்துள்ளது.   நன்றி தினகரன் 




ஜப்பானிய பிரதிநிதிகள் தாய்வானுக்கு விஜயம்

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் அரசியல் பிரதிநிதிகள் கடந்த 22ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் பயணமொன்றை தாய்வானுக்கு மேற்கொண்டுள்ளனர்.

ஜப்பானில் இருந்து வருகை தந்துள்ள அரசியல் பிரதிநிதிகளை தாய்வான் வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது. ஜப்பான் ஆர்.ஒ.சி ஆலோசனைக்கழு தலைவரும் லிபரல் ஜனநாயகக் கட்சி அங்கத்தவருமான புருயா கேய்ஜி, செயலாளர் நாயகம் கிஹாரா மினொரு ஆகிய இரு அரசியல் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளதாக தாய்வான் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒசாவின் தவணைக் காலம் பற்றி சட்ட சவால் விடுக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.

பிரயுத் மேலதிக காலம் பிரதமர் பதவியில் நீடிப்பதாக தாய்லாந்து எதிர்க் கட்சிகள் வழக்குத் தொடுத்துள்ளன.

தாய்லாந்து அரசியலமைப்பின்படி பிரதமர் பதவியில் அதிகபட்சம் எட்டு ஆண்டுகளே இருக்க முடியும். 2014 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சியை கைப்பற்றிய பிரயுத் சான் ஒசா பின்னர் 2019ஆம் ஆண்டு இராணுவ அரசின் கீழ் மீண்டும் பதவிக்கு வந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த வழக்கை கருத்தில் கொண்டு பிரயுத் பிரதமர் பதவியில் நீடிப்பதை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான எதிர்ப்பு வலுத்து வருவதோடு, கடந்த மாதம் அவர் தமக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுபிலும் தப்பினார்.

தலைநகர் பாங்கொக்கில் பாராளுமன்ற கட்டடத்திற்கு வெளியே நேற்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை பதவி விலகுமாறு கோரினர்.

இதற்கிடையே 77 வயதான துணைப் பிரதமர் பிராவிட் வோங்சுவான் தாய்லாந்தின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று நம்பப்படுகிறது.    நன்றி தினகரன் 





அவுஸ்திரேலிய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சி

அவுஸ்திரேலிய ரோயல் கடற்படையுடன் இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சுமேதா கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளது. பலம் வாய்ந்த கடற்படைகளுக்கிடையிலான தொடர்புகளையும் இயங்கு நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இக்கப்பல் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திர தினத்தின் நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்கப்பலில், இந்திய–அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்திய கொடியேற்ற வைபவமும் இடம்பெற்றது.

தென் கிழக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இக்கடற்படைக் கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்களில் ஒன்றாகும். சுதந்திரமான முறையில் பல்வகைமை ஒத்துழைப்புக்களை கடல் சார் ரோந்து நடவடிக்கைகளுக்கு இக்கப்பல் நல்கி வருகிறது.

பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இந்து– பசுபிக் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத்தன்மையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு சுமேதா கப்பல் இக்கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.   நன்றி தினகரன் 









No comments: