ஏன் பெண்ணென்று... குறுநாவல் (6/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 6


ஒரு சிறு குச்சுவீடு. அங்கு ஏற்கனவே படுத்த படுக்கையாகிக் கிடக்கும் டேவிட்டின் தாயார். அவளைப் பராமரிப்பதற்காக தினமும் அங்கு வந்து போன பெண், பத்மினி போன மறுநாளில் இருந்து வருவதை நிறுத்திவிட்டாள்.

டேவிட்டின் வயது முதிர்ந்த தாயார் எழும்பி நடக்க முடியாதவராக இருந்தார். அவருக்கு உணவு மருந்து மாத்திரைகள் கொடுத்து, மலம் கழுவி, உடுபுடவைகள் கழுவிப் பராமரித்தாள் பத்மினி. அடிக்கடி சிறுநீர் வாடை வீசும் துணிகளைத் துவைப்பதும், உலரவிட்டு மடித்து வைப்பதிலும் பத்மினியின் காலம் கழிந்தது. டேவிட் தனது கடந்தகாலம் பற்றி எதையுமே கேட்காதது அவளுக்கு அந்தச் சுமையைக் காவும் சக்தியைக் கொடுத்தது.

மாலை வேளைகளில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வருவாள். எப்பொழுதாவது டேவிட்டிற்கு நேரம் இருந்தால், சினிமா பார்ப்பாள். அந்த வேளைகளில் முன்பு வந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவிற்குத் துணையாக வந்து நிற்பார்.

நாள் முழுவதும் கிழவியுடன் வீட்டிற்குள் அடைந்து கிடந்தாள் பத்மினி. அவளுக்கு இப்பொழுது கிழவிதான் பெரும்பாலும் பேச்சுத்துணை. அவள் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப் போக, மினியை சனி பிடித்துக் கொண்டது. உடலின் அழகும் மினுமினுப்பும் குறையத் தொடங்கியது.

டேவிட் அதிகாலையில் எழுந்து வேலைக்குப் போய்விடுவான். நேரம் தாழ்த்தி வருவான். சிலவேளைகளில் வராமலும் போய் விடுவான். தன்னை ஆடைத் தொழிற்சாலையொன்றின் மிகமுக்கியமான சுப்பர்வைஷர் என்று சொல்லிக் கொண்டான். வேலை நிமிர்த்தம் தொலைதூரம் போவதால் சில இரவுகள் போகும் இடங்களில் தங்கிவிடுவான். ஆனால் அடிக்கடி பத்மினியுடன் ரெலிபோனில் செல்லம் கொஞ்சுவான். தாயின் உடல் நலம் விசாரிப்பான்.

பத்மினி கொழும்பு வந்து ஒரு மாதம் இருக்கும். விமலா மீண்டும் நைஜீரியா செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்திருந்தார். போகும் வழியில் பத்மினியைப் பார்த்துச் செல்வதற்காக வந்திருந்தார். வீட்டுக்குள் நுழையும்போது விமலாவின் கணவரின் தலை நிலைச்சட்டகத்தில் அடித்துக் கொண்டது. அந்த அடியின் அகோரத்தினால் அவர் ஒரு கதிரைக்குள் முடங்கினார்.

“எப்பிடி அக்கா பிரயாணம்?”

“அதையேன் கேக்கிறாய்! ஒருபக்கத்திலை அவங்கள், மற்றப்பக்கத்திலை இவங்கள். இடையிலை பாஷும் பூசும்” சினந்தாள் விமலா. தொடர்ந்து,

“என்னடி வீடு இந்த நாறு நாறுது?என்றார் விமலா.

“அக்கா... மெதுவாகக் கதை அக்கா... கிழவிக்கு காது நல்ல கூர்மை. ஆள்தான் நடக்க முடியாது!என்று விமலாவிற்கு ரகசியம் சொன்னாள் பத்மினி.

விமலாவிற்கு, பத்மினி தன்னைவிட பத்து வயது அதிகமானவள் போல தோற்றமளித்தாள். அவள் கண்களில் நீர் முட்டிப் பெருகியது.

விமலா அங்கிருந்த சொற்ப வேளையில், கிழவி பத்மினியைப் பாடாய்ப் படுத்தி விட்டாள். வீட்டிலே மகாராணி போல இருந்த பத்மினி, ஒரு வேலைக்காரி போல இருப்பதைக்கண்டு கவலை கொண்டாள் விமலா. கிழவி கொடுக்கும் தொல்லைகளைச் சகிக்க முடியாமல் ஒரு கட்டத்தில்,

“ஆளை நித்திரைப் பாயிலை வைச்சு அமுக்கிக் கொல்லடிஎன்றாள் விமலா. அப்போதுதான் பத்மினியின் உதட்டில் சிரிப்பைக் கண்டாள்.

விமலாவின் கணவன் சிவா, மூச்சிரைக்கின்றது என்று சொல்லி அடிக்கடி வெளியே காற்றாடப் போய் வந்தான். பத்மினியும் விமலாவும் மனம் விட்டுக் கதைக்கட்டும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.

“கிழவி போகும் மட்டும்தான் உனக்கு இந்தத் தொல்லை. அதுக்குப் பிறகு நீ ராசாத்தி மாதிரி இருப்பாய்நைஜீரியா போவற்கு முன்னால் விமலா சொல்லிச் சென்றாள்.

பத்மினி ஓட்டோ பிடித்து கிழவியை வைத்தியசாலைக்குக் கூட்டிச் செல்வாள். அந்த நாட்களில் டேவிட் லீவு போட்டுவிட்டு நிற்பான். அல்லது முன்பு வேலைக்கு வந்த பெண் வந்து பத்மினிக்கு உதவுவாள்.

இப்படியாக ஆறு மாதங்கள் கழிந்த பத்மினியின் வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வந்தது.

கிழவி படுக்கையில் போய் விட்டாள்.

செத்தவீட்டிற்கு டேவிட் வேலை செய்யுமிடத்தில் இருந்து நாலைந்து பேர்கள் வரையில் வந்திருந்தார்கள். உறவுக்காரர்கள் என்று சொல்லி ஒருவரும் வரவில்லை. கிழவி இறந்த சேதி அறிந்த விமலா,

“இனிமேலதான் உன் வாழ்வில் வசந்தம் வீசும்என்று ரெலிபோனில் வாழ்த்துச் சொன்னாள்.

வசந்தத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு, அன்று இரவு டேவிட் சொன்ன செய்தி உவப்பானதாக இருக்கவில்லை.

“இந்த வீட்டுக்கு இனியும் காசு கொடுத்துக் கொண்டிருப்பது வீண் போலக் கிடக்கு. எங்கையாவது ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போவோமா எண்டு ஜோசிக்கிறன்.

கிழவி இறந்து ஒரு மாதம் இருக்கும். பத்மினியை வத்தளையில் இருக்கும் ஒரு வீட்டிற்குக்  கூட்டிச் சென்றான் டேவிட். சிங்களக்குடும்பம் இருக்கும் அந்த வீட்டின் பின்புறம் – குளியல் அறை, மலசலகூடம், குசினி கொண்ட, ஒரு அறை வீடு இருந்தது.

 

மாளிகை போன்ற வீட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பத்மினி, ஒரு  ஓலைக்குடிசைக்குள் இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந்திருக்க வேண்டும்.

“அம்மாவும் இல்லை. இனி இந்த வீடுதான் உனக்குப் பாதுகாப்பாக இருக்கும்என்று தானே எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொண்டான் டேவிட். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கல்லாக இருந்தாள் பத்மினி.

ஒரு மாதம் கலகலப்பாகக் கழிந்தது வாழ்க்கை. ஒருநாள் வேலைக்குச் சென்ற டேவிட் வீடு திரும்பவில்லை. வீட்டுக்கு வரப் பிந்தும் என்றால் ரெலிபோன் எடுத்துச் சொல்லிவிடுவது அவனது வழமை. அன்று அதுவும் இல்லை. பத்மினி பலமுறை டேவிட்டைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது.

வேலை செய்யும் இடத்திற்கு தொடர்பு கொண்டாள் பத்மினி. டேவிட் அங்கே வேலையை விட்டுப் பல மாதங்கள் ஆகிவிட்டன என்று பதில் தந்தார்கள். பத்மினி மனம் உடைந்து போனாள். சித்தப்பாவிடம் சொன்னபோது அவர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

டேவிட் இன்னுமொரு வேடதாரியாக இருக்குமோ என  பத்மினி கலங்கினாள். அவள் மனம் கொதிப்படைந்திருந்தது.

சில வேடதாரிகள் தமது திருவிளையாடல்களை நிகழ்த்தும்போதே பிடிபட்டுக் கொள்கின்றார்கள். சிலர் காலம் தாழ்த்தியே பிடிபட்டுக் கொள்கின்றார்கள்.

உண்மையில் அவர்களின் திருமணம் – சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்துவிட்டதே  என்ற ஆத்திர அவசரத்தில் நடந்த திருமணம். டேவிட் கூட பத்மினிக்கு எந்தவிதத்திலும் பொருத்தமற்றவன் தான்.

ஒரு பெண் இரண்டாவது தடவையாக திருமணம் செய்யும்போது, அவளை என்னவும் செய்துவிடலாம் என்று பெரும்பாலான ஆண்கள் நினைத்து விடுகின்றனர். டேவிட்டும் அப்படியே நடந்து கொண்டான். தனது அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவை என்பதாலும், புதிதாக ஒரு பெண்ணைச் சுகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்திருக்கின்றது.

பத்மினி சிலகாலம் வத்தளையில் இருந்துகொண்டு டேவிட்டைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டாள். அவளின் சித்தப்பாவும் முயற்சி செய்து பார்த்தார். முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சில நாட்களாக டேவிட் வேலை செய்த இடத்திற்குச் சென்று, மறைந்திருந்து உளவு பார்த்தாள் பத்மினி. காலை மாலை என்று நாள் பூராக அங்கேயே காத்திருந்தாள். ஒருநாள் டேவிட் பிடிபட்டுக் கொண்டான்.

அவனைப் பின் தொடர்ந்து சென்றபோது, பஸ்சினில் இருந்து இறங்கி வெள்ளவத்தை விகாரைலேன் வழியாகச் செல்வதைக் கண்டாள்.  நீர் முட்டிப் பிரவாகமாக ஓடும் வாய்க்காலுக்கு முன்பாக உள்ள வீதி வழியே சென்று, சிறிது தூரம் நடந்து, பின் ஒரு குச்சொழுங்கை வழியாக விரைந்தான். இடையிடையே தன்னை யாராவது நோட்டம் விடுகின்றார்களா என நாலாபுறமும் திரும்பிப் பார்த்தான். பத்மினி இருளினில் மறைந்து அவனது வீட்டைக் கண்டுகொண்டாள். ஒரு பெண் கதவைத் திறந்து அங்குமிங்கம் பார்த்துவிட்டு டேவிட்டை உள்ளே கூட்டிச் சென்றாள்.

அதன் பின்னர் தினமும் இந்த நாடகம் நடந்தது. டேவிட்டையும், அவனது இருப்பிடத்தையும், அவனது மனைவியையும் அறிந்து கொண்ட பின்னர் பத்மினி ஒரு முடிவுக்கு வந்தாள்.

 

பத்மினியின் அடுத்த அத்தியாயமும் முடிந்தது. அவளால் வத்தளை வீட்டிற்குத் தொடர்ந்தும் வாடகை கட்ட முடியவில்லை. வாழ்வின் மீதான நம்பிக்கையில், எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு மீண்டும் ஊர் போகின்றாள்.

டேவிட்டை முற்று முழுதாக மறந்திருந்த ஒரு மாலை வேளையில், பத்மினியின் சித்தப்பா கொழும்பில் இருந்து ரெலிபோன் செய்தார். இரண்டு முக்கியமான தகவல்களை அவர் அப்போது சொன்னார்.

டேவிட் ஏற்கனவே திருமணம் செய்தவன் என்பதும், அவனுக்கு மனைவி பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதும் ஒரு செய்தி.

மற்றது – சந்திரமோகனின் மனைவி சாரதா பிரசவத்தின்போது இடுப்பிற்குக் கீழ் செயலிழந்து போனாள். சாரதாவை ‘வீல் செயரில்தள்ளிக்கொண்டு குழந்தையுடன் செல்லும்போது சந்திரமோகனை சித்தப்பா சந்தித்திருந்தார்.

இரண்டு செய்திகளில் ஒன்றுதான் பத்மினிக்கு புதியதாக இருந்தது.

அவள் கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் சிறகுகளை கூடவந்த ஆண்கள் வெட்டிவிட்டார்கள். இனி அவளுக்கான `வெளியைஅவளே வரையறை செய்வாள். அங்கே இனி ஆண்களுக்கு இடம் கிடையாது.

வெளியே புத்தகம் கொப்பிகளுடன் ஆரவாரமாக வந்து கொண்டிருந்த குழந்தைகளின் ஒலி அவளின் நிஷ்டையைக் குழப்புகின்றது. பத்மினி அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்காக வீட்டிற்குப் பின்னாலிருந்த கொட்டிலை நோக்கிச் செல்கின்றாள்.

 

No comments: