எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 28 மெல்பன் கலைவட்டமும் மாவை நித்தியானந்தனும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா…? முருகபூபதி


கொழும்பில் 1970 களில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற சிறிய அமைப்பு மாதாந்தம்  கலை, இலக்கிய சந்திப்புகளை நடத்திவந்தது.

அதில் இணைந்திருந்த சில எழுத்தாளர்கள் அப்போது திருமணம் முடித்திருக்கவில்லை.  வடக்கிலிருந்து கொழும்பு வந்து உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் மாவை நித்தியானந்தன். இவர் மல்லிகை இதழ்களில் அவ்வப்போது எழுதிவந்தார்.  மல்லிகை அட்டைப்பட அதிதிக்கட்டுரைக்காக சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசையும் நேரில் சந்தித்து


எழுதினார்.  இவருடன் அந்த சந்திப்புக்குச் சென்ற தில்லைக்கூத்தன் என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த சிவசுப்பிரமணியமும் மெல்பனுக்கு 1990 காலப்பகுதியில் வந்திருந்தார். மாவை நித்தியும்  அதேகாலப்பகுதியில் இங்கே வந்திருந்தமையால்,  மீண்டும் அவர்கள் இணைந்து கலை, இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் இவர்களின் நண்பர் ஶ்ரீபாலனும் சேர்ந்து மெல்பன் கலைவட்டம் என்ற  அமைப்பினை உருவாக்கினார்கள்.  மரபு இதழை வெளிக்கொணர்ந்த விமல் அரவிந்தனும், இராஜரட்ணம் சிவநாதனும் ,  யோகானந்தன், வசந்தன் ஆகியோரும்  குறிப்பிட்ட மெல்பன் கலைவட்டத்தின் ஊடாக சில சந்திப்புகள், கூட்டங்களை நடத்தினர்.

வசந்தன், முன்னர் மாவை நித்தியின் திருவிழா என்ற கூத்தில் பங்கேற்றவர். தற்போது லண்டனில் வதியும் அருணாசலம் ரவியும்  இந்தக்கூத்தில் நடித்தார்.  ரவிக்கு புதுசு ரவி என்றும் ஒரு பெயர். இவர் முன்னர் புதுசு என்ற சிற்றிழக்கிய ஏட்டினை அளவெட்டியிலிருந்து வெளியிட்டவர்.  திருவிழா கூத்தை வவுனியா பூவரசங்குளத்தில் ஒரு பாரதி விழாவில் பார்த்திருக்கின்றேன்.

அந்த விழாவில் பாரதி புகழ் பாடுவோம் என்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றேன். அந்த விழாவில் கவிஞர் இ. சிவானந்தனும் கலந்துகொண்டார்.

விழா முடியும்போது நடு இரவு பன்னிரண்டு மணியும் கடந்துவிட்டது.

விழாவுக்கு வந்திருந்த காந்தீயம்  அமைப்பினைச்சேர்ந்த டாக்டர் சி.வி. இராஜசுந்தரம் தனது ஜீப் வண்டியில் எம்மை அழைத்துவந்து,  வவுனியா ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.  காந்தீயம் இராஜசுந்தரமும் 1983 ஆம் ஆண்டு கலவர காலத்தில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டார்.  அவரது துணைவியார் மருத்துவர் திருமதி ராஜசுந்தரம் அவர்களை நீண்ட காலத்தின் பின்னர் மெல்பனில் சட்டத்தரணி ரவீந்திரன்  அண்ணரின் இல்லத்தில்தான் சந்தித்தேன்.


ஶ்ரீபாலன், கொழும்பில் பணியாற்றிய காலப்பகுதியில் வீரகேசரியிலிருந்த  ஊடகவியலாளர் நண்பர் வீ. தனபாலசிங்கத்துடன் சென்று பார்த்திருக்கின்றேன்.

ஶ்ரீபாலன், கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் மகளை மணம் முடித்தவர். அண்ணாவியாரின் ஏகலைவன் என்ற புகழ்பெற்ற கூத்து அரங்காற்றுகையை  பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் பார்த்து வியந்திருக்கின்றேன். இந்நிகழ்ச்சிக்கு தோழர் என். சண்முகதாசனும் வந்திருந்தார்.  இந்தக்கூத்து பின்னர்  ரூபவாகினி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

மெல்பனில் மாவை நித்தியானந்தன், ஶ்ரீபாலன், வசந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோரை மீண்டும் சந்தித்தபோது பழைய நினைவுகள் வந்தன.

இவர்கள் உருவாக்கிய மெல்பன் கலை வட்டத்தில் நான் இணைந்திருக்கவில்லை. எனது கவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம் ஆகியனவற்றில் 


தீவிரமாக இருந்தது.  எனினும்  மெல்பன் கலை வட்டத்தின் செய்திகளை  இலங்கை ஊடகங்களில் எழுதினேன்.

மெல்பன் கலைவட்டம் மாவை நித்தியின் கண்டம் மாறியவர்கள், அம்மா… அம்மா…, ஐயா லெக்‌ஷன் கேட்கிறார், ஆகிய நாடகங்களையும் கொழும்பு மெயில் என்ற இசையும் கதையும் பாடல்களும் கொண்ட நிகழ்ச்சியையும் நடத்தியது.       சின்னமாமியே    புகழ் நித்திகனகரத்தினம் இசையமைத்திருந்தார்.

1990 களில்  இக்கலை வட்டம் மெல்பன் தாவரவியல் பூங்காவில் ஒரு இலக்கிய சந்திப்பினை கோடை காலத்தில் நடத்தியது. கோடையில் பூத்த சிந்தனை மலர்கள் என்ற தலைப்பில் அச்சந்திப்பு பற்றி வீரகேசரி வாரவெளியீட்டில் ஒரு கட்டுரையும் எழுதினேன்.

பொதுவாக பூங்காக்களிலும் திறந்தவெளி  அரங்குகளிலும் குடும்ப ஒன்றுகூடல்கள் அல்லது சமூக அமைப்புகளின் சந்திப்புகள், பாபர்கியூ விருந்துகள்தான் நடைபெறும்.


ஆனால், மெல்பன் கலை வட்டம், இத்தகைய விருந்துகளையும் குடும்பங்கள் சகிதம் நடத்தியவாறு  கலை, இலக்கிய உரையாடல்களையும் நடத்தியது.

அதற்கு முன்னர் நாம் நடத்திய மக்கள் குரல் கையெழுத்துப்பிரதி ஆசிரியர் குழுவினரும் பூங்காக்களில் அத்தகைய சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை இலங்கையிலும் எமது  கலை, இலக்கிய நண்பர்கள் நடத்தவேண்டும் என்பதற்காகவே வீரகேசரி வார வெளியீட்டில்  மெல்பன் கலைவட்டம் சார்ந்த அக்கட்டுரையை எழுதியிருந்தேன்.

இவ்வாறு மெல்பனில்  நடக்கும் தமிழ் கலை இலக்கியம், தன்னார்வத் தொண்டு சார்ந்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக இற்றைவரையில் ஊடகங்களில் எழுதிவருகின்றேன்.  அத்துடன் சில குடும்ப நண்பர்களின் இரத்த உறவுகள் மறையும்போது, அவர்களுக்காக வெளியிடப்படும் நினைவு மலர்கள் ( கல்வெட்டு ) பதிவுசெய்து


கொடுக்கும் உத்தியோகப்பற்றற்ற வேலையையும் செய்து வருகின்றேன்.

 கனடாவைச்சேர்ந்தவர்கள் சிலரும் என்னைத் தொடர்புகொண்டு எழுதித்தருமாறு கேட்டபோது வியப்படைந்தேன்.  அங்கே ஈழத் தமிழர்கள் சுமார் நான்கு இலட்சம் பேர் வசிப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது.

எமது தமிழ் சமூகத்தில் இந்த கல்வெட்டு கலாசாரம் கூட அதனை வெளியிடுபவர்களின் சுய திருப்திக்காகத்தான் என்பது எனது அபிப்பிராயம்.  அதிலும் அவரது கருத்து  வரவில்லை. இவரது பதிவு இல்லை என்று குடும்பங்களுக்குள் தோன்றும் அலைப்பறைகளையும் அவதானித்திருக்கின்றேன்.

கல்வெட்டுக்கள் அச்சிடுவதற்கும் மரண அறிவித்தல்


விளம்பரங்களுக்கும் பெருந்தொகைப்பணத்தை செலவிடும் எமது மக்கள் அந்தப்பணத்தை ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு செலவிட்டு புண்ணியம் தேடமுடியும்.

பத்திரிகைகளில் நாம் காணும் முழுப்பக்க மரண அறிவித்தல் – கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் எத்தனை ஆயிரம் ரூபா செலவில் வெளியாகிறது என்பது, பத்திரிகைகளை நடத்துபவர்களுக்கும் விளம்பரம் கொடுப்பவர்களுக்கும்தான்  வெளிச்சம்.

இவ்வாறு விளம்பரங்களின் மூலம் பெருந்தொகை வருமானம் பெறும் பத்திரிகைகள் அதில் கலை, இலக்கியம்,  சினிமா, மற்றும் அரசியல் ஆய்வு சார்ந்து எழுதும் எழுத்தாளர்களுக்கு  என்ன சன்மானம் கொடுக்கின்றன..?

நான் எனது பெரும்பாலான நேரத்தை முன்னர் காகிதத்திலும் பின்னாளில்  கணினியிலும்  செலவிட்டு பத்திரிகை ஊடகங்களுக்கும் இதழ்களுக்கும் எழுதிக்கொண்டிருப்பதை அவதானித்துவரும்  எனது மனைவி உட்பட பிள்ளைகள், மருமக்கள் மற்றும் நெருங்கிய இரத்த உறவினர்கள்  அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி  அவர்களைப்பொறுத்தவரையில் பெறுமதியானது.

 “ ஏன் இப்படி நேரத்தை செலவிட்டு, உங்களை வருத்தி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்..? ஏதும் வருமானம் அதில் வருகிறதா…? 

 “ எழுத்தாளரின் வேலை எழுதுவது. பணத்திற்காக எதுவும்


செய்யலாம் என்றால், எனக்கு வேறு தொழில் தெரிந்திருக்கவேண்டும்.    என்பது எனது பதிலாக அமைந்தது.

கணினியில் தமிழ் அறிமுகமானதும் உலகெங்கும் ஏராளமான இணைய ஊடகங்கள் வந்துவிட்டன.

அவற்றை நடத்துபவர்கள் செலவிடும் நேரம் மிகவும் பெறுமதியானது .  அவர்களின் உழைப்பினை எத்தனைபேர் மதிக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டுக்குப்பின்னர் கொவிட் பெருந்தோற்று ஆரம்பித்தபோது    எனது நல்ல நண்பர்கள் இருவர் எதிர்பாராமல் அற்பாயுளில் மறைந்துவிட்டனர். ஒருவர் தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கெங்காதரன்.

மற்றவர் நடு இணைய இதழ் ஆசிரியர் கோமகன். இவர்கள்  இருவரும் மறைந்தபின்னர் எமது கலை, இலக்கிய ஊடக நண்பர்கள் வட்டம்  மெய்நிகர் அஞ்சலி அரங்குகளை நடத்திவிட்டு கடந்துவிட்டனர்.  வேறு என்னதான் செய்யமுடியும்…?

இருவரையும் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில்தான் முதலும் இறுதியுமாக சந்தித்தேன். 

இவர்களுக்கு குழந்தைகளும் இல்லை.  இவர்களின் மனைவிமார் தனித்துவிட்டனர். 


இணைய ஊடகங்கள் நடத்திய எழுத்தாளர்களின் மனைவிமார் என்ற பெருமை மாத்திரம்தான் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் அந்தப்பெருமைகளுக்காக மாத்திரம்.  தமது கணவர்மாரை நேசித்தவர்கள் அல்ல.

எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது குடும்பத்தலைவர் ஒரு எழுத்தாளர் என்ற பெருமையைவிட , குடும்பத்தில் இவரும் ஒருவர் என்பது மாத்திரமே பெருமை தரும் விடயம். அதனால்தான்,  “ எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது..?  “எனக்கேட்கின்றனர்.

இது பல எழுத்தாளர்களின்  “ வீட்டுக்கு வீடு வாசல்படி   என்ற கதைதான். 

இலங்கையிலும் தமிழகத்திலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வெளியிட்டு வருமானம் தேடும் பத்திரிகை ஊடகங்கள் அவற்றில் எழுதும் இலங்கை – தமிழக எழுத்தாளர்களுக்கு  உரிய சன்மானங்களையாவது வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவை இங்கு எழுதுகின்றேன்.

புலம்பெயர்ந்து வாழும் என்னைப்போன்ற எழுத்தாளர்களை ஓய்வூதிய  காலத்தில் நாம் வாழும் நாடுகளின் அரசுகள் கவனித்துக்கொள்ளும்.

ஆனால்,  கால் நூற்றாண்டுக்கும் மேல்  இலங்கை – தமிழக ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அரசுகள் ஓய்வுதியம் வழ       ங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர்கள் -  பாராளுமன்ற உறுப்பினர்களின்  செய்திகள் அறிக்கைகள்  படங்களை வெளியிட்டு, அவர்களின் இருப்பை உலகிற்கு காண்பித்துவரும் ஊடகவியாலர்களுக்கு,  தாம் வேதனம் பெறும் அரசுகளிடமிருந்து ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவைகளில் தீர்மானம் எடுத்தல் வேண்டும்.

தற்போதைய இலங்கையைப் பொறுத்தமட்டில் நாட்டின் அதிபராக வந்திருப்பவர் ஊடக அனுபவம் மிக்கவர். மாண்பு மிகு ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையார் ( அமரர் ) எஸ்மண்ட் விக்கிரமசிங்கா புகழ்பெற்ற பத்திரிகையாளர் என்பதையும் இங்கே சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.

இவர் 1985 ஆம் ஆண்டு மறைந்தபோது வீரகேசரியில் செய்தி ஆசிரியராகவிருந்த நடராஜா,    தங்கப்பேனா மறைந்தது   என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அவ்வாறு எத்தனை தங்கப்பேனைகள் எங்கள் சமூகத்திற்காக எழுதி எழுதி ஓய்ந்தன…!?

சிறுகதை எழுத்தாளனாக அறிமுகமாகி, செய்தியாளனாகி, காலப்போக்கில் புலம்பெயர்ந்து வந்தும் செய்திகள், அறிக்கைகள் எழுதிக்கொண்டும் கல்வெட்டுக்கள் தயாரித்து கொடுத்துக்கொண்டும், மற்றவர்களின் ஆக்கங்களை ஒப்புநோக்கி செம்மைப்படுத்திக்கொண்டும், காலத்தை செலவிடும் அதேசமயம் நான் மிகவும் நேசிக்கும் சிறுகதை இலக்கியத்திலிருந்து விலகிவிடும் அபாயம் அவ்வப்போது வருகிறது.

அதனால்,  முடிந்தவரையில் சிறுகதைகளையும் எழுதிவருகின்றேன்.

ஆக்க இலக்கிய படைப்பாளிகளின் கவனம் முழுமையாக ஆக்க இலக்கியத்துறையில்தான் மையம்கொண்டிருக்கவேண்டும். அதற்கு அப்பால் செல்லும்போது,  இந்தத் துறை தேக்கம் கண்டுவிடலாம். 

நான் பிறந்து வளர்ந்த  நீர்கொழும்பு கடற்கரைப்பிரதேசத்தின் மண்வாசனையை  பதிவுசெய்த சில சிறுகதைகளை தொடக்கத்தில் எழுதியிருந்தாலும்,  அந்தப்பிரதேச மக்கள் பற்றிய ஒரு முழுமையான நாவலை எழுதவில்லையே என்ற மனக்குறை நீடிக்கிறது.

ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும், அதேவேளையில் செய்தியாளனாகவும் பயணித்தவாறு, தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபட்டுவரும் என்னைப்போன்றவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிப்பதற்கு பொறுமை மிக மிக அவசியம்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட மெல்பன் கலைவட்டம் பல ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தது.  அதில் ஒன்று பெற்றோர் பிள்ளைகள் உறவு என்ற தொனிப்பொருளில் மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்திய முழுநாள் கருத்தரங்கு. இதில் பங்கேற்று  நானும் ஒரு கட்டுரை சமர்ப்பித்தேன்.

பின்னாளில் இக்கருத்தரங்கே மெல்பனில் பாரதி பள்ளி தோற்றம் பெறுவதற்கும் மூல வித்தாக அமைந்தது.  மாவை  நித்தியானந்தன் எமது தமிழ் சமூகத்திற்காக மேற்கொண்ட பணிகள் அளப்பரியது.

மெல்பன் கலை வட்டத்தின் ஊடாக பாப்பா பாரதி என்ற சிறுவர்களுக்கான இறுவட்டையும் மூன்று பாகங்களில்  சிறப்பாக பதிவேற்றியவர்.

இதுபற்றி ஒளியில் மலர்ந்த மொட்டுக்கள் என்ற கட்டுரையை எனது இலக்கிய மடல் நூலில் எழுதியிருக்கின்றேன்.

பாப்பா பாரதியில் பங்கேற்ற பல  குழந்தைகள் தற்போது பெரியவர்களாகிவிட்டனர். மாவை நித்தி தொடக்கிய பாரதி பள்ளியில் அன்று கற்ற குழந்தைகள் பின்னாளில், அங்கே ஆசிரியர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர்.

இந்த ஆண்டு ( 2022 ) பவளவிழாக்காணும் எமது இனிய நண்பர் மாவை நித்திக்கே இந்த பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.

( தொடரும் )   

 

 

 

 

 

 

1 comment:

l. Murugapoopathy said...

எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இந்த அங்கத்தில், இடம்பெறும் மெல்பன் கலை வட்டம் பற்றிய குறிப்புகளில் பின்வரும் தகவல்களையும் இணைத்துக்கொண்டு வாசிக்குமாறு அன்பார்ந்த வாசகர்களிடம் தெரிவிக்கின்றேன்.
மெல்பன் கலைவட்டத்தில் இணைந்திருந்த கலாநிதி காசிநாதன் பேராதனை பல்கலைக்கழகத்தில் முன்னர் விரிவுரையாளராக பணியாற்றியவர். அத்துடன் கலை, இலக்கிய ரசிகர். அவரது துணைவியார் நளினி, இலங்கை முன்னாள் அமைச்சரும் கல்குடா தொகுதியின் முன்னாள் எம்.பி. யுமான ( அமரர் ) நல்லையாவின் புதல்வி. இவரும் கலாரசிகராவார்.
மெல்பன் கலைவட்டம் கலை – இலக்கிய குடும்பமாகவே இயங்கியது. காசிநாதன், மாவை நித்தியானந்தன், ஶ்ரீபாலன், யோகானந்தன், தில்லைக்கூத்தன், விமல். அரவிந்தன் ஆகியோரது இல்லங்களில் கலை, இலக்கிய சந்திப்புகளும் நடந்தன.
இவர்களின் துணைவியரும் கலை வட்டத்தை செயலூக்கமுடன் முன்னெடுத்தனர்.
முருகபூபதி