ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே ! அவதானி


தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்து,  விதிவசத்தாலோ அதிர்ஷ்டத்தாலோ முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கா, பாராளுமன்றில் அமர்ந்திருக்கும்  மக்கள் பிரதிநிதிகளுக்கு சிம்மாசனப் பிரசங்கம் மூலம் கொள்கை விளக்கமும் அளித்தார்.

அத்துடன் பௌத்த பீடங்களின் ஆசிர்வாதமும் பெற்று நாட்டு மக்களுடனும் உரையாடினார். அண்மையில் அவர் அநுராதபுரம் சென்றிருந்த வேளையில்,  பொதுமக்களையும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் நேருக்கு நேர் சந்தித்தும் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

முக்கியமாக நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றியும் அறிந்துகொள்ள முயன்றார்.  மக்களால் தெரிவுசெய்யப்படாமல்,   பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கினால் மாத்திரம் அதியுயர் பதவிக்கு வந்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, மக்களின் தேவைகளை அறிய முயன்றது  வரவேற்கத்தக்க விடயம். அத்துடன்,   “ அரச ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை சரிவரச்செய்ய முடியாது போனால், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டியதுதான்  “ என்றும் பகிரங்கமாக அதிரடி உத்தரவினையும்  வெளியிட்டிருந்தார்.

இதுவும் அவரது துணிகரத்திற்கு ஒரு சான்று. வாழ்த்துவோம்.

பெரும்பாலான அரசாங்க திணைக்களங்களில் கோவைகள் உரிய மேசைகளுக்கு செல்வதில் தாமதங்கள் நீடித்திருப்பது கண்கூடு. முன்னர் இந்த அரச ஊழியர்கள் நாட்டில் நீடித்திருந்த போர் பற்றியும், எங்கெங்கே குண்டுகள் வெடித்தன என்பது பற்றியும் கொல்லப்பட்டவர்களின் புள்ளிவிபரங்களையும் தமது கடமை நேரத்தில் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் கொவிட் பெருந்தொற்று வந்தபோது, இதுபற்றியும் உரையாடிக்கொண்டிருந்தனர்.

ராஜபக்‌ஷ சகோதரர்களின் முறையற்ற நிருவாகத்தினாலும் எரிபொருள் பற்றாக்குறையினாலும், நேர்ந்த  பாரிய நெருக்கடி பற்றி  பின்னர் பேசிக்கொண்டிருந்தனர்.  முக்கிய கோவைகள் உறங்கிக்கொண்டிருந்தன.

எரிபொருள் பிரச்சினையை சமாளிப்பதற்காக அரச ஊழியர்களின் வேலை நேரத்தையும்  அரசு குறைத்திருந்தது. படிப்படியாக நிலைமை சீரடையும் அறிகுறி தென்படத்தொடங்கியதும்தான் ஜனாதிபதி ரணில் அவர்கள், அரச ஊழியர்களுக்கு கடும் தொனியில்  “ முடிந்தால் கடமையை செய். அல்லது வீட்டுக்குப்போ  “ என்று எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை பாராளுமன்றத்தின் ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களைப் பார்த்து அவரால் சொல்லமுடியுமா..?

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலத்தில் மாத்திரம்தான் மக்களிடம் செல்வது வழக்கம்.  எரிபொருள் நெருக்கடியின் எதிரொலியால் அவர்களால் தத்தம் தொகுதிகளுக்கு செல்லமுடியாது போய்விட்டது.

பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதை இங்கே நினைவுபடுத்தவேண்டிய தேவையில்லை.

நிருவாகத்தின் உச்சத்திலிருந்த ராஜபக்ஷக்களின் பூர்வீக வீட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயிருந்தது.

அரச ஊழியர்கள் தங்களுக்கு தரப்பட்ட கடமையை சரிவரச்செய்யாது விட்டால், அவர்களை வீட்டுக்குத் திரும்புமாறு சொல்லும் நாட்டின் அதிபர், மக்களின் சேவகர்கள் தாங்கள்தான் எனச்சொல்லிக்கொண்டு பாராளுமன்றத்திலிருக்கும் 225 பேரும் உண்மையிலேயே மக்களை மாதம் ஒரு தடவையாதல் நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் குறைகளை, தேவைகளை கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கின்றார்களா..? என்பதையும் கவனிக்கவேண்டும்.

குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மக்களின் பணத்தில்தான் வேதனம் கிடைக்கிறது. வீடு, வாகன வசதிகள் மற்றும் மெய்ப்பாதுகாவலர்களுக்கான சம்பளமும் கிடைக்கின்றது.

மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதற்குப் பின்னர்,  பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு தடவையும் அங்கே தோன்றும் உறுப்பினர்கள், தங்கள் பெயர்களை பதிவுசெய்துகொள்ளும் பட்சத்தில் மேலதிகமாகவும் ஒரு தொகை ( இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் ) அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு சகல வசதிகளையும் பெற்றுக்கொண்டு, பத்திரிகைகளுக்கு அறிக்கையிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதி மக்களிடம் அடிக்கடி செல்கின்றனரா? என்பதையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தவேண்டும்.

அத்துடன் அவரும் தனக்கு வாக்களித்த மக்களை மறந்துவிடாமல், நேரத்தை ஒதுக்கி சந்திக்கவேண்டும். ஊடக விளம்பரங்களுக்காக மாத்திரம் அவர்களை சந்திப்பது என்பது போலித்தனமாகத்தான் அமையும்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, தனது கட்டுப்பாட்டிலிருந்த திணைக்களங்களுக்கு திடீர் திடீரெனச்சென்று  அங்கிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியூட்டி வந்தவர்.

அதுமட்டுமன்றி, அவரிடம் பணியாற்றிய  “ பஞ்சலிங்கங்கள்    என வர்ணிக்கப்பட்ட முக்கிய செயலாளர்கள் இரவு படுக்கைக்குச்செல்லும் வரையில் தங்களது உத்தியோகத்திற்கான ஆடைகளையும் மாற்றிக்கொள்ளாமல், ஜனாதிபதியின் அழைப்புக்கு காத்திருப்பார்களாம்.

அவ்வாறு நிருவாகத்திறமையை அன்று ரணசிங்க பிரேமதாச தனது செயலாளர்களிடத்திலும் அதிகாரிகள், ஊழியர்களிடத்திலும் வளர்த்தார்.

இலங்கைக்கு இன்று மிகவும் அவசியமாகியிருப்பது சிறந்த நிருவாகம்தான். சில திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் நிருவாகக் குறைபாடுகளினால் மிக மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாடும் தற்போதைய ஜனாதிபதி,  அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களையும் அவ்வப்போது சென்று பார்த்து தேவைகளை கவனிக்குமாறு பணித்தல் வேண்டும்.

இது இவ்விதமிருக்க,  நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக புலம்பெயர்ந்த மக்களின் தயவையும் நாடவேண்டிய சூழ்நிலை அரசுக்குத் தோன்றியிருக்கிறது.

வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை கவருவதற்கும், புலம்பெயர் இலங்கையரின் முதலீடுகளை வரவேற்பதற்கும் தற்போதைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

வெளிநாட்டினருக்கான விசா அனுமதிக் காலத்தினை அதிகரிப்பது முதல், புலம்பெயர்ந்து சென்றவர்கள்  திரும்பி வரும்போது அவர்களின் தேவைகளை கவனிப்பதற்காக விமானநிலையத்தில் ஒரு பணிமனையை உருவாக்குவது வரையில் புதிய யோசனைகள் தோன்றியிருக்கின்றன.

ஆடுற மாட்டை ஆடிக்கறப்பது போன்றோ, பாடுற மாட்டை பாடிக்கறப்பது போன்றோ இதுபோன்ற திட்டங்கள் அமையாமல் நாட்டின் நலன்கருதி அமையவேண்டும்.

இலங்கையில் சுநாமி கடற்கோள் அநர்த்தம் வந்தபோதும்,  பின்னாளில் கொவிட் பெருந்தொற்று உருவானபோதும் வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்கள், இன, மத, மொழி வேறுபாடின்றி  பல தன்னார்வத்தொண்டுப்பணிகளை தமது தாயகத்திற்காக மேற்கொண்டனர்.

சில அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் கல்வி,  மருத்துவம், சிறுகைத்தொழில், விவசாயம் உட்பட   விதவைகள் மறுவாழ்வுக்குத் தேவைப்பட்ட பொருளாதார உதவிகளில் ஈடுபட்டுவருகின்றன.

அந்த அமைப்புகள் கலை நிகழ்ச்சிகள் மூலமும் நன்கொடைகள் ஊடாகவும் தங்கள் தாயகத்தின் தேவைகளை கவனித்துவருகின்றன.

அதற்காக நிதி திரட்டுவதற்கு அந்த அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு வரும் அதேசமயம், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ முதலில் மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் அதன் பிறகு தாய்லாந்துக்கும் சென்று  ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகளில் தமது துணைவியாருடன் தங்கியிருக்கிறார்.

அதற்காக செலவிடப்பட்டிருக்கும் பெருந்தொகை எங்கிருந்து சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறு ஒரு தனிமனிதரின் தேவைக்காக பணம் விரையமாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது,  புலம்பெயர்ந்தவர்கள் தமது உழைப்பிலிருந்து நாட்டு மக்களின் தேவைகளை கவனிக்க முன்வந்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கா அவர்களின் புதிய நிருவாகம், புலம்பெயர்ந்தவர்களின் டொலர், பவுண்ஸ், யூரோ முதலானவற்றில் வைத்திருக்கும் கடைக்கண் பார்வையை முன்னாள் ஜனாதிபதிக்காக செலவாகிக்கொண்டிருக்கும் பெருந்தொகைப்பணத்தின் பக்கமும் நகர்த்தவேண்டும்.

----0---

 

 

 

 

No comments: