இலங்கைச் செய்திகள்

நல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா

விமான நிலையத்திலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை சொகுசு ரயில்கள்

மே 09 தாக்குதல் சம்பவ விசாரணைகள் நிறைவு

நல்லூர் தேர் வெள்ளோட்டம்

தானிஷ் அலி உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க மையம்


நல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா

- நாளை (26/08/2022) காலை தீர்த்தோற்வம்; மாலை கொடியிறக்கம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று முற்பகல் நடைபெற்றது.

காலை 6.00 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7.00 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 8.15 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.

தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

நாளையதினம் வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதோடு, மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது என்பது குறிபிடத்தக்கது

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 





விமான நிலையத்திலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை சொகுசு ரயில்கள்

ரயில்வே திணைக்களத்தின் இரத்மலாணை பிரதான இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று கண்காணிப்பு விஜயம் செய்யத போது..

நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதி கருதி

அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் போக்குவரத்துக்காக சொகுசு ரயில் சேவைகளை நடத்துவது தொடர்பில்

பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்துக்கு எரிபொருளை போக்குவரத்து செய்யும் ரயில் பாதையை மேலும் நீளமாக்கி கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதற்கான வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் சகல வசதிகளையும் கொண்ட இளைப்பாறும் அறைகளை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் ரயில்வே அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவோர் நாட்டுக்கு திரும்புகையில் அவர்கள் தத்தமது ஊர்களுக்கு செல்ல வசதியாக போக்குவரத்து வசதிகளை ரயில்கள் மூலம் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் மூலம் அவர்களது பிரயாண செலவுகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக தாம் ரயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பயணித்து நிலவும் குறைபாடுகள் தொடர்பில் இனங்கண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன

இரத்மலானையில் உள்ள பிரதான இயந்திர பொறியலாளர் கைத்தொழில் நிலையத்திற்கு விஜயம் செய்தார். அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

விமானங்களுக்கான எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் மூலம் இடம்பெற்று வருவதுடன் நாட்டில் ஏனைய எரிபொருள் தேவையில் 50 வீத போக்குவரத்து செயற்பாடுகள் ரயில்கள் மூலமே இடம்பெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





மே 09 தாக்குதல் சம்பவ விசாரணைகள் நிறைவு

35 அதிகாரிகளிடம் குழு சாட்சிகள் பதிவு

மே 09ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.

விக்கிரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இவர்களுள் அடங்குகின்றனர்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் ஏதேனும் தவறிழைத்துள்ளனரா? என்பது குறித்தும் இந்த குழு ஆராய்கின்றது. இந்த அறிக்கை மிக விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.   நன்றி  தினகரன் 




நல்லூர் தேர் வெள்ளோட்டம்

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது.

அந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் அதன் அபாயத்தை உணர்ந்த ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை தொடக்கி வைத்தார்.

அந்த தேரே 1964ஆம் ஆண்டு முதல் மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது, இழுக்கப்பட்டு வந்தது.

அந்த தேரே தற்காலத்தில் மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று நேற்றைய தினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு வெள்ளோட்டம் இடம்பெற்றது.

அதேவேளை நேற்றைய தினம் மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 






தானிஷ் அலி உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்று உத்தரவு

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி உள்ளிட்ட 07 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள லஹிரு வீரசேகர மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோர் நேற்றுமுன்தினம் (26) நீதிமன்றத்தில் ஆஜராகி தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.    நன்றி தினகரன் 





யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க மையம்

இராணுவத் தளபதியினால் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையத்தை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று (26) திறந்து வைத்தார்.

ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின் அவரது முதலாவது யாழ் மாவட்ட விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 










No comments: