கண்டேன் திருச்சிற்றம்பலம் - இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்


இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன் 
07.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை(University of New South Wales NIDA Parade Theatre Kensington)

 நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழக NIDA பரேட் தியேட்டர் கென்சிங்டனில் இணுவிலிற் பிறந்து சிட்னியில் வதியும் அருணாசலம் குகசக்தி தம்பதிகளின் புதல்வனும், சிட்னியிலுள்ள சமர்ப்பணா நாட்டியப் பள்ளியின் குரு சிதம்பரம் ஆர் சுரேசின் மாணவனுமாகிய விஷ்ணுவின் அரங்கேற்றம் நடைபெற்றது.  மாலை ஆறு மணிக்கு  வரவேற்புரை, அதனைத் தொடர்ந்து எமது தாய் மண்ணையும், அம்மண்ணிற்குப் பெருமை சேர்த்த நாட்டியக் கலைஞர்களாகிய யாழ்ப்பாணம் இணுவில் திரு ஏரம்பு சுப்பையா, யாழ்ப்பாணம் இணுவில் இயலிசை வாரிதி ம.ந.வீரமணிஐயர் இருவரையும் நினைவு கூர்ந்து ஆற்றப்பட்ட அறிமுக உரை இவற்றோடு அன்றைய நிகழ்வு ஆரம்பமாகியது. 


கலைமாமணி ஓ.எஸ் அருண் அவர்கள் தனது இனிய வசீகர குரலினால் ஓளவையார் அருளிச் செய்த நீதி நூலாகிய மூதுரையிலிருந்து  வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்ற வெண்பாவை விருத்தமாகப் பாடிப் பின்  யாழ்ப்பாணம் இணுவில் வீரமணிஐயர் இயற்றிய நாட்டை இ ராகத்தில் அமைந்த 'கஜமுககணபதியேசரணம்'; என்ற கீர்த்தனையையும் பாடி நாட்டிய அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு ரமணி தியாகராஜன்

அவர்களின் புல்லாங்குழலிசையும் திரு சுரேஸ் பாபுவின் வயலின் இசையும் திரு வேதகிருஷ்ணன் வேங்கடேசன் அவர்களின் மிருதங்க இசையோடு கலந்து தவழ்ந்து வந்து அரங்கை நிறைக்க, கையில் மலர்களுடன் அரங்கத்துள் பிவேசிக்கின்றார் நர்த்தகர் விஷ்ணு. அரங்கத்தின் வலப்புறத்தில் வீற்றிருந்த நடராஜருக்கு அம்மலர்களைத் தூவி வணங்கி விட்டு, அரங்கின் நடுவிற் சென்றதும் ஹம்சத்வனி இராகத்தில் 'மூசிகவாகன' என்ற சுலோகம் பாடப்படுகின்றது. அதற்கு நவரஸங்களிற் சிலவற்றோடு அபிநயம் பிடித்து விநாயகருக்கு

வணக்கம் செலுத்துகின்றார். தொடர்கிறது குரு சிதம்பரம் ஆர் சுரேஸ் அவர்கள் இயற்றி வடிவமைத்த திஸ்ர த்ரிபுட தாள அலாரிப்பு, பின்;  தஞ்சை நால்வர் இயற்றிய  சாவேரி இராகம் ரூபக தாளத்தில் அமைந்த ஜதிஸ்வரம் ஆடப்பட்டது.

தொடர்ந்து தஞ்சாவூர் அருணாசலம்பிள்ளை இயற்றிய இராகமாலிகை மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த 'தில்லையம்பலம் தனில்' என்ற சப்தம் ஒரு பக்தை தில்லை அம்பலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் நடனத்தில் வியந்து மயங்கி  அவருடன் ஐக்கியமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் அனுபவிக்கும் எண்ணற்ற


உணர்வுகளையும், கனவுகளையும் தனது 

உணர்வுபூர்வமான  அபிநயங்கள், உடல்மொழிகள் மூலம் வெளிப்படுத்திய விதம் வெகு சிறப்பு. காம்போதியில் ஆரம்பித்த நடனம், சண்முகப்பிரியாவில் 'கற்பனைக்கும் எட்டிடாது உயர் ககனத்தில் நின்றாடி ஆவி சோர' வைத்துப் பாகேஸ்ரீயில்


'சொப்பனத்தில் கண்ட தெய்வம் சொந்தமாவானோ' என்று ஏங்கித் தவித்து, 'தத்தித்தாதிமி தித்தித் தெய் என தாள மேளம் முழங்கிட அத்தன் என் உள்ளம் ஆளும் நாயகன் ஆவலாய் வருவாரோடி' என்று மத்தியமாவதியில்   திரு ஓ.எஸ் அருண் அவர்கள் கற்பனைத் திறனுடன் உருகிப் பாட,  விஷ்ணு அந்த இசையில் லயித்து ஆட எமதுள்ளமோ உருகித் தில்லையம்பலத்தானிடம் ஓடிவிட்டது. 

நர்த்தகர் விஷ்ணு அலாரிப்பின் மூலம் தனது தாளஞானத்தினையும்


ஜதிஸ்வரத்தில் இராகத்தை  அனுபவித்து பாவத்தையும்  வெளிப்படுத்தி,  சப்தம் ஆடும்போது அவரது உடல் உள இறுக்கம் தளர்ந்து ஆடலோடு ஒன்றி விட்டார். 

தஞ்சை நால்வர் பொன்னையாவினால் இயற்றப்பட்ட  'சரசாலனு' அல்லது'சரசா நன்னு'  என்ற காபி இராகம் ரூபக தாளத்தில் அமைந்த பதவர்ணம் தஞ்சையில் எழுந்தருளியிருக்கும் கருணாநிதியாகிய பிரஹதீஸ்வரர் மேல் மையல் கொண்ட நாயகியின் நிலையினைச் சுட்டுவதாக அமைந்துள்து. தஞ்சாவூர் கே.


பொன்னையாபிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப்பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் நடைமுறை இசைப் பாடத்திட்டத்தினை எழுதியுள்ளார். பல உருப்படிகளை இயற்றியும், மொழிபெயர்த்தும் உள்ளார். அவ்வாறு 'சரசாலனு' என்ற பதவர்ணத்தையும்; 'சரசாநின்னைமறவாமல்' என்று மொழிபெயர்த்துள்ளார்.   மொழி பெயர்த்த போது அனுபல்லவியில் பிரஹதீஸ்வரர் என்று இருக்க வேண்டிய இடத்தில் மதுராபுரி வளர் சுந்தரேசா எனக்குறிப்பிட்டுள்ளார். இவர்  தஞ்சை நால்வரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வர்ணத்திற்கு வருவோம் கருணாநிதியாகிய பிரஹதீஸ்வரர்


அல்லது சுந்தரேஸ்வரர் மீது மையல் கொண்ட நாயகி விரகதாபத்தினாற் துவண்டு, பிரிவுத்துயரில் வருந்தி, அவரை விரைவில் அடையவேண்டும் என்ற வேட்கையில் வாடி, அவர் வருவாரா என்ற ஏக்கத்திற் தவித்து, எப்போதும் ஊனுறக்கமின்றி அவன் நினைவிற் தன்னை மறந்து, மாரன் கணையில் உடல் ரணமாகி, மெலிந்து நின்ற ஸ்ருங்கார ரசங்களின் பாவங்களும் அபிநயங்களும் உணர்வுபூர்வமாக எங்களின் மனதையும் தாக்கிச் சென்றன. இராக தாளத்தில் திளைத்து ஆடிய அடவுகள்,

ஜதிக்கோர்வைகள்; அபாரம். ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் தனது படைப்புகளினூடாக வெளிக்கொணருவது என்பது மிகவும் கடினமான செயல் மட்டுமல்லாமல் சவாலான விடயமும் கூட விஷ்ணு ஒரு கலைஞனாக அதில் வெற்றி கண்டுள்ளார்.  

மேலும் இந்தப் பதவர்ணத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. தஞ்சை நால்வர் பொன்னையா தொடங்கி அவர் பேரன் நெல்லையப்ப நட்டுவனார், அவர் மகன் கந்தப்ப நட்டுவனார், அவர் மகன் கணேசபிள்ளை நட்டுவனார், பாலசரஸ்வதி அம்மையார் என்று நீண்ட உடைக்கப் படாத ஒரு குரு சிஷ்ய பரம்பரையினரால் இந்தப் பதவர்ணம்  பாடப்பட்டும்  ஆடப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது


என்பது இசை வரலாற்றுக் குறிப்பு. இது தவிர தஞ்சை நால்வர் பொன்னையா இயற்றிய இந்தப் பத வர்ணத்தின் கருத்தாக்கமும், பிரமிப்பூட்டும் தனித்துவமான இசையமைப்பும், அதன் அழகும் ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் மனதைக் கவர்ந்திழுத்துள்ளது. அவரை வியப்படைய வைத்துள்ளது. இந்தப் பதவர்ணத்தின் மேல் அவருக்கிருந்த ஈர்ப்பினாலேயே கர்நாடக காபி இராகம் ரூபக தாளத்தில் 'சுமசாயகா'  என்ற வர்ணத்தை இயற்றினார் என்று இசை நடன வல்லுனர்களும், இசை நடன விமர்சகர்களும் கருதுகின்றனர். 


இத்தகைய ஒரு சிறப்புப் பொருந்திய பத வர்ணத்தைப் பயிற்றுவித்து அவுஸ்ரேலியாவில் சிட்னியில் ஒரு அரங்கேற்ற அரங்கிற்கு எடுத்து வந்து அறிமுகப்படுத்தியது ஒரு சாதனையாகவே எனக்குத் தோன்றுகின்றது. இதற்காகவே நர்த்தகர் விஷ்ணுவையும் அவருக்குப் பயிற்சி அளித்த குரு சிதம்பரம் சுரேஸ் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

கடின ஜதிகளைக் கொண்ட வர்ணத்தை நீண்ட நேரம் ஆடிய பின்னர்


சாசுவதமாக அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் அழகிய பதம். இராகம் சுருட்டி தாளம் ரூபகத்தில் வைத்தீஸ்வரன் கோவில் சுப்பராமஐயர் இயற்றிய 'அடிக்கடி கையைப் பிடிக்கிறார் அவர் யாரடி சகியே' என்ற பதம். தமிழர்களின் சமூகத்தில் கலாசாரப்பின்னணியில் வாழ்வியல் அம்சங்களில் ஏராளமான சுவாரஸ்யமான விடயங்களும் உண்டு. அப்படி ஒரு சுவாரஸ்யம் மிக்க சம்பவத்தை இந்தப் பதத்தினூடே  எடுத்து வருகின்றார் நர்த்தகர் விஷ்ணு 


எங்களுடைய சமூகத்தில் பெண்குழந்தைகள் பருவம் அடையும் வரை அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. அவர்களும் ஆண்குழந்தைகளோடு சரிசமமாகப் பழகவும் ஓடி ஆடி விளையாடவும் அனுமதிக்கப்படுவார்கள். அவள் பருவம் அடைந்த மறுகணமே பெற்றோர்களாலும், சமூகத்தினராலும் ஏராளமான சட்ட திட்டங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன. ஆண்களோடு சேராதே, அவர்களோடு கூடி விளையாடாதே, அவர்களைத் தொடாதே என்று ஏராளமான விடயங்கள் அவளுக்குப் போதிக்கப்படுகின்றன.  பருவமடைந்த பின்னர் அவளுடைய அழகில், செழிப்பில், அவளணியும் ஆடை அணிகலன்களின் மாற்றத்தில், தோற்றத்தில் மதி மயங்கிய விடலைப் பையன்களுக்கு அவள் பின்னே

துவிச்சக்கர வண்டியில் சுற்றுவது, அவளுக்குத் தொல்லை கொடுப்பது, நண்பர்களோடு சேர்ந்து வீதியில் சந்தியில் நின்று பரிகாசம் செய்வது, பாடசாலை விடும் நேரம் பார்த்து பஸ் தரிப்பில் நின்று சீண்டுவது போன்ற துடுக்குத் தனங்களைச் செய்வதில் ஒரு அலாதிப் பிரியமும் மகிழ்ச்சியும் உண்டு.  இது பருவமடைந்த பெண்ணுக்குள் புரியாத பல மனக் குழப்பங்களை ஏற்படுத்தும். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியும் 


அவர்கள் செய்யும் துஷ்டத்தனங்களால்  கோபம், குழப்பம், உணர்வு மாற்றங்கள் ஏற்படுகின்றது. அது ஏன் என்பது மட்டும் அப் பருவ மங்கைக்குப்  புரியவில்லை. அவள் குழப்பம் அடைகிறாள். தோழியிடம் கேட்கிறாள் 'அடிக்கடி கையைபப் பிடிக்கிறார் இவர் யாரடி தோழி? செடிக்குள்ளே ஒளிந்தாலும் விடேன் என்று திடத்துடன் பல துடுக்குகள்' செய்;கிறான் என்று தன் அபிநயங்கள் மூலம் அற்புதமாக  அக்காட்சியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் விஷ்ணு.         

அடுத்து பேராசிரியர் பெருமாள் முருகன் இயற்றிய


ஒற்றைப்பனைமரத்தைப் பற்றியதோர் கீர்த்தனை. இது காம்போதி இராகத்திலும் கண்டசாபு தாளத்திலும் அமைந்தது 'இட்டேரி மீதில் ஏகாந்தமாய் நின்றிருக்கும் பனையே, புண் பட்ட மனதிற்கும் நீதான் துணையே' என்று  பனையைப் பார்த்துத் தன் களைப்பை, மன அழுத்தத்தைப் போக்கிக் கொண்டு பனைமரத்தினடியில் ஆறுதலடைவது போன்ற அபிநயத்துடன் ஆரம்பமாகிய  இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ரி.எம்.கிருஷ்ணா அவர் கள்.  இட்டேரி (உயரமானகரை) என்பது தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியினரின் வட்டார வழக்குச் சொல் என்கிறார் பாடலாசிரியர். 


பனையை நம்பி வாழும் மக்கள் சமூகத்தினருக்கு வாழ்வளிக்கும் 'பூலோககற்பகதரு' என்று வர்ணிக்கப்படும் பனை தமிழர்களின் அடையாளச் சின்னம் என்று கூறலாம். தமிழ் நாட்டைப்போன்றே ஈழத்திலும் யாழ்ப்பாணத்திலேயே அதிக அளவிற் பனைகள் உண்டு. யாழ்ப்பாணத்தாரை பனம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட வார்தையால் கேலி செய்வதைப் பலர் அறிந்திருப்பர். 

பாடலுக்குரிய நடனம்  மரபு சார்ந்த நாட்டிய நெறியாகிய பக்தி,


இறைவன் மேற்காதல் என்ற எல்லையைத் தாண்டி மரபு சார்ந்த நாட்டிய வடிவத்திற் புதிய உள்ளடக்கமான  பனைமரத்தைப் பற்றிய பாடலைக் குருவும் சிஷ்யனும் சபையோரின் சிந்தனைக்கு எடுத்துவந்திருந்தார்கள். 'கிட்ட வரும் பட்சிகள் காடை குருவிக்கெல்லாம்' மட்டுமன்றி மனிதர்களுக்கும் வாழ்வு அளிக்கும் பனையைப் போற்றும் இப்பாடல்  யாழ்ப்பாணத்தை, பனை வடலிகளுடன் போராடும் மக்களின் வாழ்க்கையை. யாழ்ப்பாண மக்களின் உணவுப்பழக்க வழக்க முறையை, யாழ்ப்பாணத்தில் எரிந்த நூல்நிலையத்தை, 1983, 1987 ன் அவலங்களை, 'உடைந்த பனைமரம்' என்ற நூலை, றஜனி திரணகமவை இப்படி எங்கள் மனதின் ஆழத்தில்

உறைந்து போயிருந்த எத்தனை எத்தனையோ நினைவுகளைத் தட்டி எழுப்பி விட்டு, தஞ்சாவூர் கல்யாணராமன் இயற்றிய மிஸ்ரசாபு தாளத்தில் தர்பாரிகானடாவில் அமைந்த தில்லானாவை தாள லயத்துடன் குதூகலமாக ஆடிமுடித்தார்.

இறுதியாக திரு அருண் அவர்கள் யமுனாகல்யாணியில் 'நமச்சிவாய வாழ்க என்ற சிவபுராணத்தை ஆரம்பித்து ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க! திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்; தருமே நின்மதி சிவபுராணத்தை நாளும் ஓதிட வருமே மன நின்மதி திருச்சிற்றம்பலம்!' என்று பாட, இறைவனுக்கும், கலைஞர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அபிநயத்தினாலே தனது பணிவான வணக்கத்தைச் சொல்லி அன்றைய அரங்கேற்ற நிகழ்வை நிறைவு செய்தார் விஷ்ணு.

விஷ்ணுவின் அரங்கேற்றம் அவுஸ்ரேலியாவில் இதுவரை நான்


பார்த்த, கேள்விப்பட்ட அரங்கேற்றங்கள் நடன நிகழ்வுகளிலிருந்து வேறுபட்டதும் தனித்துவமானதும் தரமானதும் ஆகும்.  

தமிழின் இனிமையும் அழகும் மிளிரும்படியாக வடிவமைக்கப்பட்ட அற்புதமான அரங்கேற்றம்;.  அரங்கேற்றத்தில் ஆடப்பட்ட எல்லா உருப்படிகளுமே தமிழில் அமைந்திருந்ததால் பொருளையும் வர்ணனைகளையும் அபிநயங்களையும் விளங்கி ரசித்து அனுபவிக்க முடிந்தது.

நல்ல இளம்பொலிவு, உடலுறுதி, கால்வீசி ஆடக்கூடிய சுறுசுறுப்பு, ஊளைச்சதையின்றிக் கட்டுமஸ்தான உடல், முகமலர்ச்சி, வசீகரப் புன்னகை, அழகிய விழிகள், இசைப்பயிற்சி, தாளஞனம்; தாய்மொழிப்பயிற்சி, பாட்டின் பொருளுக்கேற்ப அபிநயம் பிடிக்கும் தன்மை, கலையில் ஆர்வம் ஆகிய இலக்கணங்களைக் கொண்டு விளங்குகின்றார் நர்த்தகர் விஷ்ணு


ஆசிரியர் சிதம்பரம் சுரேஸ் கற்பனாசக்தி மிக்கவர். சொல்லும் குரலும் இனியன். ஆடலிலும் நட்டுவாங்கத்திலும் சிறந்த தேர்ச்சி உடையவர். வாத்தியம் வாசிக்கும் திறன் உடையவர். நர்த்தகனாகிய விஷ்ணுவின் வயதையும், நடனத்தேர்ச்சியையும், அனுபவத்தையும் கருத்திற் கொண்டு உருப்படிகளையும், ரசங்களையும் தெரிவு செய்து, நடன வடிவத்தின் விவரணை அம்சங்களையும் நடனத்தின் அரூப வடிவத்தையும் செப்பனிட்டுள்ளார். அவருடைய நடன வடிவமைப்பு, நட்டுவாங்கச் சிறப்பு இவற்றைக் கருத்திற் கொண்டு  சிதம்பரம் திரு சுரேஸ் அவர்களை ஒரு சிறந்த நடனகுருவாக  அடையாளம் காண முடிகின்றது.

விஷ்ணுவிற்கு நாயகி பாவத்தையும்,  தமிழ்ச் சமூகத்தில் வாழும் பெண்களின் உணர்வுப் போராட்டங்களையும் குரு திருமதி சுரேஸ் சோபனா மிகச் சிறப்பாக விளக்கிக் கற்றுக் கொடுத்திருக்கின்றார். விஷ்ணுவிடம் மிளிர்ந்த ஸ்ருங்காரத்தினுடைய வெற்றி சோபனாவுக்குரியது.

இசை இன்றி நடனம் இல்லை. தாளம் இன்றி நடனம் இல்லை. பாவம்
இன்றி நடனம் இல்லை. இவற்றைக் கருத்துடன் தரும் பாடகரும் அணிசெய் கலைஞர்களும் இன்றி நடனம் இல்லை. மதுரக்குரலில் பாவம் ததும்ப கற்பனைகள் விரியப் பாடிய திரு ஓ.எஸ ;. அருண் அவர்களுக்கு இணையாக திரு வேதகிருஷ்ணன் வெங்கடேசன் அவர்கள் மிருதங்கத்திலும் திரு றமணி தியாகராஜன் அவர்கள் குழலிசையிலும்;; திரு சுரேஸ்பாபு அவர்கள் நரம்பிசையிலும் (வயலின்)அசத்தினார்கள்.

சமர்ப்பணா நாட்டியப் பள்ளியிலிருந்து இது போன்ற தரமான நாட்டிய அரங்க நிகழ்வுகளை எதிர்பார்க்கின்றோம். இசையும் நடனமும் மனதிற்கு அமைதியையும் மகிழ்வையும் ஏற்படுத்தும் ஒரு யோகக்கலை என்று கூறலாம். தாளத்திலும் 

இசையிலும்; தன்னைக் கரைத்துக் கொள்ளும் கலைஞன் பார்வையாளர்களையும் வேறொரு தளத்திற்கு (திருச்சிற்றம்பலத்திற்கு) அழைத்துச் செல்கின்றான். திருச்சிற்றம்பலம்

படப்பிடிப்பு – ரம்யா குகநாதன்

வெங்கடேஷ்பாபு


No comments: