யாழ் மத்திய கல்லூரியின் இசை அமுதம் நிகழ்வு எனது பார்வையில் - மதுரா மஹாதேவ்

 .

கடந்த வெள்ளிக்கிழமை 26 ஆகஸ்ட் 2022 அன்று Silverwater  இல்  அமைந்திருக்கும் Bahai  சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக கொரோனா தொற்று நோயின் பின் இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் புகழ் புண்ணியா, சத்தியபிரகாஷ், ஸ்ரீதர் சேனா மற்றும் சிரிகமபா  புகழ் வர்ஷா நால்வரும் உலக புகழ் பெற்ற  மணி இசைக்குழுவினருடன் வருகை தந்து சிறப்பித்த முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

விளம்பரத்தில் அறிவித்தது போல் நிகழ்ச்சி சரியாக 7 மணிக்கு எமது சிம்மக்குரலோன் மகேஸ்வரன் பிரபாகரன் மேடையில் தோன்றி தனது வழமையான பாணியில் கீதையில் கூறியது போல் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். மணி இசைக்குழுவினர் புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது என்னும் பாடலுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். 



புண்ணியா அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்னும் பாடலை பாடி இன்னிசை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அவர் பாடலை பாடி முடித்ததும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபா அவரிடம் அவர் ஒரு வைத்திய கலாநிதியாக இருந்தும் அவருக்கு எப்படி இசையின் மேல் நாட்டம் உண்டு என்றும் ஏன் இந்த துறையை தேர்ந்தெடுத்தார் என்று கேட்ட போது அவர் தற்போது தன்னால் பாடக்கூடிய நேரத்தில் தனக்கு விரும்பிய இந்த துறையில் இருந்துவிட்டு பின் வைத்திய துறையில் எப்பவுமே தனது பணியை தொடரலாம் என்று  கூறினார்.அதாவது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுக்கிணங்க வாய்ப்புகள் இப்போது வரும் போது  அதனை ஏற்று தனது மனம் விரும்பிய துறையில் ஒளிர் விடுவது நல்லது என்றார். மிகவும் இனிமையான குரல் வளம் படைத்தவர். குரல்களை மாற்றி பாடும் திறமையும் கொண்டவர். அதனைத் தொடர்ந்து வர்ஷா நெஞ்சினிலே என்னும் பாடலை தனது இனிமையான குரலில் மிகவும் அழகாக பாடி அசத்தி இருந்தார். இவர் ஆஸ்திரேலியா விற்கு இது மூன்றாவது தடவையாக வந்திருக்கின்றார் என்று  கூறினார். தான் இதுவே முதல் தடவையாக மணி இசைக்குழுவினருடன் இணைந்து பாடுவதாகவும்  அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு தனது நன்றியை தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து ஸ்ரீதர் சேனா வான் நிலா என்னும் பாடலைப்  பாடினார். மிகவும் இனிமையாகப் பாடினார். சத்தியபிரகாஷ் நம்மவர் இடையே மிகவும் பிரபலமான ஒரு பாடகர் ஏனெனில் அவர் பல தடவை ஆஸ்திரேலிய மேடைகளில் தனது திறமையை வெளிக்காட்டி இருக்கின்றார். பிரபா கூறியது போல் அவர் முதலில் சிட்னி வந்திருந்த போத ஒரு திறமையான பாடகராக வருவார் என்று தான் கூறியிருந்தது போல் இப்போது 200 கும் மேல் பல மொழிகளில் பாடல்களை பாடி ஒரு திறமையான பாடகராக வளர்ந்திருப்பதை பார்த்து நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். அவர் இப்போது தான் பாடிய பாடல்களையே மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடிய ஒரு பாடகராக வளர்ந்திருக்கின்றார். காற்று வெளியிடை என்னும் திரைப்படத்தில் அவர் பாடிய நல்லை அலை என்னும் பாடலை பாடியிருந்தார்.

 

தொடர்ந்து புண்ணியா சௌக்கியமா எனும் பாடலை பாடி சபையினரது கரகோஷத்தை பெற்றிருந்தார். வர்ஷா நின்னுக்கோரி வர்ணம் மற்றும் லஜ்ஜாகளே என்னும் ஹிந்தி பாடலையும் பாடி சபையோரின் பெருத்த கரகோஷத்தை தட்டி சென்றார். ஸ்ரீதர் சேனா தான் Wild Card Entry யில் பாடி திரும்ப போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற வைத்த மருதமலை மாமணியே என்னும் பாடலை பாடி அசத்தினார். சபையோர் மிகவும் பலத்த கரகோஷம் செய்து அவரின் அந்த பாடலை மிகவும் ரசித்து வரவேற்றிருந்தார்கள். ஸ்ரீதர் சேனாவும் வர்ஷாவும் இணைந்து பூமாலை ஒரு பாவை ஆனது பாடலை மிகவும் இனிமையாக பாடினார்கள்.

 

வர்ஷாவின் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் எல்லோராலும் மிகவும் வரவேற்கப்பட்டது. சத்யபிரகாஷ் செந்தமிழ் தேன் மொழியாழ்  தனது வசீகரக் குரலினால் பாடி சபையோரை மயங்க வைத்தார். புண்ணியாவும் ஸ்ரீதர் சேனாவும் இணைந்து ரவுடி பேபி பாடலை ஆடலுடன் பாடியது மிகவும் ரசிக்கத்தக்க மாதிரி இருந்தது. ஸ்ரீதர் சேனா சபையோரின் மத்தியில் இறங்கி வந்து கேள்விகள் ஏதும் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று கூறி அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் வழங்கினார்.

 

நால்வரும் இணைந்து மறைந்த திரு S P பாலசுப்பிரமணியத்திற்கு ஒரு Tribute வழங்கி இருந்தார்கள். அவரின் முன் சூப்பர் சிங்கரில் பாடிய இனிமை நிறைந்த உலகம் இருக்கு என்னும் பாடலை புண்ணியாவை பாடும்படி பிரபா கேட்ட போது  அவர் உடனே அந்த பாடலை பாடி அசத்தினார்.

 

30 நிமிட இடைவேளையின் போது சிக்கன் நூடுல்ஸ் மற்றும் Veg நூடுல்ஸ் விற்பனை செய்தார்கள். பலர் Noodles ஐ கரண்டியால் சாப்பிடுவதற்கு மிகவும், சிரமப்பட்டதை கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருந்தது. ஒரு சிலர் கையினால் சாப்பிடுவதையும் பார்த்து கேட்ட போது  கரண்டிகள் பற்றாக்குறை எனக் கூறினார்கள். நூடுல்ஸுக்கு Fork கொடுத்திருக்க வேண்டும். வழமையாக யாழ் மத்திய கல்லூரி நடாத்தும் நிகழ்ச்சியில் மிகவும் சீராக எல்லாம் நடைபெறும். ஆனால் இந்த தடவை இப்படியான ஒரு சில தவறுகளை செய்திருந்ததை காணக்  கூடியதாக இருந்தது. இதுவும் கொரோனாவின் பின் விளைவோ???? இதை சுட்டி காட்டுவது எனது நோக்கம் இல்லை ஆனால் எதிர்வரும் வருடங்களில் நாம் இவர்களின் பழைய தரத்தை திரும்ப பார்க்க வேண்டும் என்பதற்காக இதனை இங்கு குறிப்பிடுகின்றேன். வழமையாக பல குழு உறுப்பினர்கள் உதவுவதை பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த தடவை ஒருசிலரை மட்டும் பார்க்க கூடியதாகவே இருந்தது. காரணம் தெரியவில்லை. எதிர்வரும் வருடங்களில் வழமை போல் எல்லோரும் இணைந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். வழமையாக நல்ல ஒரு நிகழ்ச்சியினை வழங்கி வரும் யாழ் மத்திய கல்லூரி நிகழ்ச்சி திரும்பவும் தமது அந்த பழைய தராதரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இதனை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். யார் மனதையும் நோகடிப்பதற்காக இல்லை.

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்  மகேஸ்வரன் பிரபாகரன் இசைக்குழுவை நல்லதொரு முறையில் அறிமுகம் செய்து வைத்தார். மணி இசைக்குழுவை உலகிலேயே தெரியாதவர்கள் எமது தமிழ் மக்களிடையே இல்லை என்றே கூற வேண்டும். மிகவும் திறமை வாய்ந்த இசைக்கலைஞர்களை கொண்ட இசைக்குழு. Lead Guitar ரில் சுந்தரேசனும், Flute மற்றும் Saxaphone குமாரும், தபேலாவில் வெங்கட்டும், Drums ரஞ்சித்தும், Octopad டிக்சனும், Keyboard இருவர் மிக திறமையாக தமக்கு நிகர் யாரும் இல்லை என இசை வழங்கி கொண்டிருக்கின்றார்கள் என்று கூறி ஒருவர்  நவீன் என்றும் பல இளம் நெஞ்சங்களை உலகளாவிய ரீதியில் கொள்ளை  கொண்டு வைத்திருக்கும் என்று கூறி ஒரு சிறிய இடை வேலை கொடுத்த போது அரங்கமே அதிரும் வண்ணம்  ஆரவாரமாக கை தட்டி ஆர்ப்பரித்தது அவர் கார்த்திகை கூற போகின்றார் என்று எதிர்பார்த்த சமையம் மிகவும் சுவாரசிகமாக மணி அண்ணா என்று பிரபா கூறியது மிகவும் ரசிக்க தக்கதாக இருந்தது. ஆனால் அவர் கார்த்திகை தான் கூறி இருந்தார். இந்த மாதிரியான நகைச்சுவை உணர்வுடன் ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவதில் கை  தேர்ந்தவர் பிரபா தான் அவருக்கு நிகர் அவரே. Base கிடாரில் இந்த இசைக்குழுவை ஒருங்கிணைத்து மிகவும் திறமையாக நடாத்திவருபவர் மணி என்றும் அறிமுகம் செய்த்துவைத்து. இந்த இசை குழுவிற்கு அண்மையில் Un Sung Heroes  என்னும் விருது கிடைத்ததையும் அறிவித்த போது அனைவரும் தமது பாராட்டினை தமது கரகோஷத்தினால் தெரிவு படுத்தினர்.

 

நால்வரும் இணைந்து முதல்வனே, ஆளப்போறான் தமிழன், விடை கொடு எங்கள் நாடே என்னும் பாடல்களை பாடினார்கள். பாடல் வேண்டுகோள்களை சபையினரிடம் இருந்து ஏற்று ஒரு சில வரிகளை பாடி சபையினரை சந்தோஷப்படுத்தினார்கள்.  இடைவேளைக்கு பின் அதிகமாக குத்து பாடல்களே பாடப் பட்டது

இந்த இசை நிகழ்ச்சிக்கு ஒலி அமைப்பை வழங்கிய Abi Master Production குழுவினர் வளமை போல் பத்மசிறி மகாதேவா தலைமையில் துல்லியமான ஒலி மற்றும் ஒளி (அருமை) அமைப்பை வழங்கினார்கள். .நிகழ்ச்சி பதினோரு மணியளவில் நிறைவு பெற்றது. சிலர் பல பழைய பாடல்களை எதிர்பார்த்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு நிகழ்ச்சி அவ்வளவாக மன நிறைவை கொடுக்கவில்லை. சத்யப்ரகாஷ் மற்றும் வர்ஷா இருவரையும் அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு உபயோகப் படுத்தவில்லை என்பது சிலர் கூற்று. புதிய திரைப்படப் பாடல்கள் அதாவது விருமன், சீதா ராமம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் இருந்து பாடல்கள் எதுவும் இருக்கவில்லை. யாருடைய பாடல் தேர்வு என்று தெரியவில்லை. இளைய தலைமுறையினரை விட பொதுவாக ஐம்பது வயதுக்கு மேட்பட்டவரே கூடுதலாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஏற்ற சற்று பழைய பாடல்களையும் இணைத்திருக்கலாம். மிகவும் திறமையான பாடகர்களை இசைக்குழுவையும் கைவசம் வைத்துக்கொண்டு சற்று கடினமான இசையில் உள்ள கடினமான பழைய பாடல்களை சேர்த்திருந்தால் இன்னும் நிகழ்ச்சியை மெருகேற்றி இருக்கும் என நம்புகின்றேன்.












No comments: