உலகச் செய்திகள்

 இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் சமூக அளவில் பரவல்

உக்ரைனின் 20 வீதமான நிலப்பகுதி ரஷ்யா வசம்

தினசரி 100 உக்ரைனிய இராணுவ வீரர்கள் பலி

அவதூறு வழக்கில் டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றில் தீர்ப்பு



இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் சமூக அளவில் பரவல்

இங்கிலாந்தில் குரங்கம்மை சமூக அளவில் பரவுவதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு, மத்திய ஆபிரிக்காவில் நிரந்தர நோயாகக் கருதப்படும் குரங்கம்மை, நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடையே பரவும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லாதவர்களிடையே நோய் பரவியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் 132 பேர் லண்டனைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் பெண்கள் என்றும் 111 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் செல்லும் மதுபானக் கூடங்கள், நீராவிக் குளியல் நிலையங்கள் ஆகியவற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 




உக்ரைனின் 20 வீதமான நிலப்பகுதி ரஷ்யா வசம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 100 நாட்களை எட்டியிருக்கும் நிலையில் உக்ரைனின் 20 வீதமாக நிலப்பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

லக்சன்பேர்க்கில் எம்.பிக்களிடம் பேசிய அவர், போரின் முன்னரங்கு பகுதி 1000 கி.மீ வரை நீண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

‘இந்த ஆக்கிரமிப்பில் ரஷ்ய இராணுவ அமைப்பின் அனைத்து படைகளும் ஈடுபட்டுள்ளது’ என்றும் வீடியோ தொழில்நுட்பம் வழியாக பேசிய செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் செலரோடோனெஸ்க் நகர் மீது ரஷ்ய படைகள் தற்போது உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் ஏற்கனவே தங்களது ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் போக, எஞ்சியுள்ள பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ரஷ்யா தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அத்துடன், கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றும் முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, டொன்பாஸுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யப் படை கைப்பற்றியுள்ளது.

மேலும், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரும் ரஷ்யாவிடம் கடந்த மாத இறுதியில் வீழ்ந்தது. அத்துடன், லூஹான்ஸ் பிரதேசத்தின் கடைசி முக்கிய பெரிய நகரான சியெவெரோடொனட்ஸ்க்கின் 80 வீதப் பகுதி ரஷ்யப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம், ரஷ்ய ஆதரவுப் படையினரால் கைப்பற்றப்பட்ட டொன்பாஸ் பகுதிகளையும் சேர்த்து, தற்போது 20 வீத உக்ரைன் பிரதேசங்கள் ரஷ்யா வசம் வந்துள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த போரினால் 9 ஆயிரத்துக்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆறரை  மில்லியன்  பேர்  உக்ரைனிலிருந்து  வெளியேறிவிட்டனர். அந்நாட்டின்  மக்கள் தொகையில் அது பத்து வீதத்திற்கும் மேலாகும்.    நன்றி தினகரன் 






தினசரி 100 உக்ரைனிய இராணுவ வீரர்கள் பலி

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, தமது படைவீரர்களில் 60 முதல் 100 பேர் வரை  போர்க்களத்தில் நாள்தோறும் மரணமடைவதாகக் கூறியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு மேலும் 500 வீரர்கள் காயமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸ் வட்டாரத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று செலென்ஸ்கி தெரிவித்தார்.

அதன் மையப் பகுதிக்குள் ரஷ்யத் தரப்பினர் வலுக்கட்டாயமாக நுழைந்திருப்பதாகவும் அதை ஆக்கிரமிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்யத் தரப்பிலும் கணிசமான இழப்புகள் நேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரியில் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 30,000க்கும் மேற்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக  உக்ரைனிய அரசாங்கம் கடந்த வாரம் தெரிவித்தது.   நன்றி தினகரன் 




அவதூறு வழக்கில் டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றில் தீர்ப்பு

அவதூறு வழக்கில் ஹொலிவுட் நடிகர் ஜோனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015இல் அவரை கரம்பிடித்த ஜோனி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.

இதன்பின் 2018இல் ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் டெப்பின் கையை விட்டுச் சென்றன. இதனால் அவதூறாக 15 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு ஆம்பர் மீது அவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆம்பர் 10 மில்லியன் டொலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டொலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.    நன்றி தினகரன் 



No comments: