எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 16 மனவறையில் உருவான மணவறை ! கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார் !! முருகபூபதி


எனது ஆரம்ப பாடசாலையான அன்றைய நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) ஆறாம் தரம் வரையில்தான் படித்தேன். ஏழாம் வகுப்பிற்கு தரமுயற்றப்பட்டபோது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வந்தது. அதில் சித்தி பெற்றிருந்தமையால், யாழ். ஸ்ரான்லி கல்லூரிக்கு                              ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி ) செல்லநேர்ந்தது.

இக்காலப்பகுதியில் எமக்கு  கைவினை வகுப்பும் இடம்பெற்றது.  அதனை கைப்பணி வகுப்பு எனவும் சொல்வோம்.  நான் சரித்திர பாடத்திலும் இந்த கைவினை பாடத்திலும்தான் அதிகம் புள்ளிகள் பெறுவது வழக்கம்.

எங்கள் நீர்கொழும்பு வீட்டருகில் நின்ற வில்வம் மரத்திலிருந்து சிறிய


கிளையை ஒடித்துவந்து, சோளப்பொரியில் வண்ணம் தீட்டி, அவற்றை அந்தக் கிளையில் செருகி அழகான பூமரம் தயாரித்துவிடுவேன்.  தீப்பெட்டிகளை சேகரித்து வண்ணக்காகிதங்கள் சுற்றி,  சிறிய ஆசனங்கள், கட்டில்கள், மேசைகள் செய்து கைவினை ஆசிரியரிடம் காண்பித்து சிறந்த புள்ளிகள் பெறுவேன்.  காகிதாதிகளினால் வீடுகளும் அமைப்பேன்.

இந்த பால்யகாலத்து அனுபவம் பின்னாளில் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் உதவியது.  அந்த ஆண்டு 1989.  நண்பர் திவ்வியநாதன் அக்காலப்பகுதியில் மெல்பன் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில்  கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.  நான் Brunswick இல் இருந்தேன்.  பல்கலைக்கழகம் Park will இல் அமைந்திருக்கிறது.

எனக்கு இரவுநேர வேலை. நண்பர் திவ்வியநாதன் மதியவேளையில் நேரம் கிடைக்கும்போது என்னைப்பார்க்க வருவார். நாட்டில் குடும்பத்தை விட்டு வந்த கவலையில் எனக்கு Home sick.  சனி – ஞாயிறு விடுமுறை நாட்கள் வரும்போது என்னை Clayton இல் இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துவிடுவார். அவரது மூத்த புதல்வி ஜனனியின் வயதில் ஊரில் எனக்கு மூத்த மகள் பாரதி. அந்தக் குழந்தையை பார்த்து நான் என்னை தேற்றிக்கொள்வேன்.  அவ்வாறு எனக்கு மெல்பனில் அறிமுகமான நண்பர்களின் குழந்தைகளின் புன்சிரிப்பில் எனது Home sick ஓரளவு குறைந்தது.


ஒருநாள் திவ்வியநாதன் என்னிடம் வந்தபோது,  “ பூபதி ஒரு மணவறை தேவைப்படுகிறது. எனது மனைவியின் தங்கைக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது    என்றார்.

அக்காலப்பகுதியில் இங்கே திருமணத்திற்கான மணவறைகள் இல்லை. கோயில்களும் உருவாகியிருக்கவில்லை.

 “ அதனால் என்ன… மணவறைதானே… செய்துவிடலாம்  “ என்றேன். 

 “ எப்படி…? “ எனக்கேட்டார் திவ்வியநாதன்.

 “ எனக்கு நீளமான மரத்தடிகள்  ஆறு  ஒரே உயரத்தில் தேவைப்படும்.  அத்துடன் மரம் அரிந்து வெட்டும் வாள் தேவைப்படும்  “ என்றேன்.

உடனே அவர் தாமதிக்காமல் என்னை அழைத்துக்கொண்டு,  மெல்பன் பல்லைக்கழகம் சென்றார். அங்கிருந்த களஞ்சிய பொறுப்பாளரிடம் சொல்லி மரங்களுக்கு ஏற்பாடு செய்தார்.  மற்றும் ஒரு நாள் காரில் வந்து அந்த மரத்தடிகளையும் ஒரு மரம் அரியும் வாளும் தந்துவிட்டுச்சென்றார்.

நான் அருகிலிருந்த Australian Textile Company இல் பணியிலிருந்தேன்.  அங்கே துணிவகைகள் சுற்றிவரும் நீளமான Regi form கிடைக்கும்.  கடையில் வண்ணக்காகிதங்கள் வாங்கினேன்.  இரண்டு நாட்களில் அழகான மணவறையை செய்து முடித்தேன்.  அவற்றை தனித்தனியாக பிரிக்கவும் பொருத்தவும் முடியும்.

அதனை செய்துமுடித்துவிட்டு, நண்பர் திவ்வியநாதனை அழைத்து


காண்பித்தேன்.  அவருக்கு பூரண திருப்தி. அதனை செய்து முடிப்பதற்கான செலவுக்குரிய பணம் $ 60 அவுஸ்திரேலியன் வெள்ளிகளைத் தந்தார்.  நான் வேண்டாம் என்று சொல்லியும் கையில் திணித்தார்.

 “ திவ்வி… இந்தப்பணத்தை நான் எடுக்க மாட்டேன்.  ஒரு நல்ல நிகழ்ச்சி  உங்கள் குடும்பத்தில் நடக்கிறது. அதற்கு நானும் ஒத்துழைக்கின்றேன். வேண்டாம்  “ என்றேன்.

உடனே, திவ்வி,  “ சரி… நீர் நடத்திக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காகவாவது இதனை நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளலாமே..!  “ என்றார்.

அவருடைய ஆலோசனைப் பிரகாரம் எமது கல்வி நிதியத்திற்கான  நன்கொடையாக ஏற்றுக்கொண்டேன்.  அந்தத்திருமணம் Clayton  இல் சனிக்கிழமை நாளன்று நடந்தது.

எனக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை வேலை மதியம்  ஒரு மணிக்குத் தொடங்கி இரவு 8-00 மணிக்கு  முடியும். நண்பர்  திவ்வியநாதனுடன் வேறும் சில நண்பர்கள் இரவு ஒன்பது மணிக்கு கார்களில் வந்து சேர்ந்தனர்.

செய்திருந்த மணவறையை பாகம் பாகமாக பிரித்து எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றோம்.  நண்பர்களின் உதவியுடன் அந்த மணவறை மண்டபத்தில் பொறுத்தப்பட்டது.

மறுநாள் திருமணத்திற்கு வந்தவர்கள்  “ எங்கிருந்து இந்த மணவறை வந்தது..?  “ எனக்கேட்டனர். திவ்வியநாதன் என்னைக் காண்பித்தார்.

 “ சோமா   “ சோமசுந்தரம் அண்ணர், திவ்வியிடம்  “ அவர் ஊரிலும் இந்தத் தொழில்தானா செய்தார்…?  “ எனக் கேட்டது எனது காதிலும் விழுந்தது.

நல்ல காலம் அப்போது இந்த முகநூல் இல்லை. இருந்திருப்பின் அந்த மணவறையின் படத்தை முகநூலில் படரவிட்டு, என்னை இந்தத் தொழிலிலேயே ஈடுபடுத்தியிருப்பார்கள்.  நண்பர் கேட்டாரே என்று வேடிக்கையாகச் செய்த அந்த மணவறை பின்னர் மேலும் சிலரது திருமணங்களுக்கும் பயன்பட்டது.  அவர்களிடத்திலும் 60 அவுஸ்திரேலியன் வெள்ளிகளை நன்கொடையாகப் பெற்று எமது கல்வி நிதியத்திற்கே வழங்கினேன்.

                                      ஒருவர் தனக்குத் தெரிந்த வேலை ஒன்றை


அல்லது தனது பொழுதுபோக்கான விடயத்தை புகலிடத்தில் செய்து காண்பித்துவிட்டால், உடனே, “ ஊரிலும் இதனையா செய்தார்.. ?   எனக்கேட்கும் மரபும் எமது தமிழ் சமூகத்திடம் குடியிருக்கிறது.

முகநூல் கலாசாரம் வந்த பின்னர்,  எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கோடை காலத்தில் கடற்கரைக்கு தூண்டிலும் எடுத்துக்கொண்டு மீன்பிடிக்கச்சென்றார்.  அது அவரது பொழுபோக்கு.  அவ்வாறு மீன் பிடித்தவர்,  அந்தப் படத்தை தனது முகநூலில் பதிவேற்றினார்.

அதனைப்பார்த்த அவரது நண்பர் ஒருவர்,  “ ஊரிலும் இந்தத் தொழிலா செய்தீர்…? எனக்கேட்டு பதிவிட்டு வாங்கிக்கட்டினார்.

மற்றும் ஒரு நண்பர் – அகதியாக வந்தவர்.  பின்னர் நிரந்தர வதிவிட அனுமதியும், குடியுரிமையும் பெற்று,  குடும்பத்தையும் அழைத்தபின்னர், இரட்டைக் குடியுரிமைக்கும் விண்ணப்பித்து பெற்றுக்கொண்டார். விடுமுறை காலத்தில் தாயகம் திரும்பியவேளையில் அங்கிருக்கும் நண்பர் ஒருவர் புதிதாக நிர்மாணித்து திறந்த விடுதியின் முன்னால் நின்று படம் எடுத்து தனது முகநூலில் பதிவேற்றியிருக்கிறார்.

அதனைப் பார்த்துவிட்ட அவரது முகநூல் வட்டத்திலிருந்து மற்றும் ஒரு நண்பர்,  “அகதியாக வந்து குடியுரிமையும் – இரட்டைக் குடியுரிமையும் பெற்றுவிட்டு,  நாட்டுக்கே திரும்பமுடியாது எனச்சொல்லி இத்தனை வாய்ப்புகளையும் பெற்றுவிட்டு, இப்பொழுது ஊருக்குச்சென்று விடுதியா திறக்கின்றீர்…?  “ எனக்கேட்டு பதிவிட்டுவிட்டார்.

இந்த முகநூல் கலாசாரம் பெற்றிருக்கும்   பரிமாணம் இதுதான் !  என்னிடம் முகநூல் கணக்கு இல்லை. இதனால்தான் நான் இன்னமும் இந்த அலைப்பறைகளுக்குள் சிக்கவில்லை.

 நான் அன்று செய்த மணவறையில் அமர்ந்து திருமண பந்தத்தில் ஈடுபட்டவர்கள்,  தற்பொழுது தங்கள் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால், மணவறைதான் வேறு.  பின்னாளில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் மணவறைகள் இறக்குமதி செய்யப்பட்டு வர்த்தகமாகியது. சிலர் மலர்களினாலேயே மணவறைகள் செய்து உழைத்தனர்.

 நான் சிறிய வயதில் கற்றுக்கொண்ட கைவினைப்பயற்சி, புகலிடத்திலும் மங்கலகரமான   பணிகளுக்கும் தன்னார்வத்தொண்டுக்கும் உதவியது. 

நான் அன்று செய்த மணவறை எனது மனவறையிலிருந்து பிறந்தது. அதன் படத்தை இங்கே பாருங்கள்.

விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம்,  இந்த மாநிலத்திற்கு அகதிகளாக வந்தவர்களை உறுப்பினர்களாக ஏற்கத் தயங்கிக்கொண்டிருந்த 1987 – 1988 – 1989 காலப்பகுதியில்தான் சில முக்கியமான நிகழ்வுகள் இங்கே தமிழ் சமூகத்தில் நடந்தன.

மெல்பன் நகரில் Prahran migrant Centre இல் விக்ரோரியா இந்து சங்கம்,   முதலில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பிரார்த்தனைகளை ஒழுங்கு செய்திருந்தது. பிள்ளையார், சிவன், முருகன், மற்றும் கலைமகள், அலைமகள், மலை மகள் படங்கள் கார்களில் வந்து இறங்கும். அத்துடன் மலர்களும் பூசைத்தட்டுக்களும் வடை, கடலை, அவல் பிரசாதத் தட்டுகளும் வரும்.  ஒரு சில பிரார்த்தனைகளுக்கு எமது அறை நண்பர் பொறியியலாளர் வகீசன் என்னை அழைத்துச்சென்றிருக்கிறார்.

1988 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று  நண்பர் இராஜரட்ணம் சிவநாதன், விக்ரோரியா கரம்டவுண்ஸில் இந்து சங்கம் கோயில் அமைக்கவிருப்பதாகச் சொன்னார்.  அன்று அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அவர் என்னையும் தனது காரில் அங்கே அழைத்துச்சென்றார்.  வீதியை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் சென்றமையால்,  அவ்விடத்திற்குச் செல்ல தாமதமாகியது.

அந்த பரந்த புல்வெளியில்  பெரிய பாத்திரத்தில் பொங்கிக்கொண்டிருந்தார்கள்.  ஒருவர் என்னைக்கண்டதும் வேகமாக விரைந்து வந்தார்.  அவரை ஏற்கனவே சிவநாதன் அறிமுகப்படுத்தியிருந்தார். அவரது பெயர் நாதன். தற்போது உயிரோடு இல்லை.

நானும் அவர் அழைத்த இடத்திற்கு விரைந்து சென்றேன். அங்கே பொங்கிக்கொண்டிருந்தனர்.

பெரிய அண்டாவில் பொங்கல் தயாராகிக்கொண்டிருந்தது. ஒருவர் நீண்ட அகப்பையினால் கிண்டிக்கொண்டிருந்தார்.  அவரை நாதன் காண்பித்து,   “ அங்கே பாரும்… அவர் சப்பாத்துக் காலுடன் நின்று பொங்குகிறார்..  “ என்று சொல்லிச் சிரித்தார்.

 “அதனையேன் எனக்கு காண்பிக்கிறீர்கள்…?  “எனக்கேட்டேன்.

 “ நீர் இதனை செய்தியாக உமது வீரகேசரியில் எழுதும்  “ என்றார்.

 “ அதற்காகவா நான் இங்கே வந்தேன்  “ என்று எரிச்சலுடன் கேட்டுவிட்டு திரும்பினேன்.

இலங்கையில் எனக்குத்  தெரிந்த சில அன்பர்களையும் அன்று அந்த கோயில் திடலில் சந்திக்க முடிந்தது.

 34 வருடங்களாகிவிட்டன.

மெல்பனில் மேலும் சில கோயில்கள் தோன்றிவிட்டன. ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அவற்றின் பின்னணியில் ஆன்மீகம் இருக்கிறதா..? இல்லை… ஆணவம்தான் இருக்கிறதா…? என்பதையும் ஆராய முடியும்.

மெல்பன் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில்தான் பெரும்பாலான தமிழர் சம்பந்தப்பட்ட கூட்டங்கள், விழாக்கள் அக்காலத்தில்  நடைபெறும்.

விக்ரோரியா இலங்கை தமிழ்ச்சங்கத்திலும் இந்து சங்கத்திலும் நானும் அங்கத்தவராக இணைய நேர்ந்தது.  இந்து சங்கத்தின் ஒரு ஆண்டுப்பொதுக்கூட்டம் 1989 ஆம் ஆண்டு பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் நடந்தது.

மூன்று யாழ்ப்பாணத்து டாக்குத்தர்மார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.  அந்தக் கூட்டத்துக்கு கல்லூரி வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது,  அந்த வேட்பாளர்கள் தனித்தனியாக தமது ஆதரவாளர்களுடன் நின்று தமக்கு வாக்களிக்குமாறுகோரி,  தம்மைப்பற்றிய பிரசுரங்களை தந்தனர். இக்காட்சிகளை அவுஸ்திரேலியாவில் நடக்கும் தேர்தல்களின்போது  நீங்கள் வாக்குச் சாவடிகளில் பார்த்திருப்பீர்கள்.

எமது தெய்வங்கள் சொர்க்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாம். ஒரு தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி.

அந்தப் பிரசுரங்களை வாங்கிக்கொண்டு மண்டபத்தின் வாயிலை அடைகின்றேன்.  எனக்கு நன்கு அறிமுகமான பொறியியலார் தணிகாசலம் அவர்கள் ஒரு மேசைக்கு அருகில் நின்று கூட்டத்திற்கு சமூகமளித்துக்கொண்டிருப்பவர்களின் பெயர்களையும் கையொப்பங்களை பதிவுசெய்துகொண்டிருந்தார்.

ஒரு பெண்மணி தனக்கு வெளியில் கிடைத்த பிரசுரத்தை கிழித்து தணிகாசலம் நின்ற அந்த மேசையில் வீசினார். உடனே அவர், 

“ அம்மா… தயவுசெய்து இதனை குப்பைக்கூடையில் போடுங்கள். இந்த மேசையில் வேண்டாம்  “ என்றார்.

அதனைக்கேட்டுக்கொண்டு நின்ற மற்றும் ஒரு    “ அம்மணி   “ வெகுண்டுவந்து,  “ என்னடா சொல்கிறாய்…  “ என்று சத்தம்போட்டுக்கொண்டு தணிகாசலத்தை மேசையுடன் தள்ளினார்.  தணிகாசலம் சுதாரித்து எழுந்தார்.

அந்தக்கூட்டம் களேபரத்துடன்  நடந்தது.

இனிச்சொல்லுங்கள் ஆன்மீகமா… ஆணவமா…?

அதன்பிறகு  இந்து சங்கத்தின் ஒரு சில ஆண்டுப் பொதுக்கூட்டங்களுக்குத்தான் சென்றேன். பின்னர் அங்கே கூட்டங்களுக்கு பாதுகாவல் கடமைக்கு பொலிஸாரும் அழைக்கப்பட்டார்கள் என்பதை அறிந்தேன்.

தற்போது இங்கே கோயில்கள் சில அமைந்துள்ளன.  சில நீதிமன்றங்களுக்கும் சென்றன.  ஒரு கோயிலில் தீயும்  வைக்கப்பட்டது.   சில பூசகர்கள் சட்டத்தின் பிடியிலும் சிக்கினர். சிலர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர்.

அனைத்தையும் சிவா – விஷ்ணுவும், குன்றத்துக் குமரனும்,  பிள்ளையாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எனது பறவைகள் நாவலில் வரும் வசனம் இது :

கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார்… கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்…?

சண்டையைக்கண்டார்…. நெருப்பைக் கண்டார்… பொலிஸைக்கண்டார்… நீதிமன்றத்தைக்கண்டார்… 

 “ Prahran migrant Centre இல் இருந்து சிவா விஷ்ணு கோயில் வரையில்…. “  என்ற தலைப்பில் யாராவது ஒரு வரலாற்று ஆவணம் எழுத மாட்டார்களா…?

எனினும்,  விக்ரோரியா ரொக்பேங்க் குன்றத்து குமரன் கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூல் வரவாகியிருக்கிறது.

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

No comments: