படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் ! கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை முருகபூபதி

 “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம்


பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. கீழே தாங்கி நிற்பவர்கள் அனுபவம் மிகுந்தவர். அவர்களின் அனுபவம் என்ற அத்திவாரத்தில்தான் இளைய தலைமுறை நிமிர்ந்து நிற்கிறது. இவ் இருவர்களும் பிரதான மாணவர்களே. இந்த இருவரிடையேயும் வளரும்   “ கொண்டு கொடுத்தல்   “ உறவு இருவரையும் வளர்க்கும்    இவ்வாறு ஈழத்து தமிழ் அரங்கத்துறையில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும் பா. நிரோஷனின் அரங்க ஆளுமைகள் நால்வர் என்ற நேர்காணல் தொகுப்பு நூலுக்கு வாழ்த்துரை கூறியிருக்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எழுதியிருக்கும்  கூத்த யாத்திரை ( நான் கொண்டதும் கொடுத்ததும் ) கூத்தே உன் பன்மை அழகு ஆகிய இரண்டு நூல்களும், மேற்குறித்த அவரது கருத்தை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் விரிந்த தளத்தில் பேசுகின்றன.

கால ஓட்டத்தினூடே மாறிவந்த கூத்து பற்றிய அவரது கருத்தியலையும் செயற்பாடுகளையும்  பற்றிப் பேசுகிறது கூத்தே உன் பன்மை அழகு.


அவரது இளமைப்பராயம் முதல் அவர் கூத்துக்கலைக்கு அறிமுகமான பின்னணியையும் கூத்து அனுபவங்களையும் வாழ்வில் கண்டு மகிழ்ந்த கூத்துக்கலைஞர்கள் பற்றியும் தனக்கு கூத்தறிவூட்டிய அண்ணாவிமார்கள், ஆசிரியர்கள் பற்றியும் விளக்குகிறது கூத்த யாத்திரை என்ற நூல்.

பேராசிரியர் மௌனகுரு,  ஈழக்கூத்து மற்றும் நாடக அரங்கியல் துறைகளில் சாதனைகள் பல புரிந்தவர்.  தான் கற்றதையும் பெற்றதையும்  இந்நூல்களில் பதிவுசெய்திருக்கிறார்.

அத்துடன்,  இந்தத்துறைகள் மாத்திரமல்ல, வேறு எந்தவொரு துறையும் அஞ்சலோட்டத்திற்கு நிகரானது என்பதையும் நிறுவுகின்றார்.

நாம் பார்க்கும் சினிமாவின் ஊற்றுக்கண்ணே கூத்து தான். கூத்திலிருந்து நாடகமும், நாடகத்திலிருந்து சினிமாவும் வளர்ந்திருக்கின்றன.

  “ எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன என்பது இயற்கையின் இயங்கியல் ஆகும். இந்த இயங்கியல் கொள்கையில் நம்பிக்கையுடைய நான் எதனையும் அந்த இயங்கியல் நோக்கில் புரிந்துகொள்ள முயல்கிறேன்.    என்று கூத்தே உன் பன்மை அழகு நூலின் முன்னுரையில் மௌனகுரு பதிவுசெய்கின்றார்.

அத்துடன் தான் கூத்துக்கலை தொடர்பாக எழுதும் கட்டுரைகளை தனது நண்பர்களிடமும் மாணவர்களிடமும் கொடுத்து கருத்துக்கேட்கும் பழக்கத்தையும் இயல்பிலேயே கொண்டிருப்பவர் என்ற தகவலையும் அறிகின்றோம். 

அதனால், அவரால் இத்துறைசார்ந்து இயங்கும்போதும் எழுதும்போதும் செம்மைப்படுத்தலுக்கும் தயாராகின்றார்.  இந்தப்பண்பு ஏனையோருக்கும் முன்மாதிரியானது. 

அவரது பல்கலைக் கழகப்பணி 2009 ஆம் ஆண்டுடன் ஓய்வுக்கு


வருகிறது. எனினும்,  இந்த மகா கலைஞனிடமிருந்து கூத்தோ, நாடகமோ செய்யும் வாய்ப்பு அவருக்கு அங்கே கிடைக்கவில்லை என்பதும் தெரிகிறது. அவ்வாறிருந்தால் என்ன…?  கடல் அலை ஓய்ந்தாவிடும்.  இது கலைக்கடல்.!

அவர் அரங்க ஆய்வு கூடத்திலும் சுவாமி விபுலானந்தர்  அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பக்கமும் தனது இயக்கத்தை தொடருகிறார்.  அத்துடன் கூத்துக்கலை பற்றிய கடந்த கால அனுபவங்களையும், தனது தொடர் யாத்திரையையும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

அதன் பெறுபேறாகவே இந்த இரண்டு நூல்களும் வரவாகியிருக்கின்றன.

மௌனகுரு அவர்களின் இராவணேசன் கூத்து இலங்கையில் மாத்திரமல்ல இலங்கை – இந்திய – சிங்கப்பூர் – மலேசியத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளிலும் பிரசித்தமானது.

கூத்தே உன் பன்மை அழகு நூலில், தனது தொடர் கூத்தில் மேற்கொண்ட பணிகளை இவ்வாறு வகைப்படுத்தியிருக்கிறார்.

01. 

புதிய முறையில் இராவணேசன் – வடமோடி 02. புதிய முறையில் நொண்டி நாடகம் – தென்மோடி – 03. புதிய முறையில் காண்டவ தகனம் – வடமோடி,  04. புதிய முறையில் இமயத்தை நோக்கி – வடமோடிக் கூத்து கலந்த நாடகம், 05. புதிய முறையில்  ‘தோற்றம்  ‘நாடகம் – வடமோடிப்பாணி, 06. மண்ணோக்கிய வேர்களும் விண்ணோக்கிய கிளைகளும் – புதிய முறையில் மட்டக்களப்பு கூத்தின் பரிமாணம், 08. மனம்மாறிய மன்னர்கள் – வடமோடிக் கூத்து மீளுருவாக்கம், 09. கூத்தும் பரதமும் 10. கூத்து கச்சேரி செய்ய நினைத்திருக்கும் மீளுருவாக்கம் முதலான தலைப்புகளில் எழுதியிருக்கும் அவர், சகல ஈழத்து கூத்து ஆடல்களையும் இணைத்து ஈழத் தமிழருக்கான புதியதோர் தேசியத் தமிழ் கூத்தை உருவாக்குதல் பற்றி சிந்திக்கின்றார்.

கூத்த யாத்திரை நூலை அவர் கதைசொல்லியாக விவரித்திருக்கிறார். இந்நூலின் இறுதியாக இடம்பெறும்  “நந்தவனத்திற்கு அழகு பல்வகைப்பூக்களே. கால ஓட்டத்தினூடே கூத்து பற்றிய எனது கருத்தியலும் செயற்பாடுகளும்   “ என்ற தலைப்பில் தான் கண்டடைந்த திசையை காண்பிக்கின்றார்.  

ஈழத்தின் கூத்து மரபு மாறிவந்திருக்கும் கோலங்களை இந்த நூல்களின் வாயிலாகத் தெரிந்துகொள்கின்றோம். 

இம்மாதம் ( ஜூன் ) 09 ஆம் திகதி பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கு  79 வயது.  அவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கூறும் இச்சந்தர்ப்பத்தில்,  அவரது இரண்டு முக்கிய நூல்கள் பற்றிய அறிமுகக்குறிப்புகளை எழுதநேர்ந்ததும் தற்செயலானது.

இரண்டு நூல்களையும் கொழும்பு குமரன் புத்தக இல்லம் வெளியிட்டிருக்கிறது.

 


No comments: