விரதங்கள்?

 












மெய்யாக வழிபடுவோர் மேனிவிதிர் விதிர்ப்பெய்ய

விழியிரண்டும் அவன்கருணை தனைவியந்து நீர்சொரியக்

கைகூப்பிச் சிவனைத்தம் இதயத்தில் நினைத்திருத்திக்

கசிந்துருகி மௌனமாய்ச் சிவத்தியானம் இயற்றிடுவர்!

 

விரதமிருக் குமன்பர்கள் மெய்யைமிக வருந்தியந்தோ

வேளையொன்றோ பலநாளோ உண்ணாது இருந்திடுவர்!

சிரமமொடு ஒருவாறு உபவாசம் கூட்டிடுவர்!

திருத்தளிக்குச் சென்றுதங்கள் பெருவிரதம் முடித்திடுவர்!











































தொய்யாத பக்தியொடு தூயவிர தமிருப்போர்

தோன்றாத்துணை யாகிநிதம் சுகமருளும்; பரம்பொருளும்

செய்ததொடர் வினைநீக்கிச் சிவமாக்கிப்  பிறப்பறுத்துத்

தெவிட்டிடாப்பே ரின்பப்பெருஞ் சோதிதனிற் சேர்க்குமன்றோ?

 

சிவராத்திரி நாள்களிலே இரவெல்லாம் விழித்திருக்க

தேடிப்பல  உயுக்திகளை மெத்தவுமே செய்வருளர்!

தவவிரதம் எனச்சொல்லி இருக்கையிலே சிந்தைசெயும்

தவறான கற்பனையில் சுகங்காண்போர் பலருண்டு!

 

அவப்பொழுதாய்ப் பொன்னான நேரத்தைப் போக்குகையில்

ஆண்டவனின் அருளவர்க்கு எவ்வாறு சித்திக்கும்?

பவஞ்சேர்க்கும் நினைவகற்றிப் பரமசிவன் நினைப்புடனே

பண்ணிவரும் விரதந்தான்; நல்வினையைக் கூட்டிடுமே!

 

அந்தவொரு இரவுக்குள் ஐந்துபடம்  பார்த்திடுவர்

ஆபாசம் அதிலிருக்கும்! அடிகுத்துக் கொலையிருக்கும்!

சிந்தையிலே தேவையற்ற  எண்ணங்கள் சதிராடச்

சிவத்தியானம் எவ்வாறு சாத்தியமோ லொல்லிடுவீர்?

 

தூங்காது இராத்திரியைப் போக்கிவிட்டால் நிச்சயமாய்ச்

சோதிச்சிவன் துணைநின்று பலனளிப்பான் என்றிவர்கள்

தீங்கான வீண்மூட நம்பிக்கை மாறாதோ?

திருவருளைப் பெறும்முறையைச் சிறிதளவும் அறியாரோ?

 

கந்தசட்டி விரமென்றால் கஸ்டப்பட்டு ஆறுநாளைக்

கழித்தபின்னர் வருநாளில் கொழுத்தகிடாய்க் கறிசமைக்க

சிந்தையினால்  நாள்களையே எண்ணுவோரை நானறிவேன்!

விந்தையான மனிதர்தீ வினையையன்றோ கூட்டுகின்றார்!

 

 

அதிசிறந்த விரதம் எது தெரியுமா?

 

கள்ளமில்லா உள்ளத்தால் காலகண்ட னவன்பெயரைக்

கணமேனும் மறவாது சிந்திக்கும் செயல்தனையே

தௌ;ளத்தெளி வானபெரும் விரதமெனச் சிவனேற்பான்!

தெரிந்துசெயும்  நோன்புகளில்; அதிசிறந்த விரதமிதே!

 

ஐம்பொறி அடக்கத்தாலும்; அறுகுண சீரமைப்பாலும் மனத்தூய்மையை வளர்த்து உயிர்கள்மேல் அன்பும் உடையவராயிருந்து விரதங்;களை அனுட்டித்தல் வேண்டும். ஒரு நேர உணவு உட்கொள்ளுதல். பட்டினியாகப் பல நாள்கள் விரதம் இருத்தல் முதலியன ஐம்பொறி அடக்கத்துக்கும் மனத் தூய்மைக்கும் ஏதுக்களாக அமைக்கப்பட்டன. ஆனால் அவனருளைப்; பெறுவதற்கு நின்றும். இருந்தும். கிடந்தும் நடந்தும் இறைவனை இமைப் பொழுதும் மறவாது நினைத்திருத்தலே எல்லா விரதங்களிலும் மேலான விரதமாகும்! 

 
























தொய்யாத பக்தியொடு தூயவிரதம்  இருப்போரில்

தோன்றாத்துணை யாகிநிதம் சுகமருளும் பரம்பொருளும்

செய்ததொடர் வினை நீக்கிச் சிவமாக்கிப் பிறப்பறுத்துத்

தெவிட்டிடாப்பே ரின்பப்பெருஞ் சோதிதனிற் சேர்க்குமன்றோ?






















No comments: