ஆரோக்கியமும் ஆளும் வர்க்கமும் ஆளப்படும் மக்களும் ! பணநாயகமும் ஜனநாயகமும் !! அவதானி


இலங்கையில் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களும், அதற்கு எதிரான எதிரணி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பணவசதி படைத்த செல்வந்தர்கள்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அவர்களிடமிருக்கும் பணம், சொத்து, உடமைகள் குறித்து ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வளமுடன் வாழ்பவர்கள்.

சிலர் அரசியலுக்கு வருமுன்னர் வைத்திருந்த செல்வத்தை, அரசியலுக்கு வந்த பின்னர் பெருக்கியிருப்பார்கள். வேறும் சிலர் அரசியலுக்கு வந்த பின்னரே பெரும் செல்வந்தர்களாகியிருப்பார்கள். இன்னும் சிலர் செல்வந்தர்களாவதற்கே அரசியலுக்கு வருவார்கள்.  இவர்கள் தாம் தோற்றால்,  “ பணநாயகம் வென்றது    என்பார்கள். வெற்றி பெற்றால்,  “ ஜனநாயகம் வென்றது    என்பார்கள் !

தேர்தல் காலங்களில் பெரும்பாலான அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைத்து செலவுசெய்வதன் நோக்கமே, ஆட்சிபீடமேறியவுடன், செலவழித்தவற்றை வட்டியோடு மீளப்பெற்றுக்கொள்வதற்காகத்தான்.

ஆளும்வர்க்கத்துடன் இணைந்து பதவி சுகம் பெற்றால், சாதாரண


மார்புவலி வந்தாலும் வெளிநாடு சென்று சிகிச்சை செய்வதற்கு வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.  சமகால ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவும் சிங்கப்பூருக்குச் சென்றுதான் தனக்கான இருதய சத்திர சிகிச்சை செய்துகொண்டு வந்தவர்.

அதன்பின்னரும் விசேட கவனிப்பிற்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் அங்கே அவ்வப்போது சென்று வருபவர். அவருடை பதவிக்காலத்தில் மாற்றப்பட்ட முக்கியமான அமைச்சர்களில்  சுகாதார நலத்துறை அமைச்சர்களும் அடங்குவர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராய்ச்சியின் பதவி பறிக்கப்பட்டபோது, அவர் ஊடகவியலாளர்களுக்கு சொன்ன கதையை ஏற்கனவே அவதானி இந்த பத்தியில் எழுதியிருக்கிறார்.

கோத்தா கோ கம போராட்டம் தொடங்கி ஐம்பது நாட்கள் கடந்துவிட்டன.  இக்காலப்பகுதியிலும் அதற்கு முன்னர் கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியிலும் இந்த அரசு சில அமைச்சரவை மாற்றங்களை கண்டுவிட்டது.

தற்பொழுது சுகாதார அமைச்சராகவிருக்கும் கெகலிய ரம்புக்வெலவும் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவிடத்தில் தாம் தங்கியிருந்த உல்லாச விடுதியின் மேல் மாடியிலிருந்து தவறிவிழுந்து, இங்குள்ள மருத்துவமனையில் பல நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்தான். அதன் பிறகும் விசேட மருத்துவ ஆலோசனைகளுக்காக வந்து சென்றவர்தான்.

இவ்வாறு இலங்கை அரசின் அதிபர், பிரதமர், உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வரப்பிரசாதங்களும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான்  கிடைக்கின்றன.

ஆனால், இந்த ஆளும்வர்க்கத்தை பதவியில் அமர்த்தும் சாதாரண மக்களின் ஆரோக்கியம் குறித்து அமைச்சர்களும் முக்கியமாக சுகாதார அமைச்சரும் அவரது அமைச்சினைச்சேர்ந்த உயர் அதிகாரிகளும் அக்கறை செலுத்துகிறார்களா….? என்ற கேள்வி எழுகிறது.

தலைநகரில் மருத்துவக்களஞ்சியத்திலிருந்து பெருந்தொகையான மருந்துகள் பாவனைக்குதவாத நிலைக்குள்ளாகியிருக்கிறது. அவற்றின் பெறுமதி 625 கோடி 90 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடியில் உச்சத்திலிருக்கும் இவ்வேளையில்,  இத்தகைய பாரிய நட்டத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த அக - புறக்காரணிகள் குறித்து சுகாதார அமைச்சு இதுவரையில் ஆராய்ந்திருக்கிறதா…? என்பது தெரியவில்லை!

நாட்டில் அத்தியாவசியமான மருந்துகளின் விலையேற்றத்தாலும் தட்டுப்பாட்டினாலும் உரிய சிகிச்சைகளை பெறமுடியாமல் திணறிக்கொண்டிருப்பவர்கள் ஏழை மக்கள்.  பல மருத்துவமனைகளில் சத்திர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இந்தப்பின்னணிகளில்தான் பெருந்தொகையான மருந்துகள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமல் வீணாகியிருக்கின்றன.

தற்போது சுகாதார அமைச்சராகியிருக்கும் கெகலிய ரம்புக்வெல,  “ மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு கிடைத்துவிடும்  எனச்சொல்கிறார்.  இவ்வாறுதான் ஜனாதிபதி முதல் பிரதமர் வரையில் அமைச்சர்களும் நாள் குறித்து, பிரச்சினைகளுக்கு ஒத்தடம் தந்துகொண்டிருக்கின்றனர்.

இதேவேளை,  “ முறையான பொருளாதார கட்டமைப்பு உருவாகாத வரையில் உலக வங்கி நிதியுதவி எதனையும் வழங்கமாட்டாது  “ என மாலைதீவு, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  இது அபாயச்சங்கு !

கடந்த மாதம் பதவியேற்ற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் முடிந்தவரையில் உலக நாடுகளிடம் கையேந்திக்கொண்டுதானிருக்கிறார். புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்களும் நாட்டுக்கு உதவவேண்டும் எனக்குரல் கொடுக்கிறார்.

அவரும், அவரது மாமனார் ஜே. ஆர். ஜெயவர்தனாவும் பதவியிலிருந்த 1977 – 1987 காலப்பகுதியையும் அவர் மீண்டும் திரும்பிப் பார்க்கவேண்டும். இக்காலப்பகுதியில்தான் மூன்று கலவரங்கள் வந்தன.  1977 – 1981 – 1983. அத்துடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரசித்திபடைத்த யாழ். பொது நூலகமும் அன்றைய அரசின் சீருடைக் காவலர்களினால் எரித்து நாசமாக்கப்பட்டது.  அக்காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு பல்வேறு வழிகளில் உதவுவதற்காக ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை வெளிநாடுகளில் ஆரம்பித்து அவற்றின் மூலம் தாயகத்திற்கு உதவினார்கள்.

கல்வி, புனர்வாழ்வு, சுகாதாரம், மருத்துவ தேவைகள் உட்பட பல விடயங்களுக்கு உதவி வந்தார்கள். சுநாமி கடற்கோள் அநர்த்தம், கொவிட் பெருந்தொற்று வந்தபோதும் புலம்பெயர் உறவுகள் தம்மாலியன்ற உதவிகளை வழங்கினர்.

ஆனால், ஆளும்வர்க்கத்தினர் என்ன செய்தனர்…?

அவர்கள் பதவி சுகத்துடன் சுருட்டிக்கொண்ட சொத்துக்களைப்பார்த்துவிட்டுத்தான்- தமது வயிற்றில் அடிவிழுந்தவுடன் மக்கள்  கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்.  இப்போது மீண்டும் புலம்பெயர் உறவுகள் உதவ வேண்டும் என்று புதிய பிரதமர் குரல்கொடுக்கிறார்.  தமிழக அரசும் இன, மத, மொழி பேதமின்றி உதவுவதற்கு முன்வந்து உலர் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துவகைகளையும் வழங்கிவருகிறது.

அவ்வாறிருக்கையில், கைவசம் இருந்த மருந்துகளைக்கூட காப்பாற்றி வைத்துக்கொள்ளத் தெரியாமல், இலங்கையில் சுகாதார அமைச்சு மெத்தனமாக இருந்திருக்கிறதே…!

இன்றைய பிரதமர் முன்னர் அமைச்சராகவிருந்த 1977 காலப்பகுதியில்தானே திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதனால், உள்நாட்டு உற்பத்திகள் வீழ்ச்சியடைந்தன.

அன்று வடக்கில் வெங்காயம், மிளகாய், பயறு, உழுந்து முதலான உற்பத்தியில் விவசாயிகள் உச்சங்களை தொட்டிருந்தனர். அவர்களின் வயிற்றில்  அன்று அடித்தவர்கள் இன்று வீட்டுத்தோட்டம் செய்யச்சொல்கிறார்கள். பயறு செய்கையில் ஈடுபடும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப் போகிறார்களாம்.

நல்லது. கண்கெட்ட பின்புதான் இலங்கை அமைச்சர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். 

முதலில் இந்த அமைச்சர்கள் தங்கள் அமைச்சின் செலவீனங்களை குறைக்கட்டும்,  அமைச்சின் பொறுப்பிலிருக்கும் திணைக்களங்களை கண்காணிக்கட்டும். அங்கெல்லாம் தொடர்ச்சியாக நேர்ந்துகொண்டிருக்கும் வீண் விரயங்களை முற்றாகத்தவிர்ப்பதற்கு  நடவடிக்கை எடுக்கட்டும். 

தற்போது சுகாதார நலத்துறை அமைச்சராகியிருக்கும் கெகலிய ரம்புக்வெல முன்னர் ஊடகத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தான்.

மக்களின் தேவைகள், கோரிக்கைகள் குறித்தெல்லாம் இலங்கை ஊடகங்களில் வெளியாகும் ஆசிரியத் தலையங்கங்களை அவர் பார்ப்பதில்லையா.. ?  ஒவ்வொரு அமைச்சிலும், ஊடகத்துறையை கவனிக்க ஒரு அதிகாரி இருப்பார். ஊடகங்களில் தமது அமைச்சு தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், அதனை அமைச்சரிடம் காண்பிக்கவேண்டியது அவரது பிரதான கடமை. அதனை அவர் சரியாகச்செய்கிறாரா..?

அண்மையில் 625 கோடி 90 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துவகைகள் பழுதடைந்த செய்தியை அந்த சுகாதார  அமைச்சரோ, அல்லது அவரது அதிகாரிகளோ ஊடகங்களில் பார்த்தார்களா..,? என்ன நடவடிக்கை எடுத்தார்கள்…?

இந்தக்கேள்வியை முன்வைக்கின்றவேளையில்தான்,  சுகாதார அமைச்சர் “ மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு கிடைத்துவிடும்  “ எனச்சொல்கிறார்.

சரி. இரண்டு மாதங்களுக்கு பொறுத்திருப்போமா…?

----0----

 

 

No comments: