இலங்கைச் செய்திகள்

 சிறை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் துமிந்த

மள்வானை வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் விடுதலை

யாழ். பொதுசன நூலகம் தீயூட்டப்பட்டு 41 ஆண்டு நினைவேந்தல்



சிறை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் துமிந்த

விசாரணையின் பின் CID கையளித்தது

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியும், அவரை மீண்டும் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 30ம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துமிந்த சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின் அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ அறிக்கையைப் பொறுத்து தேசிய மருத்துவமனை அல்லது சிறைச்சாலை மருத்துவமனைக்கு துமிந்த சில்வா விரைவில் மாற்றப்படுவார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.       நன்றி தினகரன் 








மள்வானை வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் விடுதலை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் மள்வாளை காணி வழக்கிலிருந்தும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்றையதினம் (03) கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மள்வானை பிரதேசத்தில் உள்ள 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து அங்கு நீச்சல் தடாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பாரிய சொகுசு வீடொன்றை நிர்மாணித்து அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டாளரால் அழைக்கப்பட்ட முதலாவது சாட்சியாளர் நிதிக் குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்யவில்லையெனவும், வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள கையொப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, சாட்சியமளித்துள்ளதன் காரணமாக,  வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லையென, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார்.   நன்றி தினகரன் 







யாழ். பொதுசன நூலகம் தீயூட்டப்பட்டு 41 ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 41ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று காலை 9.30மணியளவில் யாழ்.பொதுசன நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நினைவேந்தலின் போது யாழ்ப்பாண பொதுசன நூலகம் உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.  நினைவேந்தலின் போது யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொதுசன நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.  நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

பருத்தித்துறை, யாழ்.விசேட, கோப்பாய் நிருபர்கள்

நன்றி தினகரன் 






No comments: