மாண்புறு நல்லாசிரியர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள்! - ஒரு நனவிடை தோய்தல் - அவுஸ்திரேலியாவிலிருந்து, சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

நடராசன் சேர் இவ்வுலகை நீத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தபோது, தாங்கொணாத் துயர் என் தொண்டையை இறுக்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டெழும்போது, அவருடன் உறவாடிய நினைவுகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நெஞ்சில் அலை மோதத் தொடங்கின.

 

என் வாழ்வில் மறக்க முடியாத அவர், எனது உயிரியல் பாட ஆசிரியர். என்னுள்ளிருந்த எழுத்து ஆற்றலை இனங்கண்டு, என்கழுத்தைப் பிடித்து எழுத்து உலகில் இழுத்துத் தள்ளிவிட்ட பெருந்தகை. தமிழை உயிராகவும், பகுத்தறிவை உணர்வாகவும் கொண்டு வாழ்ந்த விஞ்ஞான ஆசிரியர். என்னில் மிகுந்த அன்பு கொண்டு கண்காணித்து என் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர். 1980 ஆம் ஆண்டு, நாயன்மார்கட்டில், அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தபோது, தன்வீட்டில் ஒருநாள் தங்கிச் செல்லவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டு என்னைச் தங்கச் செய்து, மகிழ்வு கொண்டு என்னையும் மகிழவைத்தார். எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டபின்னர், மணப்பெண்ணுடன் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வந்தேன். அதுவே அவரை நேரிலே இறுதியாகச் சந்தித்த நாளாகிவிட்டது.  

ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக,

உன்னதமான ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தமர் அவர். மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், எட்டாம் வகுப்பில் பொதுவிஞ்ஞானத்தையும், ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்களில் (.பொ.. சாதாரண தரம்) உயிரியலையும் எங்கள் வகுப்பினருக்கு கற்பித்தார். இந்த இரண்டு பாடங்களைக் கற்பித்த ஒரே காரணத்திற்காக மட்டுமல்ல, கண்டிப்பான ஒரு தந்தையைப் போல, அன்பான ஒரு தாயைப்போல, கண்ணியமான ஒரு தமயனைப்போல, இடுக்கண் வருங்கால்,  களைகின்ற ஒரு நண்பனைப்போல எங்களை அரவணைத்து வளர்த்தெடுத்த பெருந்தகையாக அவர் விளங்கினார் என்பதாலும், மறக்கமுடியாத ஆசிரியராக அவர் எங்கள் இதயங்களில் குடிகொண்டிருந்தார்.


சிறந்த ஆசிரியர்கள் பலரிடம் கல்விகற்கும் பேறு எங்களுக்குக் கிடைத்தது. அவர்களில் மிக உயர்ந்த ஆசிரியராகத் திகழ்ந்தவர் நடராசன் சேர் அவர்கள்.


வேட்டியும்
, அதே வெள்ளை நிறத்தில் (வாலாமணி என்று சொல்லப்பட்ட)  முழுநீளக்

கைச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அணிந்த அந்த மெல்லிய, உயர்ந்த உருவம் வகுப்பிற்குள் வரும்போதே எங்கள் முகமெல்லாம் பூவாகப் பூக்கும்.

மட் பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அவரின் காலம் ஒரு பொற்காலமே. அதிபராக க. அருணாசலம் அவர்கள் கடமையாற்றிய நற்காலம் அது. அதுவரை மாணவர்களுக்குச் சீருடை என்று ஒன்று இருந்ததில்லை. சீருடையை எங்கள் பாடசாலையில் முதல்முதல் அறிமுகப்படுத்தி, செயற்படுத்தியவர்கள் அதிபர் அருணாசலம், ஆசிரியர்கள் பி.நடராசன், ஆசிரியர் சின்னச்சாமி ஆகியவர்களே.

தனது பாடங்களைக் கற்பிப்பதோடு மட்டுமன்றிப் பாடசாலையின் சிறப்பிற்கும் மாணவர்களின் உயர்வுக்குமான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுத்தார்.

கல்விச்சுற்றுலாக்கள், கலை விழாக்கள், களியாட்ட விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், அறிஞர் பெருமக்களின் பேருரைகள், பொருட்காட்சிகள், பொது அறிவுப் போட்டிகள், பத்திரிகை வெளியீடுகள் என்றிவ்வாறு எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து பாடசாலைக் கல்விக்கு மேலாகவும் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதற்காக அவர் அரும்பாடுபட்டார்.

கிழக்கு மாகாணத்திலே முதன்முதலாக, மாபெரும் விஞ்ஞான, கலைப் பொருட்காட்சியுடன் களியாட்ட விழாவும்  ( Science & Art Exhibition and Carnival ) 1967 ஆம் ஆண்டு  பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த பெரும்பாலான பாடசாலைகள் வந்து பார்த்துப் பயனடைந்தன. தேசிய உயர்கல்விச் சபையின் தலவராகவிருந்த கலாநிதி

ஜீ. மலலசேகரா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்த மாபெரும் பொருட்காட்சியையும் களியாட்ட விழாவையும் சரியாகத் திட்டமிட்டு சிறப்பாக நடத்திமுடித்த பெருமைக்குரியவர்களில் ஆசிரியர் பி.நடராசன் அவர்களும் ஒருவராவர். அந்தப் பொருட்காட்சியின் விஞ்ஞானப் பகுதி அவரது வழிகாட்டுதலிலேயே செயற்படுத்தப்பட்டிருந்தது. 

1968/69 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.(சா.) பொதுப்


பரீட்சைகளின் பெறுபேறுகள்
அந்தப் பாடசாலை வரலாற்றில், அதுவரை கிடைத்திராத வகையில், உச்சத்தைத் தொட்டன. ஏற்கனவே ஓங்கி உயர்ந்து நின்ற நகரப் பாடசாலைகளையும் விஞ்சும் அளவுக்கு அமைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து, பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் வந்து கல்வி பெற்றுக்கொண்டிருந்த, எங்கள் வித்தியாலயத்திற்கு வடக்கே காத்தான்குடியிலிருந்து தெற்கே தம்பிலுவில் வரையான ஊர்களில் இருந்து மாணவர்கள் வரத்தொடங்கினார்கள்.  இந்த நிலைமை ஏற்படுவதற்கு வழி சமைத்தவர்களில் ஆசிரியர் பி.நடராசன் அவர்கள் முக்கியமானவர் ஆவார்.

நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் நடராசன் அவர்கள் மாணவர்களைக்கொண்டு "விஞ்ஞான தீபம்" என்ற கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்தார். பாடவிதானங்களோடு தொடர்பு பட்ட விடயங்களைப் புதினங்களாக எழுதும் ஆற்றலை மாணவரிடையே வளர்த்தார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக பெரியகல்லாற்றைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான க. இரவீந்திரன் அவர்களை நியமித்தார். ( இப்போது பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமாகத் திகழ்கின்ற "ரவிப்பி ரியா" அவர்களே அந்த இரவீந்திரனாவார்)

நான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது "உயிர்ப்பு" என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை மாதாந்தம் வெளியிடுவதற்கு அவர் தீர்மானித்தார்.பத்திரிகையைப் பற்றிய விளம்பரம் பாடசாலை விளம்பரப்பலகையில் போடப்பட்டிருந்தது. அதில் "இதழாசிரியர்" சு.ஸ்ரீகந்தராசா என்றிருந்தது. அதனைப் பார்த்ததும் நான் அவரிடம் ஓடோடிச் சென்று கேட்டேன். “என்ன சேர் இது...? “ என்று இழுத்தேன். " ஓம்.. நீர்தான் இதழாசிரியர். நாளையிலை இருந்து பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்குப் போகக்கூடாது. ஒவ்வொருநாளும் ஒரு மணித்தியாலம் இங்கேயிருந்து உயிர்ப்புவேலைகளைப் பார்க்கவேண்டும், விளங்குதோ?" என்றார். என்னால் மறுக்கவாமுடியும்? "சரி சேர்" என்றேன். உயிர்ப்பு இதழ் கல்லச்சுப் பிரதியாக வெளிவந்துகொண்டிருந்தது.   புகைப்படப்பிரதி (Photocopy) எடுக்கும் வசதி, இல்லாத காலம் அது!  தட்டச்சுக்கு அடுத்தபடியாக  "ரோனியோ" என்னும் கல்லச்சுப்பிரதி எடுத்து பரீட்சை வினாத்தாள்களைத் தயாரித்த காலம்.

திடீரென்று ஒருநாள் பாடசாலை விளம்பரப் பலகையில், “அடுத்த உயிர்ப்பு இதழில், 'ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நான்!'  திருமுருகிறை எழுதும் கற்பனைக் கதை."

என்று இருந்தது.  அன்றும் ஓடிச்சென்று அவரிடம் கேட்டேன். "என்ன சேர் இது?" என்று. "ஓம் நீர்தான் எழுதுதுறீர். ஒன் மில்லியன் இயர்ஸ் பீசீ படம் பாத்தீர்தானே! அதை மனதில் வைச்சுக்கொண்டு எழுதும்." என்று சொன்னார். அதற்கு முந்திய வாரம் பாடசாலையால் ஆசிரியர்கள் எங்களை மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் திரையிடப்பட்ட "   One Million Years BC  " என்ற திரைப்படத்திற்குக் கூட்டிச் சென்றிருந்தார்கள்.  டைனொசோரஸ் பற்றிய அந்தத் திரைப்படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்பட்ட உணர்வில், கற்பனையாக ஒரு கதையை எழுதும்படி என்னைப் பணித்தார். அவர் ஏதும் சொன்னால் அதை அப்படியே ஏற்று நடப்பதைத் தவிர மாற்று வழி எதையும் நினைத்துக்கூடப் பார்க்காத அவரின் விருப்பத்திற்குரிய மாணவர்களில் ஒருவனாக இருத்தமையால், இதையும் உள்ளார்ந்த மகிழ்வோடு தலையாட்டி ஒப்புக்கொண்டேன்.

அடுத்த உயிர்ப்பு இதழில் எனது கற்பனைக் கதை இடம்பெற்றது. பாடசாலையின் ஆசிரியர்கள் பலரால் பாராட்டப்பட்ட அந்தக்கதையின் என் கையெழுத்துப் பிரதி இன்னும் என்னிடம் உள்ளது.

திருமுருகரசன், திருமுருகிறை என்பதெல்லாம் அவர் எனக்கு இட்டிருந்த புனைபெயர்கள். அதாவது, "நடராசன்: என்ற தனது பெயரை "ஆடலரசன்", "ஆடலிறை" என்று மாற்றி, அவர் புனைபெயர்களாகப் பயன்படுத்தியதைப்போல, ஸ்ரீகந்தராசா என்ற எனது பெயரை, "திருமுருகரசன்", என்றும் "திருமுருகிறை" என்றும் தமிழ்ப்படுத்திப் புனைபெயராக்கித்தந்தார். பாடும்மீன் என்று நான் புனைபெயர் வைத்துக்கொண்டதற்கும் ஒருவகையில் அவரே காரணமாக இருந்தார்.

1970 ஆம் ஆண்டு, (உயர்தர வகுப்பில் சேர்வதற்குக்காத்திருந்த காலத்தில்) எனது பதினேழாவது வயதில் அவர் என்னைச் சுதந்திரன் பத்திரிகையில் எழுதத்தூண்டினார். அப்போது சுதந்திரன் முகாமையாளராக  . உமாபதிசிவம் அவர்களும், ஆசிரியராக கோவை மகேசன் அவர்களும் இருந்தார்கள். அவர்கள், என்னைச் சுதந்திரன் பத்திரிகையின் நிருபராக நியமித்தார்கள். தேர்தல் கூட்டங்களுக்குச் செல்வதும், அவற்றைப்பற்றிய செய்திகளை எழுதுவதும் மட்டுமல்லாமல் தமிழரசுக் கட்சியின் கொள்கைகள் பற்றியும்,

மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கும் கட்டுரைகளையும் எழுதினேன். எனது எழுத்துக்களைப் பலமுறை பாராட்டிய அவர், எதையும் அவதானத்தோடும், அறிவார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் எழுதவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

ஆசிரியர் பி.நடராசன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் சில.

1939 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம்திகதி, யாழ்ப்பாணத்தில் மயிலங்கூடல் என்ற ஊரில் பிறந்த நடராசன் அவர்கள், மயிலங்கூடலூர் பி. நடராசன் என்றே தன்னை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி வந்தார். சிறுவயதில் தனது தந்தையை இழந்த அவர், தனது இளவயது வயது மகனைப் பறிகொடுத்த துயரத்தையும் சுமந்தவர். ஆடலிறை, ஆடலரசன், பொய்கையார், கூத்தன், நடராசமைந்தன், காங்கேசன், திருப்பெருந்துறையிறை, செந்தூரன் என்ற புனை பெயர்களில் எழுத்துலகில் பிரகாசித்து வந்தவர்.

இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற அவர், தொடர்ந்து பன்னாலை கனகசபை வித்தியாசாலை, இளவாலை புனித என்றியரசர் கல்லூரி ஆகியவற்றிலும் பயின்று பின்னர் உயர்தரக் கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். இளமையிலேயே மிகுந்த  தமிழ் ஆர்வம் கொண்டிருந்த அவர், மல்லாகத்தில், பண்டித வகுப்பில் சேர்ந்து படித்து, பாலபண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றார். வவுனியாவில், வண்ணான்சின்னக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியராகத் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த பி. நடராசன் அவர்கள் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று, 1966 ஆம் ஆண்டு, தனது இருபத்தி ஏழாவது வயதில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள, மட்/பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகக் காலடி பதித்தார். ஏறத்தாழ ஆறுவருடங்கள், அங்கு கடமையாற்றிய அவர், பலநூறு மாணவர்களைக் கல்வியிலும், கல்விக்கு மேலதிகமான ஆளுமைப் பண்புகளிலும் சிறப்புற்றோங்கும் செயற்பாடுகளில் அயராது உழைத்தார்.

பண்டிதம், கையெழுத்துச் சஞ்சிகை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 'சுடர்' அறிவியல் சஞ்சிகை,  தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின்  FWC என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை என்பவற்றின் ஆசிரியராகவும்  மகாஜனன் என்ற சஞ்சிகை மற்றும், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, கலாநிதி சு.வித்தியானந்தன், கலாநிதி. . சண்முகதாஸ், சொக்கன் ஆகிய அறிஞர்களின் நூல்களின் பதிப்பாசிரியராகவும் அரும்பணியாற்றியுளார். குழந்தைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் என்ற பெயர்களில் சிறுவர்களுக்காக இரண்டு நூல்களை ஆடலிறை என்ற பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார்.

மாணவர் சமுதாயத்தின் மதிப்புமிகு ஆசிரியராக, தமிழறிஞராக,  கவிஞராக, எழுத்தாளராக,  சிறுவர் இலக்கியத்திற்குச் சீரிய பணிசெய்த இலக்கியவாதியாக,  சிற்றிதழ்களின் ஆசிரியராக, பல நூல்களின் பதிப்பாளராக, இலக்கிய மொழிபெயர்ப்பாளராக என்றிவ்வாறு வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற பணிபுரிந்த நல்ல மனிதராக வாழ்ந்த ஆசிரியப் பெருந்தகை, பி.நடராசன் அவர்கள், கடந்த 2022 மே மாதம் 12 ஆம்திகதி, நல்லூரில், நாயன்மார்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இவ்வுலகைவிட்டுச் சென்றார்.

ஏறத்தாழ, நாற்பது ஆண்டுகள் அவரோடு நேரடியாகத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், எப்போதும் அவரின் நினைவுகள் எனது நெஞ்சில் படர்ந்துகொண்டேயிருந்தன. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எனதுபள்ளித் தோழர்களோடு பேசுன்றபோதெல்லாம் எங்களிடையே

அவரது நினைவுகளை அடிக்கடி பகிர்ந்துகொண்டேயிருந்தோம். 

கடந்த சில மாதங்களாக நான் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். பல்வேறு வேலைப் பழுக்களினால் எழுத நேரம் கிடைக்கவில்லை, மனமும் இடந்தரவில்லை. அன்று வெள்ளிக்கிழமை கடந்த மே மாதம் 13 ஆம் திகதி, காலை வேளையில் அவரின் மரணச் செய்தி கிடைத்தது. துக்கம் இதயத்தை வாட்டியது. சோகத்தால் உடல் முழுவதும் பலமிழந்ததைப் போலாகியது. பள்ளிப் பருவத்து வாழ்க்கை நெஞ்சில் படமாக ஓடியது. என் அன்பிற்குரிய ஆசிரியரைப்பற்றிய நனவிடை தோயத்தொடங்கினேன். சில மாதங்களாக எழுதாதிருந்த நான் அவரைப்பற்றி எழுதவேண்டியதாயிற்று.  அவர் வாழும்போது, எனது ஆசிரியராய் என்னை எழுதத் தூண்டியவர், இப்போது அமரராய் ஆகியும் என்னை எழுதத் தூண்டியிருக்கிறாரே என்று நெஞ்சில் எழுகின்ற எண்ணம் சோகமாய்த் தொண்டையை இறுக்க, கண்களில் சுரக்கும் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை.

 என் அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய குருவான அவரது ஆன்மா, பிறப்பு இறப்பு இல்லாப் பெருவாழ்வில் நிலைபெற வேண்டிநிற்கிறேன்.

 

--------------  ----------------  ---------------


No comments: