ரஷ்யாவைப் பலவீனப்படுத்த மேற்குலகம் விரித்துள்ள சதிவலையின் களமா உக்ரைன்?


ரஷ்யா உலகின் பலம் மிக்கஅணுவாயுத வல்லரசு. இந்நாடு கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைன் மீது பெரும் எடுப்பில் போரை ஆரம்பித்தது. இப்போர் ஆரம்பமாகி மூன்று வாரங்களாகியுள்ள போதிலும், யுத்தம் நீடித்த வண்ணமே உள்ளது. இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி சமாதானத்தைஏற்படுத்துவதற்கான முயற்சிகள்வெற்றியளிக்காத நிலையில், யுத்தப் பேரழிவுகளுக்கு உக்ரைன் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் சார்பு நிலையை உக்ரைன் எடுத்ததன் விளைவாக ரஷ்யாவின் படையெடுப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி வெளடிமிர் வெலன்சி கோரியும் உதவ மறுத்த இந்நாடுகள் யுத்தத்தை நிறுத்தி சமாதான வழிக்கு ரஷ்யாவை கொண்டு வருவதற்கான நேரடி முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவை கோபம் கொள்ளச் செய்து, இப்போர் நீடிப்பதற்கான நடவடிக்கைகளையே அவை முன்னெடுத்து வருகின்றன.  

அதாவது உக்ரைன் மீதான போரை ஆரம்பித்ததும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி - 7நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்ய விமானங்கள் தமது வான் பரப்பில் பறக்கவும் இந்நாடுகள் தடை விதிக்கத் தவறவில்லை. அத்தோடு ரஷ்யாவின் சில வங்கிகளது செயற்பாடுகளுக்கும் தடை விதித்ததோடு, ஸ்விப்ட் நிதிப் பரிவர்த்தனையிலிருந்தும் அந்நாட்டை நீக்கியுள்ளன. இதன் விளைவாக இந்த யுத்தம் ஆரம்பமானது முதலான சில நாட்களுக்குள் ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதி 30வீதம் வீழ்ச்சியடைந்தது.  

இதேவேளை, ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக முதலில் கனடா அறிவிக்க, பிரித்தானியாவும் ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து ரஷயாவின் மசகு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்டவை மாத்திரமல்லாமல் கடலுணவு, வைரம் என்பவற்றின் இறக்குமதியையும் தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான போருக்கு அங்கீகாரம் அளித்த 386ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானியா தடை விதித்தித்திருக்கின்றது.  

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிஸிலுள்ள கிரேவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினின் மெழுகுச் சிலையை அந்நாட்டு அரசாங்கம் அகற்றியுள்ளது. இச்சிலை 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.  

பதிலுக்கு ரஷ்யா தமது மசகு எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்படுமாயின் ஜேர்மனிக்கான எரிவாயு விநியோகக் குழாயை மூடிவிடப் போவதாக எச்சரித்துள்ளதோடு ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, தாய்வான், சிங்கப்பூர், நோர்வே உள்ளிட்ட 17நாடுகளை தமது நட்புநாடுகளின் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளது.  

அத்தோடு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவுக்கு ரொக்கட் என்ஜின் வழங்குவதையும் நிறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ், "எமக்கு எதிரான பொருளாதார தடையின் விளைவாக 500தொன் நிறை கொண்ட சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சேவை செய்யும் விண்கலங்களின் செயற்பாடுகள் சீர்குலையும். அதன் விளைவாக விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை ஒழுங்குபடுத்த உதவும் ரஷ்யப் பிரிவு பாதிக்கப்படும். அதன் காரணத்தினால் இந்த ஆய்வு மையம் புவியில் நிலத்தில் அல்லது கடலில் விழும்" என்று குறிப்பிட்டுள்ளதோடு விழக் கூடிய இடங்களது வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.  

உலக வங்கி ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் முன்னெடுக்கின்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இப்போருக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அவற்றின் நேசநாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.  

இதேவேளை இப்போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உலகளாவிய நிறுவனங்களும் பல்தேசிய கம்பனிகளும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.  

பிரித்தானியாவின் பி.பி. நிறுவனம் ரஷ்யாவின் ரோஸ் நெப்ட் நிறுவனத்தில் முதலிட்டுள்ள பங்குகளை முழுமையாக விற்பனை செய்து விட்டு ரஷ்யாவிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளது. அதேநேரம் ஷெல் எக்ஸான், மொபில், ஈக்வினார் போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகளை திரும்பிப் பெற ஆரம்பித்துள்ளன. டோட்டால் நிறுவனம் ரஷ்யாவில் இனி முதலீடு செய்வதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.  

விஸா, மாஸ்டர் கார்ட், மைக்ரோ சொப்ட், பேஸ்புக், இன்ஸ்டகிராம், யூரியூப், இன்டெல், ஏர்பிஎன்பி மற்றும் மெக்டொனால்ட், பெப்சி, கோகோ கோலா மற்றும் ஸ்டார் பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது விற்பனை செயற்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன. பெப்சி மற்றும் மெக்டொனால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே சோவியத் யூனியனுடனும் இணைந்து பணியாற்றி வந்துள்ளன. அது சர்வதேச அளவில் ரஷ்யாவின் உறவுகள் மேம்பட வழிவகுத்துள்ளது. மெக்டோனால்ட் நிறுவனம் 1990முதல் ரஷ்யாவில் செயற்படத் தொடங்கியது. ஆனால் உக்ரைன் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யாவில் இருந்த 847களஞ்சியங்களை மெக்டோனால்ட் நிறுவனம் மூடியுள்ளது. அதன் விளைவாக மாத்திரம் 62, 000பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.  

ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் இப்போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யாவிலுள்ள அதன் நூற்றுக்கணக்கான கடைகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. கொகோ கோலா நிறுவனம் 1980முதல் ரஷ்யாவில் செயற்படுகிறது. அந்நிறுவனமும் தம் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் பின்லாந்து நாட்டின் நிறுவனங்களான பேஸர், வாலியோ மற்றும் பௌலிக் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.பேஸர் நிறுவனம் சொக்லேட் மற்றும் கேக் வகைகளைத் தயாரிக்கின்றது. அந்நிறுவனத்தில் 2,300பணியாளர்களும் வாலியோ நிறுவனத்தில் 400பேரும் பௌலிக் நிறுவனத்தில் 200ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர்.  

மேலும் ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த டோயோட்டா, வொக்‌ஷ்வோகன், ஜகுவார், லேண்ட ரோவர், மேசிடெஸ் பென்ஸ், போர்ட், பி.எம்.டப்ளியூ ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.  

உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அங்குள்ள பல்தேசிய வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்துள்ள போதிலும், அந்நிறுவனங்கள் தம் பணிகளைத் தொடங்காவிட்டால் அவற்றை அரசு​ைடமையாக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.  

இவ்வாறான நடவடிக்கைகள் ரஷ்யாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவதோடு பெருந்தொகையானோர் வேலைவாபை்பை இழக்கவும் வழி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

இப்போரினால் கடந்த 15நாட்களில் 23இலட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தம் வாழிடங்களை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 1200பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். அத்தோடு உக்ரைனின் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு மேலதிகமாக 202பாடசாலைகள், 34வைத்தியசாலைகள், 1500குடியிருப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பொதுக்கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மக்கள் வாழும் சுமார் 900குடியிருப்புக்கள் மின்சாரம், தண்ணீர், ஹீட்டர் வசதிகளை முற்றாக இழந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.  

போர் இடம்பெறும் பிரதேசங்கள் அழிவுகளும் சேதங்களும் நிறைந்து சாம்பல் மேடாகக் காட்சியளிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷயாவின் போருக்கு எதிராக வல்லரசு நாடுகளும் பல்தேசியக் கம்பனிகளும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சில சந்தேசங்களை எழுப்பவே செய்கின்றன. ஏனெனில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ரஷ்யாவை கோபமடையச் செய்வதன் ஊடாக பொருளாதார ரீதியில் அந்நாட்டை பலவீனப்படுத்தி வீழ்ச்சியடையச் செய்யும் வகையிலேயே இந்நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.  

இற்றைக்கு 44வருடங்களுக்கு முன்னர் அதாவது 1979இல் ஆப்கானிஸ்தான் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சோவியத் யூனியன் போர் தொடுத்தது. என்றாலும் 1989இல் ஆப்கானிஸ்தானை கைவிட்டு வெளியேறிச் சென்றது சோவியத் யூனியன். அந்த பத்தாண்டு கால யுத்தத்தில் பொருளாதார ரீதியில் சோவியத் யூனியன் பெருவீழ்ச்சி கண்டது. அதன் விளைவாக 1991ஆகும் போது சோவியத் யூனியனே பிரிந்து 15தனித்தனி நாடுகளாகியது. அவற்றில் உக்ரைனும் ஒன்றாகும். இவ்வாறு சோவியத் யூனியன் சிதைவடைந்து 31வருடங்கள் கடந்துள்ள சூழலில்தான் ரஷ்யா இந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கான அனைத்து உசுப்பேற்றல்களையும் மேற்கொண்ட அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நேட்டோவும் போர் ஆரம்பமானதும் உக்ரைனுக்கு நேரடியாக உதவுவதைத் தவிர்த்துக் கொண்டன. தம்மைக் காப்பாற்றுமாறு உக்ரைன் ஜனாதிபதி அபயக்குரல் எழுப்பிய போதிலும், இந்த யுத்தத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அந்நாடுகளும் நேட்டோவும் கூறி விட்டன.  

அதேநேரம் இப்போரை நிறுத்தி அமைதி, சமாதான வழிக்கு ரஷ்யாவைக் கொண்டு வரும் முயற்சிகளை விடுத்து அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் உள்ளிட்ட எல்லாத் தடைகளையும் இந்நாடுகள் முன்னெடுத்துள்ளன. இதன் ஊடாக ரஷ்யாவைப் பொருளாதார ரீதியில் வீழ்த்தி பலமிழக்கச் செய்வதற்கான முயற்சியாகவே இந்நடவடிக்கைகளை நோக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாகப் பலவீனமடையும் ரஷ்யாவில் 1991ஐப் போன்று மீண்டும் பிளவுகள் ஏற்படுத்தி அந்நாட்டை துண்டாடவே முயற்சிக்கப்படுவதாகத் தெரிகிறது. அதாவது ரஷ்யாவைப் பலவீனப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உக்ரைனை வைத்து விரித்த சதிவலையாகக் கூட இருக்கலாம் இப்போர் என்ற அபிப்பிராயம் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றன.  

ஏனென்றால் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் உலகின் பல நாடுகளிலும் முன்னெடுத்த தன்னிச்சையான படை நடவடிக்கைகளுக்கு எதிராக தலையீடு செய்து செயற்படும் நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. அதனால் அந்நாட்டைப் பலவீனப்படுத்துவதன் மூலம் அவ்வாறான தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அதற்காக உக்ரைன் அழிந்து சாம்பலானாலும் பரவாயில்லை. தம் எதிர்பார்ப்பு நிறைவேறினால் போதும் என்ற நிலைப்பாட்டில் மேற்குலக நாடுகள் செயற்படுவதாக விளங்குகிறது.  

ஆகவே கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு அழிவுகர யுத்தத்தை விரைவாகவும் வேகமாகவும் முடிவுக்குக் கொண்டு வருவதும், அமைதி சமாதானத்தை ஏற்படுத்துவதுமே இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.

மர்லின் மரிக்கார் - நன்றி தினகரன் 

No comments: