வாழ்வாங்கு வாழுவதை மனமுழுக்க நிறைக்கின்றார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்
கண்ணில்லா பலருள்ளார் வாய்பேசா பலருள்ளார்
என்றாலும் இவர்கலெல்லாம் இவ்வுலகில் வாழுகிறார்

எவருக்கும் தீங்கிளைக்க இவரென்றும் எண்ணுகிலார் 

குறையெது வுமில்லாமல் குவலயத்தில் பலருள்ளார்
குறைகாணும் வழியிலவர் நிதம்பயணப் படுகின்றார்
குறையின்றிப் பிறந்ததனை மனமதிலே இருத்தாமல்
நிறைகுறைவாய் இருப்பதனை நெஞ்சேற்க மறுக்கிறது 

ஊனமுற்றோர் தினமென்று ஒருதினத்தை முன்னிறுத்தி
ஊனமுற்றோர் என்போரை  உயர்த்தியே பலவுரைப்பார்
உரைப்பவர்கள் அரங்குக்குள் வருவதற்கு முன்னாலே
குருடுடென்பார் செவிடென்பார் நொண்டியென்பார் கேலியுடன் 

மேடைகளில் ஏறுவார் வீரவார்த்தை கொட்டிடுவார்
ஊனமென்னும் சொல்லதனை உரைத்திடலே தவறென்பார்
உள்ளுக்குள் அவர்மனமோ ஊனமாய் ஆகிருக்கும்
உடல்குறைவு உடையாரை ஊனமுற்றோர் எனவுரைப்பார் 

கண்ணிருந்தும் கற்கமாட்டார் கையிருந்தும் உதவமாட்டார்

வாயிருந்தும் நல்வார்த்தை வரவழைக்க விரும்பமாட்டார்
உடற்குறைகள் எதுவுமுன்றி உலகிலவர் வாழ்ந்தாலும்
ஊனமுற்ற மனிதர்களாய் ஆக்கிடுவார் வாழ்க்கையினை 

அவயவத்தில் குறைபாடு பெற்றாலும் அவரகத்தில்
துணிவென்னும் நம்பிக்கை துளிர்விட்டே எழுகிறது
துளிர்விட்ட நம்பிக்கை பலதுறையில் பயணப்பட
அவருடனே கூடவே அணைந்ததாய் அமைகிறது 

ஊனமுற்றோர் வார்த்தையிப்போ உருமாறி வந்திருக்கு
மாற்றுத் திறனாளிகளாய் மாநிலத்தில் மிளிர்கின்றார் 
ஆற்றலினைக் காட்டுகின்றார் அகிலமெங்கும் செல்லுகிறார்
ஆற்றலுடை மனிதர்களாய் ஆகியவர் துலங்குகிறார் 

நிறையுடையார் பங்குபற்றும் நிகழ்ச்சியெலாம் வருகின்றார்
குறைகாணா வகையினிலே குதித்தோடி வெல்லுகிறார்
தங்கமொடு வெண்கலமும் தரமுயர்ந்த பரிசுகளும் 
பொங்கிவரும் வாழ்த்தொலியில் இங்கிதமாய் ஆக்குகிறார் 

பார்வையற்ற பலபேர்கள் பட்டம்பல குவிக்கின்றார்
பல்கலைக் கழகந்தன்னில் உயர்நிலையில் இருக்கின்றார்
நீதிமன்றம் ஏறுகின்றார் நியாமதை உரைக்கின்றார்
சாதிக்கும் நாயகராய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் 

இசைத்துறையில் இருக்கின்றார் இயல்த்துறையில் இருக்கின்றார்
வெளிநாட்டுத் தூதுவராய் வியக்கவைத்து நிற்கின்றார்
ஓவியம் தீட்டுகிறார் உயர்மேடை ஏறுகிறார்
காவியத்து நாயகராய் கண்ணியமாய் எழுகின்றார் 

ஊனமுற்றோர் எனம்நினைப்பை உளமிருத்து அகற்றுகிறார்
உலகமது அதிசயிக்க உயர்பணிகள் ஆற்றுகிறார்
வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார்
வாழ்வாங்கு வாழுவதை மனமுழுக்க நிறைக்கின்றார் 

No comments: