ஆணவம் மிஞ்சினால்…. எஞ்சுவது என்ன…? அவதானி


இலங்கை தமிழர்  தரப்பு அரசியல் மட்டுமல்ல -  சிங்கள, முஸ்லிம் தரப்பு அரசியலுக்கும் 70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இருக்கிறது.

இந்தப்பின்னணியில், தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவுசெய்வதற்காக எழுபதிற்கும் மேற்பட்ட கட்சிகள் விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு காத்திருக்கின்றன. இச்செய்தி அண்மையில் வெளியானது !

ஏற்கனவே பல கட்சிகள் நாடாளுமன்றிலும், உள்ளுராட்சி மன்றங்களிலும் தத்தமது பிரதிநிதிகளை வைத்திருக்கின்றன.

காலத்துக்கு காலம் தங்கள் தனிப்பட்ட காரணங்களினாலும்,   தன்முனைப்பு ஆணவத்தினாலும், கருத்து மோதல்களினாலும்


கட்சிகளிலிருந்து வெளியேறி,  புதிய புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் பற்றி அறிந்திருக்கின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர்,  தோன்றிய ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பண்டாரநாயக்கா தனித்துச்சென்று உருவாக்கியதே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

அதேபோன்று தமிழ்க்காங்கிரஸிலிருந்து புதிதாகத் தோன்றியதே தமிழரசுக்கட்சி.  சமமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிளவுகள் தோன்றி புதிய புதிய கட்சிகள் உருவாகின.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பலதடவை பிளவுகளைக்  கண்டது.

அதில் ஒரு பிளவுதான் இன்று ஆளும் பொதுஜன முன்னணி கட்சி. அதற்கு முன்னர் சந்திரிக்காவும் அவரது கணவர் விஜயகுமாரணதுங்காவும் சேர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி மக்கள் கட்சியை உருவாக்கினர்.

ஐக்கிய தேசியக்கட்சியில், ரணிலா, சஜித்தா தலைமை ஏற்பது என்ற போராட்டத்தின் விளைவுதான் இன்றைய ஐக்கிய மக்கள் சக்தி.

தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் குறித்து பேசவே வேண்டாம். தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு இறுதியில் என்ன நடந்தது…?

ஆனந்தசங்கரி அதனை தன்வசப்படுத்திக்கொண்டு தனி வழிசென்றார்.

புலிகளின் தலைவர், ஆயுதப்போராட்ட  களத்திற்கு அப்பால் ஜனநாயக அரசியல் பேசுவதற்காக உருவாக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது நடந்துகொண்டிருக்கும் உள்முரண்பாடுகளை பார்த்து  சந்தி சிரிக்கிறது.


ஈ.பி. ஆர். எல். எஃப். கட்சி பிளவு கண்டது. ரெலோவும் அவ்வாறு பிளவுகளை சந்தித்தது.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரனும் பிரிந்து சென்று புதிய கட்சி அமைத்தார்.

மூத்த அரசியல் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின்  நீண்ட வரலாறைக்கொண்ட தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் குமார் பொன்னம்பலம் அணி – உடுப்பிட்டி சிவசிதம்பரம் அணி என்று முன்னர் பிளவுண்டது.

மலையக கட்சிகள், மற்றும் முஸ்லிம் கட்சிகள் பற்றி தனிக்கதையே இருக்கிறது.

தான் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட கலத்தில் ஒன்பது வயது நிரம்பிய சஜித் பிரேமதாச,  தனக்கு சரிசமமாக எப்படி வரமுடியும் என்று தலைமுறை அரசியல் பேசிய ரணில் விக்கிரமசிங்கா,  தான் மட்டுமன்றி, தனது ஐக்கிய தேசியக்கட்சியையும்   கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடையச் செய்துகொண்டார்.

பிறகு தேசியப்பட்டியல் ஊடாக பின்கதவினால் நாடாளுமன்றம் பிரவேசித்துள்ளார்.

1970 களில் ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு அன்றைய அரசின் கொடிய அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ( J V P ) 1977 இன்பின்னர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபிறகு  பிளவுகளை சந்தித்தது.

அதன் தலைவர் ரோகண விஜேவீரா கொல்லப்பட்டதன் பின்னர்,  அக்கட்சியின் தலைவராக தெரிவான சோமவன்ஸ அமரசிங்கவும் தனிவழிசென்று இறுதியில் மறைந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியில் முன்பிருந்த விமல் வீரவன்ஸவும் அங்கிருந்து வெளியேறி,  புதிய கட்சியை ஆரம்பித்து ராஜபக்‌ஷ சகோதரர்களுடன் ஐக்கியமானார். தற்போது அவரும் தான் இணைந்திருந்த பொதுஜன பெரமுனை தந்திருந்த அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தனி வழி செல்ல தயாராகியிருக்கிறார். அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த குறிப்புகள் அனைத்தும் இலங்கை மூவின மக்களும், அதாவது தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் தகுதியும் பெற்ற அனைவரும் நன்கு அறிந்த செய்திகள்தான்.

எனினும் அவர்களும் காலத்துக்கு காலம் வேட்பாளர்களின் வாக்குறுதிகளை நம்பி மோசம்போனவர்கள்தான்.

சமகாலத்தில் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் குழந்தைகளின் பால்மா உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் வீதிகளில் நீண்ட  வரிசையில் கால் கடுக்க நிற்கும் தாய்மாரும் தந்தையரும் இளைஞர் யுவதிகளும்  இன்றைய பொது ஜன முன்னணி அரசை அரியணையில் ஏற்றுவதற்காக வாக்களித்தவர்கள்தான்.

இவர்கள் இப்போது அரசை திட்டித்தீர்த்து சாபம் போடுகிறார்கள்.

இவர்களின் அன்றாட குமுறல்களை நாம் அச்சு , மற்றும் இணைய ஊடகங்களில் பார்த்துவருகின்றோம்.  

தென்னிலங்கை அரசியலில்தான்  இத்தனை வேடிக்கை என்று மாத்திரம் சொல்லிவிட்டு நாம் ஒதுங்கிவிடமுடியாது. வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க்கட்சிகளுக்கிடையே நடக்கும் கேலிக்கூத்துக்களையும் நாம் பார்த்து ரசித்து கடந்து சென்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த பல நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்புவதில் இந்த தமிழ்க்கட்சிகளுக்குள் நீடித்த இழுபறிபற்றி அறிந்திருப்பீர்கள்.

அத்துடன் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை ஏற்பதா..? இல்லையா..? என்பதில் கஜன்மாரின் கட்சிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடந்த காகித அறிக்கை அக்கப்போர் பிரசித்தம் !

தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ அழைக்கும் பேச்சுவார்த்தைக்கு தங்களால் வரமுடியாது என்று  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

 எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வு இறுதியில் பேச்சுவார்த்தையில்தான் முடிவடையும். உலக மகா யுத்தங்களின் போதும் இந்திய  - சீன மற்றும் இந்திய – பாகிஸ்தான் போரின்போதும் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.

ஏன்… சமகாலத்தில் நடக்கும் ருஷ்ய – உக்ரேய்ன் மோதலிலும் சமாதானப்பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.

ஈழப்போராட்டத்தில்  வெவ்வேறு முனைகளில் நின்ற பிரபாகரனும் ஶ்ரீசபாரத்தினமும் பாலகுமாரும் பத்மநாபாவும் கூட உமா மகஸ்வரனை தவிர்த்துவிட்டு ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்தானே..!?

தமிழ் மக்களை தொடரும் இனம்புரியாத சாபம்,  அந்த ஒற்றுமையையும் பின்னர் குலைத்து சகோதரப்படுகொலையில் முடிந்துவிட்டது என்று நாம் விதியின் மேல் பழியை போடலாம்.

இலங்கைத்  தமிழினிம் கொடுத்த விலை அதிகம், அதைவிட இம்மக்களுக்கு  காலம் காலமாக வாக்குறுதிகள் வழங்கி ஆசனங்களைப்பெற்று  நாடாளுமன்றம் செல்லும் எமது பிரதிநிதிகளான தமிழ்த்தலைவர்களின் ஆணவம் பெரிது.

ஆணவம் மிஞ்சினால் கோவணமும் மிஞ்சாது என்பார்கள்.

கட்சிகளின் பிளவுகளுக்கு முக்கியமாகியிருப்பது தலைவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கும் தன்முனைப்பு ஆணவம்தான்.

ஒரு கடிதம் எழுதுவதற்கும்,  ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கும் கூட ஒருமித்த முடிவை எடுக்க முடியாத கட்சித் தலைவர்கள், தங்கள் ஆணவத்தை மாத்திரம் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த பொதுத்தேர்தல் வரையில்  அரசும்,  அதனுடன் பேசுவதா..? வேண்டாமா..? என்று தடுமாறிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளும் ஊடக அறிக்கைகளின் ஊடாக மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன.

இன்று இலங்கைத்  தேசம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.  இந்த நாட்டை கூறுபோட்டு விற்பதன் மூலமாவது தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று அரசு முயற்சிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்காகவும்,  சர்வதேச சமூகத்திற்காகவும்  இனப்பிரச்சினை தீர்வு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பிவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் அரசின் தலைவர் முதல் கட்டமாக பேச வந்துள்ளார்.

அதற்குச்செல்வதிலும் தமிழர் தரப்பில் இழுபறி !

தேசிய அரசாங்கத்திற்கான முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போது, அதற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

சோலியான் குடுமி சும்மா ஆடாது.  பொதுஜன பெரமுன அரசின் ஜனாதிபதியும் காரியத்துடன்தான் காய் நகர்த்துகிறார்.

இவ்வேளையில் முகநூல் வழியாக அவதானிக்கு கிடைத்துள்ள கேலிச்சித்திரத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

No comments: