கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து நான்கு ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

                                                  

  இரும்பினைக் கண்டு பிடிக்க முன்னரே இரும்பு போன்ற ஒன்று


எங்களுக்கு அயலிலேயே இருந்தது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா அறியும் ஆவல் ஏற்படுகிறது அல்லவா அது வேறு எதுவுமே இல்லை. எங்களின் சொந்தமரம் பனைதான் அதுவாகும்.இரும்பை ஒத்த வலிமை உடையதாக பனை இருந்திருக் கிறது என்பது எமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறதல்லவா ! ஏறக் குறைய நூற்று இருபது வருடங் கள் வரையிலும் பனைமரம் இருக்கும் என்று அறிந்திட முடிகிறது. மனிதனது வாழ்நாளும் நூற்று இருபது வருடங்கள் என்று பொதுவாகவே சொல்லப்பட்டாலும் அந் தளவு காலத்துக்கு வாழ்வது என்பது அரிது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே மனிதனைவிடப் பனையின் ஆயுட்காலம் என் பது நீண்டதாகவே இருக்கிறது என்பதை மனமிருத்துதல் முக்கிய மாகும்.மனிதன் மாநிலத்தில் நீண்ட காலம் வாழ்ந்தாலும் அவனிடத்து காணப்படும் வள்ளல் தன்மையை விடப் பனையிடம் காணப்படும் வள்ளல் தன்மை மிகவும் சிறப்பானதாகும் என்பதும் நோக்கத்தக்கது. பனையானது அடியிருந்து நுனிவரை எல்லாவற்றையுமே மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் கொடுத்தபடியே இருக்கிறது. தனக்குத் தேவையான அனைத்தையுமே மனிதன் பனையிடமிருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறான் என்பது மறுக் கமுடியாத உண்மையெனலாம்.

 கறுப்பாய் இருந்தாலும் கொடையில் கர்ணணாகவே பனை


இருக்கிறது. உயிரோடு இருந்தாலும் பயனாகிறது. அதன் வாழ்வினை நாம் முடித்தாலும் அது எப்படியே பயனைக் கொடுத்தே நிற்கிறது. இதனால்த்தான் "பனை என்பது நல் வரம் " என்று சொல்லப்படுகிறது.உயிருள்ள பனையை அதாவது பச்சைப் பனையை மனிதன் தறிக்கிறான். தறிக்கப்பட்டு நிலத்தில் விழும் பனை பல விதங்களில் உதவிடக் கைகொடுத்து நிற்கிறது.இதுதான் பனையின் பெருந் தயாள குணமெனலாம்.

 வைரம் என்பது பனை பெற்றுவந்த வரமாகும். ஆரம்பத்திலிருந்தே தென்னையானது பனையுடன் போட்டி போட்டுக் கொண்டே வந்திருக்கிறது. பனையைப் போல தென்னையையும் தறிக்கிறார்கள். பனையைப் பயன் படுத்துவதைப் போல தென்னையையும் பயன் படுத்துகிறார்கள். ஆனால் பனையில் காணப்படும் வைரம் தென்னையில் இல்லை. அதனால் பனை தான் முன்னோக்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. தென்னை இங்கும் பனை யைப் பார்த்து ஒதுங்கியே நிற்க வேண்டி ஏற்பட்டுவிடுகிறது,ஆனாலும் தென்னையும் பனையுடன் சரிசமமாக வந்திடவே ஒவ்வொரு தடவையும் முயற்சித்தபடியே இருக்கிறது.

  வடலி என்பது வளருகின்ற இளம்பருவமான பனையாகும். பனை


மரத்தில் வைரம் என்பது அது வாங்கிவந்த வரமென்றே கொள்ள வேண் டும். பனை வளர வளர அதன் வைரத்தின் அளவும் கூடிக் கொண்டே போகும்.மனிதன் சற்று வித்தியாசமானவன். அவனுடைய உடலிலும் வளர வளர உரமேறிய தாகவே வந்துகொண்டிருக்கும். ஆனால் ஏறிய உரமானாது நிரந்தரமாக நின்றுவிட மாட்டாது. மனிதனின் இளமைக்காலம் என்று சொ ல்லப்படும் காலத்தில்  காணப்படும் உரமானது அவனுது வயது முதிர்ந்த காலத்தில் அவனுடம்பில் இருப்பதில்லை.ஆனால் பனைமரமோ அதன் வ யது அதாவது வருடங்கள் கூட க்கூட வைரத்தின் அளவும் கூடிக்கொண்டே போகிறது என்பதுதான் மனமிருத்தவேண்டிய கருத்தென லாம்.நாற்பது  முதல் ஐம்பது வருடங்கள் வளர்ந்த பனையில் வைரமானது ஒன்றரை அங்குலத்துக்கு நிறைந்திருக்கும். நாற்பத்து ஐந்துமுதல் அறுபது வருடங்கள் ஆன பனையின் வைரமானது இரண்டரை அங்குலம் முதல் நான்கு அங்குலம் வரை நிறைந்ததாயிருக்கும். அறுபதுமுதல் தொண்ணூறு வருடங்கள் வளர்ந்த பனையில் வைரமானது ஐந்து அங்குலம் தொடக்கம் ஆறு அங்குலம் வரை நிறைந்த்திருக்கும். தொண்ணூறு முதல் நூற்று இரு பது வருடங்கள் வரை இருக்கும் பனையில் வைரத்தின் அளவு ஆறு அங் குலம் எனத் தொடங்கி மரம் முழுவதுமே வைரமாகிவிடும் தன்மை இருக்கிறது என்பது நோக்கத்தக்க தாகும்.

 வைரமாய் மாறும் பனைமரமானது நீண்ட காலம் இந்த


நிலைத்தினில் நிமிர்ந்தபடியே நிற்கிறது என்பதும் பெருமையாய் இருக்கிறதல்லவா ! பனை இருந்தும் பயன் கொடுக்கிறது. அது இறந்தும் பயன் கொடுக்கிறது. இறந்தும் என்பது பனைமரம் தறிக்கப்பட்ட நிலையிலும் பயனைக் கொடு ப்பதையே குறிப்பது எனலாம்.

 நிமிர்ந்து நின்ற பனையானது வெட்டி நிலைத்திலே வீழ்த்தப்பட்ட பின்னர் அது விழுந்து கிடக்கும் காட்சி பெருவீரனொருவன் போர்களத்தே வீழ்ந்து கிடப்பதுபோலவே இருக்கும். நிற்கும் நிலையிலு ஒரு கம்பீரம் ! வீழ்ந்து கிடக்கும் பொழுதும் ஒரு கம்பீரந்தான் ! அதுதான் பனையின் தனித் தன்மையாகும்.

 பனைமரம் அதிக எடையினைக் கொண்டதாகும். அத்துடன் நீண்ட கால த்துக்கு நின்று பயனை நல்கிட வும் கூடியதுமாகும்.தூணாகி நிற்கிறது. கப் பற்றுறை மேடையினைக் கட்டுவதற்குக் கைகொடுத்து நிற் கிறது.நாம் வாழும் வீட்டின் கூரையாகவும் பனை பாதுகாப்பை வழங்கியும் நிற்கிறது. ஓட்டு வீடுகளின் கூரையிலும் பனைமரத்தின் தீராந்திகள், வளைகள், வரிச்சுகள் இடம் பெற்றிருப்பதையும் இன்றும் காணக் கூடியதாகவே இருக்கிற து. பனைத் தீராந்திகள் , வளைகள், வரிச்சுகள் , பல ஆலயத்தின் கூரை களுக்கு ஆதாரமாக இருப்பதும் நோக்கத்தக்கதாகும். நூறு வருடங்கள் பழ மையான வீடுகளை இன்றும் நாம் காணமுடிகிறது. அந்த வீடுகளின் கூரைகளில் பனை மரமே கம்பீரமாய் வரிச்சாகவும், வளையாகவும் ,தீரா ந்தி யாகவும் இருப்பதைக் காணும் வேளை எம்மையறியாமலேயே எம் முள் ஒரு ஆச்சரிய உணர்வு மெலெழுகிறதல்லவா ! பழைமையாய் இருக்க்கும் அந்தத் தீராந்த்திகளைத் தொட்டுப்பார்கையில் அவைய த்தனையும் இரும்புபோல காத்திரமாகவே இருப்பது தெரியவரும்.

 கூரை வேலைகள் செய்யும் பொழுது ஒரு வளையை இன்னொரு


வளையுடன் பொருத்த வேண்டி வரும்.நடுவில் போகும் வளையிலே பக்க வாட்டில் வருகின்ற மரங்களை இணைத்துப் போடவேண்டிய நிலையும் வரும். அப்படி இணைக்கும் பொழுது அந்த இணைப்புக்குக்காகப் பயன்படுத்தப்படும் ஆணி அதாவது ஆப்புக்கூட பனையினால் ஆகியதே என்பதும் கருத் திருத்த வேண்டியதே. பனையில் ஆப்பு இரும்பினாலாகிய ஆணிபோல வைரம் மிக்கதாகும் என்பது நோக்கத்தக்கதாகும். நூறுவருடங்கள் பழைமையான வீடுகளின் கூரையின் உறுதிக்கு பனை மரத்தின் ஆப்பும் ஒரு பக்கபலமாகவே இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். இரும்பை யே பயன்படுத்தாமல் வீட்டின் கூரைகளை முழுக்க முழுக்க பனை மரத் தின் விட்டங்களாலும், தீராந்திகளாலும், பனைமரச் சட்டங்களாலும், அக்காலத்தில் வடிவ மைத்த எங்களின் முன்னோரின் மரத் தொழில் நுட்பத்தினை வியக்காமல் இருக்கவே முடியாது. அவர்க ளின் தொழில் நுடபத்துக்குக் கைகொடுத்து உதவிய பனைமரத்தையும் வியந்துதானே நாம் பார்க்க வேண்டி இருக்கிறது !

 பரசுராமர் என்பவர் ராமாயணத்தில் வருகிறார்.அவர் கையில் வைத்திருந் த ஆயுதமே கலப்பை அதாவது வயயில் உழுகின்ற ஏர் வடிவினதாகும். அந்தக் கலப்பையே பனை வைரத்தில் செய்யப்பட்டிருப்பதாய் அறியமுடிகி ன்றது.ராமயண காலத்திலேயே பனையின் வைரம் பொருட்களாக்குவதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்னும் செய்தி மனங்கொள்ளத்தக்கதேயாகும்.

  பனையினைக் கொண்டு ஏணிகள் செய்யப்பட்டன. அப்படியான ஏணிகள் இன்றும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணக்கூடியா தாகவே இருக்கிறது.விளையாட்டுப் பொருட்களும் பனைமரத்தின் வருகையாய் அமைகிறது.அத்துடன் உணவுத்தட்டுகள் , வலையல்கள், பென்சில்கள் என்றும் ஆக்கப்பட்டு வந்தன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  ஆடம்பரமான பெட்டிகள் செய்ய்யப்பட்டன.படுத்துகொண்டே


ஆடும் வகையில் செய்யப்பட்ட நாற்கா லிகளில் ஆடுகின்ற நிலைக்குரிய வளை வுகள் செய்யப்பட்டன.சுவாமியை வாகனங்களில் வைத்து வீதியுலா வரு வதை நாமனைவரும் அறிவோம். வாகனத்துடன் இரண்டு பெரிய உருண்டையான மரத்தடிகள் கட்டப்பட்ட வாகனத்தைத் தூக்குபவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வருவார்கள். அப்படி வரும்பொழுது இடையிடையே வாகனத்தை நிறுத்தி வைப்பார்கள். அந்த வேளை வாகனத்தில் தடிகளை த்தாங்குவதற்கு ஆதாரமாக ஒரு மரத்தடியினைப் பயன் படுத்துவார்கள். அந்த மரத்தடியும் பனைமர்ர்தின் வைரம் பாய்ந்த தடியேயாகும் என்பதும் நோக்கத்தக்கத்து.இப்படியாய் அமையும் அதனை " ஆயக்கால் " என்னும் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.

 இருசுக்கட்டை என்பது வண்டியின் பாகத்தைத் தாங்கி நிற்பதோடு அச்சை கோர்ப்பத்ற்கு உறுதுணையாக இருக்கிறது.வண்டியின் சக்கரங்களே இந்த அச்சில்த்தான் இணைக்கப்படுகிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். மாட்டு வண்டிகள்தான் எங்களின் போக்குவரத்தில் கைகொடுத்து நின்ற வாகனங்கள் எனலாம்.பயணம் செய்யும் மாட்டு வண்டிகளில் பயணிப்போர் அமர்ந்து செல்லுவதற்குரிய இடமானது கூடார அமைப்பினைக் கொண்டிருப்பதை நம்பில பலர் அறிந்திருப்போம்.இப்படி அமைந்திருக்கும் வண்டி கூட்டு வண்டி என்று அழைக்கப்பட்டது.இவ்வண்டியினை - வில் வண்டி, பெட்டி வண்டி, சவாரி வண்டி என்றெல்லாம் அழைத்தனர். இந்த வண்டிகளில் பனை மரத்தின் பயன்பாடும் நிறையவே இருந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.கட்டை வண்டியின் முன்புறம் நுகத்தடி பூட்டுவார்க்குக் கீழ்ப் புறம் வண்டியானது தரையில் படாமல் வண்டியின் முனை தூக்கலாக இருப்பதற்கு பனை மரத்துண்டு பயனாக நின்றது. அப்படி அது அமைந்ததை ஏர்க்கால் என்று அழைத்தார்கள்.

  உலக்கையாய் பயன் பட்டிருக்கிறது. வயதானவர்களுக்கு ஊன்று கோலாகவும் பயன் பட்டைருக்கிறது. தானியங்களை குரக்கன், பயறு, உழுந்து , என்பவற்றை மாவாக்க திரிகை என்னும் கல்லு பயன்படுத்தப் பட்டது. அந்தக் கல்லு வட்டவினதாய் மேலொன்றும் கீழொன்றுமாகவே இருக்கும். இருண்டு கல்லினை இணைப்பதற்கு நடுவில் அச்சாணியாகவும், மேல் கல்லினைச் சுற்றும் கைப்பிடியாகவும் பனைமரத்தின் குச்சியே பயன் படுத்தப்பட்டது என்பது நோக்கத்தக்கது. அரைக்கும் இயந்திரமாக அப்போது எமக்கிருந்தது இந்தத் திரிகைக்கல்லேயாகும்.

  கிணற்றிலே நீரினை அள்ளுவதற்கு கிணற்றருகே துலா என்னும் ஒரு பொறிமுறை அமைப்பு அன்று இருந்தது. அதற்காகப் பனை மரத்துண்டுகள் கைகொடுத்து நின்றன.துலா , ஆடுகால் , என்னும் இரண்டு அமைப்புக்கும் ஆதாரமாய் பனை மரத்தின் துண்டுகளே இருந்தன என்பதும் நோக்கத்தக்கதாகும். மரக்க றித் தோட்டங்களில் நீரினைக் கிணற்றிலிருந்து வாய்க்கால்களுக்குப் பாய்ச்சுவதற்கும் பனையைப் பிள ந்து அதனைச் சீராகச் செதுக்கி எடுத்து மரப்பீலியாகவும் அக்காலங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை இக்கால இளையோர் அறியமாட்டார்கள். வயதுவந்தவர்களுக்கும் , கிராமத்தில் வசித்தவர்களுக் கும், இவையனைத்துமே நன்றாகவே தெரிந்து இருக்கும்.

  படகுகளில் பயணம் செய்வது அன்று ஒரு பயண முறையாகவே இருந்திருக்கிறது.தரைவழிக்கு மாட்டு வண்டிகள் போல நீர் வழிக்கு சிறிய, பெரிய படகுகள், தோணிகள், கட்டுமரங்கள் , என்றெல்லாம் இருந் திருக்கிறது. படகுகளில் ஏறிடவும் பின் இறங்கவும் துறைகள் அமைக் கப்பட்டிருந்திருந்தன. அந்தத் துறை களில் படகுகளில் இருந்து இறங்குவார்களுக்கும், ஏறிச் செல்பவர்களுக்கு ஆதரமாகப் படகுத்துறை திட்ட மிட்டு அமைக்கப் பட்டிருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட அந்தத் துறையின் ஆணிவேராக அமைந்திருந் தது வைரம் பாய்ந்த பனைமரத் துண்டுகளேயாகும். பனைமரத்தினை இரண்டாக வெட்டி துறையின் நீள அகலங்களுக்கு ஏற்றவாறு நீரில் நடுவார்கள். அதன் மேல்தான் பலகைகள் பரவப்பட்டு துறைமுகம் ஏற்ப டுத்தப்படுகிறது. படகுளில் இருந்து இறக்கப்படும் பொருட்கள் அனைத்தையுமே எடுத்துச் செல்லும் பார மான வண்டிகள் அத்தனையயும் தாங்கி மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு உற்ற துணையாக நீரின் அடியில் அமைதியாய் பணிசெய்து நிற்பது எங்கள் வைரம் பாய்ந்த பனை மரத்துண்டுகளே என்பதை யாவரும் மனமிருத்துவது அவசியமாகும். நவீனங்கள் பல நுழைந்திட்ட வேளையிலும் இன்றும் பல படகுத் துறைகளைப் பனை மரங்களைத் தாங்கி நிற்கின்றன என்பதை மறுத்துவிடவே முடியாத உண்மை யாகும்.சிறியவகை ஓடங்களைச் செய்வதற்கும் பனைமரத்தின் வைரத்தினாலாகிய பலகைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

பனைமரத்தின் வைரம் எப்படியெல்லாம் அமைகிறது என்பதைப் பல நிலைகளில் பார்த்தோம். இப்போது இங்கே பாட்டிலே பார்ப்போம். பாட்டு என்றாலே சுவைதானே !

     இனைப்புகள் அசையாமல் இறுக்கமாய் இருந்திடவே

     அடப்பக்கட்டை, ஆப்பிசக்கை, அனைத்துமே நானாவேன்

     என்னை இழைத்தாலும் அலங்காரப் பொருளாவேன்

     ஆடம்பரப் பெட்டிகளையும் அழகாக நான்தருவேன்

     அனைவரும் மகிழ்ந்திடவே ஆடும் நாற்காலி நானாவேன்

     பொதிசுமக்கும் மனிதர்கள் இளைப்பாற ஆயக்கால் நானாவேன்

     வண்டிச் சக்கரத்தை வாகாக இணைத்திடவே

     ஆராக்கால்  நல்வட்டை  அனைத்துமே நானாவேன்

     பஞ்சாற்றைக் கசியவைக்கும் இடுக்கியும் நானாவேன்

     ஆரக்கட்டையை இணைக்கும் இருசுக்கட்டையும் நானாவேன்

     வீடுகளில் தூண்தாங்கும் உத்திரமும் நானாவேன்

     வயதாகிக் கூன்விழுந்த வயோதிகப் பெரியோர்க்கு

     ஊன்று கோல் கைத்தடி கைப்பிடியும் நானாவேன்

     நிலத்திலே உழுகின்ற மாடுகளை இணைப்பதற்கு

     நிகரில்லா ஏர்க்காலும் நுகத்தடியும் நானாவேன்

     ஓடையைக் கடப்பதற்கு ஒப்பரிய கட்டுமரம்

     நல்லோடம் அகல்படகு நானாவேன் நீயயறிவாய்

     படகுகள் மோதினால் பாழாகும் என்றறிந்து

     அழிவதனைத் தடுத்திடவே ஏராவும் நானாவேன்

     உருளும் வண்டிக்குக் கடையாணி நானாவேன்

    ஒதுங்கும் மாட்டிற்குக் கடைமுளை நானாவேன்

    களைப்பாறும் கட்டிலதைச் செய்திடவே பொருளாவேன்

    மரங்கொண்டு செய்யுமொரு கட்டைவண்டி நானாவேன்

    வீட்டிலுள்ள வாயிலுக்குத் திறந்தடைக்கக் கதவாவேன்

    கோவிலிலே இருக்கின்ர கலசங்கள் காப்பாகும்

    கலசங்கள் வைத்திடவே கசமரம் நானாவேன்

    நீரிறைக்கும் கவலையிலே கயிறுருளும் உருளையாவேன்

    குடைகளைப் பிடித்திடவே கைப்பிடியும் நானாவேன்

    மாடிழுக்கும் வண்டிதனை ஓட்டுகின்ற மனிதருக்குத்

    தாங்குசட்டம் கொலுப்பலகை எல்லாமும் நான்தருவேன்

    அளவதனைக் குறித்து நிற்கும் குற்றிக்குச்சி நானாவேன்

    மகிழ்ச்சியுடன் மக்களெலாம் பயணங்கள் செய்திடவே

    கூட்டுவண்டி வில்வண்டி பெட்டிவண்டி நானாவேன்

    கூரைவீடுகளில் இணைக்கின்ற வைரமும் நானாவேன்

    என்னையே பிளந்தாலும் கோடாலிக்குக் காம்பாவேன்

    தேர்ச்சப்பரத்தில் பொருத்துகின்ற சகடையும் நானாவேன்

    வீடுகட்டத் துணைபுரியும் சக்கையுடன் சட்டங்கள்

    சலாகைகள் சன்னமரம் சிராயும் நானாவேன்

    ஊடிழைய இணைக்கின்ற தறிநாடா நானாவேன்

    சுடச்சுடவே கூழ்சமைக்க நெட்டையான துடுப்பாவேன்

    சரியாக எடைபோடத் துலாக்கோலும் நானாவேன்

    சிறுகுழந்தை உறங்கிடவே தூளிக்கும் கவையாவேன்

    பொருள்களை நிறுப்பதற்குத் தெறாக்கத்தடி நானாவேன்

    தேர் ஓட்ட சப்பரமும் சக்கரமும் நானாவேன்

    நடுங்கி நடப்பவர்களுக்கு நடைக்குச்சி நானாவேன்

    தத்தித் தவழும் குழந்தைக்கு நடைவண்டி நானாவேன்

    வரவேற்பு அறையினிலே நாற்காலி மேசையுமாவேன்

    அலங்காரப் படகுகளில் நீரணிமாடம் நானாவேன்

    என்னைப் படைத்த இறைவனைச் சுமக்கும்

    பல்லக்கும் பிள்ளைத்தண்டும் பீடமும் நானாவேன்

    வீட்டை அழகுபடுத்தும் பறனையும் ( மச்சு ) நானாவேன்

    மாடுகளுக்குத் தண்ணிகாட்டப் பனங்கொட்டும் (தொட்டி) நானாவேன்

    கட்டும் கூரைகளுக்கு மங்கை நானாவேன்

    அலங்காரப் பூஜை அறையில் பூஜைமண்டபம் நானாவேன்

    கைவினைப் பொருள் செய்ய மூலப்பொருள் நானாவேன்

    ஒளிப்படத்தை ஒழுங்குறுத்த போட்டோ சட்டம் நானாவேன்

    மரச்சட்டம் இணைத்திடும் மர ஆணி நானாவேன்

    மர ஆணி அடித்திறக்க மரச்சுத்தியும் நானாவேன்

     வேளாண்மை வளம்பெற மரக்கலப்பை நானாவேன்

     தம்பணியில் தச்சர்கள் அடையாளம் இடுவதற்குத்

     தரமான பரக்குத்தி தந்துநான் மகிழ்ந்திருப்பேன்

     மீன்பிடிக்கும் மீனவர்க்கு மரத்தக்கை நானாவேன்

     மாட்டுவண்டி ஓட்டுபவர்க்கு வண்டிப்பார் நானாவேன்

     ஓடுந்தேர் நிறுத்தவும் திசைமாற்றி இயக்கவும்

     போடுகின்ற பிரேக்காக முட்டுக்கட்டை நானாவேன்

     பொருளதிகம் ஏற்றுதற்கு வண்டிகளில் வாய்ப்பாக

     முழுக்குச்சி வண்டித்தட்டி எல்லாமும் நானாவேன்

     அவ்வண்டி அடிப்பாகம் பொருத்துகின்ற துலாவாவேன்

     நிலந்தாங்கு உழுவோர்க்கு மோழியும் நானாவேன்

     கணக்கெழுதும் கணக்கருக்கு ரூல்தடியும் நானாவேன்

     குடியிருக்கும் வீடுகட்ட வேண்டுகின்ற நல்வளவும்

     வளைகளுடன் நீள்வாரையும் நாந்தருவேன் நீயறிவாய்

     நிலத்திற்கு நீர்ப்பாய்ச்ச வாய்க்காலாய் நான்கிடப்பேன்

          விளையாடும் சிறார்கட்கு விளையாட்டு மட்டையாவேன்

         வீட்டுக்கூரை அமைத்திடவே வேண்டும்பொருள் நாந்தருவேன்

         வீட்டுத்துலா ஜன்னலெல்லாம் விருப்பமுடன் நாந்தருவேன்

         வெப்பமெலாம் தடுத்திடவும் பயிர்காத்து வளர்த்திடவும்

         வயல்களுக்கு வேலியாக வாகாக அமைந்திடுவேன்

 

    பனையில் காணப்படுகின்ற வைரமான பகுதிகள் இவ்வாறு பல வகைகளில் பயனாகி நிற்கிறது. பனையின் வெளிப்பக்கந்தான் நல்ல வைரமாய் இருக்கும். ஆனால் அதன் உட்பகுதியே மென்மையாக இருக்கும். இப்பகுதியை சோற்றுப் பகுதி அல்லது சோத்தி என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தச் சோத்திப் பகுதியும் பயனை அளித்தே நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். இந்தச் சோத்திப் பகுதியி னைப் பயன்படுத்தி " சிப் போட் " செய்யலாம் என்னும் செய்தியும் கருத்திருத்த வேண்டியதாகும். மின்சா த்தையோ , வெப்பத்தையோ கடத்தாது பாதுகாக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறதாம் என்றும் அறிந் திட முடிகிறது.சோத்திப் பகுதியின் துகள்களும் பயனாகி நிற்கின்றன. அதாவது போத்தல்களுக்குள் அடை க்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான மூடிகள் இதனால் செய்யப்படுகின்றன என்பது நோக்க த்தக்கது.இந்த சோத்துப் பகுதியினை மலைச்சாதி வகுப்பினர் தங்களின் உணவாகவும் பயன்படுத்தி இருக் கிறார்கள் என்று அறியக்கூடியதாகவும் இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளின் உணவா காகவும் ஆகியிருக்கிறது சோத்துப்பகுதி.இந்தச் சோத்துப்பகுதி இவ்வாறு பயன்பட்ட நிலையில் அது எரி பொருளாகவும் மாறித் தன்னையே தியாகம் செய்து உதவியும் நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். இந்தச் சோத்தியைக் காயவிட்டால் அது சிறந்த எரிபொருளாகவும் மாறுகிறது.

No comments: