உலகச் செய்திகள்

 ரஷ்யா மீது தடைகள் அதிகரிப்பு: போர் களத்திலும் முட்டுக்கட்டை

உக்ரைனில் இருந்து மாணவரை மீட்டதற்காக அயல் நாட்டு தலைவர்கள் மோடிக்கு நன்றி​ தெரிவிப்பு

பொதுமக்கள் தஞ்சமடைந்த திரையரங்கு மீது தாக்குதல்

பைடனுக்கு ரஷ்யா தடை

உக்ரைன் போர் 4ஆவது வாரத்தை தொட்டது; மனித இழப்பு அதிகரிப்பு


ரஷ்யா மீது தடைகள் அதிகரிப்பு: போர் களத்திலும் முட்டுக்கட்டை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நேற்று ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன. உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யப் படை ஸ்தம்பித்திருப்பதாக மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்டபோதும் போரினால் பேரழிவுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி படையெடுப்பை ஆரம்பித்த ரஷ்ய துருப்புகள் தடுமாற்றம் கண்டிருப்பதாக மேற்கத்திய தரப்புகள் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனில் விரைவான ஒரு வெற்றி மற்றும் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கியின் அரசை வீழ்த்தும் திட்டத்தில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து வருகிறது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும், உக்ரைன் படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாகவும், ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தங்கள் தாக்குதலை தொடர்வதில் ரஷ்யப் படைகள் போராடிவருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய உளவுத்துறை மதிப்பீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இராணுவ தளவாட பிரச்சினைகள் தொடர்வதால், உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யப் படைகள் முன்னேற முடியாமல் தள்ளாடிவருகிறது,’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் படையினரின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் மற்றும் வான்படை பற்றாக்குறை காரணமாக, அப்படையினருக்கு ‘அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் எரிபொருள்’ உள்ளிட்டவற்றை விநியோகிக்க இயலவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. ‘இடைவிடாத உக்ரைனிய எதிர்த் தாக்குதல் காரணமாக, தங்களின் விநியோகச் சங்கிலியை காப்பதற்காக அதிகளவிலான ரஷ்யப்படைகளை திசைதிருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வியாழக்கிழமை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைன் முழுதும் ரஷ்யப்படைகள் முடக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டிருந்ததை பிரதிபலிக்கிறது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் எந்த ஷெல் தாக்குதலும் பதிவாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

போர்க் களத்திலான பின்னடைவுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் தமது நிலைப்பாட்டில் இருந்து இறங்குவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி சிறிய சமிக்ஞை ஒன்றையே வெளியிட்டுள்ளார்.

தமது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை தாங்கிக்கொள்ள சீனா உதவும் என்று புட்டின் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் புதிய இராணுவ உதவி பற்றி அமெரிக்க அறிவித்திருப்பதோடு ரஷ்யாவுக்கு சீனா நேரடி இராணுவ உதவிகள் அளிப்பது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா ரஷ்யாவுக்கு உதவுவது பற்றிய கவலைக்கு மத்தியிலேயே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் ரஷ்யாவின் செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிடுவதற்கு அல்லது அதனை ஒரு ஆக்கிரமிப்பாக அறிவிப்பதற்கு சீனா மறுத்து வருகிறது. உக்ரைனின் இறைமையை மதிப்பதாக குறிப்பிடும் சீனா, ரஷ்யா தனது பாதுகாப்பு கவலைகள் பற்றி நடவடிக்கை எடுக்க உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளது.

சீனாவுக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்திருக்கும் சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ரஷ்யாவின் தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தனித்தனியே தடைகளை அறிவித்துள்ளன. இதில் அவுஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில்துறையுடன் தொடர்புடைய இரு செல்வந்தர்களுடன் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஆயுத ஏற்றுமதி, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியும் இந்த தடையில் உள்ளடங்குகின்றன.

உக்ரைனில் இதுவரை 2,032 பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் 780 பேர் கொல்லப்பட்டு 1,252 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 3.2 மில்லியன் பேர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஹங்கேரி, சுலோவாக்கியா, ருமேனியா, மோல்டோவா ஆகிய அண்டை நாடுகளில் பலர் தஞ்சம் புகுந்துள்ளனர். போலந்தில் மிக அதிகமாக ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்டோர் எல்லையைக் கடக்கின்றனர்.

உக்ரைனிலிருந்து சில அகதிகள் ஜெர்மனி, செக் குடியரசு என மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். உக்ரைன் பூசலிலிருந்து உக்ரேனியர்கள் வெளியேறுவதற்கு அவை ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரிய அளவில் அகதிகள் வந்தால் சவாலாக இருக்கும் என்று அவை ஒப்புக்கொண்டுள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் உடன்படிக்கை ஒன்று இன்னும் எட்டப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை காப்பாற்ற மீட்பாளர்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் தஞ்சம் பெற்றிருந்த திரையரங்கு ஒன்றின் மீது கடந்த புதன்கிழமை வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது.

திரையரங்கு மீதான தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தப் போரினால் மரியுபோல் நகர் பெரும் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் முற்றுகைக்கு மத்தியில் குடிநீர், மின்சாரம், உணவு இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் நிலவறைகளில் சிக்கி உள்ளனர்.

தலைநகர் கியேவின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு புறநகர் பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இரவு நேர ரொக்கெட் தாக்குதலுக்கு மத்தியில் நகரில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இதற்கிடையே உக்ரைனின் வடக்கில் இருக்கும் ஜெனீவா நகரில் நடந்த தாக்குதலில் 53 பேர் உயிரிழந்ததாக அந்நகரின் ஆளுநர் கூறினார். தலைநகர் கீயேவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கட்டடம் ஒன்று கடுமையாகச் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு போர்க்குற்றவாளி என்று சாடியுள்ளார். அது ஏற்றுக்கொள்ள முடியாத, மன்னிக்கமுடியாத வெற்றுப்பேச்சு என்று ரஷ்யா கூறியது.    நன்றி தினகரன் 




உக்ரைனில் இருந்து மாணவரை மீட்டதற்காக அயல் நாட்டு தலைவர்கள் மோடிக்கு நன்றி​ தெரிவிப்பு

உக்ரைனில் சிக்கியிருந்த நேபாள மற்றும் வங்கதேச மாணவர்களை ஒபரேஷன் கங்காவின் மூலம் மீட்டுத் தந்தமைக்காக அந்நாடுகளின் பிரதமர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காகவே இந்தியா இந்த மீட்புப் பணியை ஆரம்பித்தது. இதுவரை இருபதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு நேபாள மாணவர்களும் ஒன்பது வங்கதேச மாணவர்களும்

இந்தியா வழியாக நான்கு மாணவர்களும் காட்மண்டு வந்து சேர்ந்தனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக நேபாள பிரதமர் ஷர் பகதூர் தோபா தெரிவித்துள்ளார். இதேபோல ஒன்பது வங்கதேசத்தவர்களை மீட்டு வந்ததற்காக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹஸீனாவும் பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதே சமயம் பாகிஸ்தானிய மாணவியான அஷ்மா ஷஃபீக் தன்னை உக்ரைனில் இருந்து மீட்டு வந்ததற்காக பாரதப் பிரமருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




பொதுமக்கள் தஞ்சமடைந்த திரையரங்கு மீது தாக்குதல்

முற்றுகையில் உள்ள தெற்கு நகரான மரியுபோலில் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருந்த திரையரங்கு ஒன்றின் மீது ரஷ்ய படை குண்டு வீசியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

அந்தக் கட்டடத்தில் 1,000 மற்றும் 1,200 வரையானவர்கள் அகதிகளாக தஞ்சம் பெற்றிருந்ததாக நகரின் பிரதி மேயர் செய்கெய் ஓர்லொவ் பி.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புகள் பற்றி உடன் உறுதி செய்யப்படவில்லை. கட்டடத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பது தாக்குதலுக்கு பின்னரான படங்கள் காட்டுகின்றன. ரஷ்யாவின் வான் தாக்குதல் மற்றும் ஷெல் வீச்சுகள் முன்னர் மகப்பெற்று மருத்துவமனை, தேவாலயம் மற்றும் குடியிருப்பும் தொடர்மாடிக் கட்டிடத்தை இலக்கு வைத்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 



பைடனுக்கு ரஷ்யா தடை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மேலும் 12 அதிகாரிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டொனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளர் லியோட் ஒஸ்டிக், ஊடகச் செயலாளர் ஜேன் சக்கி மற்றும் நிர்வாகத்தின் ஏனைய உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் எதிர்பாராததாக முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டன் மற்றும் பைடனின் மகன் ஹன்டரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




உக்ரைன் போர் 4ஆவது வாரத்தை தொட்டது; மனித இழப்பு அதிகரிப்பு

- ரஷ்ய படைகளுக்கு முட்டுக்கட்டை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நான்காவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் தலைநகர் கியேவ், மரியுபோல், செர்னிஹிவ் மற்றும் கார்கிவ்வில் முற்றுகை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யப் படை நகர்புற மையங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு மேலும் இரண்டு மில்லியன் பேர் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய கியேவ் மீது ஒரு வாரத்திற்கு மேல் குண்டுகள் விழுந்து வருகின்றன. தலைநகரை நோக்கி ரஷ்ய படை முன்னேற முடியாத நிலையில் 15 கி.மீற்றருக்கு அப்பால் இருந்து ஏவுகணைகளை வீசி வருகிறது.

“ரஷ்ய துருப்பினர் எமது வாழ்வை நரகமாக்கியுள்ளனர். மக்கள் உணவு, நீர் அல்லது மின்சாரம் இன்றி இரவு, பகல் நிலத்தடி முகாம்களில் இருந்து வருகிறார்கள்” என்று கியேவ் பிராந்திய தலைவர் ஒலெக்சி குலேபா உக்ரைன் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கிட்டத்தட்ட அனைத்து முனைகளிலும் ரஷ்யப் படை முன்னேற முடியாமல் ஸ்தம்பித்திருப்பதாக பிரிட்டன் இராணுவ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

“உக்ரைனின் எதிர்ப்பு சிறந்த முறையில் ஒருங்கிணைந்து இடம்பெற்று வருகிறது” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “அனைத்து பிரதான நகரங்கள் உட்பட உக்ரைனின் பெரும் பகுதி தொடர்ந்து உக்ரைனியர் கைகளில் உள்ளது” என்று அது குறிப்பிட்டுள்ளது. “தரை வழியாக முன்னேற முடியாத காரணத்தால் பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்துவது குண்டுவீசுவது என ரஷ்யாவின் முயற்சிகள் இப்போது வான் வழி தாக்குதல்களுக்கு மாறியுள்ளது” என்று உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த படையெடுப்பு காரணமாக இதுவரை சுமார் தமது 500 படையினரே கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்யா கூறிய நிலையில் அது 7,000 ஐ நெருங்குவதாக அமெரிக்க உளவுப் பிரிவு கணித்துள்ளது.

இதேவேளை உக்ரைனில் ரஷ்யா தனது இலக்கை எட்டும் என்றும் மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கம் மற்றும் ரஷ்யாவை துண்டாக்கும் முயற்சிகளுக்கு அடிபணியப்போவதில்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மத்திய நிலைப்பாடு பற்றி பேச தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மத்தியில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய புடின், “எதிர்காலத்தில் உக்ரைனின் நாஜி ஆதரவு அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பெற்று ரஷ்யாவை இலக்கு வைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

உக்ரைனின் ஜனநாயக முறையில் தேர்வான தலைவர்களை நவ நாஜி கொள்கை கொண்டவர்கள் என்று தொடர்ந்து கூறி வரும் புடின் அவர்கள் நாட்டின் கிழக்கில் உள்ள ரஷ்ய மொழி பேசுபவர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறார்.

இதேவேளை அமெரிக்க பாராளுமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் உரையாற்றி இருக்கும் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, உக்ரைனின் வான் தடை வலையம் ஒன்றை உருவாக்குவது பற்றி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். எனினும் இந்தக் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் தெரிவிக்க உள்ளார்.

இந்த உதவியில், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உக்ரைனுக்கு சிறப்பான விதத்தில் பயன்பட்ட ஜாவ்லின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்ட கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை அதிகளவில் வழங்குதல் ஆகியவை அடங்கும் என, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, ரஷ்ய படையெடுப்புக்கான எதிர்வினை குறித்து ஆலோசிக்க நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்திப்பு ஒன்றை நடத்தினர். நேட்டோ உறுப்பினர் நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காகவும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸுக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.      நன்றி தினகரன் 





No comments: