கந்தவேளைக் கருங்குயிலே வரக்கூ வாயே! - பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 

சிவமயம்






          














பாதிமதி ஏறுசடைப் பரனார் நெற்றிப்

            பரந்தவிழி உகுத்திட்ட ஆறு பொறிகள்

சோதிப்பொலி வுடனாறு மதலை களாகிச்

            சுந்தரத்தா யணைக்கவந்த அறுமுக வேலனை!

ஆதிகேசவன் மருகனை! அமரர் தொழவே

             அருளொளிவி ரிக்கின்ற வைவேல் முருகனை!

நாதியற்று நலிவுற்றோர்; நலந்தனைக் காத்திட

            ஞானமுதலைப் பூங்குயிலே வரக்கூ வாயே!


சுந்தரமதி முகமாறும்  சோதியோ டாடத்

                தூய்மைமிகு பொன்முடிகள் துலங்கி ஆடச்      

சந்தணியும் மார்பில்முப் புரிநூ லாடச்

                  சக்திகளாய்ப் பாவையரும் பக்க மாடப்

பந்தமறுக் கும்வைவேல்செங் கரத்தி லாடப்

                  பசுந்தோகை தனைவிரித்தே மயிலும் ஆட

வந்தாதரி யென்றடியார் மன்றா டவந்தருள்

                 வடிவேலனைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

  

 விந்தையென அருணகிரியின் உயிரைக் காத்து

                     விலைகாணாப் புகழாரஞ் சூட்ட வைத்து

 முந்தைவினை தீர்;த்துப்பத மீய்ந்தளித் தானை!

                    முத்தமிழுக்(கு) அணிசேர்த்தோர்க்(கு) அருள்தந் தானை!

 செந்தமிழுக்(கு) ஏங்கிஒளவைக் கருளி னானை!

                    தினைப்புலத்தில் வரித்திட்ட வள்ளி கேள்வனை!

 வந்தவதா ரஞ்செய்து சைவமுந் தழைக்க

                   வழிசெய்யப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 





















நற்றமிழால் வைதிடினும் நவநிதி அளித்து

            நன்னிலைய ளித்தருளும் மாயோன் மருகனை!

பற்றுவைத்துத் தஞ்சமென நம்பு மடியார்

            பந்தமறுத் தென்றும்பே ரின்ப மீயப்

பொற்பதம் அளித்தருளும் சற்குரு நாதனை!

            பொற்சிகரி வாகனனின் இளவல் தன்னை!

உற்றதுணை யாயிலங்கும் உம்பர் கோனை!

              உளம்மகிழ்ந்து பூங்குயிலே வரக்கூ வாயே!


தந்தித்த னித்தொந்தி ஐங்கர முதல்வனின்    ;

              சகோதரசண் முககுகனைச் சத்தியின் சத்தியை!

செந்திருவும் கலைமகளும் சேர்ந்தே வாழ்த்தச்

             சீர்த்திமலி அறுபடையி லுறையுஞ் சேந்தனை!

கொந்தாரும் கடம்பணிகூர் வேலா யுதனை!

            கூற்றுகந்தோன் அருளமுதைக் கும்பிடும் அடியார்

பந்தித்த மும்மலம கற்றிடும் பரனைப்

              பசுஞ்சோலைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 


 

 

 

 

 

 



















ஆறுபடை வீடமர்ந்து அருள்அறு முகனை!

              அரகரசிவ சண்முகனை! அமரர் தொழும்

ஏறுமயில் வாகனனை! எழிலார் குழகனை!

               எண்குணங்கொள் பஞ்சாட்சரக் கடவுளை! அன்று

வீறுகொண்டே பொருதிட்ட வீர சுரனை

            வென்றுவாகை சூடிநின்ற வைவேற் குமரனை!

நாறுமலர்ச் சோலைமலி குன்றுதோ டாடும்

               நாயகனைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 

 

அந்திவண்ணன் கைகட்டி வாயும் பொத்தி

                அடிபணிந்து செவிசாய்க்க ஓங்கா ரமென்னும்

மந்திரத்தின்பொருளுரைத்த குருவா னானை!

                மகிழ்ந்தினிய வள்ளிதனை வரித்த கோனை!

முந்தியோர்நாள் அயனவனைச் சிறையிட் டவன்தன்

               முனைப்பதனை நீக்கியமுக் கண்ணன் சேயை!

சிந்தையினாற் சந்ததமும் சீர்அடி யரேத்தும்

               செவ்வேளைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 

அவியாத செழுஞ்சுடராய் ஒளிர்கின் றானை!

                அழகவிள சிவகுமார செல்வன் தன்னை

குவியாத மலரெடுத்துப் பூசை யியற்றிக்

             “கொடுமுருகா என்றெதுவும் கேட்கா தோர்க்கும்

கவியாற்றித்தமிழாலே அர்ச்சிப் போர்க்கும்

            கருணைகொண் டருள்பொழியும் கந்த குகனை!

புவியாத ரித்துப்போற் றுங்கலி வரத

            போதாந்தனைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 

கலிகாலம் முடியும்வரை உயிர்ப் பலியா?

            காசினிக்கு விமோசனந்தான் என்றும் இலையோ?

நலிவுற்றோர் வறுமையினால் துடிப்ப தெதற்கோ?

            நாளுமவர் முன்செய்த வினையின் விழைவோ?

பலியாகும் பலகோடிக் குழந்தைகள் என்ன

               பாவந்தான் செய்தினரோபாரா முகமேன்?

கலிவரதன் பஞ்சமிலா உலகாய் மாற்றக்

                கடம்பனைநற் கருங்குயிலே வரக்கூ வாயே!

 

 

 

இன்றைய  நிலைகண்டு……..

கந்தவேளைக் கருங்குயிலே வரக்கூ வாயே

 

 தவநெறியை மறந்துவாழும் மாந்தரும் உண்டு!!

              தற்போதம் கொண்டுதலை வீக்கங் கொண்டு

சிவசிந்தனை யிலுமந்தோ சிரத்தை விட்டுத்

              திருநீறு அணிவதையும் மறப்பர் உண்டு!

அவதூறு பேசிநிதம் அடுத்தவர் உயர்வை

            ஆற்றாது பொறாமைகொண் டுழல்வோ ருமுண்டு!

குவலயத்தில் அறங்காத்து அமைதி காக்கக்

            குலாந்தகனைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 

 

பலங்கொள்வல் லரசுகளின் ஒற்றுமை இன்மை!

                பாரெங்கும் மதங்களினால் நேரும்பே ரவலம்!

 உலகெங்கும் கொடுஞ்செயல்கள் மலியுங் காட்சி!

                 ஊழல்களால் சமூகங்கள் அடையுங் கேடு!

 நிலஞ்சேர்க்கும் வெறிகொண்டோர் உயிர்கள் அழியும்

                 நிலைகண்டும் போர்நிறுத்தம் செய்யா நிலைமை!

கலங்கிவாழ் கோடிமக்கள் துயரைக் களையக்

                கந்தவேளைக் கருங்குயிலே வரக்கூ வாயே!




பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்       



No comments: