ஸ்வீட் சிக்ஸ்டி 6 -தாயைக் காத்த தனயன் - - - ச சுந்தரதாஸ்


 

தாய் சொல்லைத் தட்டாதே என்ற வெற்றிப் படத்தை தயாரித்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் அந்தப் படம் நூறாவது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போதே தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார்.படத்தின் பெயர் தாயைக் காத்த தனயன்.தாய் சொல்லைத்த தட்டாதே படத்தில் இடம் பெற்ற நடிகர்கள், கலைஞர்களை கொண்டே அடுத்த படத்தை தொடங்கிய தேவர் கதாபாத்திரங்களையும் முந்தைய படத்தைப் போலவே அமைத்து விட்டார்.தாய் சொல்லைத்த தட்டாதே,தயைக் காத்த தனயன் இரண்டிலும் தனயன் புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன்.தாய் பி கண்ணாம்பா.கதாநாயகி பி சரோஜாதேவி .வில்லன் எஸ் ஏ அசோகன்.அதில் கதாநாயகிக்கு அப்பாவாக வந்த நடிகவேள் எம் ஆர் ராதா இதில் அண்ணனாக வருகிறார்.ஆனால் முந்தைய படத்தில் நடித்த குலதெய்வம் ராஜகோபால் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.மாடப்புறா படத்தின் போது எம் ஜீ ஆருக்கும் ராஜகோபாலுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்தப் படத்தில் அவர் இடம் பெறவில்லை.அவருக்கு பதில் எம் ஆர் ராதாவின் மூத்த மகன் எம் ஆர் ஆர் வாசு புதுமுக நடிகராக இதில் நகைச்சுவை வேடம் ஏற்றார். முந்தைய படத்தைப் போல் இதிலும் தேவர் வில்லனின் கையாளாக நடித்தார்.இவர்களுடன் ஜீ சகுந்தலாவும் நடித்தார்.

பத்து தலைமுறைக்கு சொத்து இருக்கும் குடும்பத்தில் பிறந்த சேகர் பொழுது போக்குக்காக வேட்டையில் ஈடுபடுகிறான்.புலி வேட்டையின் போது அவன் வைத்த குறி பிசகவே புலி தப்பி விடுகிறது.ஆனால் புள்ளிமான் சிக்குகிறது.அதாவது மரகதம் என்ற இளம் மங்கை அறிமுகமாகிஇருவர் இடையே காதல் மலர்கிறது.ஊரில் உள்ள போக்கிரி முத்தையா மரகதத்தை அடைய பல தடுகிதங்களை செய்கிறான்.மரகதம் சேகர் காதலை ஆரம்பத்தில் எதிர்க்கும் சேகரின் தாயும் மரகதத்தின் அண்ணனும் பின்னர் மனம் மாறுகிறார்கள்.ஆனாலும் பழி வாங்கத் துடிக்கும் புலி தாயின் மீது பாய அதனுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டு தாயைக் காத்த தனயன் ஆகிறான் கதாநாயகன்சேகர்.இப்படி அமைத்த கதையின் நாயகன் எம் ஜீ ஆருக்கு காதலிப்பது,வில்லனை உதைப்பது,புலியுடன் மோதுவது,காதலுக்காக தாயிடம் மன்றாடுவது காதலியின் அண்ணனின் சுடும் சொற்களை சகித்துக் கொள்வது என்று பல வேலைகள்.அனைத்தையும் நன்றாக கையாண்டிருந்தார்.புலியிடம் சிக்கிக் கொள்ளும் போது அவர் காட்டும் முகபாவம் அருமை.அதே போல் புலியுடன் போடும் சண்டையும் மயிர்க்கூச்செறியும் படி படமாக்கப்பட்டது.இது போதாதென்று தேவருடன் எம் ஜீ ஆர் போடும் சிலம்புச் சண்டை சூப்பர்!
கதாநாயகி அழகு என்றால் அவர் பேசும் கொஞ்சு தமிழும் அழகு.நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

உருக்கமான நடிப்புக்கு கண்ணாம்பா என்றால் அசால்ட்டான நடிப்புக்கு எம் ஆர் ராதா.படத்தில் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களின் கரகோசத்தை பெற்றுக் கொண்டன .ராதா இல்லாத படம் சாதா என்று குமுதம் வார இதழ் பாராட்டியது.படத்தில் புலி உறுமுகிறது என்றால் வில்லன் அசோகன் கர்ச்சிகின்றார்.படத்தின் கதை வசனம் ஆரூர்தாஸ்.வசனங்கள் அழுத்தமாக அமைந்தன.ஒளிப்பதிவு பெரிதும் பிரபலம் அடையாத சி வி மூர்த்தி.மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதென்பது போல் 60 ஆண்டுகளுக்கு முன்பே மூட் லைட்டை பயன்படுத்தி காட்டில் எடுத்த காட்சிகள் வீட்டில் எடுத்த காட்சிகளை எல்லாவற்றையு ம்அருமையாக படமாகியிருந்தார்.ஷியாம்சுந்தரின் சண்டை அமைப்பும் பாராட்டுக்குரியது.
தேவர் படம் என்றால் இசை திரை இசைத் திலகம் கே வீ மகாதேவன்,பாடல்கள்கள் கவிஞர் ,கண்ணதாசன்,படுவது டீ எம் சௌந்தரராஜன் சுசிலா என்பது நியதி.இப் படத்திலும் அது தொடர்ந்தது.
கட்டித்தங்கம் வெட்டி எடுத்து,மூடித் திறந்த விழி இரண்டும் பார் பார் என்றது,காவேரி கரை இருக்குகரை மேலே பூ இருக்கு,காட்டு ராணி தோட்டத்திலே கதவுகள் இல்லை,பேரைச்சொல்லலாமா கணவன் பேரைச்சொல்லலாமா ஆகிய பாடல்கள் ரசிகர்களை மயக்கின.இது தவிர நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும் என்ற தத்துவப் பாடலும் கருத்துடன் அமைந்தது.

படத்தை தேவரின் தம்பி எம் ஏ திருமுகம் டைரக்ட் செய்திருந்தார்.1962ல் வெளிவந்த தாயை காத்த தனயன் தமிழகத்தில் நூறு நாட்கள் ஓடி இலங்கையிலும் வெற்றி படமானது.
1 comment:

Kalvalai on Cyberspace said...

தயவு செய்து படத்தின் பெயரைத் "தாயைக் காத்த தனயன்" என மாற்றவும்