உலகச் செய்திகள்

உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய படையினர் முன்னேற்றம்: விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு மூன்றாவது வாரத்தைத் தொட்டது

பிரிட்டன், அமெரிக்க நாடுகள் ரஷ்ய எண்ணெய்க்குத் தடை

நேட்டோ உறுப்புரிமை கேட்டு இனி கெஞ்சப்போவதில்லை

போலந்தின் திட்டத்தை அமெரிக்கா நிராகரிப்பு

நட்பற்ற நாடுகளை அறிவித்தது ரஷ்யா

தடைகளுக்கு ரஷ்யா பதிலடி


உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய படையினர் முன்னேற்றம்: விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு

புதிய நகரங்கள் மீதும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கியேவின் வடமேற்கில் ரஷ்ய படைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக செய்மதி படங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. தலைநகர் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பிரிட்டன் நேற்று குறிப்பிட்டது.

வடக்கு உக்ரைனில் ரஷ்யாவின் பிரதான தாக்குதல் படையினர், படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே கியேவின் வடக்கு நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்தது. இதனால், தலைநகர் மீதான ரஷ்யாவின் ஆரம்பத் திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்டன.

ஆனால் அமெரிக்காவின் தனியார் செய்மதி நிறுவனமான மக்சார் வெளியிட்ட படங்களில், கியேவின் வடமேற்கே ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நகரங்களுக்குள்ளும் அதன் வழியாகவும் கவசப் படைகள் முன்னேறுவது தெரிகிறது. போர் ஆரம்பித்த விரைவில் இங்கு ரஷ்ய துருப்புகள் பரசூட்டில் இறங்கிய நிலையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பிரிவுகள் பீரங்கி தாக்குதல் நடத்தும் நிலையை நோக்கி வடக்கே லுபியங்காவின் சிறிய குடியேற்றத்திற்கு அருகில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக மக்சார் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் புதிய தாக்குதல் செயற்பாடுகளுக்காக ரஷ்யா தனது படைகளை மீளமைத்தும் புதிய நிலைகளில் நிறுத்துவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு அதன் புதிய உளவுத் தகவல்களில் தெரிவித்துள்ளது. ‘இதில் தலைநகர் மீதான படை நடவடிக்கையும் உட்படலாம்’ என்றும் அது சுட்டிக்காட்டியது.

ஏற்பாட்டியல் பிரச்சினைகள் மற்றும் உக்ரைனின் வலுவான எதிர்ப்புக் காரணமாக ரஷ்யப் படைகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே கண்டிருப்பதாகவும் பிரிட்டனின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரும் இழப்புகளுக்கு பின் ரஷ்யப் படைகள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதை உக்ரைன் இராணுவமும் உறுதி செய்தது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் யுக்ரைன் தலைநகர் கியேவை நோக்கி ரஷ்ய படைகள் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முற்றுகையில் உள்ள தென்கிழக்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் ரஷ்யா தொடர்ந்து ஏழாவது நாளாகவும் போர் நிறுத்தத் திட்டத்தை அறிவித்தது. அந்த நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையானோரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ‘அது இன்று வெற்றி அளிக்கும் என்று நாம் நம்புகிறோம்’ என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரிஷ்சுக் நேற்று தெரிவித்திருந்தார்.

மரியுபோலில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முந்தைய முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன. அந்த நகரில் உணவு அல்லது குடிநீர் இன்றி தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியுள்ளனர்.

மரியுபோலில் இருக்கும் பொது மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது ஒரு போர் குற்றம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு

பிரான்ஸின் வெர்சைலஸ் மாளிகையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் ரஷ்யா மீது மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரினால் அடைக்கலம் பெற்றிருக்கும் 2.5 மில்லியன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பிலும் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்படும்.

உக்ரைன் மீதான படையெடுப்பு இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் கடுமையான தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் சாதாரண வர்த்தக உரிமைகளை நீக்கும்படி ஜி7 தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி கோருவார் என்று கூறப்படுகிறது. இது ரஷ்யாவின் பொருட்கள் மீது மேலும் வரி விதிப்பதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உக்ரைன் நகரான ட்னிப்ரோ மீது நேற்று மூன்று வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதோடு அதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா இதுவரையில் தலைநகர் கியேவில் ஸ்தம்பித்து இருப்பதோடு உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கில் எந்த நகரையும் கைப்பற்றவில்லை. எனினும் அது தெற்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.

நேற்றுக் காலை ரஷ்ய படைகள், மேற்கு நகரங்களான லுட்ஸ்க் மற்றும் இவானோ-பிராங்கிவ்ஸ்க் விமான நிலையங்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் உட்பட புதிய தாக்குதல்களை ஆரம்பித்தது.

மேலும், இரண்டு வாரங்களுக்கு முன் படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து முதன்முறையாக அவர்கள் மத்திய-மேற்குப் பகுதியின் கோட்டையாகக் கருதப்படும் டினிப்ரோ மீதும் குண்டு வீசியுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நகரங்களில் இருந்து அகதிகள் உக்ரைனின் மேற்குப் பகுதி பாதுகாப்பானது என்று நம்பி வெளியேறி வருகின்றனர். அதில் பெரிய சிவிலியன் மையமான வீவ் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் அதற்கு இருபுறமும் உள்ள நகரங்கள் மீது நடக்கின்றன.   நன்றி தினகரன் 




ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு மூன்றாவது வாரத்தைத் தொட்டது

- மருத்துவமனை தாக்குதலை மறுத்தது ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து நேற்று மூன்றாவது வாரத்தை தொட்ட நிலையில் அதன் இலக்கு இன்னும் எட்டுப்படாத சூழலில் இந்தப் போரினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையில் உள்ள நகரங்களில் சிக்கித் தவிக்கின்றனர். உக்ரைன் மீது தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது.

மரியுபோல் நகரில் இருக்கும் சிறுவர் மருத்துவமனை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா ‘இனப்படுகொலையில்’ ஈடுபட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. எனினும் இந்த செய்தி போலியானது என்று மறுத்துள்ள ரஷ்யா, அந்தக் கட்டடம் முன்னாள் மகப்பேறு மருத்துவமனை என்றும் அதனை உக்ரைன் படை நீண்டகாலமாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனிய இராணுவத்தை நசுக்குவது மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கியின் மேற்குல ஆதரவு அரசாங்கத்தை வெளியேற்றுவதை இலக்காகக் கொண்டே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. எனினும் போலந்து மற்றும் ருமெனிய எல்லைகள் வழியாக வரும் மேற்குலக நாடுகளின் இராணுவ உதவியுடன் உக்ரைன் அரசு ரஷ்யாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து தாக்குப்பிடித்து வருகிறது.

தலைநகர் கியேவின் வடமேற்கில் உள்ள மிகப்பெரிய ரஷ்யப் படை ஒரு வாரத்திற்கு மேல் நிலைகொண்டிருக்கும் சூழலில் அது சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தப் படை பெரும் உயிர்ச் சேதத்தை சந்தித்து வருவதாகவும் அந்த இழப்புகளுக்கு மாற்றாக முழு படையையும் பயன்படுத்தும் நெருக்கடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தள்ளப்பட்டிருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் தமது படைகள் திட்டமிட்டபடி உக்ரைனில் முன்னேற்றம் கண்டு வருவதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார். இந்த படையெடுப்பை “சிறப்புப் படை நடவடிக்கை” என்று அறிவித்திருக்கும் ரஷ்யா, அண்டை நாட்டில் ஆயுதக்களைவு மற்றும் ‘நியோ நாஜி’ என்று அழைக்கும் தலைவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யப் பொருளாதாரத்தை துண்டிக்கும் வகையில் மேற்குலக நாடுகள் தொடர்ந்து தடைகளை விதித்து வருவதோடு இதனால் ரஷ்ய பங்குச்சந்தை மற்றும் அந்நாட்டு நாணயமான ருபிள் வீழ்ச்சி கண்டு வருகிறது.

“மருத்துவமனை

குண்டுவீச்சு”

ரஷ்ய விமானங்கள் கடந்த புதன்கிழமை சிறுவர் மருத்துவமனை ஒன்றின் மீது குண்டு வீசியதாக ரஷ்ய அதிகாரிகள் கூறிய நிலையில், ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக செலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மரியுபோலில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்ட நிலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் நோயாளிகள் இடிபாடுகளின் கீழ் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது.

“மருத்துவமனைகள், மகப்பேறுகள் மீது பயப்பட்டு அவைகளை அழிக்கும் ரஷ்ய கூட்டமைப்பு என்பது எந்த வகையான ஒரு நாடு என்று புரியவில்லை” என்று செலென்ஸ்கி கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இந்த தாக்குதலால் பிரசவ வார்டில் இருந்த பெண்கள் காயமடைந்திருப்பதாகவும் சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கி இரப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யா ஆரம்பத்தில் சந்தித்துள்ள பின்னடைவுகளால் அந்த நாடு தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் அமெரிக்கா, “அப்பாவி பொதுமக்கள் இலக்குகள் மீது இராணுவத்தை பயன்டுத்துவது காட்டுமிராண்டித்தனமானது” என்று குறிப்பிட்டது.

தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்களில் மருத்துவமனைக் கட்டடம் சேதமடைந்திருப்பதும், அதன் வெளிப்புறம் பெரிய குழி ஏற்பட்டிருப்பதும் தென்படுகிறது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் “இப்படித் தான் போலிச் செய்திகள் பிறக்கின்றன” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் முதல் பிரதி வதிவிடப் பிரதிநிதி ட்மிட்ரி பொலியன்ஸ்கிவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா முன்னதாக முற்றுகையில் உள்ள மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேற உதவியாக போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தது. இந்த நகரில் நீர் மற்றும் மின்சாரம் இன்றி மக்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக சிக்கியுள்ளனர். இந்த வெளியேற்ற நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.    நன்றி தினகரன் 




பிரிட்டன், அமெரிக்க நாடுகள் ரஷ்ய எண்ணெய்க்குத் தடை

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தடை விதித்திருப்பதோடு ரஷ்ய எரிவாயு மீதான நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

ரஷ்ய பொருளாதாரத்தின் நாடித் துடிப்பை இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வருவாயின் பிரதான மூலமாக வலுசக்தி ஏற்றுமதிகள் இருந்தபோதும் இந்த நடவடிக்கை மேற்குலக நுகர்வோரிடமும் தாக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக ரஷ்யா உள்ளது.

அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளில் சுமார் 8 வீதமானது ரஷ்யாவில் இருந்து வருவதோடு பிரிட்டன் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 6 வீதம் ரஷ்யாவில் இருந்து வருகிறது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் வலுசக்தியில் பெரிதும் நம்பியுள்ளது. எனவே அந்த நாடுகள் தடைகளை விதிப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தடை அறிவிக்கப்படும் முன்னர் இது சர்வதேசப் பொருளாதாரத்தில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜெர்மனிக்கான பிரதான எரிவாயு மூடப்படக் கூடும் என்றும் ரஷ்யா எச்சரித்திருந்தது.

இந்தப் போரினால் ஏற்கனவே எரிபொருள் விலை சாதனை அளவுக்கு அதிகரித்திருப்பதோடு இந்த புதிய தடைகளால் அது மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுவேலா தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.      நன்றி தினகரன் 




நேட்டோ உறுப்புரிமை கேட்டு இனி கெஞ்சப்போவதில்லை

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி நேட்டோ கூட்டணியில் சேர்வதைத் தாம் இனி வற்புறுத்திக் கேட்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ரஷ்யாவை அமைதிப்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர விரும்பியதே ரஷ்யப் படையெடுப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது.

ஆக்கிரமிப்பைத் ஆரம்பிப்பதற்கு முன்னர், உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு வட்டாரங்களை, சுதந்திரம் பெற்ற பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்தார். அதிலும் உக்ரைன் சமரசமாகப் போக விரும்புவதாக செலென்ஸ்கி கூறினார்.

நேட்டோ அமைப்பு உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அந்த அமைப்பு சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபடவும் ரஷ்யாவுடன் மோதவும் அஞ்சுகிறது. என்று ஏ.பி.சி நியுஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

“எங்களை இணைத்துக்கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்ட பின், நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற என் மனநிலை மாறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் சேர்வது பற்றிக் குறிப்பிட்டபோது, அங்கத்துவம் கேட்டு மன்றாடும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை. என்று குறிப்பிட்டார்.

நேட்டோ படையில் சேராமல் இருப்பது, கிரைமியாவை ரஷ்யாவின் அங்கம் என அங்கீகரிப்பது, டொனெட்ஸ்க் மற்றும் லுௗஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திரமானவை என அங்கீகரிப்பது ஆகிய ரஷ்யாவின் 3 வலியுறுத்தல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த செலென்ஸ்கி, தான் இது குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.    நன்றி தினகரன் 





போலந்தின் திட்டத்தை அமெரிக்கா நிராகரிப்பு

ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஒன்றின் வழியாக உக்ரைனுக்கு தனது மிக்–29 போர் விமானங்களை அனுப்பும் போலந்தின் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தத் திட்டம் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியையும் தீவிர அவதானத்திற்கு உட்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யப் படையெடுப்புக்கு மத்தியில் மேலும் போர் விமானங்களை தரும்படி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையை அடுத்தே போலந்து இந்தத் திட்டத்தை முன்வைத்தது.

ரஷ்யத் தயாரிப்பு மிக்–29 போர் விமானங்களை ஜெர்மனியின் ரஸ்டெயினில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஒன்றுக்கு வழங்குவதாகவும் பின்னர் அங்கிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் போலந்து முன்மொழிந்தது.

ஆனால் அமெரிக்க–நேட்டோ தளம் ஒன்றில் இருந்து ரஷ்யாவுடன் போட்டியிடும் உக்ரைன் வான் பரப்புக்கு போர் விமானங்களை பறக்கச்செய்வது ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியையும் அவதானத்திற்கு உட்படுத்துவதாக இருக்கும் என்று பெண்டகன் பேச்சார் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.     நன்றி தினகரன் 





நட்பற்ற நாடுகளை அறிவித்தது ரஷ்யா

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியான நிலையில் அதற்கு பதில் நடவடிக்கையாக நட்புறவற்ற நாடுகள் பட்டியல் ஒன்றை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா, ஜப்பான் உட்பட சிங்கப்பூர், தாய்வான் ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நட்பற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 





தடைகளுக்கு ரஷ்யா பதிலடி

உலகின் சில நாடுகள் விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, சில தயாரிப்புகளையும்,  சாதனங்களையும் ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடை விதித்துள்ளது. 

தொழில்நுட்பம், தொடர்பாடல், மருத்துவச் சாதனங்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியை இந்த ஆண்டு இறுதிவரை ரஷ்யா தடை செய்துள்ளது. 

மொஸ்கோவுக்கு எதிராகப் பகையுடன் நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டப்படும் சில நாடுகளுக்கு மரத் துண்டுகளை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அது பொருந்தும். 

மேலும் ரஷ்யத் துறைமுகங்களுக்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படும் என்றும் ரஷ்யா கூறியது. 

அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மேற்கத்திய நாடுகளின் கூட்டணி விதித்துள்ள தடைகளால் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முயன்றார். 

எரிசக்தி விநியோகத்தில் தனது கடப்பாட்டை உணர்ந்து, எண்ணெய், எரிவாயு விநியோகத்தை மொஸ்கோ தொடரும் என்று புட்டின் கூறினார். 

மேற்கத்திய நாடுகள் தங்கள் சொந்தத் தவறுகளுக்காக ரஷ்யா மீது பழிபோட முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.    நன்றி தினகரன் 

No comments: