தலையணை உறையை மாற்றுவது தீர்வாகுமா…? அவதானி


ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்   என்ற திரைப்படப்பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

சமகாலத்தில் இலங்கை நிலைவரங்களைப்  பார்க்கும்போது இந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கொவிட் பெருந்தொற்று முற்றாக நீங்காத நிலையில் அதன் திரிபடைந்த ஒமிக்ரோன்  பரவியிருக்கும் சூழலில்,  எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், கேஸ் சிலிண்டர் வெடிப்புகள், வெதுப்பகங்கள் மூடப்படும் சூழல்… என பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்துவருகின்றனர்.  தினமும் மின்வெட்டும் மக்களை சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.

அந்த அழகிய கலைமானுக்குத்தான் இரண்டு புறத்திலிருந்தும்


ஆபத்து, ஆனால்,  ராஜபக்‌ஷ குடும்பத்தினரை பல எதிர்பார்ப்புகளுடன் பதவியில் அமர்த்திய அப்பாவி மக்களுக்கு பல வழிகளிலும்  துயரமும்  நெருக்கடிகளும் தொடருகின்றது.

முன்னரும், பின்னரும் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களின் தீர்க்கதரிசனமற்ற பல செயற்பாடுகளினால், இன்று இலங்கை தேசத்திற்கு இத்தகைய சோதனை வந்துள்ளது. 

கொவிட் பெருந்தொற்றை காரணம் காண்பித்து காலத்தை கடத்திய ஆட்சியாளர்களுக்கு,  சமகாலத்தில் தோன்றியிருக்கும் ரஷ்ய – உக்ரேய்ன் மோதல் மற்றும் ஒரு காரணத்தை கூறுவதற்கு வழிகோலியிருக்கிறது.


கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் எத்தனை தடவை அமைச்சரவையில் மாற்றங்கள் நடந்துவிட்டன…?

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் நிதியமைச்சரின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

அதற்காக முன்பிருந்த நிதியமைச்சரை மாற்றிவிட்டு,  அமெரிக்க குடியுரிமையுடனிருந்த தமது சகோதரரை அழைத்தார்கள் அண்ணன் பிரதமரும், தம்பி ஜனாதிபதியும்.

அவருக்காக தமது கட்சியைச்சேர்ந்த மக்களால் தெரிவான  ஒரு எம்.பி. யை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,  தேசியப்பட்டியல் ஊடாகவே அவருக்கு நாடாளுமன்றில் அரியாசனம் வழங்கி, அவரது வாழ்வில் மீண்டும் அரசியல் விளக்கை ஏற்றினார்கள்.

ஆனால், வந்திருப்பவரோ வீதிவிளக்குகளை அணையுங்கள் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டின்பின்னர்,  நடந்த நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களில் தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தவர்கள்தான் ராஜபக்‌ஷ குடும்பத்தினர்.  அதனால், சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் வாக்குகளை சேகரிப்பதில் மாத்திரமே குறியாகவிருந்து பதவிக்கு வந்தவர்கள்.

இறுதியாக 2019 இல் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபாயவை எவ்வாறாயினும் வெற்றிபெறவைக்கவேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தவர்கள்தான் உதய கம்மன் பிலவும், விமல் வீரவன்சவும்.

விமல்,  மகிந்த ராஜபக்‌ஷவின் செல்லப்பிள்ளையாக, 2010 இற்கு முன்னரும் பின்னரும் அலரிமாளிகையில் வலம் வந்தவர்தான்.

மொட்டு அணியின் பிரசார பீரங்கியாக விளங்கியவர்.  எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரத்தொடங்கிய காலப்பகுதியில் அதன் பொறுப்பிலிருந்த அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வந்திருந்தது.

தற்போது, இவர்கள் இருவரும் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள் என்ற காரணத்தினால், அமைச்சுப் பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் அமைச்சரவையில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

முன்னர் வெளிவிவகார அமைச்சராகவிருந்தவர் தினேஷ் குணவர்தனா.  அவரை மாற்றி, அவ்விடத்திற்கு கல்வி அமைச்சராகவிருந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸை நியமித்தார் ஜனாதிபதி. கல்வி அமைச்சு தினேஷ் வசம் சென்றது. அதுபோன்று பவித்ரா வன்னியாராய்சியின் வசம் இருந்த சுகாதார நலத்துறை அமைச்சும் கைமாறியது.

பஸில் ராஜபக்‌ஷவும் அழைத்துவரப்பட்டு நிதியமைச்சராக்கப்பட்டார். 

இந்த அதிரடி மாற்றங்களினால், அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நீண்ட கால இடதுசாரி அரசியல்வாதி வாசுதேவ நாணயக்காரவும்  கடுப்பிலிருக்கிறார்.  அவர் அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா..? வெளியேறுவதா ..? என்று தெரியாமல்  திரிசங்கு சுவர்க்க நிலையிலிருக்கிறார்.

இச்சந்தர்ப்பத்தில் 1970 இல் வாசுதேவாவின் ( முன்னைய ) சமசமாஜக்கட்சியும் ( என். எம். பெரேரா தலைமை )  கம்யூனிஸ்ட் கட்சியும் ( பீட்டர் கெனமன் தலைமை )  வழங்கிய ஆதரவினால், ஆட்சிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய உறவினர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவுடன் முரண்பட்டு, 1976 இறுதியில் அமைச்சரவையிலிருந்து வெளியேறின.

அப்போது,  நிதியமைச்சராகவிருந்த கலாநிதி என். எம். பெரேரா, தாம் அமைச்சரவைக் கூட்டத்துக்கு செல்லும்போதெல்லாம் இராஜினாமா கடிதத்தை தமது பொக்கட்டில் எடுத்துச் செல்வதாக கூறியிருந்தார். அவ்வாறு தற்போது வாசுதேவாவும் தன்வசம் ஒரு இராஜினாமா கடிதத்துடன்தான் நடமாடுகிறாரோ தெரியவில்லை.

அன்று நிதியமைச்சராகவிருந்த என். எம். பெரேரா,  நாடாளுமன்றத்தில், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவை                 “ சாத்தான்   “ என்றே வர்ணித்தார். இறுதியில் அந்த கூட்டரசாங்கத்தை விட்டு 1976 இல் படிப்படியாக இடதுசாரிகள் வெளியேறினர்.

1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் இம்மூன்று கட்சிகளும் படுதோல்வியை தழுவின. எதிர்க்கட்சி ஆசனத்தைக்கூட பெறமுடியாத இமாலயத் தோல்வியை சந்தித்தனர். 

அவ்வேளையில்தான் ஆளும் தரப்புக்கு தெரிவான ஐக்கிய தேசியக்கட்சியை அடுத்து அதிகப்படியான ஆசனங்களைப்பெற்று அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரானார்.

இந்த வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்கவேண்டும்.

தங்களது பதவிகள் பறிபோனதற்கு முழுமுதற் காரணம் பஸில் ராஜபக்‌ஷதான் என்று உதயகம்மன் பிலவும், விமல் வீரவன்சவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்துவதற்கு தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால், இதுவரையில் அவர்களின் வாயிலிருந்து  “சாத்தான்  “ என்ற சொல் மாத்திரம் உதிரவில்லை !.

அமைச்சுப்பதவியை  வழங்குவதும், பிடுங்குவதும் ஜனாதிபதி கோத்தபாயவின் இயல்பு என்று சொல்கிறார் உதய கம்மன்பில. இவர்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்காக வெளிநாடுகளுக்கு வந்தவர். இவருடன் வந்த மற்றவர்  இன்றைய நீதியமைச்சர் அலிசப்ரி.

அப்போதெல்லாம் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருந்த பஸில் ராஜபக்‌ஷதான், 2015 இல் மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித்தேர்தலில் தோற்பதற்கு முக்கிய காரணம் என்றும் உதய கம்மன்பில சொல்லிவருகிறார்.

எது எப்படியோ எரிமலை வெடித்துவிட்டது.  எமது மக்கள் தமது வீடுகளில் எப்போது கேஸ் சிலிண்டர் வெடிக்கும் என்ற பதைபதைப்போடு வாழும் காலத்தில்,  ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஆட்சியில் பூகம்பம் வெடித்துள்ளது.

சகோதரர்கள் தலையணைகளின்  உறைகளை  மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தலையணைகள் மாறவில்லை.

அதனை முற்றாக மாற்றவேண்டிய எதிரணி என்னசெய்யப்போகிறது..? என்பதே மக்கள் முன்னிருக்கும் பிரதான கேள்வி.

---0---

 

No comments: