இலங்கைச் செய்திகள்

 தமிழர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு

உலகிலேயே ஆதிமொழி தமிழ்மொழி ஆகும்

அதிசொகுசு விசேட உல்லாச கப்பல் சேவை

அனுமதியின்றி விற்பனை செய்வதற்கு தடை


தமிழர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு

TNA தூதுக்குழுவிடம் அமெரிக்க தூதுவர் உறுதி

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார். 

அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கையை அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியிருந்தார். 

இந்த சந்திப்பின் போது, அரசியல் தீர்வு விடயங்கள், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் வகிபாகம், அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

சர்வதேச நாடுகளின் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் இருக்கவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். 

ஆகவே தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சம்பந்தன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் கேட்டுக்கொண்டார்.   நன்றி தினகரன் 




உலகிலேயே ஆதிமொழி தமிழ்மொழி ஆகும்


கிழக்கு ஆளுநர் அனுராதா புகழாரம்

தமிழ் மொழி என்பது ஆதி மொழியாகும். இதனை உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்கள் பேசி வருகின்றனர். இதன்மூலம் தமிழ் மொழியின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் "நல்லிணக்கத்தின் திறவுகோல் மொழியே" எனும்  தொனிப் பொருளில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், குச்சவெளி,தம்பலகாமம்,திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதர் சங்கங்கங்கள், பெண்கள் அமரா சமாஜ உறுப்பினர்கள், இளையோர் உள்ளிட்டோர்களுக்கு மொழியின் அவசியத்தை வழியுறுத்தும் கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை திருகோணமலை ஜூப்லி மண்டபத்தில் இடம்பெற்றபோது முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிங்கள மொழி என்பது தனித்துவமான மொழியாகும். இது எமது நாட்டில் மாத்திரமே பேசப்படுகின்றது. இதனால் தனித்துவமான எமது நாட்டுக்குரிய மொழியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

எமது நாட்டில் இடம்பெறுகின்ற சில பிரச்சினைகளுக்கு மொழியும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. இதனால் சிங்கள மொழி பேசுவோர் தமிழையும், தமிழ்மொழி பேசுவோர் சிங்கள மொழியையும் கற்றுக் கொள்வோமாக இருந்தால் சில பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும்.

எனவே எமது நாட்டை முன்னோக்கி நகர்த்த மொழி ரீதியான முரண்பாடுகளை களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




அதிசொகுசு விசேட உல்லாச கப்பல் சேவை


தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவை இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சேவையின் முதலாவது பயணம் சென்னையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி முதல் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய அம்சமாக இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் எனவும் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையையும் பயணிகள் கைவசமிருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   நன்றி தினகரன் 




அனுமதியின்றி விற்பனை செய்வதற்கு தடை

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அவ்வாறு அனுமதியின்றி வெளிநாட்டு பண பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து, மத்திய வங்கியின் பரிவர்த்தனை திணைக்களத்தின் 011 2398827, 011 2477375 அல்லது 011 2398568 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





No comments: