எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இரண்டாம் பாகத்தில் - அங்கம் 06 இல், கடந்த வாரங்களில் வெளியான காலமும் கணங்களும் நெடுங்கதை தொடர்பாக மெல்பன் வாசகி, கலை, இலக்கிய ஆர்வலர் திருமதி ஜோதிமணி சிவலிங்கம் அவர்களின் ஒரு குறிப்பினையும் பதிவுசெய்கின்றேன்.
இவர் இலங்கையில் ஆசிரியராக பணியாற்றியவர். எனது எழுத்துக்கள் குறித்து அவ்வப்போது தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சலிலும் கருத்துக்கள்
தெரிவிப்பவர்.
எனது நடந்தாய் வாழி
களனி கங்கை நூல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தையும் இந்த வருடம் தொடக்கத்தில்
மெல்பன் கேசி தமிழ்மன்றம் நடத்திய தமிழர் தின விழாவில் இடம்பெற்ற நூல் அறிமுக அரங்கிலும்
சமர்ப்பித்தவர்.
காலமும் கணங்களும் நெடுங்கதையைப்பற்றிய அவரது வாசிப்பு அனுபவக்குறிப்புடன், எனது தொடரின் 06 ஆவது அங்கத்திற்கு
வாசகர்களை அழைக்கின்றேன்.
"கனவுகள் ஆயிரம்" என்ற சிறுகதையுடன் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர், பல வருடங்களுக்குப் பின்னர் "காலமும் கணங்களும்" என்ற நெடுங்கதையை எமக்கு தந்துள்ளார்.
சிறுகதையிலிருந்து அடுத்த தொட்டிக்குள் நுழைந்து விட்டார். திடீரென பூ… பூப்பது போல் பழைய நினைவுக்குச் சென்று விட்டார். அதுவும் 35 வருடங்களுக்கு முன்னர், தான் ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய பயணத்தின் தொடக்க காலத்தை, கட்டுரையாகத் தராமல், நெடுங்கதையாகவே தன்னை சந்திரன் என்ற பாத்திரம் ஊடாக அடையாளம் காண்பித்து, நினைவுகளை பதிவுசெய்கிறார்.
ஆரம்பமே களை கட்டுகிறது. போகப்போக சொல்ல வேண்டுமா…?
ஒவ்வொருவரும் அந்தப் பயணத்தோடு தம்மையறியாமலேயே தங்களை ஒப்பீடு செய்து பார்க்க இந்த நெடுங்கதை தூண்டுகிறது.
தாயகம் விட்டு புலம்பெயர்தல் என்றால் சொல்லவும் வேண்டுமா…? எத்தனை இடக்கு, முடக்கு…! அத்தனைக்கும் ஈடுகொடுக்க வேண்டும். அதனை சந்திரன் என்ற பாத்திரத்தின் மூலம் சித்திரிக்கிறார் இந்த எழுத்தாளர்.
குடும்பத்தினர் அன்போடு கொடுத்தனுப்பிய பொருட்களை ஊரிலிருந்து தனது பொதியில் எடுத்துவந்து, வழிநெடுக சந்திக்கும் சோதனைச் சாவடிகளில் காண்பித்து, இறுதியில் பேர்த் விமான நிலையத்தில் அவற்றுக்கு விளக்கமும் கொடுக்கும் காட்சி யதார்த்தம்.
மனம் தளராமல் அத்தனை பொருட்களையும் கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக கொண்டுவந்தவர், தான் பெற்ற அனுபவங்களை சித்திரித்துள்ளார்.
தாய்லாந்து, கடந்து வரும் அவர், மேற்கு ஆஸ்திரேலியாவில் கால் பதித்ததும், பேர்த் விமான நிலையத்தில் பெற்ற அனுபவங்களையும் சித்திரிக்கிறார். இந்த அனுபவங்கள் விமானப்பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு கிட்டியிருக்கும். அதனால், முருகபூபதி சித்திரிக்கும் காட்சிகள் எமக்கும் நெருக்கமானதே.
தான் எடுத்து வந்த அத்தனை பொருட்களையும் பேர்த் விமானநிலையத்தில் அதிகாரிகளின் முன்னால் காட்சிப்படுத்தும்போது, நம்ம ஊர்ப்பொருட்கள் பற்றி ஆஸ்திரேலியாவிலிருக்கும் குடிவரவு அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதற்கு சந்திரன் என்ற பாத்திரம் திக்குமுக்காடுகிறது.
புளுக்கொடியலை அந்த அதிகாரிகள் முகர்ந்து பார்த்தபோது, தான்
என்றைக்குமே அவ்வாறு முகர்ந்து பார்க்கவில்லையே என அப்பாவித்தனமாக சொல்லும் போது எமக்கு சிரிப்புத்தான் வருகிறது.
சந்திரனின் உணர்வுகள் பிரமாதம். அடுத்து அந்தப்பாத்திரம் இந்த கங்காரு தேசத்தில் இனியென்ன செய்யப்போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
தனது பயணக்கதையை இவ்வாறு ஒரு நெடுங்கதையாக்கியிருப்பதும் முருகபூபதியின் எழுத்தின் புதிய உத்தியா..?
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவு தப்பாமல் எழுதியிருக்கிறார்.
வாசகி ஜோதிமணி சிவலிங்கம் – மெல்பன்
------
-------
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில், பேர்த்தில்
ஒரு காலை நேரம் சகோதரி திருமதி சாந்தி ரமணன் என்னை அன்ஸட் பயணியர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.
இரண்டு நாட்கள் பஸ் பயணம். விமானத்தில் புறப்பட்டிருக்கலாம். ஊர் பார்த்துக்கொண்டு பயணிக்கவேண்டும் என விரும்பியதால்,
பஸ்ஸில் ஏறினேன்.
யன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். சில நிமிடங்களில் ஒரு இளம் யுவதி வந்து என்னருகில்
அமர்ந்தாள். சில செக்கண்டுகளில், தனக்கு யன்னல் பக்கத்து ஆசனத்தை தரமுடியுமா..? எனக்கேட்டாள்.
பெண் என்றால் பேயும் இரங்குமாமே! “ அதனால் என்ன, அமருங்கள் “ என்று எழுந்து வழிவிட்டேன். தான் கூல்காலி என்ற இடத்தில் இறங்கிவிடுவதாகவும் சொன்னார்.
பஸ் புறப்பட்டது. அந்த நெடும் வீதியின் இருமருங்கும் புற்தரைகள்தான்.
ஆங்காங்கே செம்மறி ஆடுகளும் மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு வளம் சேர்க்கும்
அந்தப்பிராணிகளையே ரசித்துக்கொண்டு வந்தேன்.
அருகில் அமர்ந்திருந்த
அந்த யுவதி பேச்சுத்துணைக்கிருந்தார். அவரது
காதலன் இராணுவத்திலிருப்பதாகவும், தனக்கு அந்தத் தொழில் பிடித்தமானது இல்லையென்றும்
ஆயுதங்களே அழிவுக்குத்தானே…! என்றும் சொன்னவர் உலக சமாதானம் பற்றி பேசிக்கொண்டு
வந்தார்.
அக்காலப்பகுதியில் ஆயுதம் உற்பத்தி செய்யும் சில உலக நாடுகளும் இலங்கையில் கடைவிரித்திருந்தன.
இறுதியாக 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வடமராட்சியில் சில மாணவப்பருவத்துப்பிள்ளைகள் கையில்
துப்பாக்கிகளுடன் நடமாடியதை பார்த்தேன். வானத்தில்
கெலிகொப்டர் சுற்றிக்கொண்டிருந்தது.
குழந்தைப்பிள்ளைகளும் பப்பாசி
இலைக்குழாய்களை துப்பாக்கியாக்கி விளையாடிக்கொண்டிருந்தனர்.
அன்று என்னருகிலிருந்த
அந்தப்பெண், நான் இலங்கையிலிருந்து வந்திருப்பதை அறிந்து எமது நாட்டின் தேயிலை பற்றிக் கேட்டார். அத்துடன்
அங்கே என்ன நடக்கிறது எனவும் கேட்டறிந்தார்.
என்னிடம் அஞ்சல் முத்திரை
சேகரிக்கும் பழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.
இலங்கையில் தொடங்கிய அந்தப்பழக்கம், அவுஸ்திரேலியா வந்த பின்னரும் தொடருகிறது.
அஞ்சல் முத்திரைகளை என்றைக்குமே
நான் எனக்காக சேகரிக்கவில்லை. அதில் ஆர்வமுள்ளவர்களை சந்தித்தால், அவர்களுக்கு கொடுப்பதற்காகவே
சேகரித்துவருகின்றேன்.
வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொள்ளும்போதும்
எனது சேகரிப்பிலிருக்கும் அஞ்சல் முத்திரைகளை எடுத்துச்செல்வேன்.
அன்று அந்த யுவதி தனக்கும்
அஞ்சல் முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருப்பதாகச் சொன்னதும், என்னிடமிருந்தவற்றை எடுத்துக்காண்பித்தேன்.
அதனை அவர் எதிர்பார்க்கவில்லை.
இந்தப்பயணத்தில் தனக்கு இப்படி ஒரு பேச்சுத்துணை கிடைத்ததையிட்டு பூரிப்படைந்தவராக
நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார்.
நாம் கடந்துகொண்டிருந்த
Kalgoorlie பிரதேசங்கள் பற்றியெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தார். கனிவளங்கள் நிரம்பப்பெற்ற
அவுஸ்திரேலியா பற்றி அந்த யுவதி சொன்னசெய்திகள் அனைத்தும் புதியது.
அங்கு விளையும் தங்கம்,
நிலக்கரி - யூரேனியம் பற்றியும் விளக்கினார்.
அந்த நெடும் பாதையின் இருமருங்கும் விரிந்திருந்த
புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த செம்மறி ஆடுகளும் மாடுகளும் மாத்திரமல்ல, அந்த மேய்ச்சல்
தரைகளுக்கு அடி ஆழத்திலிருக்கும் கனிவளங்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் மூலம்தான்
என்பது அவருடைய விளக்கத்திலிருந்து புரிந்தது.
அந்த 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியக் கண்டம் பிரித்தானியாரால் கண்டு பிடிக்கப்பட்டு இருநூறு
ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்த காலம்.
அந்தப்பெண் சில மணிநேரங்களில்
அடுத்து வந்த தரிப்பிடத்தில் விடைபெற்றுச்சென்றார்.
“ மீண்டும் சந்திப்போம் “ என்றார். அதன் பின்னர் சந்திக்கவேயில்லை. எனினும்
அவர், இராணுவத்தில் சேவையாற்றும் தனது காதலனைப்
பற்றியும், போர்கள் குறித்து தான் கொண்டிருக்கும் வெறுப்பு பற்றியும் சொன்னதும் அந்த வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
நீண்ட பல மாதங்களுக்குப்
பின்னர், அந்தப்பெண்ணையே மனதிலிருத்தி, அவளது அந்த உணர்வுகளைச் சித்திரித்து மழை
என்ற சிறுகதையை எழுதியிருந்தேன்.
குறிப்பிட்ட கதை, அக்கினிக்குஞ்சு
அச்சு ஊடகத்தில் வெளிவந்து, பின்னர் பனியும் பனையும் தொகுப்பிலும் இடம்பெற்றது.
அந்த நூலுக்கு முன்னீடு
எழுதிய சுஜாதா அக்கதையை சிலாகித்திருந்தார்.
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி அவுஸ்திரேலியாவை நோக்கி விமானம் ஏறியவேளையில் எழுதிக்கொண்டிருந்த
தொடர்கதை ( கதாநாயகிகள் ) மித்திரன் நாளிதழில் வெளியாகிக்கொண்டிருந்தது. அதன் பிரதியை பார்க்காமலேயே , அவுஸ்திரேலியா வாழ்க்கை
தரும் பாடங்களிலிருந்து இனிவரும் காலத்தில் கதைகள் எழுதவேண்டும் எனத்தீர்மானித்தேன்.
பல மணிநேரங்கள் அந்த பஸ்ஸில்
பயணம் தொடர்ந்தது.
ஒரு தரிப்பிடத்தில் உணவுக்காக
பஸ் நின்றது. இறங்கிச்சென்று அந்த உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது என்றைக்குமே
நான் பார்த்திராத தோற்றத்துடன் ஒரு ஆஜானுபாகுவான மனிதன் என் முன்னால் அமர்ந்து என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப்பார்வை பயமுறுத்தியது.
விரைந்து சாப்பிட்டுவிட்டு
எழுந்தேன். எனது அவசரத்தை ஒரு முதிய மாது கண்வெட்டாமல்
மற்றும் ஒரு ஆசனத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்த மாதுவும் நான் பயணித்த
பஸ்ஸில்தான் வந்தவர்.
அந்த உணவு விடுதிக்கு வெளியே
வந்து நின்றேன். அந்த மனிதன் வெளியே வந்து
மீண்டும் என்னையே பார்த்தான். நான் விரைந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். புன்சிரிப்பை காணாத
முகம். அதனால் எனக்கு சற்று கலக்கம்.
பஸ் புறப்பட்டபோது, அந்த மனிதனை யன்னலூடாகப் பார்த்தேன். அவன் பஸ்ஸையே
பார்த்துக்கொண்டு நின்றான்.
நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.
அந்த மனிதனின் தோற்றம் என்னை பயமுறுத்தியது.
உணவுவிடுதியில் எனது அவசரத்தைப்பார்த்த
அந்த முதிய மாது சிரித்தவாறு எனக்கு அருகில் வந்து அமர்ந்து பேசத்தொடங்கினார்.
நான் ஊருக்குப்புதுசு என்பதை
புரிந்துகொண்டவர் என்பதை அவருடனான உரையாடலிலிருந்து தெரிந்துகொண்டேன்.
“ அந்த மனிதனைப்பார்த்து பயந்துவிட்டீரா..? “
நான் “ யெஸ் “
என்று தலையாட்டினேன்.
“ அவர்கள்
குறித்து நாம் பயப்படத்தேவையில்லை. அவர்கள்தான் இந்த நாட்டின் ஆதிக்குடிகள். அவர்களது
தேசத்தைத்தான் நாம் வந்து பிடித்திருக்கின்றோம்.
அவர்களை அபோர்ஜனீஸ் என அழைப்பார்கள்.
“ என்று விளக்கத் தொடங்கினார்.
அம்மக்களின் வாழ்க்கையின்
பண்பாட்டுக் கோலங்கள், இசை, ஓவியம் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார்.
அவுஸ்திரேலியாவின் கனவளங்கள்
பற்றியும் ஆதிவாசிகள் குறித்தும் தெரிந்துகொள்ளாமல் வந்திருக்கும் எனக்கு, இந்த கங்காரு தேசம் பல்வேறு புதிய செய்திகளை சொல்லித்தரப்போகிறது
என்பதை அந்த நீண்ட பயணத்தில் தெரிந்துகொண்டேன்.
அந்த மாது, அடிலைற் வரையில்
உடன் பயணம் செய்தார். அடிலைற்றை அந்த பஸ் மாலை
நெருங்கியதும், விடைபெறும்போது என்னை அணைத்து
முகத்தில் முத்தம் பதிந்து குட் லக் என்றார்.
அந்நிய நாட்டில் நான் பெற்ற
அந்த முதல் முத்தம், மறக்கமுடியாதது. ஒரு தாயாக
அருகிருந்து பேச்சுத்துணையுடன் வந்தவரையும் இன்றளவும் மறக்க முடியவில்லை.
நான் இலங்கையிலிருந்து
எடுத்துவந்த ஒரு தேயிலை பக்கட்டை அந்தத் தாயிடம் கொடுத்தேன். அதன்பின்னர் அவரையும்
நான் சந்திக்கவில்லை.
பஸ், ரயில், விமானப் பயணங்களில்
எத்தகையவர்களை சந்திப்போம், அவர்களில் எத்தனைபேர் தொடர்ந்து எமது வாழ்க்கையில் வருவார்கள்
என்பதெல்லாம் தெரியாது.
எனினும் அந்தப்பயணங்களின்
காலங்களும் உரையாடிய கணங்களும் நினைவாற்றல் உள்ளவர்களிடத்தில் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.
அந்த அன்ஸட் பயணியர் பஸ்
மறுநாள், அதாவது சுமார் இரண்டு பகல் பொழுதுகள், இரண்டு முழு இரவுப்பொழுதுகள் – அதாவது
48 மணிநேரங்கள் கடந்து காலை ஏழு மணியளவில் மெல்பனை வந்தடைந்தது.
அந்தத் தரிப்பிடம் ஸ்பென்ஸர்
வீதியில் அமைந்திருந்தது. அங்குதான் தற்போது
சதர்ண் குரொஸ் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
அன்று நான் பார்த்த ஸ்பென்ஸர்
வீதிக்கும் இன்று பார்க்கும் சதர்ண் குரொஸ் ரயில் நிலையத்திற்கும் நிரம்ப வித்தியாசம்
தெரிகிறது.
காலம்தான் எப்படி மாறிவிட்டது.
( தொடரும்
)
No comments:
Post a Comment