ஸ்வீட் சிக்ஸ்டி 5 -நெஞ்சில் ஓர் ஆலயம் - - ச சுந்தரதாஸ்

 .

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று அறியப்பட்டவர் ஸ்ரீதர்.இவர் இயக்கிய கல்யாணப் பரிசு தமிழிலும் ஹிந்தியிலும் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது.அதனைத் தொடர்ந்து தனது சொந்த பட நிறுவனமான சித்ராலயா சார்பில் தேன் நிலவு படத்தை தயாரித்து இயக்கினார்.நகைச்சுவைப் படமான இதைத் தொடர்ந்து அவர் கதை வசனம் எழுதி தயாரித்து டைரக்ட் செய்த படம் தான் நெஞ்சில் ஓர் ஆலயம்.

ஒரு டாக்டர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறான்.ஆனால் அவளோ சந்தர்ப்ப வசத்தால் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.அது மட்டுமன்றி நோயாளியாகி உயிருக்குப் போராடும் தன் கணவனை எப்படியாவது காப்பாற்றும் படி தன் பழைய காதலனிடமே வந்து நிற்கிறாள்.டாக்டரோ தன் காதலை மறந்து,மறைத்து அவள் கணவனை காப்பாற்ற போராடுகிறான்.

இப்படி அமைந்த படத்தின் கதையில் டாக்டர் வேடத்தில் நடிக்க ஸ்ரீதர் தேர்வு செய்தது கல்யாணகுமார் என்ற புதுமுக நடிகரை ஆகும்.கன்னட நடிகரான இவர் மிக மென்மையாக இதமாக பாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருந்தார்.கதாநாயகியாக நடிப்பவர் தேவிகா.முதலில் விஜயகுமாரி நடிப்பதாக இருந்த இந்த வேடம் பின்னர் கை மாறி தேவிகா வசமானது.தன்னால் உருக்கமாகவும் நடிக்க முடியும் என்பதை இப் படத்தின் மூலம் நிரூபித்திருந்தார் அவர்.முத்துராமனுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது.தேவிகாவின் நோயாளிக்கணவராக பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்திருந்தார்.

சீரியஸான இந்தப் படத்தில் ஓரளவுக்கு ரசிகர்களை தன்னுடைய நடிப்பின் மூலம் சிரிக்க வைத்தவர் நாகேஷ்.ஏற்கனவே சில படங்களில் ஒண்டிரண்டு காட்சிகளில் நடித்திருந்த இவருக்கு இந்தப் படம் திருப்புமுனை ஆனது.ஆஸ்பத்திரி தாதியாக வரும் இவர் பண்ணும் சேட்டைகள் ரசிகர்களை சிரிக்க வைத்தன.அது மட்டும் அன்றி இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரே இரவில் பிரபல நகைச்சுவை நடிகராகி விட்டார் நாகேஷ்.இவர்களுடன் மனோரமா,எஸ் ராமராவ்,குட்டி பதமினி,வீ எஸ் ராகவன்,சந்தியாகுமாரி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.



படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது விஸ்வநாதன்,ராமமூர்த்தியின் இசையாகும்.ஸ்ரீதர் படம் என்றால் பிரபல பாடகர் ஏ எம் ராஜா தான் இசை என்று இருந்த நிலை தேன் நிலவோடு கசந்தது.அதன் பின் ஸ்ரீதர் விசு,ராமமூர்த்தி இருவரையும் இந்தப் படத்தின் மூலம் சுவீகரித்துக் கொண்டார்.கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகளுக்கு பாங்காக அவர்கள் அமைத்த இசை ரசிகர்கள் நெஞ்சில் ஓர் ஆலயமாக பதிந்து விட்டது.



கண்ணதாசனின் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் வாழ்க்கைப் பாடத்தை போதிப்பதாக அமைந்தது.சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே,என்ன நினைத்து என்னை அழைத்தாயோ, என்ற இரண்டு பாடல்களும் மனத்தை உருகச் செய்தது.எங்கிருந்தாலும் வாழ்க பாடல் எ எல் ராகவன் குரலில் மிருதுவாக ஒலித்தது.ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம் பாடலும்,படத்தில் கடைசி நேரத்தில் சேர்த்துக்கொள்ளப் பட்ட முத்தான முத்தல்லவோ பாடல்படத்துக்கு முத்தாய்பாக அமைந்தது.அது மட்டுமன்றி இந்தப் பாடல்களின் முதல் வரிகள் பின்னர் தயாரான படங்களின் பெயராகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

வசனங்களின் மூலம் படத்தை நகர்த்தும் முறையில் இருந்து விலகி கமெரா மூலம் காட்சிகளை நகர்த்தும் யுக்தியை இந்தப் படத்தின் மூலம் கையாண்டிருந்தார் ஸ்ரீதர்.ஏ வின்சென்ட்,பி என் சுந்தரம் இருவரினதும் ஒளிப்பதிவு இதற்கு பெரிதும் உதவியது.



படம் முழுவதும் வாஹினி ஸ்டுடியோவில் போடப்பட்ட மருத்துவமனை செட்டில் படமாக்கப்பட்டது.அரங்க நிர்மாணம் கங்கா.படத்தொகுப்பு என் எம் சங்கர்.பிரபலமில்லாத நடிகர்களின் நடிப்பில் ஒரு மாத காலத்துக்குள் உருவான நெஞ்சில் ஊர் ஆலயம் பெற்ற வெற்றி முழு தமிழ் திரை உலகத்தையும் ஸ்ரீதரை வியந்து அண்ணாந்து பார்க்க வைத்தது.கல்யாணப் பரிசு படத்தின் மூலம் வெற்றி படிகளில் ஏறத்தொடங்கிய ஸ்ரீதர் நெஞ்சில் ஓர்ஆலயம் படத்தின் மூலம் மேல் படிகளில் ஏறி இருந்தார்.



No comments: