கானகம்; ஓங்கிடும் கங்காரு நாட்டில்   கந்தவே ளேபள்ளி எழுந்தரு ளாயே! 

 தடுத்த நிலையிலே அதாவது உருவ நிலையிலே சிவனும் முருகனும் விநாயகப் பெருமானும் வேறாகத் தோன்றினாலும் சொரூபநிலையிலே மூவரும் ஒருவரே. திருப்பள்ளியெழுச்சி என்பது துயிலினின்றும் எழுந்தருளுமாறு இறைவனைத் துதித்து வேண்டும் முறைமை. திருப்பள்ளி எழுச்சிக்குத் திரோதானசுத்தி என்பது தத்துவப்பொருள். துயில் நீக்கிப் பச்சைவண்ண மயில் வாகனத்திலே அமர்ந்து பவனிவந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் மனமுருகி இயற்றப்பெற்ற பதிகம். த்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் விளங்கித் தனது சொரூப நிலையில் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் முருகனைத் திருப்பள்ளி யெழுச்சி பாடித் துதிப்போமாக. ……

               

                                     

 

சிவமயம்

       அருள்மிகுதிருமுருகன்திருப்பள்ளிஎழுச்சி

 

காப்பு

 

                 மலையெல்லாம் மகிழ்ந்தினிய வள்ளி யோடு 

                        மகிழ்வானைத் தெய்வயானை வரித்த கோனை 

                 நிலையில்லா நிலைகொண்டேஉழலும் பத்தர் 

                         நினைந்தேத்தும் வழிபாட்டை நெகிழ்ந்தே ஏற்று 

                 விலையெழுத முடியாநற் பதத்தை நல்கும் 

                           விமலனுமை முருகனுக்கேர் பதிகம் பாடக் 

                  கலையெழுதக் கொம்பொடித்த கருணை ஞானக் 

                           கற்பகத்தின் பொற்கமலம் காப்ப தாமே.

 

     

நூல்;

 

                  விரிசுடர்ப் பரிதியும் கீழ்த்திசை உதித்தான் 

                             விண்டிடும் மலர்கண்(டு) ஆர்த்தன வண்டு 

                   வரிக்குயில் கூவிடக் கூவின சேவல் 

                               வையகம் புலர்ந்திட அகன்றது திமிரம் 

                  கரிமுக ஐங்கரன்துணைவனே வேலா! 

                               கார்முகில் மாலவன் மருகனே தேவா! 

                   தரிசனம் தந்தெமக்(கு) அஞ்சலென் றருளும் 

                              தமிழ்முரு காபள்ளி எழுந்தரு ளாயே! 

  

  

 

                   வடிதமிழ் கொண்டுனை வைதாலுஞ் சிந்தை 

                            மகிழ்ந்தே நுகர்ந்துநல் வரந்தருந் தேவா! 

                   கடிகமழ் கடம்பணி கந்தவேல் முருகா! 

                            கதிர்மணி மரகத மஞ்ஞையின் தலைவ! 

                   மிடியிடர் அணுகிடா வாழ்வெமக் கருளி 

                            மேதினி காத்திடும் வீரவேற் குமரா! 

                   படிவுயர் குன்றினிற் கோயில்கொண் டுறையும் 

                              பரம்பொரு ளேபள்ளி எழுந்தரு ளாயே! 

 

 

                   காத்திடும் கருணைகூர் ஆறிரு விழியும் 

                            கதிரொளி காலிடும் மூவிரு முகமும் 

                   ஏத்திடும் இளநகை முறுவலின் பொற்பும் 

                           இரந்திட வரந்தரும் பன்னிரு கரமும் 

                  தோற்றிடுந் திருவருள் பொலிவுறு கோலம் 

                           தொழுபவர் தோத்திரம் எடுப்பவர் கண்டாய்   

                  கூத்துகந் தாடிடும் குழகனின் குமரா 

                             குருபர னேபள்ளி எழுந்தரு ளாயே! 

 

 

 

  

                   அணைத்தெமைஅஞ்சலென்(று) அபயம் அளித்து 

                           அழிந்திடா ஆசை வெகுளிசிற் றின்பம் 

                    பிணைத்திடும் பிறவிகள் அறுத்தறி வுறுத்திப் 

                           பிஞ்ஞகா உனதிரு விரைகழல் சேர்க்கும் 

                    மணிக்குங் குமத்தட வடிவேல் முருகா! 

                            மரகதச் சித்திர மஞ்ஞையின் தேவா! 

                    பணிந்துனைத் துதித்திட அறுபடை வீடமர் 

                             பராபர னேபள்ளி எழுந்தரு  ளாயே!   

  

                    மருளற மந்திரம் அறைகுநர் ஒருபால்! 

                          மனதினால் மாமறை ஓதுநர் ஒருபால்! 

                    தெருள்மிகத் தோத்திரம் பாடுநர் ஒருபால்! 

                           சிரமதிற் காவடி தொடுப்பவர் ஒருபால்! 

                     அருள்மலர் ஆறிரு விழியொளி காண 

                            ஆடுவர் கூடிநின்(று) ஆர்ப்பவர் ஒருபால்! 

                     திரளெனத் திரண்டனர் உனதெழில் காணச் 

                              சிவசுத னேபள்ளி எழுந்தரு ளாயே! 

 

                    கந்தனுன் சேவலும் திருப்புகழ் கூவும்! 

                              கவின்மிகு மயூரமும் திருமறை அகவும்!   

                   சேந்தனுன் கிண்கிணி ஓங்காரம் இசைக்கும்!             

                             தேசொளி வைவேலுன் ஏவலுக் கிரங்கும்! 

                   செந்தா மரைப்பதஞ் சிந்திடும் அழகைச் 

                            சிந்தையால் மாந்திடத் திரண்டனர் தொண்டர் 

                     எந்தையாய் ஆதரித்(து)  அபயம் அளிக்கும் 

                               எழில்வேல வாபள்ளி எழுந்தரு ளாயே!   

 

 

                     அரனிடம் பிரணவம் உரைத்தமை பாடி 

                              அயனவன் ஆணவம் தீர்த்தமை பாடி 

                      வரந்தரு அறுமுகத் தத்துவம் பாடி 

                              வள்ளியைக் கரந்த கதையெலாம் பாடி 

                      தரம்மிகு தமிழுக்(கு) அவ்வையை நாடித் 

                             தயாபரன் சுவைக்கனி ஈய்ந்தமை பாடி 

                      இரந்திடும் அடியவர் படுந்துயர் தீர்க்கும் 

                             ஈசிதனே பள்ளி எழுந்தரு ளாயே! 

 

 

                      எழுமையுந் தொடர்ந்திடு தீதறு கல்வி 

                            ஏத்திடப் பலன்தரு சிவநெறி உணர்வு 

                     விழுமிய செந்தமிழ் மொழியிநற் புலமை   

                            விரைமலர்த் திருவடி தொழுதிடும் இதயம் 

                       தழுவியே மன்பதை நலந்தரும் அன்பு 

                             தந்திவை எம்மிடை தங்கவை முருகா! 

                      செழுமலர்க் குன்றுதோ றாடிடும் குமரா 

                              சிவக்கொழுந் தேபள்ளி எழுந்தரு ளாயே!    

 

 

                    சுகமிகக்  கல்விசந் தானமோ டின்பம் 

                           சுந்தரா தேசுடன் திருமிகு கீர்த்தி 

                     இகமதிற் தந்திட இல்லறம் ஓம்பி 

                           என்னுளே உனைக்கண் டிறையருள் பெருக்கி 

                     அகமதில் ஒளிவிளக் கென்றுமே கால 

                          அப்பனே சத்திநி பாதமும் கூட்டாய் 

                    திகம்பரி பெற்றவெம் தேவனே தேவா 

                          திருமுரு காபள்ளி எழுந்தரு ளாயே!   

    

                    வானுறை இந்திரன் மாதவத் தேவர் 

                           மாலயன் ஐங்கரன் பங்கயத் திருவர் 

                    ஈனமில் இறைபணி இயற்றுமெய் அடியார் 

                           இணையிலாக் கைலையங் கிரியுமை சிவனார் 

                    தேனெனப் பாமழை பொழிதமிழ்ப் புலவோர் 

                            திருவடி திரளருள் பகுத்துணப் புகுந்தார் 

                     கானகம் ஓங்கிடும் கங்காரு நாட்டில் 

                            கந்தவே ளேபள்ளி எழுந்தரு ளாயே!

 

 

   

அருள்மிகுதிருமுருகன்திருப்பள்ளியெழுச்சிப்பதிகம்
முற்றும். 

திருச்சிற்றம்பலம்.பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 

 

 

No comments: