“SPB பாடகன் சங்கதி” நூல் அறிமுகம் ஆசிரியர் : கானா பிரபா

SPB பாடகன் சங்கதி” என்ற நூல் தமிழ்த்திரையிசையில்


கோலோச்சிய மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் திரையிசைப் பயணத்தின் வரலாற்றை ஒரு ரசிகனின் பார்வையில் கண்டு பயணிக்கும் நூலாக வெளிவந்துள்ளது.

இந்த நூலில் 52 கட்டுரைகள் தாங்கி, 448 பக்கங்களோடு பல்வேறு இசையமைப்பாளர்கள், திரைத்துறைப் பிதாமகர்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பயணம், இவற்றோடு SPB பாடிய அரிய பல பாடல் தொகுப்புகள், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பிராந்திய மொழிகளிலும் அவர் எவ்விதம் கொண்டாடப்பட்டு நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் போன்ற விடயங்கள் சம்பவ உதாரணங்களோடு பதியப்பட்டு வெளிக் கொணரப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் “அகநாழிகை” மற்றும் இதர நாடுகளில் “மடத்துவாசல்” பதிப்பங்கள் வழியாக இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த நூலின் முதற்பிரதியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது


வாழ்நாள் சகா கங்கை அமரன் (இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குநர்) அவர்கள் பெற்றுக் கொண்ட சம்பிரதாயபூர்வ நிகழ்வு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி திரு.கங்கை அமரன் அவர்களது இல்லத்தில் “அகநாழிகை” பதிப்பாசிரியர் திரு. பொன்.வாசுதேவன் அவர்களுடன்
, திரைப் படைப்பாளி அஜயன் பாலா அவர்கள் வெளியிட்டு வைக்க இனிதே நிகழ்ந்தது.
 

தற்போது நிகழும் அசாதாரண நிகழ்வுகளால் நூல் வெளியீடு தள்ளிப் போடப்பட்டாலும், எதிர்வரும் காலத்தில் இந்த நூலின் வாசிப்பு அனுபவ நிகழ்வை நடத்தத் தீர்மானித்திருக்கின்றார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த நூல் குறித்து முன்னுரை எழுதிய எழுத்தாளர் என்.சொக்கன் பகிர்விலிருந்து


கானா பிரபாவின் இசை சார்ந்த பதிவுகளைப் படித்துதான் நான் அவருடைய ரசிகனானேன்
, ஒவ்வொரு பாடலையும் இசைத்துணுக்கையும் அவர் ரசிக்கிற விதம் என்னை மயக்கியது. பின்னர் அவருடைய சுற்றுலா, வாழ்வியல் கட்டுரைகளையும் படித்து மகிழ்ந்தேன். இவை அனைத்திலும் என்னை மிக ஈர்த்த விஷயங்கள், ஒரே நேரத்தில் ஆழமாகவும் அகலமாகவும் செல்கிற அவருடைய கவனிப்பு, மயக்கும் மொழி, ஈக்கும் தீங்கு செய்யாத அன்பு.

இவை அனைத்தும், இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன, அவருடைய ஒவ்வோர் எழுத்திலும்தான்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இணையத்திலும் அதற்கு வெளியிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள், இவர்கள் எல்லாரும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள், அவருடைய குரலில் ஒரு சிறு இசைத்துணுக்கைக் கேட்டாலும் நிமிர்ந்து கைதட்டுகிறவர்கள். ஆனால், அப்படிப்பட்ட புகழ் பெற்ற, பரவலாகக் கேட்கப்பட்ட கலைஞருடைய இசைப் பயணத்திலும் நாம் அறியாத அல்லது கவனித்திருக்காத குறிப்புகளை, பார்வைகளைக் கானா பிரபா திரட்டித் தருகிறார், வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன், நடிகர்களுடன், மொழிகளுடன் SPB அமைத்த கூட்டணியைத் தனித்தனியாக எடுத்து ருசிக்கத் தருகிறார். ஆங்காங்கே பொருத்தமான வரலாற்று நிகழ்வுகள், ரசிக்கக்கூடிய வரிகள் என்று எந்தவிதத்திலும் சலிப்பூட்டாத இனிய பயணம் இது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அணிந்துரை வழங்கிய திரைப்பட ஆய்வாளர் திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களது பகிர்விலிருந்து

திரையிசைப் பாடல்களை ஒலிபரப்பும் சாதனங்களில் வானொலி முக்கிய மானதாகும்.

இலங்கை வானொலியில் திரைக்கு வராத படப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். இலங்கை வானொலியில் இதற்கென "மலர்ந்தும் மலராதவை” என்ற நிகழ்ச்சியையேவைத்திருக்கிறார்கள்.

இந்த அனுபவங்களை நூலாசிரியர் சிறுவயதிலேயே பெற்றிருப்பார்

அவ்வாறான பாடல்களையும் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.

எஸ்.பி.பியின் வாழ்க்கை வரலாறு இங்கு எழுதப்படவில்லை ஆனால் அவர் பயணம் செய்த பாதை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.எஸ்பிபியின் இசைப்பாதையில் எம்எஸ்வியும், இளையராஜாவும்ஆக்கிரமித்திருப்பார்கள். ஆனால் இந்நூலில் எஸ்பிபியுடன் கடமையாற்றிய புகழ் வெளிச்சம் பெறாத திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது விசேட அம்சமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அணிந்துரை வழங்கிய திரைக் கலைஞர் திரு. சித்ரா லட்சுமணன் அவர்களது பகிர்விலிருந்து

தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த்  திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா.

தமிழிலே வெளியான எல்லா திரைப் பாடல்களைப் பற்றியும் முழுமையான தகவல்களை தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்கள் மீது இவருக்குள்ள அளவில்லாத காதல்தான்.

இசையின் காதலனான கானா பிரபாவிற்கு எஸ்.பி.பால சுப்ரமணியத்தின் மீது இருக்கும் காதலின்  பிரதிபலிப்புதான் இந்த “பாடகன் சங்கதி” என்ற நூல்.

எஸ்,பி.பாலசுப்ரமணியத்தோடு அன்றாடம் பழகியவர்கள் கூட இப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியாது என்று கூறத்தக்க அளவில் பல புதுப்புது தகவல்கள் இந்த நூலிலே இருக்கின்றன.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அந்த மகா கலைஞனுக்கு காலத்தைக் கடந்து  நினைவிலே நிற்கக் கூடிய  அருமையான பதிவுகள் மூலம்  அஞ்சலி செலுத்தியுள்ள கானா பிரபாவிற்கு வாழ்த்துகள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கானா பிரபா எழுதிய “SPB பாடகன் சங்கதி” வெளிவந்து ஒருவார காலத்திலேயே முதற்பதிப்பின் பதிவு செய்யப்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டு அடுத்த பதிப்புக்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது இந்த நூல்.

No comments: